கமல்ஹாசன் பொன்மொழிகள்! என்னுள் மையம் கொண்ட புயல் புத்தகத்திலிருந்து சில வரிகள்!

A few lines from the Ennul Maiyam Konda Puyal book

1.விழிப்புடன் இல்லாமல், குற்றங்கள் நடப்பதைப் பார்த்திருந்ததுதான் நாம் செய்த குற்றம். நல்லவரெல்லாம், நாணயமானவரெல்லாம் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று ஒதுங்கியதில், கள்வர்களும் கயவர்களும் நம் மண்ணில், நம் காசில், தமக்கெனக் கோட்டை கட்டிக் கொடியேற்றி கோஷமிடுவதை மந்தை மந்தையாய் வேடிக்கை பார்த்து வெதும்பி நிற்கிறோம்.

2.இந்தியாவை இணைக்கும் மொழி ஆங்கிலம்தான். ஹிந்தி அல்ல. மத்திய அரசிடம் நான் உரையாட, வழக்காட அம்மொழி போதுமானது. மற்ற மொழிகளை சாய்ஸில் விட்டுவிடுங்கள்; வற்புறுத்தாதீர்கள் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக்கும் குரல். என் குரலும் அது தான்.

3.இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். அம்மா, அப்பா சொல்கிறார்கள் என்று எதையும் அப்படியே கேட்காதீர்கள். மாதா, பிதா, குரு, தெய்வம்… கும்பிட்டுக்கொள்ளுங்கள். ஆனால், முடிவு உங்களுடையதாக இருக்கவேண்டும். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். கல்யாணத்திற்கு மாத்திரம், ‘அந்தப் பெண்ணைத்தான் கட்டிக்குவேன்’ என்று அடம் பிடிக்கிறீர்களே, அதே அளவு காதல், வாழ்க்கை லட்சியத்தில், கொண்ட கொள்கையில் இருக்க வேண்டாமா? லட்சியங்களைக் காதலியுங்கள். ‘காதலே வேண்டாம்’ என்று சொல்லவில்லை. அதைக் கேலி செய்யவும் இல்லை. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலைத் தவிர வேறு நினைவில்லாமல் இருக்கிறீர்கள். ‘கல்யாணம் பண்ணிவைக்கலைனா, நாங்க ஓடிப்போயாவது கல்யாணம் பண்ணிப்போம்’ என்று சொல்வதில் உள்ள உத்வேகத்தை உங்களின் இலக்கில் வையுங்கள். இலக்குதான் முக்கியம். அதற்குக் கல்வி, விவசாயம், விஞ்ஞானம், சினிமா, அரசியல் என்று எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

4.இங்கு சாதி மத பேதமின்றி அரசாங்க உதவியுடன் தவறாமல் வருடா வருடம் விநியோகிக்கப்படுவது தொற்று நோய்தான்.

5.உண்மையான வெற்றி எது என்று சொல்லவா? அரசியலில் இருந்தும் தேர்தலில் போட்டியிடாத கிழவனார் காந்தி, பெரியவர் பெரியார் இவர்களின் வெற்றிதான் காலா காலத்துக்கும் நிலைத்திருக்கும் வெற்றி. நீங்கள் சொல்லும் வெற்றியாளர்கள் எத்தனையோ பேரை மக்கள் மறந்தும் காலப்போக்கில் மறுத்துமிருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் போட்டியிட்ட திரு. அம்பேத்கர் கண்டது தோல்வியல்ல, ஒரு மாபெரும் சரித்திரத்தின் ஆரம்பம். ஆனால், இவர்கள் மூவரையும் மறக்கவோ மறுக்கவோ முடியுமா? இவர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். மதவாத சக்திகளுடன் இங்கு மல்லுக்கட்டுவது யார்? நீங்கள் சொல்லும் வெற்றியாளர்களா? பெரியார் தந்த பகுத்தறிவுதானே  அவர்களிடமிருந்து நம்மைக் காக்கிறது. இந்த மூவர் வரிசையில் யோசிக்காமல் சேர்க்கவேண்டிய இன்னுமொரு பெயர், ஆர்.நல்லக்கண்ணு. சுருக்கமாக தோழர் ஆர்.என்.கே. இவர் நின்ற தேர்தல்களில் ஒன்றில்கூட வென்றதே இல்லை. ஆனால், இந்த வயதிலும் பொதுநல வழக்கு, மக்கள் மேம்பாடு என்று பயணித்துக்கொண்டே இருக்கிறாரே, எதற்கு… நீங்கள் சொன்ன வெற்றியை மக்கள் அவருக்குத் தருவார்கள் என்றா? அவர் தன்னையும் வென்று மக்கள் மனங்களையும் வென்று வெகுநாள்களாகிவிட்டன. மக்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடும் அவரின் அந்த அன்புதானே அரசியலின் உண்மையான வெற்றி. என்னைப் பொறுத்தவரை ‘அரசியல் வெற்றி’ என்பது இதுதான். பேரவை உறுப்பினர், முன்னவர், பின்னவர், முதல்வர் ஆவதெல்லாம்  அந்த வெற்றியை உறுதிப்படுத்தத் தேவையான கூடுதல் சமாசாரங்கள்தான். 

6.விமர்சனம் என்பது ஒருவனை, ஓர் அரசை, ஓர் அமைப்பைத் திருந்தச் சொல்வது. ஆனால், வசவு என்பது அவனை, அரசை, அமைப்பைக் காயப்படுத்த வீசப்படும் கற்கள் போன்றது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைத்து அதைப்பற்றியே பேசி, அதை உண்மையாக்க முயலும் அயோக்கியத்தனம்.

7.‘நீட்’ மட்டுமல்ல, இந்த நாட்டின் கல்வியையே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அது பெரும் கனவு. ‘நிறைய புத்தகம் படித்தால் நிறைய அறிவு’ என்று எங்கள் பிள்ளைகளை பயமுறுத்துகிறார்கள். அதை நான் மறுக்கிறேன். அடுத்து, அனைவரையும் சகலகலா வல்லவனாக்கும் முயற்சியை வெறுக்கிறேன். அவர்களுக்கு ஆர்வம் இல்லாத பாடத்தில், துறையில் வல்லமை வரவே வராது. போதும் பொறியாளர்கள். உலகத்தில் இத்தனை லட்சம் பொறியாளர்கள் தேவை என்றால், அவ்வளவு தேவைகளையும் விஞ்சி தமிழ்நாடே கூடுதல் பொறியாளர்களைத் தயாரித்து வைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் எப்படி வேலை கிடைக்கும்? அப்படியிருக்கையில் எப்படி வேலை கிடைக்கும்? எனக்குத் தெரிந்து ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான ஆர்வமும் உழைப்பும் இருக்கும். அதை மனதில்வைத்து அவர்களுக்கான தனித்திறனை மேம்படுத்தச் சிறப்புப்பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதற்கு வருடக்கணக்கில் நாள்கள் தேவைப்படாது. தனித்தனியாக வைத்துப் பண்ணிவிடமுடியும். உதாரணத்துக்கு, நான் இப்போது அமர்ந்திருக்கும் இடத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கட்டடங்கள். ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான வீடுகள். உள்ளே லட்சக்கணக்கான குடிநீர், குளியல் குழாய்கள். ஆனால், இங்கு நன்கு பயிற்சிபெற்ற பிளம்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எடுப்பார் கைப்பிள்ளைகளாக அந்த வேலைகள் கதறிக்கொண்டு காத்திருக்கின்றன. இன்று முடிவெட்டிக்கொள்ளாத ஆள்கள் யாராவது இருக்கிறார்களா? ‘எனக்கு நானே முடிவெட்டிக் கொள்கிறேன்’ என யாரும் செய்வதில்லை. ஆறு கோடிப் பேருக்கு முடிவெட்டியாக வேண்டும் என்றால், இது எவ்வளவு பெரிய தொழில். அந்த வேலையை நானும் செய்திருக்கிறேன். ஆனால், அதைச் செய்ய இன்று ஆள் இல்லை. எனக்குத் தெரிந்த சிலர் மாதம் லட்ச ரூபாய் சம்பளத்தில் எல்லாம் அந்த வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் இதே சம்பளத்துக்கு ஆட்கள் தேவை. ஆனால், பயிற்சிபெற்றவர்கள் இல்லை என்கிறார்கள்.

கிராமத்தில் எத்தனையோ இளைஞர்கள் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, ‘அதற்கேற்ற வேலை கிடைத்தால்தான் போவேன்’ எனக் காத்திருக்கிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும் செய்வதில் தவறில்லை. ஆனால், நான் சொல்வது குலத்தொழிலை அல்ல. ‘எங்கப்பா செஞ்சார், அதுக்காக நான் செய்கிறேன்’ என்று செய்யாதீர்கள். அது வேறுவழி. அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பரம்பரைத்தொழிலில் இஷ்டம் இருந்தால் செய்யுங்கள். அப்படிப்பார்த்தால் நான் வக்கீலாக வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், புரோகிதம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவற்றில் எனக்கு ஆர்வம் இல்லை. சில கலைத்தொழிலாளர்களை ஊருக்குள் விடாமல் மந்தைவெளிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த வம்சத்துக்குள்போய் நான் சேர்ந்துகொண்டேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ‘இவ்வளவு சம்பளம் கொடுத்தா நாங்ககூடத்தான் சந்தோசமா வருவோம்’ என்று சிலர் கேலி பேசலாம். நான் வரும்போது அவ்வளவு கொடுக்கவில்லையே. `அரங்கேற்றம்’ படத்தில் 60 நாள்கள் வேலைக்குப் போனேன். சம்பளம் 500 ரூபாய். நான் சேர்ந்த புதிதிலும் கூத்தாடி என்றுதானே கேலி பேசினார்கள். சினிமா உலகிலிருந்து பல முதல்வர்கள் வந்தபிறகும் அப்படித்தானே பேசுகிறார்கள். பேசுபவர்கள் பேசட்டும், தொழிலில் அவமானமே கிடையாது. ‘தெர்மாகோல்’ தொழில்நுட்ப வாதிகள்  தொழில் சார்ந்த பயிற்சிப்பட்டறைகள் இதுவரை எத்தனை நடத்தியிருக்கிறார்கள்?

8.முகமும் விலாசமும் தெரியாது என்ற காரணத்தினால் மட்டுமே தைரியமாய்ப் பேசும் தன்மை எத்தகையது? விலாசம் கண்டுபிடிக்க முடியாது என்பதனால் மட்டும் குற்றங்கள் புரியலாமா? இதற்குத் தன் முகத்தையும் விலாசத்தையும் பகிரங்கமாய் அறிவித்து அராஜகம் செய்யத்துணியும் திரு.கோடி வில்சனின் வீரம் மெச்சத்தக்கதே. அப்படிப்பட்ட  ட்விட்டர் போராளி அல்லவா பல்க வேண்டும். அது தேவையும்கூட. முகநூல், ட்விட்டர் வீரர்கள் மொட்டைமாடியில் நின்றுகொண்டு கீழே தெருவில் போகும் பாதசாரிகளின் தலையில் துப்பிவிட்டு ஒளிந்துகொள்ளும் சிறுபிள்ளைத்தன மில்லாமல், தைரியமாய் அநீதிகளை விமர்சிக்கும் வீரர்களாக வேண்டும். அதுவே மெச்சப்படும்.

 

Related Articles

வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன... இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் ய...
பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! ̵... இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு.எழுத்தாளர் ஜெயமோகனின...
ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்... ஐஸ் ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஐஸ் ஹவுஸில் குளிர் தாங்க முடியாமல் சட்டை இல்லாமல் நம்ம தமிழர்கள் வேலை செய...
தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்க... சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுந...

Be the first to comment on "கமல்ஹாசன் பொன்மொழிகள்! என்னுள் மையம் கொண்ட புயல் புத்தகத்திலிருந்து சில வரிகள்!"

Leave a comment

Your email address will not be published.


*