எழுத்தாளர் ப்ரியா தம்பியின் “பேசாத பேச்செல்லாம்” புத்தகத்தில் உள்ள அற்புதமான வரிகள் ஒரு பார்வை!

A view on few lines of Pesatha Pechellam Book

‘பசங்க யூரின் போறப்ப குட்டித் தும்பிக்கை மாதிரி ஒண்ணு இருக்குல்ல, அது ஏன் எனக்கு இல்ல?’ என என் மகள் இன்று இயல்பாகக் கேட்பதுபோல எங்களால் கேட்க முடிந்ததே இல்லை!

நம் பிள்ளைகள் ஐந்து வயதில் பேசுவதை, நம்மால் 30 வயதிலும் செயல்படுத்த முடியவே இல்லை.

‘பொண்ணுங்க… ‘இதான் பிடிக்கும்’, ‘இதான் வேணும்’னு சொல்ல முடியுமா?’

ஒரு வாரம் தண்ணீர்கூடக் குடிக்காமல் பெரும் நாடகம் நடத்தினால்தான் போனாப் போகுது என்று சுற்றுலாவுக்கு அனுமதி தருவார்கள். 

மகள்களுக்கு வேண்டாம் என அம்மாக்கள் தடுக்கும் பெரும்பாலான விஷயங்களில், அதைச் செய்ய முடியாத அவர்களின் இளமைக் கால ஏக்கம் மறைந்திருப்பதைக் காண முடியும். மிக நுட்பமாகக் கவனித்தால் இரு தலைமுறைப் பெண்களுக்கு இடையேயான பொறாமை உணர்வுகூட அதில் இருக்கும். அம்மாக்களைத் தாண்டி மகள்கள் வளரத் தொடங்கும் காலங்களில், அம்மாக்களின் எரிச்சல் அதிகரிக்கிறது. தன் டீன் ஏஜ் வயதில், தான் நினைத்த எல்லாவற்றையும், தன்னால் செய்ய முடியாத எல்லாவற்றையும் மகள் செய்வதை அவர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளவே முடிவது இல்லை. நம் சமூகத்தில் பெண்கள் தங்கள் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய எப்போதும் ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் அதில் அவர்கள் பங்கேற்க முடிவது இல்லை. வெறும் பார்வையாளர்களாக மட்டுமே கைத்தட்ட முடிகிறது. 

எல்லாக் காலங்களிலும் இங்கு குழந்தைகள் ஆண் குழந்தை, பெண் குழந்தை என தனித்தனியாகத்தான் பிரிந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு என பொதுவான உலகம் ஒன்று இங்கு இல்லை.

கார், பைக், துப்பாக்கி… எனப் பறந்து கொண்டிருப்பார்கள் ஆண் குழந்தைகள். பொம்மை, தொட்டில், சமையல் பாத்திரங்கள்… எனப் பொறுப்பாக இருக்கிறார்கள் பெண் குழந்தைகள். கிராமம், நகரம், மாநகரம் வித்தியாசம் இன்றி அவர்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள். நாம் எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும், பெண் குழந்தைகள் சமூகம் முன்மாதிரியாகக் காட்டும் பெண்களின் மினியேச்சர்களாகவே இருக்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்ததுமே வாங்கி வந்த சாக்லேட்டைக் கேட்கும் மகனுக்கும், தண்ணீர் எடுத்துத் தந்து நம்மைக் கவனிக்கும் மகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஆண்களுக்கு வண்டி என்பது தூரத்தைக் குறைக்கிற, இலக்கை எளிதாக அடைய முடிகிற வாகனம். ஆனால், பெண்களுக்கு அப்படி அல்ல. கூடுதலாக இரண்டு கால்கள்; இன்னும் யோசித்தால் அவை வெறும் கால்கள்கூட அல்ல… இறக்கைகள்!

தன்னை எப்போதும் சார்ந்து இருக்கிறாள் என்று சலிப்புக்கொள்ளும் ஆண் மனம், பெண் தனித்து இயங்குவதையும் ஏற்றுக்கொள்வதே இல்லை. ‘இந்தப் பெண்கள் ஏன் இப்படி வேகமாக வண்டி ஓட்டுகிறார்கள், இவர்களுக்கு எல்லாம் யார் வண்டி வாங்கிக் கொடுத்தார்கள்?’ என ஓயாமல் சலம்புவதும், ஒரு பெண் சாலையில் தன்னைக் கடந்து சென்றுவிட்டால் படபடப்பாகி, உடனே விரட்டிச் சென்று திட்டுவதும் இந்த உளவியலில்தான்!

நண்பனோ, கணவனோ, அண்ணனோ அவர்கள் வண்டி ஓட்டும்போது பெண்கள் பின்னால் உட்காருவதை அவமானமாக நினைத்ததே இல்லை. ஆனால், பெண்களின் பின்னால் வண்டியில் உட்கார, ஆண்கள் தயங்காமல் ‘நோ’ சொல்வார்கள். கிளம்பலாமா என்று வண்டி அருகே சென்றதுமே, பெண்களின் வண்டியின் சாவியை அநிச்சையாக அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். நம் வண்டியிலும் நாம் பின்னால்தான் உட்கார்ந்தாக வேண்டும். ‘நீ சரியா ஓட்ட மாட்ட…’ என்று காரணம் சொல்வார்கள். 

காதல் எப்போதும் கற்பனைகளாலும் பைத்தியக்காரத்தனங்களாலும் நிறைந்த உலகம். ஆனால், இருவர் இணைந்து வாழ்வதற்குப் பெரும் இடைஞ்சலாக இருப்பது இந்தப் பைத்தியக்காரத்தனம்தான். காதல் மலரும் நொடியைப் புரிந்துகொள்வதுபோல், அது விலகும் நொடியையும் புரிந்துகொண்டு இயல்பாக எடுத்துக்கொள்பவர்கள்தான், காதலிக்கத் தகுதியானவர்கள். ஏனெனில், காதல் என்கிற அழகான, மிகச் சாதாரண ஓர் உணர்வை, மிகப் புனிதமான இடத்தில் வைத்துத் தேவைக்கு அதிகமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இங்கு புனிதமாக்கப்பட்ட எல்லா உணர்வுகளும், பெண்களுக்குப் பெரும் சிக்கலை உண்டாக்கிவிடுகின்றன.

சின்னத்தம்பி’ குஷ்பு போல ஆண் வாசனையே படாத பெண்களைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்ய முடியாது என ஆண்களுக்குத் தெரிகிறது. ஆனாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தன் பழைய காதல்கள் பற்றி பெருமையாக மனைவியிடம் சொல்லிவிட்டு, ‘உனக்கு அப்படி எதாவது இருக்குதா?’ எனக் கேட்கும் தருணம் முக்கியமானது. ‘இருக்கக் கூடாதுனு சொல்லலை, இல்லாட்டி நல்லா இருக்குமேனுதான் சொல்றேன்’ மொமன்ட் அது. ‘ச்சே… ச்சே… அப்படி எல்லாம் பண்ணா எங்க வீட்ல கொன்னுருவாங்க. காலேஜ்ல ஒரு பையன் போன் நம்பர் கேட்டான். நான் குடுக்கலை. எங்க வீட்ல திட்டுவாங்கனு சொல்லிட்டேன்… அவ்ளோதான். அதுக்கு அப்புறம் என்கேஜ்மென்ட் முடிஞ்சதும் உங்ககிட்ட பேசினதுதான்’ – எவ்வளவு ஆசுவாசமான பதில் இது. கேட்பவருக்கும் சொல்பவருக்கும் தெரியும்… இது பெரிய பொய் என்று. ஆனாலும், இந்தப் பொய்களில்தான் பல குடும்பங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘

அப்பாவின் காதல் கதைகளை உட்கார்ந்து ஆர்வமாகக் கேட்கும் பிள்ளைகள் எவரும் அம்மா பக்கம் திரும்பி, ‘உனக்கு எதாவது இருக்குதா?’ எனக் கேட்பதே இல்லை. இருந்துவிட்டால் என்னாவது என்கிற பயத்தில், இருக்காது என நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.

பெண்கள் உண்மையில் வெளிப்படையாக இருக்கவும் பேசவுமே விரும்புகிறார்கள். காதலை உடனே ஏற்றுக்கொண்டால், உடனே பைக்கில் ஏறி உட்கார்ந்தால், உடனே சினிமாவுக்குச் சென்றால், உடனே கட்டிப்பிடித்தால், முத்தம் கொடுத்தால், அடிக்கடி பார்க்க விரும்பினால்… ஆண்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் ‘நான்லாம் அப்படி இல்லை. எங்க வீட்ல அப்படி வளக்கலை. வீட்டுக்குத் தெரிஞ்சுது… அவ்ளோத£ன்! நான் ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லை…’ என வசனம் பேசுகிறார்கள்.

திருமணம் என வந்துவிட்டால், ஆண்-பெண் இருவருமே யோசிப்பது வேறுதான். சிவந்த நிறமுடைய, படித்த, அழகான, குடும்பப்பாங்கான பெண் என்கிற ஆணின் தேடலுக்கு சற்றும் குறைந்தது அல்ல… நல்ல வேலையில் இருக்கிற, நிறைய சம்பாதிக்கிற, உயரமான ஆண்… என்கிற பெண்ணின் தேடல்களும். ஆணுக்குத் தேவை, வீட்டைப் பார்த்துக்கொள்கிற அடங்கிய பெண்; பெண்ணுக்குத் தேவை தன்னைப் பார்த்துக் கொள்ளக்கூடிய, நாய்க்குட்டி போல தடவிக் கொடுக்கக்கூடிய ஓர் ஆண். தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை, ஆண் காதலிப்பது இல்லை என்ற உண்மையைச் சொல்லும்போதே, தன்னைவிட குறைவாகச் சம்பாதிக்கும் ஆண் மேல் பெண்ணுக்குக் காதலே வருவது இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். திருமணத்துக்கான காதல் என்பது பரஸ்பரத் தேவைகளின் அடிப்படையிலான ஓர் ஏற்பாடுதான். ஆனால், அப்படிச் சொல்லிக்கொள்ள சங்கடப்பட்டு, அதை காதல் என்கிறோம்.

பத்மினி காலம்தொட்டு இன்று வரை ஆணின் சாதாரணத் தொடுகையை பெண்கள் கிளர்ச்சியாக, விரும்பத்தகாததாக ஏன் எடுத்துக்கொள்கிறோம்? ஆண்களுமே அந்தத் தொடுகையை தனக்குக் கொடுக்கப்பட்ட ‘சிக்னல்’ என ஏன் புரிந்துகொள்கிறார்கள்? எல்லா சினிமாக்களிலும் ரயில் ஏற, பேருந்து ஏற உதவி செய்கிற ஆண்களை, ஏன் பெண்கள் காதலித்துவிடுகிறார்கள்? வீட்டில் உள்ள ஆண்களைத் தவிர்த்து பார்க்கிற, பேசுகிற முதல் ஆணிடமே ஏன் காதல் வந்துவிடுகிறது? 

ஓர் ஆணுக்கும் ஆணுக்கும் இடையே வராத, ஒரு பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையே வராத ‘பொஸஸ்’, ஓர் ஆணும் பெண்ணும் நட்பாகும்போது மட்டும் ஏன் வந்து தொலைக்கிறது?

ஆண்- பெண் நட்பு எந்தக் காலத்திலும் இயல்பாகவே இல்லை. அது பாவனையோடும் பதற்றத்தோடும்தான் இருக்கிறது. 

பெண்கள்தான் அதிகம் கூச்சப்படுபவர்கள் எனப் பொதுவான கருத்து இங்கே இருக்கிறது. உண்மையில் ஆண்கள்தான் கூச்ச சுபாவம் உள்ளவர்கள்; தனக்குள் சுருங்கிக்கொள்கிறவர்கள். நான்கு பெண்களுக்கு இடையே ஓர் ஆண் நுழைந்தால், பூனையைக் கண்ட எலிபோல சிதறி ஓட முயல்கிறான்.

பெண்கள் அருகில் வந்தாலே கை நடுங்குகிற, இதயம் படபடக்கிற, பெண் பக்கத்தில் உட்கார்ந்தால் 10 அடி பாய்ந்து ஓடுகிற ஆண்கள்தான் இங்கு அதிகம்.

பெண்ணாக நட்பு கோரிக்கையோடு வந்தால்கூட, அதை நம்ப மறுக்கிறார்கள். தன்மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக நினைத்துத் தடுமாறுகிறார்கள். பெண்கள் தன்னிடம் அன்பாக எதைச் சொன்னாலும் அதைக் காதலாகப் புரிந்துகொள்கிறார்கள். எதிலும் விதிவிலக்குகள் இருப்பதைப் போல் இதிலும் உண்டு. பெண்கள், ஆண்களின் இந்தச் சிக்கலை இன்னும் அதிகமாக்கிவிடுகிறார்கள். ஆண், தன்னிடம் நட்பாக இல்லை, அதைத் தாண்டிய ஒன்று அவனைச் செயல்படுத்துகிறது என்பது தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

உறவுகளைக் கையாள்வதில், ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறவுகளைக் கையாண்ட அனுபவம் பெண்களிடம் இருக்கிறது. ஆண்களின் இந்தப் பதற்றத்தை வெகு எளிதாகச் சரிசெய்துவிட முடியும். 

கல்யாணத்தை முடிச்சுப்புடுவோம்!’ என்ற அதட்டலான அப்பாவின் குரலுக்குத் தலையாட்டும் பெண்கள் பெருமளவில் இங்கு இருக்கிறார்கள். பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண் காட்டும் இமேஜ் என்பது, அவள் உண்மையான முகம் அல்ல என்பது, இன்றைய இளைஞர்களுக்கும் தெரியும்!

பெண்களுக்கு எந்தக் காலத்திலும் உடன்பாடே இல்லாத இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வை, காதல் திருமணங்களும் கட்டிக் காப்பாற்றுவதுதான் பெரிய முரண்.

பெண் பார்ப்பது, பெரும்பாலான குடும்பங்களில் இன்றைக்கும் ஒரு சாதாரண நிகழ்வு இல்லை. மாப்பிள்ளை வீட்டார் வந்து போவதற்குள் பெண்ணின் உறவினர்களே பெண்ணைப் படுத்தி எடுத்துவிடுவார்கள். ‘ஏன் இவ்ளோ கறுப்பா இருக்க… பவுடர் போடு’ என அன்று காலையில்தான் அவள் கறுப்பாக இருப்பதைக் கண்டுபிடித்ததுபோல் நடந்துகொள்வார்கள். ‘போயிட்டுச் சொல்றோம்’ என அவர்கள் எழுந்து போனால், அந்தப் பெண்ணின் கதை அவ்வளவுதான். மூணாவது படிக்கும்போது உள்ளாடை அணியாமல் வாசலில் நின்றது வரை நினைவுபடுத்தப்பட்டு, அதனால்தான் மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என அவள் திட்டு வாங்க வேண்டியிருக்கும்.

விவாகரத்து ஆன / கணவனை இழந்த பெண்களின் இரண்டாவது திருமணத்திலும், இந்தப் பெண் பார்க்கும் நிகழ்வு நிச்சயம் இருக்கும். முதல் திருமணம் பற்றி, முதல் கணவனைப் பற்றி விலாவாரியாக அங்கு பேசப்படும். அவளது மனநிலையைக் கருத்தில்கொள்ளாமல், நடுவில் நிற்கவைத்து, ‘இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதே தப்போ?!’ என்ற குற்றவுணர்வை உருவாக்கிவிடுவார்கள்.

மகன்களைப் பெற்ற அம்மாக்கள் அனைவரும் மகனுக்குப் பெண் பார்ப்பதைவிட, தனக்குச் சரியாகப் பொருந்துகிற மரு மகளைத்தான் சலித்துச் சலித்துத் தேடுகிறார்கள்.

பாலியல் வன்புணர்வு பற்றி எப்போதும் இரண்டே கருத்துகள்தான் இங்கே முன்வைக்கப்படுகின்றன. ‘நடந்தது நடந்துபோச்சு… அதைத் தூக்கிப் போட்டுட்டு வாழணும்’ என்பது ஒன்று. ‘போராடணும், கடைசி வரைக்கும் போராடணும்’ என்ற சிலிர்க்கவைக்கும் வாசகம் இன்னொன்று. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள், அந்த நாட்களைக் கடந்து வந்திருக்கலாம். ஆனால், அது தரும் ஆழமான மனபாதிப்புகளில் இருந்து அவர்களால் வெளிவரவே முடியாது. எல்லா காயங்களும் அதன் வடுக்களைப் பதித்துவிட்டே செல்கின்றன!

‘உங்க பொண்ணை நாலு பேர் சேர்ந்து ரேப் பண்ணி ரயில்வே டிராக்ல போட்டிருக்காங்க’ என்று போலீஸ் வந்து சொல்லும்போதே, ‘அய்யய்யோ… இப்படிக் கிடந்து கஷ்டப்படுறதுக்கு, என் பொண்ணு செத்துப்போயிடலாமே!’ என்றுதான் அந்த அம்மாவால் அழ முடிந்தது. உண்மையில் வன்புணர்வில் பிள்ளைகள் இறந்துபோவதை நம் பெற்றோர் ஆறுதலாகத்தான் பார்க்கிறார்கள். ‘நல்லவேளை… உயிரோடு இல்லை’ என்பதாக. எவ்வளவு கொடூர உண்மை இது!

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? இல்லை! ஒவ்வொரு நாளும் குற்றவுணர்வு ஏற்படுத்தும் வார்த்தைகளை அவள் மௌனமாகக் கேட்கவேண்டியிருக்கும். ‘அவரோ, அவங்க வீட்லயோ ஏதாவது சொன்னா… என்னால எதிர்த்து ஒண்ணும் சொல்ல முடியாது. என்னைக் கட்டுனதே பெரிய விஷயம்’ என உடன் இருப்பவர்களுக்குத் தியாகி பட்டத்தைத் தந்துவிட்டுத் தன்னைச் சுருக்கிக்கொள்வார்கள். ஆனால், வன்புணர்வு செய்த எவன் ஒருவனும் இப்படி தன் குடும்பத்தின் முன், சமூகத்தின் முன் வெட்கித் தலைகுனியவேண்டிய நிர்பந்தம் இங்கு இல்லவே இல்லை. ‘ஆமா… செஞ்சேன்!’ என மீசையை முறுக்கிக்கொண்டு போய்க்கொண்டே இருக்க முடிகிறது.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் எனப் போகிற பெண்களுக்குத்தான் பிரச்னைகள் என்று இல்லை. அலுவலகத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து, அங்கே புகார் அளிக்கும் பெண்கள்கூட அதோடு தன் வேலையை மறந்துவிட வேண்டியதுதான். பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களைப் பெரும்பாலான நிறுவனங்கள் கண்டுகொள்வதே இல்லை. ‘தொல்லை பண்ற அளவுக்கு நீ ஏன் நடந்துக்கிற?’ என்ற அதிபயங்கரமான கேள்வி உடனே கேட்கப்படும். அந்தப் பெண் அதன்பிறகு பிரச்னைக்கு உரியவளாகப் பார்க்கப்படுவாள். அவளை அங்கே இருந்து வேலை நீக்கம் செய்வதைப் பற்றியே யோசிப்பார்கள். கொடுமையிலும் கொடுமையாக உடன் வேலை பார்க்கும் பெண்களே அந்தப் பெண்ணிடம் இருந்து தங்களை விலக்கிக்கொள்வார்கள்… ‘எதுக்கு நமக்கு பிரச்னை..?’ என்பதாக! இது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எவ்வளவு அதிகாரத்தைத் தரும், அது தன் மேலே நாளை பாயலாம் என்பதை எல்லாம் மறந்தவர்கள் போலவே நடந்துகொள்வார்கள்.

நம் சமூகத்தில் ஆணின் குணத்தை அம்மாக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். வயதுக்கு வந்த மகளை அப்பாவோடு பேசாதே எனத் தடுக்கும்போது, மகள் மனதில் ஆண்களைப் பற்றி எந்த மாதிரியான எண்ணத்தை விதைக்கிறோம் என அம்மாக்கள் யோசிப்பதே இல்லை. ‘அப்பாவையே நம்பக் கூடாது எனில், பிற ஆண்கள் நம்பிக்கையற்றவர்கள். பயப்பட வேண்டியவர்கள்’ என அவள் முடிவு செய்வாள். இதே மிரட்சியோடுதான் பெரும்பாலான பெண்கள் கணவனையும் அணுகத் தொடங்குகிறார்கள். ‘வளர்ந்த தங்கச்சியைத் தொடாத… அதென்ன பொம்பளைப் புள்ளை கன்னத்தைக் கிள்றது?’ என அவனது தங்கையிடம் ஆரம்பித்து, ‘ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டா… இன்னும் என்ன அவளைத் தூக்கிக் கொஞ்சிட்டு இருக்க. இறக்கி விடு’ என, பக்கத்து வீட்டுச் சிறுமியைத் தொடுவது வரை ஆண்களை பெண்ணிடம் இருந்து விலக்கியே வைக்கிறார்கள்.

நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு நல்லது நடந்துவிட்டால், அதைக் கொண்டாடித் தீர்க்கும் ஆண் குணம், பெண்களிடம் இல்லவே இல்லையே ஏன்? கூடவே இருந்த தோழிக்குப் பதவி உயர்வு கிடைத்தால், பெண்கள் பதற்றமாகி விடுகிறார்களே… ஏன்? இப்படிப் பல ‘ஏன்’கள்!

கடைசி பெஞ்ச் மாணவனோடு முதல் பெஞ்ச் மாணவன் சகஜமாகப் பேசுவதுபோல், முதல் ரேங்க் எடுக்கும் மாணவி சுமாராகப் படிக்கும் மாணவியோடு பேசுவதே இல்லை. அவளைப் பார்க்கும் பார்வையிலேயே அலட்சியம் தெரியும். தன்னைவிட அழகாக இருக்கும் பெண்ணோடு நட்பாக இருப்பதிலும் நமக்கு சிக்கல் இருக்கிறது. 

தன்னோடு நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் சக மாணவன், இன்னொரு பெண்ணோடு பேசினால், அந்த நிமிடத்தில் இருந்து அந்தப் பெண் முகத்தில் எதிரி முத்திரை குத்தப்படும்.

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் ஆரம்பித்து வரலாறு, இலக்கியம்… என எங்கு தேடினும் பெண்கள் இருவர் நட்பாக இருந்ததற்கான அறிகுறியையே காணோம். சங்க காலத்தில் ஒளவையாருக்குக்கூட அதியமான் என்கிற ஆணோடுதான் நட்பு இருந்தது. சினிமாவில் யோசித்தால், ரஜினி-மம்முட்டி ஆரம்பித்து ஆர்யா-சந்தானம் வரை ஆண்களின் நட்புதான். நான் பார்த்த வரை வேறு நாடுகளின் திரைப்படங்களில்கூட பெண்களின் நட்பைக் காணோம். அரசியலில் ஜெயலலிதா-சசிகலா நட்பை அரிதான உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால், அதிலும் எத்தனை கேலி, கிண்டல்கள் அவர்கள் நட்பைப் பற்றி!

வார விடுமுறை நாட்களில் சிறுவர்கள் இணைந்து தெருக்களில் விளையாடும்போது, சிறுமிகள் அன்றைக்கும் அம்மாவை ஒட்டியபடி வீட்டுக்குள் வளையவந்துகொண்டிருக்கிறார்கள். அதிகம் ஆள் இல்லாத தெருக்களில், டாப்ஸை இழுத்து இழுத்து விட்டபடி, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு விளையாடும் ஒன்றிரண்டு சிறுமிகளுக்கும்கூட வயதுக்கு வந்ததும், அதற்குத் தடை விதிக்கப்படும். 

மிகப் பெரும்பாலான பெண்களுக்கு ஒரு திருமணம் முறிந்துபோனால், கணவர் இறந்துவிட்டால், கல்யாணம் நடக்காவிட்டால், திருமண வாழ்க்கை எதிர்பாராதபடி அமைந்துவிட்டால்… அதோடு தனது வாழ்க்கை முடிந்துபோனதாக, நல்ல இருட்டான மூலையாகத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துவிடுகிறோம். படித்த, படிக்காத, நகரம், கிராமம் வேறுபாடின்றி பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறோம்.

புடைவையைச் சரியான உடை என நம்ப வைப்பதில், மெகா சீரியல்களுக்கு அசாத்தியப் பங்கு இருக்கிறது. பல சீரியல்கள் அதில் அணியப்படும் புடைவைகளுக்காகவே விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சீரியலில் அன்பான அம்மா, அன்பான அண்ணிகள் எல்லாம் புடைவை கட்டி பூ வைத்திருப்பார்கள். இவர்கள் கதாநாயகிகள். பொட்டு வைக்காத, சொந்தமாகத் தொழில் செய்கிற, மார்டன் உடை அணிந்த பெண்கள் வில்லிகள். இவர்கள் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் எல்லாம் அணிந்திருப்பார்கள். சீரியல் ஹீரோயின்கள், வாழ்க்கையில் ஓட விரும்பும் தூரத்துக்கு நிச்சயம் புடைவையில் ஓடினால் வழுக்கித்தான் விழ வேண்டும்!

 ‘நீ உன் இஷ்டம்போல ஃப்ரீயா இரு’ என்று சொல்லும் கணவரின் மேல் பல பெண்களுக்கு மரியாதை இருப்பது இல்லை.

ஆதிக்கத்தைவிட மோசமானது அடிமைத்தனம். ஆனால், நாம் ஆதிக்கத்தைப் பற்றியே தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அடிமைத்தன மனோபாவத்தை என்ன செய்வது?

‘நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும். பிள்ளைங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது’ எனப் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் கொடுக்கும் செல்லம்தான், தனியாக வாழும் பெண்கள், தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொள்ளும் சூன்யம். ‘உனக்காக அம்மா என்ன வேணா செய்வேன்’ என்கிற அம்மாவின் எமோஷனை பிள்ளைகள் சரியாகப் ‘பயன்படுத்தி’க்கொள்கிறார்கள். அம்மாக்களின் பலவீனத்தில் மிகச் சரியாக ஆணி அடிக்கிறார்கள்.

இங்கே தனியாக இருக்கும் பெண்ணோ, விவாகரத்து ஆகி அல்லது கணவனை இழந்து குழந்தையோடு வசிக்கும் பெண்ணோ எளிதாக வீடு பார்த்துவிட முடியாது. ‘கணவன் எங்கே?’ என்ற கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படும். தப்பித்தவறி வீடு கொடுத்துவிட்டாலும், அந்தப் பெண்ணைப் பார்க்க யார் யார் வருகிறார்கள் என்று கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். ஆண் பேச்சுலர்களுக்கு மட்டும் அல்ல, தனியாக இருக்கும் பெண்களுக்கும் இங்கே வீடு கிடைப்பது சிரமம்தான்.

‘உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தது எல்லாம் சும்மாவா?’ என்ற கேள்வியைப் போலவே, ‘எனக்காக நீ இதைக்கூடச் செய்யலைன்னா, என்ன அம்மா நீ?’ என்கிற கேள்வியும் தேவை இல்லாததே. ஆனால், இங்கே இந்தக் கேள்விகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்பதுதான் கேள்வியே!

‘நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?’ 

‘ஒரு டூர் போயிட்டு வர்றேன்’ எனத் தனியாகவோ, நண்பர்களுடனோ கிளம்பிச்சென்று பயணத்தைத் துளித்துளியாகப் பருகும் சௌகர்யம் ஆண்களுக்கு இங்கே அதிகம் உண்டு. ஆனால், பெண்களுக்கு?

தமிழகப் பெண்களின் பயண அனுபவங்கள் பெரும்பாலும் கோயில் வழிபாடு சார்ந்தவையாக இருக்கும். காலையில் சென்று மாலையில் திரும்பும் மண்டைக்காடு பயணத்திலும்கூட கடலில் கொஞ்ச நேரம் கால் நனைப்பதற்கு மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். கொழுக்கட்டை அவிப்பது, சமைக்க அடுப்பு தேடுவது, உட்கார்ந்து சாப்பிடத் தோதாக இடம் தேடுவது… இவைதான் பெண்களுக்கு ஒருநாள் பயணத்தின்போது பெரும் நேரத்தை எடுத்துக்கொள்பவை. திருமணத்துக்கு முன்பு அம்மா, அப்பா எனக் குடும்பத்தோடு கோயிலுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ சென்றது, திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தைகளோடு சுற்றுலா செல்வது… இவைதான் பெண்களின் பயணங்கள். வேலை விஷயமாக நான்கைந்து முறை கோவையோ, சென்னையோ சென்றதை எல்லாம் பயணப் பட்டியலில் சேர்க்கவே முடியாது!

பயணம் என்பது பூமியின் அழகை, வடிவத்தை, அதன் அந்தரங்கத்தை மிக அருகில் நின்று, உணர்ந்து ரசிப்பது. தினசரி வேலைகளில் இருந்து மனதுக்கு விடுமுறை அளிக்கும் செயல் அது. ஆனால், அப்படியோர் அனுபவம் பெண்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பதே இல்லை.

குஷ்பு, நதியா போன்ற நடிகைகள் குடும்பத்தோடு வெளிநாடு சென்றுவிட்டு வந்து ஃபேஸ்புக்கில் பதியும் புகைப்படங்களும், அவர்களின் மகிழ்ச்சியும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமானவை. விருதுநகரில் இருந்து தனியாக ஏற்காடு செல்லும் ஒரு பெண், அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!

பாதுகாக்கிறோம் எனக் கிளம்புபவர்கள்தான் அதிகம் பயத்தை விதைக்கிறார்கள்!

பண்டிகைகளை குழந்தைகள்தான் கொண்டாட்டமாக கொண்டாடுகிறார்கள். குழந்தைமையைக் கடப்பதுபோலவே, நாம் கொண்டாட்ட மனநிலையையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்துவிடுகிறோம். 

வாழ்க்கையில் நம்மோடு நெடுந்தூரம் பயணிக்கக்கூடியவர்களைச் சந்திக்கும் புள்ளி எப்போதும் ஆச்சர்யம் நிறைந்தது.

துயரின் விளிம்பில்  எப்போதும் துயரம் மட்டுமே தொக்கி நிற்பது இல்லை. அங்கே வாழ்க்கையின் இன்னொரு தொடக்கப்புள்ளியும் இருக்கும் 

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர்கள், தேவைப்படும் நேரங்களில் ரட்சகரைப்போல் நம் முன் வந்து நிற்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யமே!

துயரில் சந்திக்கும் மனிதர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்களா, அல்லது துயரத்தை மறக்கவைப்பதற்காக எங்கிருந்தோ நமக்காக அவர்கள் அனுப்பப்படுகிறார்களா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்னிடம். ஆனால், நேசத்துக்குரியவர்களைச் சந்திக்கும் நிமிடம் எப்போதும் ஆச்சர்யம் நிறைந்ததாக, எதிர்பாராத நேரமாகத்தான் இருக்கிறது!

மகளின் கனவுகளைப் புரிந்துகொண்டு, கனவுகளோடு போராட அவளை அனுமதிக்கிற ஒரு தந்தை இங்கே அபூர்வம். 

‘அப்பாவா இருந்தாலும் அவர் ஒரு ஆம்பிளை. லிமிட்டா பழகு…’ எனப் பெரும்பாலான பெண் பிள்ளைகளுக்கு மூளையிலேயே பதிவாகியிருக்கிறது. மணிக்கு ஒருமுறை அதை நினைவுபடுத்தவும் ஆட்கள் சுற்றியிருக்கிறார்கள். 

‘சைக்கிளில் போனா கீழ விழுந்துருவ, பைக் பில்லியனில் உக்காந்துக்கோ’ எனச் சொல்லும் அப்பாக்களின் பாசத்தை மகள்கள் எப்போதும் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், ‘பில்லியன் எப்போதும் நிரந்தரம் இல்ல. நீ தனியா ஓட்டிப் பழகிக்கோ. நீயா ஓட்டிட்டுப் போறதுதான் கடைசிவரைக்கும் பாதுகாப்பு’ எனச் சொல்கிற அப்பாக்களையே விரும்புகிறார்கள்.

ஒரே நாளில் புரட்டிப் போட்டுவிடும் இந்த வாழ்க்கையில் எழுந்து நிற்க, ஓர் ஆணைவிட பெண்ணுக்கு, அதிகத் தன்னம்பிக்கை தேவை. அதைத் தரும் முதல் ஆணாக ஓர் அப்பா இருக்கட்டும். அந்த நம்பிக்கையில் சந்திக்கும் ஆண்களை அவள் நேசத்தோடு பார்க்கட்டும். ஆண் மீதான அவளது அவநம்பிக்கையை உடைக்கும் முதல் ஆண், அப்பாவாக இருப்பது எத்தனை அழகானது!

மகள்கள் வயதுக்கு வரும்போது அப்பாக்கள் சந்திக்கவேண்டிய மிகப் பெரிய துயர், மகள்களிடம் இருந்து விலகி நிற்க வேண்டியிருப்பதுதான்!

குழந்தை பிறக்கும் அடுத்த நொடியில் இருந்து அனைவரின் கவனமும் குழந்தை மீதே திரும்பிவிடுகிறது. பெற்றுக் கொடுத்தவளைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை. ஆனால், வாழ்க்கையின் மிக உன்னதமான நெருக்கமும் அரவணைப்பும் தலைக்கோதலும் அந்த நேரத்தில்தான் பிரசவிக்கும் பெண்ணுக்குத் தேவை

!’தாய்மை’ இயல்பான உணர்வு என்பதைத் தாண்டி, அதில் எந்தப் பெருமிதமும் இல்லை

சொந்த மகனின் அழுகையைப் புறக்கணித்துவிட்டு, குடியை நேசிக்கும் அளவுக்கு அந்த மதுவில் அப்படி என்னதான் இருக்கிறது?

‘ஆபீஸ், வேலை, அது, இதுனு ஆயிரம் பிரச்னைகள்… அதான் குடிக்கிறோம்’ எனச் சொல்லும் ஆண்கள், தங்கள் வீடுகளில் இருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க மாட்டார்களா? அவர்கள் பிரச்னைக்கு அவர்கள் எதைக் குடிப்பது? 

‘வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு குடிக்கிறேன்’ எனச் சொல்பவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாமல் அதில் இருந்து தப்பிக்கத்தான் குடிக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. உண்மையில் இந்த நேரத்தையும் வாழ்க்கையையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என அவர்களுக்குத் தெரியவில்லையோ எனத் தோன்றுகிறது. கொண்டாடுவதற்கு மதுவைத் தவிர நமக்கு ஒன்றுமே இல்லையா?

தெரியவேண்டிய வயதில் எதுவும் தெரியாமல் இருந்தது நம் தலைமுறையின் பிரச்னை என்றால், தெரியக் கூடாத வயதில் எல்லாம் தெரிந்துகொள்வது இப்போதைய தலைமுறையின் பிரச்னை. கூரான ஆயுதங்களைக்கொண்டு நம் குழந்தைகளின் குழந்தைமையை நாம் சிதைத்துக் கொண்டிருக்கிறோம். 

‘பெண்… அன்பே உருவானவள்’ என்ற பொய்யான நம்பிக்கையை அதிகம் உடைப்பது பள்ளிகள்தான். அம்மாக்களும் ஆசிரியைகளும் சேர்ந்து குழந்தை மீது திணிக்கும் வன்முறைக்கு அளவே இல்லை. தலைவலிக்கு விக்ஸ் தேய்த்துக்கொண்டிருக்கும் டீச்சரிடம், ‘தலை வலிக்குதா மிஸ்?’ எனப் பாசமாகக் கேட்கும் குழந்தையிடம், ‘கோ அண்ட் சிட் டவுன்’ என எப்படி அதட்ட முடிகிறது? சக மனிதர்கள் மீதான அன்பைப் பகிர்வதே தவறு என அந்தக் குழந்தை புரிந்துகொள்ளாதா? வேலையின் அழுத்தம், சூழல் என எந்தக் காரணம் கொண்டும் ஒரு எல்.கே.ஜி டீச்சரின் கையில் இருக்கும் ஸ்கேலை நியாயப்படுத்தவே முடியாது.

குழந்தைகள் வாழத் தகுதியே இல்லாத உலகில், குழந்தை வளர்க்கத் தகுதியே இல்லாத நம்மிடம்தான் நம் குழந்தைகள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். நம் பால்யத்தின் குதூகலத்தையும், நம் குழந்தைகளின் கண்களில் தெரியும் ஏக்கத்தையும் நமக்கு ஒப்பிடவே தோன்றவில்லையா? குழந்தைகளின் கண்களில் இருந்து வானவில்லையும், கைகளில் இருந்து நிறங்களையும் பிடுங்கிவிட்டு அவர்களுக்கு நிறமற்ற ஓர் உலகத்தைத்தான் நாம் தரப் போகிறோமா?

பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களிடம், தன் தொழில்குறித்த பெருமிதம் எங்கேயும் இருக்காது. கழிவிரக்கம், குற்றவுணர்வு, பயம், பதற்றம், எரிச்சல்… என வெவ்வேறு மனநிலையில்தான் இருப்பர். குடும்பத்துக்காக, குழந்தைக்காக எனப் பல்வேறு சாக்குகளை வைத்து தங்களைச் சமாதானப்படுத்திக்கொள்வார்கள்.

உண்மையில் பெண்களின் வைராக்கியத்தின் முன், எல்லாம் தோற்றுப்போகிறது… எல்லாமும்!

‘நான் சாதி எல்லாம் பார்க்க மாட்டேங்க. எந்த சாதிப் பொண்ணா இருந்தாலும் ஓ.கே’ என ஒரு பையன் சொன்னால், அவனைக் கொஞ்சம் பெருமிதமாகப் பார்ப்பார்கள். அதையே ஒரு பெண் சொன்னால்..? சொல்ல முடியுமா?! ‘அட… வீட்ல பார்த்த பையன்னாத்தானே அப்படி. காதல் கல்யாணத்துல அப்படி எல்லாம் இல்லை’ எனச் சொன்னால், அதையும் மறுக்கவே தோன்றுகிறது. காதல் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், கணவனின் சாதியை இறுகப் பிடித்தே ஆக வேண்டும். வேறு சாதியில் காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா பெண்களும், கணவன் குடும்பத்தின் அத்தனை சாதி சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.  அப்படியெனில், காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் சாதியைக் கடந்துவிடுகிறார்கள் என்பது உண்மையா?

எனக்கு சாதி இல்லை, மதம் இல்லை, தனிப்பட்ட கொள்கைகள் இருக்கிறது என்ற முழக்கங்களோடு ஒரு பெண் குடும்பத்தில் இயங்குவது, எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. வேண்டுமானால் மார்க்ஸ், எங்கெல்ஸை மனதில் நினைத்தபடி பூஜை அறையைச் சுத்தம் செய்யலாம். பெரியாரைப் படித்தபடி சொந்த பெண்ணுக்கு கணவரின் சாதியில் மாப்பிள்ளை தேடலாம்.

கணவனுக்கு சடங்குகளில் நம்பிக்கை இருந்தால், மனைவிக்கு அதில் விருப்பம் இல்லாவிடினும் கேள்வியே இல்லாமல் அதைச் செய்தாக வேண்டும். அதேபோல் கணவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனில், மனைவிக்கு நம்பிக்கை இருந்தாலும் செய்யக் கூடாது. கலைஞரின் மனைவியோ, மு.க.ஸ்டாலின் மனைவியோ கோயிலுக்குச் சென்றால், அதையும் இங்கே விமர்சிப்பார்கள். அப்போதெல்லாம் கலைஞரையோ, ஸ்டாலினையோ நினைத்தால், பெருமையாக இருக்கும். இயல்பாக வராத நம்பிக்கை ஒன்றை, தன் மனைவியிடம்கூடத் திணிக்காத பெருந்தன்மை எத்தனை பேருக்கு இருக்கிறது?

பெண்களை ஏன் ஆண்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. இதே சமூகத்தில் பெண்களைப்போலவே ஆண்களும் மூச்சுத் திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சமூக அமைப்புதான் ஒருவனை ஆணாக வளர்த்தெடுக்கிறது என்ற புரிதல் நமக்கு இருக்கிறதா? தோழமையோடு பேசிப் புரியவைப்பதற்குப் பதிலாக, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ பாணியில் உங்க மனசில ஆணாதிக்கம் இருக்கு என சுலபமாக ஸ்டாம்ப் குத்தி, ஆண்களை விலக்கிவைக்கிறோம். ஆண் இல்லாத உலகில் பயணப்படுவது பெண்களுக்கு எப்போதாவது சாத்தியமா? ‘என்னால தனியா செய்ய முடியலை… கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?’ எனக் கேட்பதற்குப் பதிலாக, ‘ஏன் ஆம்பளையாவே நடந்துக்குறீங்க… உனக்கு மட்டும்தான் டாமினேட் பண்ணத் தெரியுமா? நானும் பண்றேன் பாரு’ எனக் கிளம்பினால், அங்கு சமத்துவம் என்றேனும் வருமா? அரைகுறைப் பெண்ணியப் புரிதல்கள், ஆணிடம் புரியவைப்பதற்குப் பதிலாக சண்டையிடுகிறது என்பதுதான் யதார்த்தம்.

தன் மகனின் தூக்குக் கயிற்றை அறுக்கத்தான் அற்புதம் அம்மாள் போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த நெடிய போராட்டத்தின் தொடக்கம் மட்டுமே, அவரது சொந்த நலனுக்கானதாக இருந்தது. அதை மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கமாக மாற்றியதில் அவரது போராட்டம் சமூக நலனுக்கானதாக மாறிவிட்டது. தன்னுடைய சொந்த சோகங்களை, அதில் இருந்து கிடைத்த படிப்பினைகளை அவர் சமூகத்துக்கானதாக மாற்றினார்.  எங்கும் அவர் தன்னையோ, தன் சொந்த நலனையோ முன்னிறுத்தவே இல்லை. அற்புதம் அம்மாளைவிடச் சிறந்த பெண்ணியவாதி யாராக இருக்க முடியும்? ‘நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். என் இஷ்டப்படி வாழ்வேன்’ எனச் சொல்லும் ஒரு பெண்ணியவாதியையும் அற்புதம் அம்மாளையும் ஒப்பிட முடியுமா? ஒரு பெண் தன்னை நல்லவிதமாக வெளிப்படுத்தி தன்னை முன்னுதாரணமாக மாற்றிக்கொள்வதும்,

அதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்குவதும், தன்னையொற்றி பிற பெண்கள் வர வழிவகுப்பதும்தான் பெண்ணியம். மரண தண்டனைக்கு எதிரான சின்னமாக அற்புதம் அம்மாள் மாறியதைப்போல.

‘குடும்ப அமைப்பு வேஸ்ட்’ என அறிவுஜீவிகள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘இருக்கலாம். ஆனா அதுக்குள்ளதான் நான் வாழ்ந்தாக வேண்டி இருக்கு’ என்ற யதார்த்தம் புரிந்தவர்களாக… பொருளாதாரத்தில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டு, தன்னைப் புரியவைக்கப் போராடியபடி, தன் விருப்பங்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து ஆணை வெறுக்காது, இயைந்து சமமாகப் பயணிக்கப் போராடும் சாதாரணப் பெண்கள்தான் யதார்த்தத்தில் பெண்ணியவாதிகள். ஏனெனில், அவர்கள் மூச்சுத்திணறலைப் பார்த்து விலகி கற்பனைக்குள் ஓடவில்லை. அதை ஒவ்வொரு தினமும் எதிர்கொண்டு வாழ்கிறவர்கள். அந்தப் பெண்களே நிஜமான பெண்ணியக் கனவைச் சாத்தியப்படுத்துவார்கள்!

Related Articles

சாவு வீட்டில் சிரித்துக்கொண்டே செல்ஃபி எ... இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது சொல்லாக மட்டும் தான் இருக்கிறதே தவிர செயலில் யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை...
விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேச... அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நி...
கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, ... கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினியின் அரசியல் அறிவிப்பு முதல் தொடங்கியது இந்த ஆண்டிற்கான பரபரப்பு பையர். அன்று முதல் இம்மியளவும் பரபரப்புக்கு பஞ்சமில்லை....
தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்... ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான...

Be the first to comment on "எழுத்தாளர் ப்ரியா தம்பியின் “பேசாத பேச்செல்லாம்” புத்தகத்தில் உள்ள அற்புதமான வரிகள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*