வீரயுக நாயகன் வேள்பாரி பார்ட் 1 ஒரு பார்வை!

A view on velpaari book part 1

எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய நாவல் “வேள்பாரி”. ஆனந்த விகடனில் தொடராக வந்த போதிலிருந்தே பல லட்சம் வாசகர்களை சம்பாதித்து வருகிறது. 

பறம்பு நாட்டின் தலைவன் பாரியை பற்றிய நாவல் இது. இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்கள், கதை சுருக்கம், புதிதாக கூறப்படும் பறவைகள் விலங்குகள் செடி கொடிகள் பற்றி இங்கு பார்ப்போம்.

வேள்பாரி கதாபாத்திரங்கள் :

 1. ஆதன் – தேர் செலுத்துபவன்
 2. செம்பன் – அறுகநாட்டு மன்னன்
 3. நாகு – செம்பனின் தேர் பூட்டுபவன்
 4. நீலன் – பறம்பு நாட்டு வீரன்
 5. எவ்வி – முருகனின் தோழன்
 6. வள்ளி – கொடி குல மகள்
 7. முருகன் -.வேடர் குல மகன்
 8. பழையன் – காரமலை ஊரின் மிக வயதான ஆண்
 9. பழைச்சி – காரமலை ஊரின் மிக வயதான பெண்
 10. கூழையன் – பறம்பு நாட்டு தென்பகுதி எல்லைக் காவலன்
 11. முடியன் – பாரியின் நிழல் போல எந்நேரமும் உடன் நிற்பவன்
 12. வேலன் பூசாரி – குறி சொல்பவர்
 13. கோளூர் சாத்தன் – குடநாட்டு அமைச்சர்
 14. மதங்கன் – வேட்டை சமூக பின்புலத்தில் இருந்து பாணர்களாக மாறியவர்களின் தலைவன்
 15. மதங்கி – வேட்டை சமூக பின்புலத்தில் இருந்து பாணர்களாக மாறியவர்களின் தலைவி
 16. ஆதினி – பாரியின் மனைவி, பொதினிமலையின் குலமகள்
 17. உதயன் – வஞ்சியை தலைநகராக கொண்டவன்(சேர குலம்)
 18. அந்துவன் – மாந்தையைத் தலைநகராக கொண்டவன்(சேர குலம்)
 19. தேக்கன் – பறம்புநாட்டு முதியவன், காடு அறிந்த ஆசான், காடறிய புறப்படும் இளையவர்களுக்கு வழிகாட்ட
 20. குலநாகினி – பாரியின் குல மூதாய் (கொற்றவை கூத்தில் கதை சொல்பவள்)
 21. செம்பா – கிடைமாடுகளை வளர்ப்பவள்
 22. கோவன் – செம்பாவின் மனம் கவர்ந்தவன்
 23. கிள்ளி – ஊர்த்தலைவரின் மகன், செம்பாவை ஒருதலையாக காதலித்தவன்
 24. மயிலா – நீலனின் காதலி
 25. பொறையன் – பெருஞ்சேரலுக்காக நாகர்களை நாடி செல்பவன்
 26. பதுமன் – பெருஞ்சேரல் மூத்த மகன
 27. பொற்சுவை – சூல்கடல் முதுவனின் மகள்
 28. உதிரன் – நீலனைப் போல இன்னொரு வீரன்
 29. பொதியவெற்பன் – பாண்டிய நாட்டு இளவரசன்
 30. இளமருதன் – வெங்கல் நாட்டு இளவரசன்
 31. மையூர்கிழார் – இளமருதனின் அப்பா, வெங்கல் நாட்டு தலைவன் (பாண்டிய நாட்டுக்கு உட்பட சிற்றரசு)
 32. செவியன் – பாண்டிய அரண்மனையின் முதன்மை அலுவலர்
 33. ஆலா – இளமருதனின் குதிரை
 34. காராளி – வெங்கல் நாட்டு சிலை செய்பவன்
 35. மாரையன் – பாண்டிய நாட்டின் மேற்கு வாசல் தளபதி
 36. சாகலைவன் – மதுரையின் கோட்டை தளபதி
 37. வெள்ளி கொண்டார் – பாண்டிய அரசாங்கத்தின் களஞ்சிய தலைவர்
 38. சூல்கடல் முதுவன் – வணிக சாத்துக்கள் அமைப்பின் தலைவன்
 39. குலசேகர பாண்டியன் – பொதிய வெற்பனின் தந்தை
 40. பொற்சுவை – சூல்கடல் முதுவனின் மகள், பொதிய வெற்பனின் வருங்கால மனைவி
 41. அல்லங்கீரன் – பாண்டிய நாட்டு கட்டுத்தறி தலைவன், யானைகளின் பொறுப்பாளர்
 42. முசுகுந்தர் – பாண்டிய நாட்டு தலைமை அமைச்சர்
 43. அந்துவன் – அரண்மனையின் நாள்களையும் கோள்களையும் கணித்துச் சொல்லும் தலைமை கணியன், பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசை வேழருக்கு மாணவன்
 44. சூலிவேள் – தேக்கனுடன் காடறியப் போன மாணவன், திரையர் குல தூதுவையின் கணவன்
 45. சுகமதி – பொற்சுவையின் தோழி
 46. கருங்கை வாணன் – பாண்டிய நாட்டின் பெரும்படை தளபதி
 47. முடிநாகன், அலவன், கீதானி, இளமன், உளியன், குறுங்கட்டி, ஆயன்,  – தேக்கனின் மாணவர்கள்.
 48. திதியன் – சோழநாட்டு இரண்டாம் நிலை தளபதி
 49. காலம்பன் – திரையர்கள் குலத்தலைவன
 50. வேள்பாரி – வேளிர் குல தலைவன்

கதைச் சுருக்கம்: 

அறுக நாட்டு மன்னன் செம்பன்,  பாரியைப் பற்றி கபிலரிடம் பேசிக் கொண்டிருக்க அடுத்த நாள் நடுநாட்டுக்கு போக வேண்டிய கபிலர் செம்பனின் ஏற்பாடுகளோடு பறம்பு மலைக்கு செல்ல முடிவு எடுக்கிறார். நாகு, ஆதன் இருவரும் அவரை தேரில் வேட்டுவன் பாறை வரை அழைத்துச் செல்கிறார்கள். அங்கிருந்து அவரை பாரியிடம் அழைத்துச் செல்கிறான் நீலன். நீலன் ஒரு படைவீரன். அவன் தன் காதலியை பார்த்துவிட்டு வரும் வழியில் கபிலரை பார்த்து விசாரித்து தன்னோடு அழைத்துச் செல்கிறான். கடல், காடு கொம்புகளால் ஆனதா? வேப்பம் பூ, வயல் நண்டுகள், யாருக்கும் வளைந்து கொடுக்காமல் வளரும் முள்ளம் பன்றி போன்ற ஆவேச பன மரம், தசைப்பிடிப்பு வலி நீக்கும் பச்சிலை, குட்டை நீரில் உள்ள விசத் தன்மையை போக்கும் பனங்குருத்து, பெரும்பாணர் பாரியை பாடிய பனையன் மகனே, வேளீர் குலத்தை தோற்னுவித்த எவ்வி, முருகன் வள்ளி காதல் கதை, நாக்கறுத்தான் புல், கீழ்மலை விளைச்சலை பாதுகாக்கும் முருகன் எவ்வி(வயதில் சின்னவர்) நட்பு கதை, முருகன் காட்டிய ஏழிலை பாலை மரத்தால் மயங்கிய வள்ளி, முருகன் வள்ளிக்கு பரண் அமைத்த எவ்வி, ருசியான பழச்சாறை உருவாக்கும் அதிசய பூண்டு, புல்லில் விழுந்த பூண்டுச் சாறை நக்கி நாக்கு அறுபட்ட பாம்புகள்  போன்ற விசியங்களைப் பற்றி பேசுகிறார்கள் இருவரும். 

தனைமயக்கி மூலிகை கொடுத்து தசைபிடிப்புற்ற கபிலரை மேல்நோக்கி அழைத்து வருகிறான் நீலன். இங்கு வந்ததும் முருகன் வள்ளியை எவ்வி தேடி அலைந்தது பற்றியும் சந்தனக் கட்டை மற்றும் சிலாக்கொடியால் அமைக்கப்பட்ட பரண் நீண்டு காடு தோறும் வளர்ந்தது பற்றியும் எவ்வி வளர்த்த வேளீர் குலத்தை பற்றியும் வேளீர் குலத்தின் 42வது தலைவன் பற்றியும் பேசுகிறார்கள். திறளி மரம் யவன வணிகத்தில் எப்படி மதிக்கப்பட்டது என்பது விவரிக்கப்படுகிறது. இரண்டாவது கணுவிலும் பத்தாவது கணுவிலும் குறிஞ்சி பூ பூத்ததை வைத்து வயது சொல்லும் 97 வயதான ஊர்ப்பழையன் கபிலர் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி வருகிறார். நாவல் பழ கூடையை வைத்து கபிலரை பழம் எடுக்க வைத்து அவருடைய காடு அறிவு பற்றி பேசுகிறார் ஊர்ப்பழையன். நாவல் பழங்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. மகர வாழை இலையில் கொழுந்தில் வைக்கப்பட்ட புளிப்பிரண்டை வால்மிளகை வைத்து அரைக்கப்பட்ட துவையலை சாப்பிட்டு காரத்தால் கண் கலங்குகிறார் கபிலர். 

நீலன், பழையன், மூன்று இளைஞர்கள் சேர்ந்து கொண்டு பறம்பு நாட்டில் நடக்கும் கொற்றவை கூத்து பற்றியும் 400 ஊர் பற்றியும் எட்டுத் திசை குதிரை வண்டிப்பாதைகள் பற்றியும் பேசிக்கொண்டு கடினமான உச்சிப்பாதையில் நடந்துசெல்கின்றனர். பருந்துகளை வேட்டையாடும் காக்கா விரிச்சி பறவையை பார்த்து புதருக்குள் பாறைக்குள் பதுங்கி மறைந்து மிரள்கின்றனர் அவர்கள். காக்கா விரிச்சியால் தனது மனைவியின் பின்மண்டை அறுந்த கதையை சொல்கிறார் பழையன். நீலன் அதை நினைத்து பார்க்கிறான். 

காக்காவிரிச்சியின் இறக்கைகளை வெட்டித் தள்ளிய பாரியின் வீரத்தைப் பற்றி பேசியபடி நடக்கிறார் பழையன். அனைவரும் புலிவால் குகைக்கு வருகின்றனர். கொற்றவை கூத்து பற்றி ஆர்வம் இங்கு வந்ததும் அதிகமாகிறது. பன்றிக்கறி தின்று பசியாருகிறார்கள் மக்கள். தான் தின்றுகொண்டிருந்த கறியை குழந்தை அழுகிறது என தெரிந்ததும் கபிலர் கையில் கொடுத்துவிட்டு அரை இருட்டுக்குள் மறைகிறாள் தாய். திரும்பி வந்து கறியை துளவ கபிலர் அவளுக்கு கறித்துண்டை தருகிறார். நீலன் உதவியுடன் இரண்டு காக்காவிரிச்சி பற்றி பேசியபடியே சுனைநீர் அருந்தி குகைக்கு திரும்புகிறார் கபிலர். கூழையன் அங்கு வருகிறான். கபிலரை சந்தேகிக்கிறான். விடியற்காலையில் அந்த குகைக்கு வருகிறான் வேள்பாரி. கபிலரை தோளில் சுமந்து,அழைத்துச் செல்கிறான் பாரி. 

ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது பறம்பு நாடு. முருகன் கொடியில் இருக்கும் முன்பக்கம் கோழியை போலவும் பின்பக்கம் சேவலை போலவும் உள்ள அறுபதாங்கோழியை கபிலருக்கு அளிக்கும் விருந்திற்கு பிடித்து வர உத்தரவிடுகிறான் வேள்பாரி. பிறகு சில நாட்களில் அவனே வேட்டைக்குச் செல்கிறான். பாரியிடம் வணிகம் பேச வருகிறார்கள் யவனர்களின் தூதுவர்கள். அவர்களின் கையை வெட்டுகிறான் முடியன். அங்கவை சங்கவை என்ற தனது இரண்டு மகள்களுடன் நேரம் ஒதுக்குகிறான்.மதங்கன் ஆட்டத்தை கண்டு ரசிக்கிறார்கள். மகள் திருமண வயதில் இருக்கிறாள் என்பதை உணர்கிறான் பாரி. மதங்கன் படை கொல்லிக்காட்டு விதையை பரிசாக கேட்கிறார்கள். கொல்லிக்காட்டு விதை பற்றிய பிளாஸ்பேக் வருகிறது. மதங்கன் கூட்டத்துக்கு குளத்தில் உள்ள மீன்களை கொல்லிக்காட்டு விதையால் மயங்க வைத்து அவர்களின் பசியை தீர்க்கிறான் வீரன் ஒருவன். 

தொழிற்சாலைகள் ஆயுத கிடங்குகள் உள்ள பாழி நகருக்கு பாரியும் கபிலரும் செல்கிறார்கள். போகும் வழியில் மலைகளுக்கு நடுவே புகுந்து வரும் சூரியனின் ஒற்றை ஒளிக்கற்றையை பார்க்கிறார்கள். பிறகு தனியாக கபிலர் செல்ல அவரை வழிமறித்து பேசுகிறாள் நீலனின் காதலி மயிலா. பிறகு பாரியும் கபிலரும் சந்திக்கிறார்கள். அரண்மனையை சுற்றியுள்ள நாகப்பச்சை வேலியை (விலங்குகளை விரட்டும்) பற்றி ஏழிலைப்பாலை (பெண் வாசனையால் பூத்து காதலர்களை ஒன்று சேர வைக்கும்) பற்றி பேசுகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி கொடிக்குல நாகினிகள் வருகிறார்கள். வழக்கமான இலுப்பை எண்ணெய்க்குப் பதிலாக நாக கழிவையும் நஞ்சுப் பிசினையும் தடவிய கொம்பன் விளக்குகளை பற்றி வைக்கிறார்கள் குலநாகினியின் ஆட்கள். மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட 16 குலங்களை பற்றியும் கொற்றவை கூத்து (மூவேந்தர்களால் நடத்திய அழிவால் போரில் தப்பித்தவர்கள் பறம்பு நாட்டில் ஏறி தங்களுடைய தெய்வமான கொற்றவையை வழங்கும் விழா – 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விழா) பற்றியும் கபிலரும் பாரியும் பேசுகிறார்கள். எல்லோரும் கூடி இருக்க தெய்வ வாக்கு விலங்கு ஒன்று மூன்றாம் கூடையில் உள்ள பழத்தை எடுக்க அகுதை மக்களை பற்றி பேசுகிறார்கள் கபிலரும் பாரியும். வேளாண் குலத்தை தோற்றுவித்த ஆகுதை பற்றி பேசுகிறார்கள் இருவரும். 

செம்பாதேவியின் கதை வருகிறது. மாடுகளின் மேல் அமரும் பறவைகளை தடுக்க வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டது குறித்து பேசுகிறார்கள். ஊர்த்தலைவரின் மகன் கிள்ளி செம்பா மீது கண் வைக்கிறான். இரவு கூத்து நடக்கும் வேளையில்  தன் அப்பாவை கூட்டி வந்து செம்பாவை காட்டுகிறான் கிள்ளி. கோவன் செம்பா வாழும் செம்மலைக்கு கிள்ளியின் ( கிள்ளியின் அப்பா மாடுகளின் கழுத்தில் உள்ள மணிக்கற்களை களவாடும் பொருட்டு) படை வருகிறது. அதே சமயம் கோவன் செம்பா திருமண ஏற்பாடு நடக்கிறது. குலத்திற்கேற்ப 4 கொண்டை 5 கொண்டை போட்டிருந்த பெண்கள் 3 கொண்டை போடுகிறார்கள். உறையூர் படை(கிள்ளியின் படை) செம்மலை நோக்கி வர மாடுகளை அவிழ்த்துவிடுகிறான் கோவன். மாடுகளின் கொம்பில் தீ பற்ற வைத்து ஆவேசப்படுத்தும் பச்சிலை சாறுகளை கொடுத்து துரத்துகிறான், சீரிப்பாயும் நாய்களை அவிழ்த்து விடுகிறான் கோவன். உறையூர்ப்படை தெறித்து ஓடியதும் பச்சிலை சாறால் உயிரிழந்த மாடுகளை கண்டு கண்கலங்கிய கோவன் மாடு கொம்புகளை எடுத்து தன் தொண்டையில் குத்திக் கொண்டு சூரியனை பார்த்தபடி மடிகிறான். அடுத்த சில நாட்களில் கிள்ளி செம்பாவை நோக்கி வருகிறான். அவனை தன் குடிலுக்கு சைகையால் அழைத்துச் செல்கிறாள் செம்பா. குடிலுக்குள் வலிமையான பெண்கள் நால்வர் இருக்க அவனை இறுக்கப் பிடித்து கோவன் குத்திக்கொண்டு இறந்த கொம்புகளால் உடலை கிழித்து வெண்சாந்து உருண்டையை அதில் தடவி வெளியே அனுப்ப பறவைகளால் குத்திக் கொல்லப்பட்டு இறக்கிறான் கிள்ளி. இந்தக் கதையை கேட்ட கபிலரின் உடல் நடுங்குகிறது. கதை முடிந்ததும் கதை பாடியவர்கள் வைத்திருந்த கொம்புகளை எடுத்து வைத்துக்கொள்கிறான் முடியன். 

மறுநாள் இரவு நாகர்களின் கதை பாடப்படுகிறது. இந்த கதையை தேர்வு செய்ய தெய்வ வாக்கு விலங்குகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. எருக்குமலை தேறிமலையில் நாகர்கள் (பாம்பை கட்டுப்படுத்துபவர்கள்) வாழ்ந்தனர். சுருங்கிப் போன தோள்கள் உதிர என்ன வழி எனக் கேட்க பாம்பு தன் சட்டையை உரிப்பதற்கு முன்பு சாப்பிடும் மூலிகையை சாப்பிட வேண்டும் என முனிவர் சொல்ல பொறையன் நாகமலைக்கு மூத்த பிடார வைத்தியன் இளைய பிடாரன் உட்பட 15 பேருடன் செல்கிறான். அவர்களை நிழல் விரியன் பாம்பு தொடர்கிறது. யாருடைய உடலின் நிழலுக்குள் துவங்குகிறதோ அந்த உடலை விடாது பின்பற்றும் நிழல் விரியன். கட்டை விரியன் புதரில் இருக்க இளைய பிடாரன் கல் எறிந்துவிட பாம்புகள் நான்கு வீரர்களை சாகடிக்கிறது. இளைய பிடாரனின் காதின் சிறுபகுதியை அறுக்கிறான் மூத்த பிடாரன். நாகர் குலத்தலைவனை சந்திக்கையில் இரு பிடாரன்களோடு ஒரு வீரன் மட்டுமே இருந்தான். நாகர் குலத்தலைவனோ பாம்பு உண்ணும் மூலிகையில் எந்த மூலிகை வேண்டும் என கேட்க பொறையன் தடுமாறுகிறான். நாகம் புணரும்போது அதன் மீது துணியை போர்த்தி தர வேண்டும் என்கிறான் மூத்த பிடாரன். அதற்கு மறுப்பு தெரிவிக்க நாக தேவதையை வணங்கிவிட்டு செல்கிறோம் என்கிறான். குடிலுக்குள் தங்க வைக்கப்படுகிறார்கள். வெளியே நாகர்களின் ஆட்டம் நடக்க குடிலில் சிறுதுளை இட்டு பார்க்கிறார்கள் மூத்த பிராடனும் இளைய பிடாரனும். இளைய பிடாரன் கண்ணில் பாம்பு குத்தி இறக்கிறான். பெருஞ்சேரலிடம் சென்று நாகர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்கிறான் மூத்த பிடாரன். எருக்குமலையை அடைய குறுக்குவழி திட்டம் போட்டு தருகிறான். சில மாதங்களில் இருபக்க படைகளும்  போரிடத் தயாராகிறது. நாகர் படை வெல்ல கூண்டோடு அவர்களை எரிக்க திட்டமிடுகிறான் மூத்த பிடாரன். பதுமன் கழுத்தில் பச்சை விரியன் கடிக்க அவன் இறந்துபோக நாகர் மலையைச் சுற்றி தீ வைக்கிறார்கள். மூத்த பிடாரனின் கண் முன்பு அனைவரும் எரிந்து மடிகிறார்கள். கதை கேட்டுக்கொண்டிருந்த கபிலர் இப்போது நெருப்பை பார்க்க நெருப்புக்குள் புகுந்து ஆடுகிறார்கள் கலைஞர்கள். அதை பார்த்து மயங்கிச் சரிகிறார் கபிலர். தீக்களியை உடல் முழுக்க தடவிக்கொண்டு நாகர்கள் தப்பி பறம்பு மலை வந்தடைகிறார்கள். 

பாகம் 2 

பாண்டிய இளவரசுனுக்கு (பொதிய வெற்பன்) திருமணம் நடக்க இருக்கிறது. அவர்களுக்கு என்ன பரிசளிப்பது என மையூர் கிழாரும் அவருடைய மகன் இளமருதனும் யோசிக்கிறார்கள். காமன் விளக்கு (பாவை விளக்கு, நாக விளக்கு போன்றவை இதன் வகைகள்) செய்யலாம் என காராளி சொல்கிறான். அந்த நேரத்தில் பறம்பு நாட்டின் தெய்வ விலங்கான தேவாங்கு அங்கு வெள்ளத்தில் அடித்து வரப்படுகிறது. இளமருதன் அவற்றை பரிசாக அளிக்கலாம் என்று கூண்டுக்குள் அடைத்துச் செல்கிறான். அவனுடைய அப்பா சில நாட்கள் கழித்து காராளி செய்த காமன் விளக்கை பரிசாக அளிக்க முடிவு எடுக்கிறார். 

மதுரையை நோக்கி ஐந்து வண்டிகளோடு செல்கின்றனர் இளமருதனும் செவியனும். மதுரை கோட்டை வாசலை அடைகின்றனர். வாசல் கதவு தடுப்புக்கட்டைகளை யானையால் தான் தூக்க முடியும். மாரையன் அல்லங்கீரனிடம் சென்று நள்ளிரவில் யானையை வேலை வாங்க சொல்கிறான். ஐம்பது வயது யானையை அழைத்துச் சென்று கதவில் உள்ள தடுப்புக் குச்சியை தூக்கிவிட்டு இளமருதனுக்கு வழி அமைத்து தருகிறார்கள். மாரையனை யானை மிதித்து சாகடிக்கிறது. வேனிற்கால பள்ளியறை, கார்கால பள்ளியறை, பாண்டுரங்கம் போன்ற பகுதிகளை சுற்றிப் பார்க்கின்றனர் இளமருதனும் செவியனும். மாளிகைகளின் மேற்கூரையில் வானியல் அமைப்புகளை வரைய வேண்டும் என்று சொல்ல அந்துவன் வந்து கொண்டிருந்தான். பெருங்கணியர் வருவதற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வேலைவாங்கினான் அந்துவன். இளமருதனுக்கும் செவியனுக்கு மேற்கூரையில் உள்ள நட்சத்திர மதி அமைப்பை கார்கால(பொதிய வெற்பன் பிறந்த நட்சத்திர அமைப்பு) வேனிற்கால ( பொற்சுவை பிறந்த நட்சத்திர அமைப்பு) வானியல் அமைப்பை விளக்கி சொன்னார் அந்துவன். தெய்வ வாக்கு விலங்கு இருக்கும் மேடை சக்கரவாகப் பறவைக்கு(பொற்சுவைக்கு பிடித்த பறவை – கார்காலம் முடிந்ததும் கடலுக்குள் போய்விடும்) என்று அந்துவன் சொன்னார். காமன் விளக்கு வைக்க இருக்கும் பாண்டுரங்கத்தில் உள்ள மேடையில் அந்துவன் கோபப்பட்டதால் தேவாங்கு கூண்டை வைக்கிறான் இளமருதன். 

கார் காலத்தில் கபிலருக்கு உடல் நலமானது. அங்கவை சங்கவைகளுக்கு எழுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார். உதிரன் அவரது சூம்பிப்போன கால்விரலுக்கு தேய்த்து கொடுத்து உயிரோட்டம் கொடுத்தான். அவருடைய காலுக்கு ஏற்ப பாதணி செய்ய முற்பட்டான். கபிலருக்கு குளிருக்கு இதமாக இருக்க எலிமயிர்ப் போர்வை செய்து தர சொன்னான் பாரி. பேரெலிகளை பிடிக்கப் போன இளைஞர்களை பின்தொடர்கிறார்கள் பாரியும் கபிலரும். மயிலை பார்க்கிறார்கள். கருநொச்சியோடு காலடித்தடத்தை உவமை கூறுகிறார்கள். வேங்கை மரத்தில் யானையை கொன்ற புலியின் வாய் ரத்தம் துடைக்கப்பட்டிருப்பதை காண்கிறார்கள். 

பெரும் திருவிழாவைப் போல யானை பல்லக்குகள் தேர்கள் எல்லாம் வர நிலம் அதிரும்படி இசை ஒலிக்கிறது. பெண்கள் தூக்கி வரும் முதல் பல்லக்கில் சக்கரவாகப் பறவை இறங்குகிறது. எட்டு பெண்கள் தூக்கி வரும் மகர பல்லக்கில்  இரண்டாவதாக வருகிறாள் பொற்சுவை. அதனை வேடிக்கை பார்க்கிறார்கள் இளமருதனும் செவியனும். 

திசைவேழர் மூன்று மாளிகைகளை சுற்றிப்பார்க்க வருகிறார் (கார்கால மாளிகை, வேனிற் கால மாளிகை, பாண்டுரங்கம்). முதலில் கார்கால மாளிகை மேற்கூரை ஓவியத்தை பார்த்து திருத்தம் சொல்கிறார். அதேபோல இரண்டாவது தளமான வேனிற்கால கூரையில் திருத்தம் சொல்கிறார். 

அமைச்சர் முசுகுந்தன் மாரையனை கொன்ற யானைப்பாகனிடம் விசாரணை நடத்துகிறார். யானைக்கு அப்போது மதம் பிடிக்கவில்லை, அரை இருட்டுக்குள் இருந்து திடீரென யானை முன் மாரையன் வந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டார் என்கிறான் பாகன். பாண்டுரங்கம் சென்ற திசைகிழார் அங்கேயும் திருத்தம் சொல்கிறார். தேவாங்கு எங்கு இருக்கிறது என பதைக்கிறான் அந்துவன். பாகனுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு அரங்குக்குள் யானையும் பாகனும் இறங்குகிறார்கள். யானை சுற்றி சுற்றி பாகனை துரத்தி மிதித்து கொன்றால் பாகன் குற்றம் புரிந்தவன் எனவும் தப்பித்தால் குற்றமற்றவன் என்பது தான் அந்த விதி. 

இளமருதன் தேவாங்கை பாண்டுரங்கத்தில் வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறான். பரவாயில்லை ஓவிய பணி முடியும் வரை இந்த விலங்கு எனக்கு பொழுதுபோக்காக இருக்கும் என்கிறான் அந்துவன். பாசிலை அரங்கு(மணிகற்கள் நிறைந்த அரங்கு, அரச குடும்பத்தினர் மட்டுமே இருக்கும் அரங்கு) உள்ளே பொதிய வெற்பனுக்கும் பொற்சுவைக்கும் நிச்சயம் நடக்கிறது. உதிரன் குழு பேரெலியை நோக்கி ஈட்டி எறிகிறது. பாறையில் இருந்து வெளிப்பட்ட இரண்டு பேரெலிகளில் தப்பித்த பேரெலியின் நுட்பத்தை கண்டு விசிலடிக்கிறான் பாரி. வேட்டையாடுவதில் முக்கியமான நுட்பம் தப்பித்தலே என்கிறான் பாரி. காட்டுக்குள் ஆபத்தான தருணங்களில் சென்றிக் கொடியில் தீ மூட்டினாள் புகை மட்டும் ஊசி போல வான் நோக்கிச் செல்லும். புகையை பார்த்து உதவிக்கு ஆள் வருவார்கள். இன்னொரு புகை மேல் எழுந்தால் உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். கபிலருக்காக பாரியும் உதிரனும் வண்டுக்கடி மரப்பட்டையை எடுத்து வருகிறார்கள். குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் வெற்றிலை தட்டை மாற்றிக் கொள்கிறார்கள். வெற்றிலையை கண்டறிந்த திரையர்கள் பற்றி கபிலருக்கு கதை சொல்கிறான் பாரி. 

தேக்கனுடன் காடறிய போன மாணவர்கள் பசியால் குகைக்குள்ளே தில்லைமரத்தால் புகை மூட்டி கிழங்கு சுட்டு தின்க முற்பட தேக்கன் வெளியில் மழையில் நனைகிறான். சூலிவேள் என்ற மாணவன் தில்லை மரம் பற்றி பேசுகிறான். பெருங்காற்று அடிக்கிறது தில்லை மரத்தின் புகை எல்லோர் கண்ணிலும் பட ஆற்றின் அடிசேற்றை எடுத்து கண்களின் மேல் பூசுகின்றனர் தேக்கன் உட்பட அனைவரும். மீண்டும் சேறு எடுக்கப் போன சூலிவேள் வெள்ளத் தோடு அடித்து செல்லப்பட்டு ஒரு ஊரின் கரையோரம் உள்ள பாறையில் சிக்கி கொள்கிறான். அவனை விடுவிக்கிறார்கள் ஊர் மக்கள். கண் திறந்த சூலி வேள் பசியால் தவிக்க தன்னுடைய கொல்லிக்காட்டு விதையை தூவி பறவையை மயங்க வைத்து அதை பால்கொறண்டி செடியால் வேக வைக்கிறான். அதை தூதுவை (சூலிவேளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்) என்ற பெண்ணும் அவளது தோழியும் இதை பார்த்து திகைக்கிறார்கள். மக்கள் அவனை சூழ்ந்து அதை பற்றி விசாரிக்கிறார்கள். அதிசயிக்கிறார்கள். சூலிவேள் சிக்கிய பெரும்பாறையை நகர்த்தவர்கள் திரையர்கள். 

திரையர் கூட்டத்தில் நிறைய பேருக்கு முதுகில் வெற்றிலை மச்சம் உள்ளது. திரையர் ஒற்றையாக சென்று காட்டெருமையை வேட்டையாடுகிறார் அதன் அடையாளமாக வெற்றிலையை பறித்து வருவார் என்ற செய்தியை சூலிவேள் நம்பவில்லை. காட்டெருமையிடம் இருந்து தப்ப மட்டுமே பறம்பு மக்களுக்கு தெரியும்… திரையர்கள் வேட்டையாடுகிறார்களா எப்படி என்று அதிசயித்தான். கிழவி ஒருத்தி குறிப்பால் காட்டெருமையின் உயிர் பின்னங்கால் தசையில் தான் உள்ளது என தெரிந்து காட்டெருமையை ஒரே அடியில் வீழ்த்தி ஆண் வெற்றிலைகளை (ஆண் வெற்றிலை என்றால் அதன் பின்புறம் உள்ள நரம்புகள் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தால் அது ஆண் வெற்றிலை, ஏற்ற இறக்கம் இருந்தால் பெண் வெற்றிலை) பறித்து வந்து தூதுவையை கட்டிக் கொள்கிறான். தூதுவையை போலவே சங்கவை முதுகிலும் வெற்றிலை மச்சம் இருக்கிறது என்கிறான் பாரி. 

தனது திருமண கொண்டாட்டத்தின் போது அண்ணன் இல்லையே என தோழி சுகமதியிடம் கூறி அழுகிறாள் பொற்சுவை. யவன வணிகர்கள் அவளது திருமண விழாவை கொண்டாடுகிறார்கள். மீனாள் என பெயர்சூட்டப்பட்ட தங்க நாணயங்களை பரிசாக வழங்குகிறார்கள். வானியல் ஓவியங்களை ரசித்துக் கொண்டிருந்த திசைவேழரிடம் முதுவன் வருகிறார். இருவரும் வானியல் பற்றி காலச்சுழற்சி பற்றியும் நாழிகைகள் பற்றியும் பேசிக்கொள்கிறார்கள். மறுநாள் காலை அனைவரும்(முசுகுந்தர் வெள்ளிகொண்டார் பொதியவெற்பன் உட்பட) எழுந்ததும் முந்தைய இரவு கொண்டாட்டத்தை தேறலை ஆட்டத்தை பற்றி பேசுகிறார்கள். யவனர்களுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைளை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் தன்னை ஒரு வியாபார பொருளாக பார்க்கிறார்கள் என பொற்சுவை சுகமதியிடம் கூறி காதலனை நினைத்து வருந்துகிறாள். பெரியவர்கள் தேறல் குடித்துவிட்டு யவன அழகிகள் பற்றி கதைபேசுகின்றனர். 

பொற்சுவைக்கு சிலம்பு அணிதல் நிகழ்வு நடைபெறுகிறது. சிலம்பில் எந்த பரல்களை வைப்பது என தந்தை கேட்க சிவப்பு பரல்களை வைக்கலாம் என சொல்லிவிட்டு செல்கிறான் பொற்சுவையின் அண்ணன். ஓசையை கடத்துவதற்காக மட்டுமே அணியப்பட்ட சிலம்பை திருமணத்துக்கு முன் சடங்காக கழட்டுகிறார்கள். 

எலிமயிர்ப் போர்வைக்காக எலிகளை பிடித்தாயிற்று. வண்டுகடி மரப் பட்டை சாறை கபிலர் உடலில் மூன்று நாள் தொடர்ந்து பூசுகிறார்கள். தேக்கனுடன் கபிலர் பேசுகிறார். பிறகு பாரியுடன் வேட்டைக்குச் சென்றதை பற்றி நினைவுகூறுகிறார். கார்த்திகை கூட்டம் பற்றி பாரியும் கபிலரும் பேசிக் கொள்கிறார்கள். கார்த்திகை கூட்டத்திற்கு எப்படி பெயர் வந்தது என கேட்கிறான் பாரி. கபிலர் திகைக்கிறார். பெயர் வைத்தவர் முருகன் என்று நீலன் விட்ட கதையிலிருந்து பாரி முருகன் கதையை சொல்லத் தொடங்கினான். 

முருகனும் வள்ளியும் எவ்வி கட்டித் தந்த பரணில் இருந்து இறங்கி வேறு இடம் நோக்கி செல்கிறார்கள். வழியில் அன்னமழகியரிசியை கண்டதும் வள்ளி பறித்து தின்கிறாள். விக்கல் எடுக்கிறது. கான வெள்ளெருக்கச் செடியின் வேர் வரை குழிதோண்டி நீர் பருக வைக்கிறான். பன்றி கூட்டம் தான் வள்ளியை காண வைத்தது என்பதால் அவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் படி நீர் தேடி அலைந்த அவைகளுக்கு மூடிய குழியை மீண்டும் பறித்து நீர் பருக வைக்கிறான் முருகன். பன்றியின் மேல் ஒட்டியுள்ள செந்தாதுக்களை வள்ளி கவனிக்கிறாள். செங்கடம்பு பூக்களை கூந்தலிலும் மாரிலும் மாறிமாறி சூட்டிக்கொள்வதை பேசுகிறார்கள் முருகனும் வள்ளியும். நரந்தம் புல் இருக்கும் பகுதியை அடைகிறார்கள். இருவரும் அதிசயித்து நிற்கிறார்கள். நரந்தம் மேட்டில் வந்து இருவரும் நிற்கிறார்கள். ஆறு விண்மீன்கள் ஆறு இதழ்களை கொண்ட செங்காந்தள் மலர்களை போல உள்ளன என்று வியந்து அந்த மலரை வள்ளிக்கு சூடுகிறான் முருகன். கார்மேகம் மழையை கொட்டித் தீர்ப்பதற்கும் தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் அவ்விண்மீன் கூட்டமே காரணம் என அதற்கு கார்த் தீ என பெயர் வைத்தனர். 

பாரி சொன்ன கதையை கபிலர் கேட்டுக் கொண்டே அவரை பின் தொடர்ந்தார். அந்த ஆறு விண்மீன்களின் அடிப்படையில் தான் பெரும்பொழுதும் சிறுபொழுதும் என்று கூறுகிறான் பாரி. வேளீர் குலத்தவன் கண்டறிந்ததால் தான் பொழுதுகளை வேளை என்கிறாரா, உயிரெழுத்து மெய்யெழுத்து ஒரு நாளைக்கு அறுபது நாழிகை என்தெல்லாம் 6ன் மடங்குகளாக இருக்கின்றனவே என்கிறார் கபிலர். பாரி விடை சொல்லவில்லை. சேவல்(சூரியன் எழும்புவதை தெரிவிக்கும்), மயில்(மழை வருவதை தெரிவிக்கும்) போன்றவை எல்லாம் முருகனின் பறவைகளாக இருப்பது ஏன் என பாரி கபிலருக்கு கதை சொல்கிறான். வேளீர் குலத்தினர் பாழி நகரில் தான் செல்வம் சேமித்து வைத்தனர். அது மண்ணிற்கு அடியில் உள்ளது என்றதும் திடுக்கிட்டு நிற்கிறார் கபிலர். அந்த நகரை உருவாக்கியவன் முருகன் என்கிறான். அந்த நகருக்கான திறப்பு கண்டுபிடிப்பு குறிப்புகள் வானில் உள்ள நட்சத்திரங்களில் உள்ளது. அதை தெரிந்தவன் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அதை கண்டறிந்து கொள்ளலாம் என்கிறான் பாரி. கருநெல்லி சாப்பிட்டு தான் பகலில் விண்மீன் நகர்வை முருகன் பார்த்தான் என்கிறான் பாரி. 

மயிலா படிப்பு முடிந்து நீலனை தேடி கிளம்புகிறாள். சங்கவை அங்கவையும் படிப்பு முடிக்கிறார்கள். கபிலர் அங்கேயே தங்குகிறார். சாமப்பூ பூக்க மாணவர்களை காடறிய கூட்டிச் செல்ல முற்படுகிறான் தேக்கன். பாரி எலிகளை பிடிக்க பல்வேறு வழியில் போனது சேரர்கள் எந்த வழியில் தாக்குதலை நடத்த திட்டமிடுகிறார்கள் என்பதை கவனிக்க தான் என்று உணர்கிறான் உதிரன். 

அந்துவன் தேவாங்கு விலங்குக்கு பல்லி முட்டை போடுகிறான். மிரட்டுகிறான் அது அச்சமடைந்து வடக்கு திசை நோக்கியே எப்போதும் அமர்கிறது. அது வானியல் குறிப்பு தெரிவிக்கும் விலங்கு என்று திசைவேழரிடம் சொல்ல செய்தி எல்லோருக்கும் பரவுகிறது. இளமருதன் செவியன் இருவரும் பயப்படுகிறார்கள். கடல் வணிகம் பெருக்க இந்த விலங்கு உதவும் என்று முடிவெடுத்து அவைகள் எங்கு இருக்கும் என பாணர்களிடம் கேட்க  பாரி உள்ள பறம்பு பகுதியில் இவை அதிகமுள்ளன என தெரிவித்ததும் பாரியிடம் வணிகம் பேசலாம் என பொதிய வெற்பன் முடிவெடுக்க வணிகம் பேச சென்ற கோளூர் சாத்தனுக்கு நிகழ்ந்ததை கூறுகிறான் முதுவன். கருங்கை வாணனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான் பொதிய வெற்பன். பாரியின் மீது போர் தொடுக்கவே அவையில் உள்ள அனைவரும் விரும்பினர். வெங்கல் நாட்டை அடுத்து உள்ள பச்சை மலைத் தொடரில் பறம்பு நாடு உள்ளதால் மையூர்கிழாரிடம் பறம்பு நாட்டை பற்றி விசாரிக்கிறார் குலசேகரப் பாண்டியன். நான் சின்ன வயதில் அப்பாவோடு இருந்த காலத்தில் அரண்மனையை நோக்கி வந்த ஒரு மதங்கொண்ட யானையை குழந்தையுடன் வந்த பெண் ஒருத்தி கரந்தைச் செடி கொண்டு அடக்கினாள், அப்போது நாங்கள் பறம்பு நாட்டிற்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம் என உறுதியளித்தோம் என்கிறார் மையூர் கிழார். எல்லாரும் பேச்சை நிறுத்தி மலரணியும் நிகழ்விற்குச் செல்கின்றனர். அன்று இரவு பேரரசரை சந்தித்து தேவாங்குகளை பிடித்து வர வேற்று வழியை சொன்னான் கருங்கை வாணன். 

உதியஞ்சேரல் எந்த வழி வருவான் என கூழையன் பாரிக்குச் சொல்ல வேட்டூர் பழையனும் தேக்கனும் தங்களது கருத்தை தெரிவித்தனர். பாரி பகரி வேட்டையை அறிவிக்கிறான். பகரி ஈரலை எவன் உண்கிறானோ அவனே தேக்கன் என்பதால் வேட்டை பயங்கரமாக நடக்கிறது. பகரி யாருக்கும் கிடைக்கவில்லை. தேக்கன் மாணவர்களோடு காடறிய புறப்பட்டான். 42 நறுமணங்கள் கலந்த நீர் தொட்டியில் மூழ்கி எழுகிறாள் பொற்சுவை. தனது உடல் திருமணத்துக்கு தயாராகிவிட்டது சுகமதி என்கிறாள். தேக்கன் 11 சிறுவர்களோடு காட்டுக்குள் நுழைந்தான். கீதானி(வயதில் மூத்தவன்), குறுங்கட்டி, முடிநாகன், அவுதி, மடுவன், இளமன், அலவன் (வயதில் மிகச் சிறியவன்) உட்பட பலர் காடறிய தயாராகி இருந்தனர். கீதானியின் நாக்கில் பச்சிலையை தடவி விடுகிறாள் குலநாகினி. கசப்பான இந்த பச்சிலைச் சாறால் பதினோரு பேரும் துடித்தனர். சுவையான உணவை இந்த கசப்பு ஏற்காதிருக்கும், வாய் திறந்து பேச பேச இந்த கசப்பின் வாசம் பரவி விலங்குகளை அருகில் நெருங்க விடாமல் இருக்கும். தனது ஒரே ஆயுதமான மிக வலிமையான பன்றியின் கடவாய்க் கொம்பை எடுத்துச் செல்கிறான் தேக்கன். நாகர் குடியை சேர்ந்த அலவன் மட்டும் கசப்பை மீறி கேள்விகளை கேட்டு வருகிறான். கொற்றவையை வணங்கிவிட்டு ஒவ்வொருவரும் ஒரு புதருக்குள் செல்கிறார்கள். கீதானி தான் பார்த்த கூட்டத்தைப் பற்றி சொல்ல தேக்கன் அந்தப் பாதையை நோக்கி ஓடுகிறான். அவர்கள் தென்பட வில்லை என்றதால் நாங்கில் மரத்தின் உச்சியில் ஏறி பார்த்தான் தேக்கன். ஐந்து பேர் தோளில் கூண்டுகளுடன் ஆற்றைக் கடந்து செல்வதை பார்த்தான். அலவனையும் கீதானியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டான் தேக்கன். அவர்களை(ஐவர்) நோக்கி ஓடினான் தேக்கன். முடிநாகனோடு சில மாணவர்கள் சேர்ந்து கொண்டு மச்சக்கடவு நோக்கி ஓடினர். தேக்கன் அந்த ஐவரில் ஒருவனை பன்றிக் கொம்பால் கீறி சாகடித்துவிட்டான். அதே சமயம் தேக்கனுக்கு தோளில் பலமான அடி. மாணவர்களிலீ சிலரை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு மீதி பேரை முடிநாகனோடு குறுங்கட்டி உட்பட சில மாணவர்களை தேவாங்கு விலங்குகளை அந்த நால்வரும் கூண்டில் தூக்கிச் செல்கிறார்கள் என்ற செய்தியை பாரியிடம் சொல்ல அனுப்பினான் தேக்கன். 

முடிநாகன் தலைமையிலான குழு பாரியிடம் தகவலை சொன்னது. பாரி முதலில் புரியாமல் தவிக்கிறான். பிறகு அவர்களுடன் சேர்ந்து எலிவால் முகட்டுக்கு செல்கிறான் பாரி. தேவாங்கு விலங்குகளை கடத்திச் செல்வது காலம்பன் தலைமையிலான குழு. காலம்பன் தேக்கன் அணியை பற்றி யோசித்தான். தேக்கனால் அடிபட்டவனை தன்னோடு தோள் கொடுத்து தூக்கிச் சென்றனர். தேக்கன் மாணவர்களை நினைத்து வருந்தினான். பாரியோடு வந்த மாணவர்கள் சுன்டா பூனையை கண்டதும் ஓடுகிறார்கள் அதன் தன்மையை பற்றி பாரி சொன்ன பிறகும். அவர்களை பாரி காப்பாற்றுகிறான். பாரி சொன்ன பிறகும் வீம்புக்கு எரிவண்டு கூட்டில் கல் எடுத்து எறிகிறான் முடிநாகன். அவற்றிடம் இருந்து தப்பிக்க கருங்கொண்டை வல்லூறு இருக்கும் பாறை பிளவு மீது கல் எறிகிறான் பாரி. 

காலம்பன் தன் படையை இரத்த சிலந்திகள் உள்ள காட்டு வழியே அழைத்துச் செல்கிறான். அடிபட்டுவனை விட்டுவிட்டு அவன் தோளில் இருந்த தேவாங்கு கூடையை மட்டும் எடுத்துச் செல்கிறார்கள். 

அழுகுரற் பறவையின் ஓசையை கேட்டு இரத்தச் சிலந்திகள் உள்ள காட்டின் ஓரம் ஓடுகிறான் பாரி. கருஞ்சுரைக்காயை கவணில் வைத்து எதிரிகளின் கண்ணில் அடிக்க திட்டமிடுகிறான் பாரி. கருஞ்சுரைக்காய் உள்ள பள்ளத்தில் கொடியைபிடித்தவாறு கீதானியை உள் இறக்கிறான் தேக்கன். கருஞ்சுரைக்காயை சுற்றி விஷம் உள்ள ஈயல் புற்று இருந்ததால் அவனை மேலே வரவைத்து விட்டு நஞ்சுமுறிவு சக்தி கொண்ட அலவனை உள் இறக்குகிறான் தேக்கன். மூன்று சுரைக்காய்களை பறித்து வருகிறான் அலவன். அழுகுரற் பறவை அந்த இடத்தில் சத்தம் எழுப்ப அந்த ஓசை நோக்கி நகர்கிறான் பாரி. இரத்த சிலந்திகள் உள்ள காட்டை கடந்து வந்த காலம்பன் குழுவை தேக்கன் அணி சுரையால் தாக்குகிறது. அதை கண்கூட பார்த்தபடி அவர்களை நோக்கி ஓடி வருகிறான் பாரி. அவர்கள் தப்பித்துச் செல்ல பாரி அவர்களை ஒற்றையாக துரத்த முற்பட, தேக்கன் தடுக்கிறான். இது என் காடு என்று தேக்கனை மீறி ஓடுகிறான் பாரி. வழியில் அனுவல்லி பூண்டின் இலைகளை பறித்து உண்கிறான். புலியை விட வேகமாக ஓடும் சுன்டாபூனைகள் கலவி கொள்வதை பாரி பார்க்க அவை பாரியை துரத்துகிறது. சுன்டா பூனையின் துரத்தலும் மூர்க்கமடைய செய்யும் அனுவல்லி பூண்டு இலைகளும் அவன் வேகத்தை கூட்டியது. சுன்டா பூனைகளை எதிரிகள் மீது பாய வைத்தான் பாரி. பலர் சிதறி கிடக்க ஒரு பூனை இறந்து கிடக்க இன்னொரு பூனை தப்பியோட எதிரிகளில் மூவர் கூடையோடு தப்பித்து ஓடுகின்றனர். இரத்த சிலந்தி காட்டுக்குள் இருந்து தேக்கன் ஏற்றிய சென்றிபுகையை பார்த்து வேட்டூர் பழையனும் இரு வீரர்களும் அவ்விடம் நோக்கி வருகிறார்கள். மாணவர்கள்  இருந்த கதியையும் தேக்கன் இருந்த கதியையும் பார்த்து திகைகக்கிறார்கள். அதேபோல நடுமலை உச்சியில் சென்றி புகை ஏற்றினான் பாரி. அனைவரும் நடுமலையில் கூடுகிறார்கள், எதிரிகளை வீழ்த்த அவர்கள் எத்தனை பேர் என அறிய காரமலை வரை வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று திட்டம் வகுக்கிறார்கள். 

கொற்றவை கூத்தில் எட்டாம் நாள் பாடும் கூவல் குடியினரை பற்றி பேசுகிறார்கள். ஓசைகளின் அரசியான தவளைகளை அவர்கள் தெய்வமாக கருதி வருகின்றனர். அவர்கள் ஒலிவேலி அமைப்பதில் வல்லவர்கள். கீதானி & அலவனுக்கு கொம்பேரி மூக்கனை பிடித்து வரும் வேலையையும் மற்ற வீரர்களுக்கு உடைமர முள்களை பிடித்து வரும் வேலையையும் தருகிறான் பாரி. கொம்பேரி கிடைக்காததால் கொடி மூக்கனை பிடித்து வருகிறான் அலவன். அது போதும் என்கிறான் பாரி. தேக்கன் 8 கூவல்குடி வீரர்களை தன்னோடு அழைத்து வருகிறான். மயிலாவும் நீலனும் நீண்ட நாள் கழித்து தீப்புல் உள்ள இடத்தில் இரவில் சந்திக்கின்றனர். அப்பொழுது பத்துக்கும் மேற்பட்டோர் அவர்களை கடந்து காரமலை நோக்கி சென்றனர். அதிகாலையில் அவர்கள் சென்ற திசைநோக்கி செல்கிறான் நீலன். கூவல் குடியை சார்ந்த கிழவன் ஒருவன் ஓசை எழுப்ப அவன் ஓசை எழுப்பிய இடத்தை நோக்கி நீலன், பாரி, தேக்கன் அனைவரும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். பறம்புமலையின் விளிம்பை அடைந்தனர் காலம்பன் குழுவினர்.

கொடிமூக்கனின் வாய்க்குள் உடைமர முட்களை போட்டு நஞ்சில் ஊற வைத்து அதன் வாயை எருக்குநாரால் கட்டியபடி காரமலை நோக்கி எடுத்துச் சென்றனர். மலைப்பருத்தி இலையையும் உக்கா மூங்கில் இலையையும் பறித்துச் செல்கின்றனர். மலைப்பருத்தி இலையை விரித்து அதில் பாம்பின் வாயில் உள்ள முட்களை விழ செய்தனர். விஷமுறிவு செடியான உப்பறுகஞ் செடியின் பாலை, உக்கா மூங்கிலின் இலையை இச்சிப் பிசினை கீதானி  தன் கையில் தேய்த்துக் கொண்டான். தாக்குதல் நடக்கும்போது முட்களை அம்பில் பொறுத்தி தருவது அவர்களின் வேலை. கூவல் குடியினர் எதிரிகளை பின்தொடர்ந்து விடாமல் ஓசை எழுப்ப அந்த இடம் நோக்கி தேக்கன், நீலன், பாரி மூவரும் வெவ்வேறு பாதையில் செல்கின்றனர். கடைசியாக ஓசை குடுத்தவனின் தொண்டையில் ஈட்டியை பாய்ச்சியது காலம்பன் குழு. அடுத்த கணம் பாரியின் அம்புகள் எதிரிகளை விழ செய்தது. இருந்தாலும் காலம்பனும் மூன்று தேவாங்கு கூடைகளும் தப்பித்தன. கூவல் குடியினரின் ஓசை குறைந்தபாடில்லை. எதிர் தாக்குதல் நடத்த காலம்பன் முற்பட அவன் தேவாங்கு வைத்த இடத்தில் ஓசை எழ காட்டின் ஒருபக்கம் காலம்பன் ஓட இன்னொரு புறம் பாரி ஓட நடுவில் உள்ள மழை வழியாக நீலன் வந்தான். பாரியும் காலம்பனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர், கீதானி காலம்பனின் ஈட்டியால் குத்தி கொல்லப்பட்டான். இரண்டு காட்டெருமைகள் மோதிக் கொள்வது போல உணர்ந்தான் நீலன். அடிவாங்கிய பாரி தேக்கனை பார்த்ததும் காலம்பனை சிதறடித்தான். கிழவன் ஒருவன் பாரி என கத்த அந்த பெயரை கேட்டதும் காலம்பன் அதிர்கிறான். பாரியுடனா இவ்வளவு நேரம் சண்டை போட்ட்டேன் என வருந்துகிறான். பாரியிடம் அடிவாங்கி சரிகிறான். 

பொதிய வெற்பனுக்கு 2 ஆண்டுகளாக பெண் பார்த்தனர். பொதிய வெற்பன் உயரம் குறைவு என்பதால் உயரமான பெண் வேண்டுமென குலசேகர பாண்டியன் யோசிக்க தன்னை விட குள்ளமான பெண் தான் வேண்டும் என பொதிய வெற்பன் யோசிக்கிறான். இறுதியாக பொற்சுவையை தேர்ந்தெடுக்கிறான். சூல்கடல் முதுவனுக்கு திரையர் கூட்டத்தை பரிசாக தரலாம் என எண்ணுகிறான் குலசேகரபாண்டியன். திட்டம் வகுத்த பாண்டிய நாட்டு தளபதி கருங்கை வாணன் அதற்கு தயாராகிறான். திரையர்கள் உடல்வலிமை படைத்தவர்கள். சோழ அரசே திரையர்களிடம் தோற்றுள்ளது. திரையர்கள் பற்றி நன்கறிந்த சோழநாட்டு இரண்டாம் நிலை திதியனை விலைக்கு வாங்குகிறான் கருங்கை வாணன். திதியன் வழங்கிய ஆலோசனை படி யானை படையை வழிநடத்திச் செல்கிறான் கருங்கைவாணன். காலம்பனின் மூன்று குழந்தைகளை மரத்தில் தலைகீழாக ஒற்றை கயிற்றில் தொங்கவிட்டு கயிற்றுக்கு அம்பு எய்தி திதியன் மிரட்ட காலம்பன் புதருக்குள் இருந்து வெளியே வருகிறான் காலம்பன். அவனை அவன் மக்களை சிறைப்படுத்தி செல்கிறது கருங்கை வாணன் படை. மதுரைக்கு திரும்புகிறார்கள். திரையர்களை வைத்து தேவாங்கு விலங்குகளை பிடித்துவர திட்டம் வகுக்கிறது பாண்டியர் குழு. இதுவரை தங்களுக்கு நடந்ததை காலம்பன் பாரியிடம் சொல்ல பாரி கதறுகிறான். காலம்பன் தன்னை குத்திக்கொல்ல முற்பட தேக்கன் அவனை தடுக்கிறான். சண்டையில் வீழ்ந்தவர்களை பறம்பு வைத்தியர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள். கீதானியின் இறப்பால் பறம்பே கவலை கொண்டது. விஷியம் அறிந்த கபிலர் நடுங்கினார் பாண்டியனின் திட்டத்தால் குழம்பினார். பழையன், கூழையன், முடியன் அனைவரும் எவ்வியூர் வருகிறார்கள். 

திரையர்களும் (சூலிவேள்,தூதுவை இணையால்) நம் குலத்தவர் என்பதால் அவர்களை காப்பாற்ற 40 தேவாங்கு விலங்குகளையும் நீலன் உட்பட ஆறு பறம்பு வீரர்களையும் காலம்பனோடு அனுப்பி வைக்கிறான் பாரி. மலைகளை தாண்டி சமவெளியை அடைந்த அந்தக் கூட்டத்தை மதுரைக்கு அழைத்துச் செல்கிறது பாண்டியற்குழு. திருமணம் முடிந்தது. சக்கரவாகை பறவை பறந்தது, பொற்சுவை மனம் மாறி குஷியானாள். தேவாங்கு விலங்குகள் பாண்டிய நாட்டை வந்தடைந்தன. சூல்கடல் முதுவனை கடலுக்கு சென்று திசைகாட்டும் அந்த விலங்குகளை பரிசோதிக்க சொன்னான். திரையர்களை யவனர்களுக்கு பரிசாக அளித்தான் பாண்டியன். தேவாங்கு விலங்குகளும் திரையர்களும் யவன பாண்டிய கப்பல்களில் ஏற்றப்பட்டனர். மரச்சட்டத்தால் கைகள் பூட்டப்பட்டிருந்த அடிமைகள் செடிகொடி உதவியால் கடல் முழுக்க உள்ள கலங்களில் தீ பற்ற செய்து தேவாங்குகளோடு தப்பித்து பறம்பு மலை சென்று பாரியோடு இணைகிறார்கள்.         

வேங்கைகள் : 

உதிர வேங்கை, மணிமுத்து வேங்கை, பூத்த வேங்கை, பாயா வேங்கை

கூத்துக்கள் : 

குரவை கூத்து, வள்ளிக் கூத்து, கொற்றவை கூத்து, துணங்கைக் கூத்து, 

போர்கள்: 

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர், , … 

தராசுகள் : 

மணித்தராசு(மாணிக்க கற்களை நிறுத்தும்), பொன் தராசு (தங்க நகைகளை நிறுத்தும்), உலோக தராசு( உலோகங்களை நிறுத்தும்), பண்டத் தராசு, மரத் தராசு, தூக்குத் தராசு, 

செடிகள், மலர்கள் : 

தர்ப்பைப் புற்கள் ( நாக்கறுத்தான் புல் ), சரக்கொன்றை மரம், ஏழிலைப் பாலை, கொடிகளிலே மிக உறுதியான சிலாக் கொடி, தனை மயக்கி மூலிகை, மூவேந்தர்களுக்கும் பிடித்த திறளி மரம், புலிப்பிரண்டை, வால்மிளகு, மகரவாழை, கடம்ப மரம், அத்தாப் பொறுத்தி மூலிகை ( சதை அறுபட்டாலும் மீண்டும் இணைக்கும் மூலிகை ), கொல்லிக்காட்டு விதை ( மீன்களையும் பறவைகளையும் மயக்கமடைய வைக்கும் விதை ), மயிலை மலர், ஆம்பல் மலர், முசுண்டை மலர், தாழை மலர், குளகு, அதிங்கம், நாகப்பச்சை வேலி, புன்னை மரம், மருத மரம், எரிசாற்றுப் பச்சிலை(மாடுகளை ஆவேசபடுத்தும் மூலிகை), நாவிப்பூ, தீக்களி(இதை உடல் முழுக்க தடவிக்கொண்டு நெருப்புக்குள் புகுந்து வெளியே வரலாம், வெண்ணொச்சி(ஐந்து இலைகள் உடையது), கருநொச்சி (மூன்று இலை உடையது, மயிலின் காலடிக்கு உவமை), வெட வேலம்பட்டை(ஆரஞ்சு நிற சாயம் தரும்), நுணா மரக் கட்டை(செந்நிற சாயம் தரும்), தும்பை பூ, நெருஞ்சி பூ (ஞாயிறு திரும்பி), சென்றிக் கொடி( காட்டுக்குள் ஆபத்தான தருணங்களில் இதில் தீ மூட்டினாள் புகை மட்டும் ஊசி போல வான் நோக்கிச் செல்லும். புகையை பார்த்து உதவிக்கு ஆள் வருவார்கள்), வண்டுகடி மரம்( இந்த மரத்தில் பூச்சிகள் உட்கார்ந்தால் மயங்கி சரிந்து இறந்து போகும். இதன் பட்டையை அரைத்து மனிதர்கள் பூசிக்கொண்டால் பூச்சிக்கடியில் இருந்து தப்பிக்கலாம்), சாமப்பூ ( 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ, இந்தப் பூ பூத்த பிறகு எட்டு வயதை கடந்த ஆண் பிள்ளைகளை பயிற்சிக்கு அழைத்து செல்வான் தேக்கன். மீண்டும் பூ பூக்கும் வரையில் ஊரில் இருப்பான்), தில்லை மரம் ( இதன் புகை கண்ணில் பட்டால் கண் பார்வை போய்விடும்), பால் கொறண்டி (காய்ந்த சருகைவிட அதிவேகமாகப் பற்றி எரியும் பச்சைசெடி),  அன்னமழகியரிசி(பசி நீக்குவதோடு உடல் மலர செய்யும்), கான வெள்ளெருக்கு (நீர் குடிக்கும் செடி, இதன் வேர் உள்ள குழிப்பகுதியில் நீர் வரத்து இருக்கும்), செங்கடம்பு மலர் (கார் காலத்தில் முதலில் பூக்கும் பூ), நரந்தம்புல் & மயிலை மலர் (காய காய நறுமணம் தரும்), எறுழம்பூக்கள் (நெருப்பையொத்தது), எருவை பூக்கள், வெண்ணிறக் கூதாளி மலர், புழுகுப் பூக்கள், ஈங்கை மலர்கள், முள்ளி மாமலர் (கடற்கரை மணல்வெளியில் மலரும்), அழிச்சி, அலரி, சுள்ளி, எருக்கு, இரும்பைப் பூ, இலும்பை மரம் (வேப்பம்பழத்தை தின்ற கைப்புச்சுவை மாற வௌவால்கள் இங்கு குடிகொள்ளும்), வாகை மரங்கள், கரு நெல்லிகள், கரந்தைச் செடி (மதங்கொண்ட யானையை அடக்கும்), நாங்கில் மரம், ஒடங்கொடி (அடிபட்ட தோள்பட்டையை கட்ட உதவும்), குத்துக் கோரை(இதன் மீது நடந்தால் கால்விரல்களை அறுக்கும்), சங்கஞ்செடி (இதன் மீது நடந்தால் இதன் மீது பால் ஒட்டி அரிப்பு ஏற்படும்), செங்கிளுவை மரம்(எரி வண்டுகள் இதில் கூடு கட்டும்), ஈருவல்லி மரம், விருக மரம், கருஞ்சுரைக்காய் (இதன் பால் கண்ணில் பட்டால் கண் உருகி ஓடும்), கமரிப்புல்(இது இருக்கும் காட்டில் வரிப்புலி காலடி எடுத்து வைக்காது), முக்கொற்றிக் கோரை ( இது உள்ள காட்டில் வேங்கைப் புலி கால் பதிக்காது), முசுறுப்புல் ( இது உள்ள காட்டில் பாம்பு நகராது), வாட்கோரை (இதுக்குள் மான் ஓடாது), அனுவல்லிபூண்டு (மனிதனை மூர்க்கமடையச் செய்யும், வெறியேற்றும்), தீப்புல் (அறுபதாங் கோழியின் எச்சத்தில் முளைத்து மின்மினி பூச்சி போல ஒளிரும் தன்மை கொண்டது), இச்சி மரம், மலைப்பருத்தி, உக்கா மூங்கில், உப்பறுகஞ்செடி, காஞ்சிரை மரம்,           

பறவைகள் & விலங்குகள் : 

காக்கா விரிச்சி, தெய்வ வாக்கு விலங்கு, செம்மூதாய் (செந்நிற பட்டுப்பூச்சி), அசுணமா (மருத நில பறவை), செந்நாய் (உணவுக்காகவும் தேவைக்காகவும் மட்டுமல்லாமல் கண்ணில் கண்ட விலங்குகளை எல்லாம் கொல்லும் மிருகம்), கொள்ளிக்கொம்பு மாடுகள், விரிகொம்பு மாடுகள், இடிமேலி மாடுகள், நிழல் விரியன், கரு விரியன், கட்டை விரியன், குறுவிரியன், மலஞ்சாரை, செம்மண்ணுளி, எரி விரியன், ஊது சுருட்டு, நண்டுதின்னி நாகம், சாரைப் பாம்பு (அடிவயிறு வழவழப்பாக இருக்கும் ), நல்ல பாம்பு (அடிவயிறு சொரசொரப்பானது), வெண் சாரை, கரும்பருந்து, பாம்பு பருந்து, பாம்புக் கீரி, கருங்கீரி, பழந்தின்னிக் கீரி, எள்ளுச் செடியில் உற்பத்தி ஆகும் கண்ணுக்குத் தெரியாத குருதிப் பனையன், பச்சிலை விரியன், ஆலாப் பறவை (நாள் முழுவதும் ஓய்வின்றி பறந்துகொண்டிருக்கும் பறவை), சக்கரவாகப் பறவை ( பறவைகளின் இளவரசி – காலமாற்றத்தை கணித்துச் சொல்லும் பறவை, அறுபதாங்கோழி, வெருகுப் பூனை, பகரி (பறவைகளின் தலைவன், ஒரே நாளில் முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும், அதன் ஈரல் உண்டவனை எந்த நஞ்சும் எதுவும் செய்யாது), செவ்விரியன், மலைநாகம், சுண்டா பூனை(இதைக் கண்டால் புலி ஒதுங்கிப் போகும்), மர நாய், இரத்த சிலந்திகள், கருங்கொண்டை வல்லூறுகள், ஈயல் (சிறகு முளைத்த மலையெறும்பு), 

காதலர்கள் : 

முருகன் – எவ்வி

பாரி – ஆதினி

கோவன் – செம்பா

சூலிவேள் – தூதுவை

நாவல் வகைகள்: 

நரி நாவல் – துவர்ப்பை உச்சத்துக்கு கொண்டு போகும். வெண் நாவல் – புளிப்பு அதிகம். , நீர் நாவல், கொடி நாவல், பூ நாவல் – உதிரப் போக்கு நிற்காத பெண்கள் சாப்பிட வேண்டிய பழம், சிறு நாவல், 

புத்தகத்திலிருந்து சில வரிகள் : 

* மலர்களில் ஏது வேறுபாடு? எல்லா மலர்களும் ஒரே இனம் தான்… பெண் இனம்… 

* காதலை மனிதனால் அழைத்துவர முடியாது… காதல்தான் மனிதனை அழைத்து வரும்…

* குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும் போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான். 

* எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவத்தை தரவல்லது காடு. 

* ஆறாத் துயரை கலையாக்கும் போது கலைஞன் படும் வேதனைக்கு இணைகூற சொல் இல்லை. 

* போதாத காலத்தை புலம்பித் தான் தீர்க்க வேண்டும். 

* பயம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால் பயப்பட மாட்டேன் எனச் சொல்ல பொய் தேவை இல்லை. 

* பால் பீச்சும் விரல்கள் மூங்கில் நாரைவிட வலுமிக்கவை.

Related Articles

அசுரன் படத்திற்கு 55 மதிப்பெண்கள் போட்ட ... 2019ல் வெளியான படங்களில்  ஆனந்த விகடன் மதிப்பெண் 40க்கும் மேல் பெற்ற படங்கள் :  பேட்ட - 41 விஸ்வாசம் - 40 பேரன்பு - 56 சர்வம் தாள ம...
அட்லியின் நிறத்தை கலாய்க்கும் நெட்டிசன்க... கருப்பாக இருக்கும் இளசுகளை கரிச்சட்டி தலையா, கருவாயா இப்படி விளையாட்டுக்கு அழைப்பது தமிழகத்தில் வழக்கம். அதே கருப்பை வைத்து ஒருவரை மட்டம் தட்டுவதும் த...
37 ஆண்டுகளாகத் தினம் ஒரு மரம் நட்டுவரும்... காட்டை அழிப்பது இன்று லாபம் ஈட்டும் தொழில். கட்சி வித்தியாசம் இல்லாமல் பாரபட்சம் இன்றி  காடுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. ஆனால் முப்பத்து ஏழு ஆண்டுகளா...
அபிநந்தனை வாழ்த்தி வரவேற்ற இந்திய பிரபலங... மார்ச் 1, 2019 இரவு எட்டு மணி முதல் நடந்த சம்பவங்களை இந்தியர்கள் எளிதில் மறக்ககூடியது அல்ல. அப்படிப்பட்ட ஈர்ப்பை பெற்றிருந்த அபிநந்தனை பலர் வாழ்த்தி வ...

Be the first to comment on "வீரயுக நாயகன் வேள்பாரி பார்ட் 1 ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*