வீரயுக நாயகன் வேள்பாரி பார்ட் 2 ஒரு பார்வை!

a-view-on-velpaari-book-part-2

எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய நாவல் “வேள்பாரி”. ஆனந்த விகடனில் தொடராக வந்த போதிலிருந்தே பல லட்சம் வாசகர்களை சம்பாதித்து வருகிறது. 

பறம்பு நாட்டின் தலைவன் பாரியை பற்றிய நாவல் இது. இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்கள், கதை சுருக்கம், புதிதாக கூறப்படும் பறவைகள் விலங்குகள் செடி கொடிகள் பற்றி இங்கு பார்ப்போம்.

வேள்பாரி பார்ட் 2 ஒரு பார்வை! 

வேள்பாரி கதாபாத்திரங்கள் : 

 1. கிணையன், இளங்கிணையன், ஆடுவன் – கூத்துப்பாடுபவர்கள்
 2. சோழவேழன் – சோழ பேரரசர்
 3. செங்கனச் சோழன் – சோழவேழனின் மகன்
 4. செம்மாஞ்சேரல் – உதியஞ்சேரலின் தந்தை
 5. வாரிக்கையன் – பாரியோடு சேர்ந்து செம்மாஞ்சேரலுக்கு எதிரான போர் நடத்தியவர், தேக்கன் மற்றும் வேட்டூர் பழையனை விட வயது முதிர்ந்தவர், 
 6. மேழகன் – பொதினி மலை வேளிர்குல தலைவன், ஆதினியின் தந்தை
 7. நீலவல்லி – பாண்டிய நாட்டு நாட்டிய பெண்
 8. அணங்கன் – திரையர் குல முதியவர்
 9. செதிலன்
 10. நாஞ்சிலன் – பாணர் கூட்ட தலைவன்
 11. கடுவன் – பறம்பை சேர்ந்தவன்
 12. போதன் – சாதாரண குடும்பஸ்தன்
 13. நாகரையன் – சேர அமைச்சர்
 14. துடும்பன் – உதியஞ் சேரலின் தளபதி (குட்டநாடு)
 15. ஈங்கையன் – கரும்பன் குடியை சார்ந்தவன், தலைவன்
 16. உறையன் – சோழநாட்டு தளபதி
 17. இரவாதன் – முடியனின் ஒரே மகன்
 18. கொற்றன் – காலம்பனின் மூத்த மகன்
 19. புங்கன் – நீலனின் தோழன்
 20. பிட்டன் – சூளூரை சேர்ந்தவன்
 21. எயினி – பறம்பு வீரன்
 22. நெடுமன் – பறம்பு வீரன்
 23. அரிஞ்சயன் – சோழ நாட்டு யானைபடை தளபதி
 24. கிழானடி வளவன் – சோழ நாட்டு காலாட்படை தளபதி
 25. உரையன் – சோழ நாட்டு தலைமை தளபதி
 26. துணங்கன் – நெடுங்காடர்களின் தலைவன்
 27. சிவியன் – நெடுங்காடர்கள் தளபதி
 28. முறியன் – பறம்பு மருத்துவர்
 29. முதுவேலன் – சிறுபாழியை சேர்ந்தவன்
 30. குழல் தத்தன் – வெங்கல் நாட்டு அரண்மனை சித்திரக் காரர்
 31. செம்பூந்தன் – பறம்பை சார்ந்தவன்
 32. துடிச்சாத்தன் – சேர நாட்டுப் பெருவீரன்
 33. முடத் திருக்கண் – தேர் ஓட்டுபவன்
 34. இகுழிக் கிழவன் – கானவர் கூட்டத் தலைவன்
 35. உறுமன் கொடி – பாண்டிய நாட்டு பெருவீரன்
 36. மகாசாமந்தன் – மூவேந்தர் படை தலைமை தளபதி
 37. ஆதிநந்தி, நாகரையர் – மூவேந்தர் படை அமைச்சர்கள்
 38. நகரி வீரன், வெறுகாளன் – சோழ நாட்டு தேர்ப்படை தளபதி
 39. சூலக்கையன், மாகனகன் – தளபதிகள்
 40. உச்சங்காரி – யானை படை தளபதி
 41. விண்டன் – பறம்பு வீரன்
 42. அருவன் – பறம்பு வீரன்
 43. ஆதிநந்தி – பாண்டிய அரசின் தலைமை அமைச்சன்
 44. வளவன் காரி – சேர நாட்டு அமைச்சன்
 45. உசந்தன் -சோழ நாட்டு தேர்ப்படை தளபதி

கதைச் சுருக்கம்:

ஹிப்பாலஸின் யவன கப்பலில் திரையர்கள் பறம்பு வீரர்கள் அடிமைகளாய் உட்கார்ந்திருக்கிறார்கள். நீலன் தேவாங்கு விலங்குகள் உள்ள கப்பலை பார்த்ததும் தன் வீரர்களுக்கு சைகை கொடுக்க அந்த இரண்டு பறம்பு வீரர்கள் தங்கள் கழுத்தில் உள்ள நத்தைச்சூரி கொடியை கவ்விப் பிடித்து கடித்து ஆற்றல் பெருகின்றனர். கைகளில் உள்ள மரச்சட்டகத்தை நறநறவென கடித்து துப்புகிறார்கள்.  அதேபோல காலம்பன் மற்றும் மற்ற வீரர்களின் மரக்கட்டையை கடித்து துப்புகிறார்கள் நத்தைச் சூரியனை கடித்து துப்புகிறார்கள் அந்த இரண்டு பறம்பு வீரர்கள். இடுப்பில் கட்டப்பட்டிருந்த பால்கொறண்டியின் சருகுகளை பிய்த்தெடுத்து அதை விளக்கில் பற்ற வைக்கிறார்கள் வீரர்கள். கப்பல் மீது தீ பற்ற வைக்கிறார்கள். அதை யவனர்கள் அதிர்ந்து பார்க்கின்றனர். தேவாங்கு கூண்டுகளையும் கப்பலில் ஏற்கனவே இருந்த அடிமைகளையும் காலம்பனும் நீலனும் காப்பாற்றிவிட்டு குதிரையில் ஏறி தப்பிக்கிறார்கள். ஆலாவில் ஏறி அவர்களை பின்பற்றுகிறான் இளமருதன். எறியுளிகள்(சுறாவை வேட்டையாட உதவும் கருவி) கொண்டு பாண்டிய வீரர்களை தாக்குகிறான் காலம்பன். நீலனால் இளமருதன் கொல்லப்படுகிறான். ஆலாவை கைப்பற்றுகிறான் நீலன்.  

வைப்பூரில் கப்பல்கள் பற்றியெறிந்த கதையை தப்பிவந்த காலம்பன் கதையை பாணர்கள் பாடுகிறார்கள். குலநாகினி காலம்பனின் நெற்றியில் திலகமிடுகிறாள். கொற்றவை கூத்தில் வழக்கமாக பதினாறு கதைகள் பாடப்படுவது இனிமேல் திரையர்கள் கதையோடு பதினேழு கதைகளாக பாடப்படும் என்ற அறிவிப்பு வருகிறது. ஆடிக்கொண்டிருந்த திரையர் குல பெண்களை குலநாகினியால் அடக்க முடியவில்லை. சூலிவேளை நினைத்துக் கொண்டு ஆண் வெற்றிலையை வைத்து வணங்குங்கள் தூதுவை அடங்குவாள் என்று ஆதினி சொல்ல பாரி அவ்வாறு செய்கிறான். திரையர் குல பெண் அடங்குகிறாள். சேர நாட்டின் உதிரன் அவையிலும் வைப்பூரில் பாண்டியனின் பற்றி எரிந்த கலங்கள் பற்றிய பாடலே பாணர்களால் பாடப்பட்டது. எரித்த பாரியின் கதையையும் பாட அவனை நினைத்து மிரண்டான் சேரன் உதியஞ்சேரல். 

சோழவேழனின் அவையில் பாரி கதை பேசப்படுகிறது. அவனும் அவன் மகனும் இந்தக் கதை கேட்டு மிரள்கிறார்கள். பாண்டியனும் சேரனும் பறம்பு மீது படை எடுப்பார்கள் அப்போது நாம் பின்திசையில் இருந்து படையெடுப்போம் என முடிவு எடுக்கிறான் சோழன். 

கபிலரும் சஅங்கவையும் தேவவாக்கு விலங்கிற்கு ஏன் இவ்லவு போராட்டம் என்பதை அறிய முற்படுகிறார்கள். இனி நான் பறம்பை பற்றி பாடுவேன் கபிலர் கூற அங்கு வந்த பாரி அவரை மகிழ்ச்சியோடு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான். வழியில் நடக்க நடக்க ” பாணர்களோடு ஒற்றர்கள் வருகிறார்கள் ” என்ற செய்தியை பாரியிடம் சொல்கிறார் கபிலர். பாரியின் முதற்போர் சேரனுக்கு எதிரானது அந்தப் போரில் செம்மாஞ்சேரல் கொல்லப்பட்டார் என்ற செய்தி பகிரப்படுகிறது. 

எவ்வி பல நாட்களாக தேடி அலைந்த பூண்டு வாசம் கிழங்கு தேடிப் போன சோமக்கிழவி ஒருத்தியின் மூக்கிற்கு எட்டுகிறது. பன்றிகள் மேய்ந்த கிழங்குகள் உள்ள இடத்திலிருந்து பூண்டை எடுக்கிறார்கள். எவ்வியை நினைத்தபடி அந்த பூண்டின் பழச்சாறு பருகும் ஊர்மக்கள் அந்தப் பூண்டிற்கு கிழவியின் பெயரை இட்டு சோமப்பூண்டு என பெயரிட்டனர். இந்த சோமப் பூண்டை கபிலரின் கையில் கொடுத்தான் பாரி. 

பூண்டு சாறைக் குடித்து மயங்கிய பல ஆண்டுகளுக்கு,முன் நடந்த மழவன் குடி கூத்துக்கலைஞர்கள் பற்றி நினைவு கூறப்படுகிறது. மழவன் குடியினர் பைங்குடத்தை நடுவில் வைத்தபடி அந்த மதுவினை பற்றி பாடுகிறார்கள். பாணர்களில் மூன்று பேர் சேர ஒற்றர்கள். மதுவினை சுமந்து செம்மாஞ்சேரல் அறையில் வைக்கிறார்கள். யவனர்களின் தேறலை விட இது சிறந்ததா என்று வினவுகிறான் செம்மாஞ்சேறல். அவைக்கு வந்த வடநாட்டு முனிவன் ஒருவன் அதை அருந்தி இது தேவர்கள் அருந்தும் சோம பானம் என்கிறான். செம்மாஞ்சேறல் பாரியிடம் சோம பூண்டை கேட்க பாரி இது இயற்கை அளிக்கும் காதற்பரிசு என்று சொல்லி மறுக்கிறான். கபிலர் பாரியிடம் இந்தக் கதை கேட்டபடி சோம பானம் அருந்துகிறார். பாரி மீண்டும் கதை தொடர்கிறான். சேரன் வட தேசத்து முனிவன் சொல்பேச்சு கேட்டு பறம்பு மீது படையை அனுப்புகிறான். போதையில் கண் சொருகிய கபிலருக்கு செம்மாஞ்சேறலின் தலை வெட்டப்பட்டது மட்டும் நினைவில் இருக்கிறது. 

தீக்களியை பூசிக்கொண்டு அங்கவை உதிரனுடன் சேர்ந்து நெருப்பிற்குள் நடனமாடுகிறாள். அதை பாரி கண்கூட பார்க்கிறான். உதிரன் அங்கவை, நீலன் மயிலா ஆகிய காதல் ஜோடிகள் பறம்பு மலையில் சோம பானம் இருப்பது தெரிந்து பருக வருகிறார்கள். பிறகு காதல் ஜோடிகள் வெடத்தப் பூ அருகே அமர்ந்து காதல் செய்கிறார்கள். காதலின் நிறம் பச்சை என்பதை கண்களில் ஓடும் பச்சை நரம்பின் நிறம் வைத்துச் சொல்கிறாள் அங்கவை. 

மயக்கம் தெளிந்து எழுந்த கபிலர் உடன் இருந்த உதிரனை தேடுகிறார். கூத்துக்களம் நோக்கி செல்கிறார் கபிலர். தேக்கனை தேடுகிறார். செம்மாஞ் சேரலுடன் நடந்த போரினை தெரிந்துகொள்ள முற்பட அப்போரை பாரியோடு சேர்ந்து வழிநடத்திய வாரிக்கையன் அங்கு வருகிறார். செம்மாஞ்சேரல் கொண்டு வந்திருந்த குதிரைப்படையை அப்படியே எனக்கு வேண்டும் என பாரி கூறியது, செம்மாஞ்சேரலின் துரத்தலுக்கு உள்ளானது குறித்து சொல்கிறான் வாரிக்கையன். குதிரைகளை கவர இரண்டு நாள் ஆனது போர் மூன்றாம் நாள் நடந்தது என வாரிக்கையன் சொல்லி முடிக்க தேக்கன் ஏன் போரில் கலந்துகொள்ள வில்லை என கேள்வி எழுப்புகிறார் கபிலர். 

தேக்கனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள் அவர்கள் மூவரும் ஆட்கொல்லி மரத்தால் இறந்தனர் என்ற கதை சொல்லப்படுகிறது. தேக்கனுடன் சென்று கொடிக்கு தேர் கொடுத்தது உண்மையா என பாரியிடம் வினவுகிறார் கபிலர். 

செம்மாஞ்சேரலிடம் இருந்து குதிரையை கைப்பற்றி அது மலைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிக்கப்பட்ட கதை கூறப்படுகிறது. பாரி கண்ட முதற்போர் செம்மாஞ்சேரலுக்கு எதிரானது. சேரர்களின் முறுக்கி திருகப்பட்ட இரும்பை பற்றி வினவுகிறான் பாரி. கொல்லர்கள் அதற்கான விடை கண்டறிந்து சொல்கிறார்கள். சேரர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட உலோகத்தை காய்ச்சி அடிக்கும் முறை சிறுபாழி நகரில் மேற்கொள்ளப்படுகிறது. அப்போது அங்கு வந்த பாணன் ஒருவன் பொதினி மலையில் கல்லை உரசி இரும்பை கூர்மையாக்கும் முறைபற்றி பாரியிடம் சொன்னான்.  

பொதினி மலை நோக்கி நடக்கிறார்கள். சிறகு நாவலை பார்க்கிறார்கள். இரவில் தூங்க கடம்ப மரம் அருகே ஒதுங்க பொதினி வீரர்கள் அவர்களை சூழ்ந்து பாதுகாத்து வரவேற்கிறார்கள். அந்தக் கல் சாணைக்கல் என்கிறான் மேழகன். ஆலப்பனை கள், ஐஞ்சுவை கள் பாரியை நோக்கி வருகிறது. உற்சாக வரவேற்பால் மனமகிழ்கிறான் பாரி. சாணைக்கல்லை எடுத்து அரக்கு கலந்து காய வைத்து நன்றாக காய வைக்க ஒரு வாரம் ஆகும் என்கின்றனர். ஒருவாரம் தங்க பாரி முடிவெடுக்கிறான். 

மேழகன் மகள் ஆதினியை பாரி காதலிக்க மற்றவர்கள் ( கூழையன் ) பொதினி மலை மருத்துவ குடிக்குச் செல்கின்றனர். சிரட்டையில் பிரண்டையை தேய்த்து காய வைத்து பின் நெருப்பில் இட்டாள் சிரட்டை எரியாமல் மேலே ஊற்றப்பட்ட தண்ணீரை மட்டும் கொதிக்க வைத்தது என்ற அதிசயத்தை பார்த்தார் கூழையன். 

பொதினி மலையில் உள்ள குடிலில் தாகம் அருந்த நீர் கேட்க அந்தக் குடிலில் உள்ள பாட்டி பூனைக்கு தீனி வைத்துவிட்டு எலிக்கு தீனி வைக்கிறாள் பாட்டி. பூனை எலிகளை எதுவும் செய்யாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்து வாரிக்கையன் பாட்டியிடம் சொல்ல பாட்டி பூனைவணங்கி செடி பற்றி கூறுகிறாள். 

பாரி ஆதினியை காதலிக்க, மேழகன் அதை உணர்கிறான். ஆதினி தன்னுடைய கணவனை சந்தித்துவிட்டதை அறிவிக்கும் பொருட்டு மயில்கொன்றை மரத்துக்கு மாலையிட்டு வணங்கினாள். மேழகனிடம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறாள் ஆதினி. பாரியும் ஆதினியும் தனியாக சந்திக்கிறார்கள். அவர்களை சிறகு நாவல்கள் சூழ்கிறது. இருவருக்கொம் திருமணம் நடக்கிறது. ஒரு இரவில் ஆதினியை தேரில் உட்கார வைத்து கூட்டிச் செல்கிறான் பாரி. முயற்புல் உள்ள இடத்தில் தேரை நிறுத்துகிறான் பாரி. குதிரைகள் மேய்கிறது. ஆதினியை தன்னோடு அழைத்துச் செல்கிறான். நிலா வெளிச்சத்தில் சிறகு நாவல்களை காட்டியது பொதினி மலை. பறம்பில் அதேபோல அடர் இருட்டில் ஒரு அதிசயத்தை காண்பிக்க (இராவெரி மரம்) ஆதினியை தன்னோடு அழைத்துச் செல்கிறான் பாரி. மழை பெய்ய இருப்பதால் குகைக்குள் இருவரும் ஒதுங்குகிறார்கள். அப்போது நாகர்குடி தெய்வமான ஒளியை உமிழும் வெண் சாரையைப் பார்க்கிறார்கள். பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இரண்டு வெண்சாரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.  அடுத்தநாள் காலை நிறுத்தி வைத்திருந்த தேர் நோக்கி செல்கிறான் பாரி. ஆதினி செங்கிளுவை மரம் அருகே சாய அவன் வேண்டாம் என்கிறான். இலை உதிர்வதை வைத்து அந்த மரம் வலிமையற்றது என்கிறான். அவள் வியப்படைகிறாள். இருவரும் தேர் பக்கம் திரும்ப அங்கு உள்ள (குறு முல்லை) முல்லைக் கொடி தேரில் சுருண்டு தழைத்திருந்தது. அதனால் அதனை அப்படியே விட்டுவிட்டு நகர்ந்தனர் ஆதினியும் பாரியும். அதை பாணர்கள் பார்த்துவிட்டு சென்று பரப்பினர். கபிலர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தான் பாரி. 

யவனர்கள் பாரி மீது போர் தொடுக்க குலசேகர பாண்டியனோடு திட்டமிடுகிறார்கள். கருங்கை வாணன் திட்டம்போட்டு தருகிறான். மையூர்கிழார் மகன் இளமருதனை இழந்த வலியால் பாண்டியர்களோடு சேர்ந்து பாரிக்கு எதிராக நடக்க ஆய்த்தமாகிறான். சூல்கடல் முதுவன், முசுகுந்தர், பொதியவெற்பன், கருங்கைவாணன், திதியன் அனைவரும் வைப்பூர் தோல்வியால் பேரரசர் முன் தலைகுனிந்தே இருந்தனர். பொற்சுவை நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி சுகமதியை பார்த்து பேசுகிறாள். கார்கால மாளிகையிலிருந்து வேனிற்கால மாளிகைக்கு மாறுகிறாள் பொற்சுவை. பொதிய வெற்பனுக்கும் நீலவல்லிக்கும் நடந்த காம உறவை பற்றி கூறி வருந்துகிறாள். 

தேவவாக்கு விலங்கு எதற்காக கடத்தப்பட்டது என்று வாரிக்கையனும் கபிலரும் பேசிக்கொள்கிறார்கள். காலம்பன் தன் வீரர்களோடு காட்டெருமை மந்தைக்குள் சென்று வழிநடத்தும் காட்டெருமையை கண்டறிய சென்றனர். கண்டறிவது எப்படி? ஆண் பெண் காட்டெருமைகளின் தன்மை பற்றி காலம்பன் சொல்ல பாரி தேக்கன் கபிலர் மூவரும் வியக்கிறார்கள். காட்டெருமை படை யானை படையை வலிமையானது என்கிறான் காலம்பன். ஆளிக்காடு பற்றி பேசுகிறார்கள் பாரியும் கபிலரும். பாரியும் கபிலரும் எவ்வியூருக்கு திரும்ப, திசைவேழார் வந்திருக்கும் செய்தி கபிலரிடம் சொல்லப்படுகிறது, அவர் உதிரனை துணைக்கு அழைத்துக் கொண்டு திசைவேழார் உள்ள கீழ் பகுதிக்கு செல்கிறார் கபிலர். திசைவேழரும் கபிலரும் தேவாங்கு விலங்கின் ஆற்றல் பற்றி பேசுகின்றனர். 

கபிலரும் திசைவேழரும் பேசிக்கொண்டே ஒருபக்கம் செல்ல நீலனும் உதிரனும் இன்னொரு பக்கம் செல்கின்றனர். நீலனும் உதிரனும் கூழையன் தரும் ஆபத்து சமிக்ஞைகளை பற்றி பேசுகின்றனர். திசைவேழரின் கால் வலிக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது, புலி முன் ஆடு மூலிகையை பற்றி பேசுகிறார்கள் மருத்துவர்கள். வைப்பூர் துறைமுகத்தில் இருந்து மீட்கப்பட்ட அடிமைகளுக்கு மருத்துவம் பார்த்து குணமடைய செய்கின்றனர் பறம்பு மருத்துவர்கள். அவர்களிடம் அந்த அடிமைகள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

போதன் தன் குடும்ப உறுப்பினர்களின் பசியை போக்க நூழி கிழங்கை எடுத்துச் செல்கிறான். அவனுக்கு கடுவன் முயலை பிடித்து தர முயல்கிறான். அந்த நேரத்தில் போதனின் கிழங்குகளை எதோ விலங்கு தின்றுவிட்டு செல்கிறது. முயலும் தப்பித்து ஓடிவிட்டது. போதன் கடுவனை சந்தேகிக்கிறான். உடனே கடுவன் தன் வயிற்றைக் கிழித்து கிழங்கு இருக்கிறதா பார் என்கிறான். 

உதியஞ்சேரலும் ஹிப்பாலசும் சேர்ந்து நக்கவாரத் தீவிலிருந்து, பாரியின் குதிரைப் படையை ஒழிக்க தோகை நாய்களை இறக்குகின்றனர். செங்கனச் சோழனும் பறம்பு மீது போர் தொடுக்கிறான் என்ற செய்தியை சொன்னான் உதியஞ்சேரல். 

கரும்பன் குடியினர் சுவைப் புல்லை வளர்க்கின்றனர். அது நாளடைவில் கரும்பா புல் என்று மாறி கரும்பு என திரிந்தது. கரும்பன் குடியினரை சோழ நாட்டு தளபதி உறையன் கைது செய்து அடிமையாக்குகிறான். கடல் வணிகர்களுக்கு அவர்களை விற்கிறான். அத்தகைய கூட்டத்தை தான் நெருப்பிலிருந்து மீட்டனர் திரையர் கூட்டத்தினர். இந்தக் கதையை கபிலரிடம் சொன்னான் உதிரன். திசைவேழர் வந்து சென்றதன் நோக்கத்தை பாரியிடம் சொன்னார் கபிலர். வட திசை நோக்கி அமரும் தேவவாக்கு விலங்குகள் பற்றி எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே… கொற்றவையின் இன்னொரு பெயரே வடக்குவா செல்லி என்பதுதானே என்கின்றனர் பறம்பினர். பாரி கபிலர் காலம்பன் ஆகியோர் குதிரை பயணம் செல்கின்றனர். அகதமலையை தாண்டி உப்பறை (விலங்குகள் இங்கு வந்து நீர் அருந்தி மண் எடுத்துச் சாப்பிட்டுச் செல்லும்) நோக்கிச் செல்கிறார்கள். வழியில் மறையாறு அருவியை பார்க்கிறார்கள். குறுங்காது முயலின் ரத்தத்தில் வில் ஊற வைக்கப்படும் என்ற செய்தியை பாரி கபிலரிடம் கூறுகிறான். தேக்கனை போல முடியன் என்பதும் ஒரு பட்டம். முடியர்கள் சூளூரை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள், தற்போதைய முடியனின் மகன் இரவாதன் தான் சிறந்த வீரன் என்றான் பாரி. ஆதியிலயே உழவை கண்டறிந்த அறல் ஊர்க்காரர்களை பற்றி பேசுகிறான் பாரி. உப்பறையில் வாய் வைத்து நீர் அருந்தினான் பாரி. பிறகு மூவரும் எவ்வியூர் திரும்புகின்றனர். நீலன் மயிலா மண விழா நடக்கிறது. காலம்பனின் மூத்த மகனோடு எவ்வியூர் சிறுவர்கள் சேர்ந்து விளையாடுகின்றனர், அலவன், முடிநாகன் போன்ற மாணவர்கள் பெரியவர்களோடும் சேர முடியாமல் சிறுவர்களோடும் சேர முடியாமல் தனித்து நின்றனர். வாரிக்கையனுக்கு வெற்றிலையோடு தும்மி இலை வைத்து தரப்படுகிறது. இதனால் கடுப்பான வாரிக்கையன் ஆதிமலையின் கீழ் வாழும் கட்டையர்களை திகைப்பூச்சி பிடித்து வர சொல்லி அனுப்புகிறார். நண்டுகளை வைத்து திகைப் பூச்சியை பிடித்து வருகின்றனர் கட்டையர்கள். 

குரவைக்கூத்து தொடங்குகிறது, தொற்றியாடல் தழுவியாடல் நிகழ்வுகளில் இணையர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள்அருந்தும் பானத்தில் காமஞ் சுருக்கியை போட சொல்கிறார் வாரிக்கையன். அது நடக்கிறது, ஆண்கள்அந்த பானத்தை அருந்துகிறார்கள். தேக்கன் உடம்பில் திகைப்பூச்சி கடிக்கிறது, காமஞ்சுருக்கி பானம் அருந்திய ஆண்கள் மந்தமாக ஆட, காமமூட்டி பானத்தை ஆடிய பெண்கள் ஆட்டத்தை வேகமாக ஆடுகிறார்கள். தேக்கனும் வாரிக்கையனும் இளைஞர்கள் வீழ்ந்ததை பார்த்து சிரித்தனர். கீழ்த் திசைக் காவலர்கள் குதிரையில் வந்து பாண்டியன் படை அமைக்கப் படுகிறது என்று பழையனிடம் சொல்கிறார்கள். அவர்களை நீலனின் கண்ணில் படாமல் நிறுத்தி வைக்கிறான் பழையன்.    

நீலனின் புற்கள் வேயப்பட்ட குடிலை பார்க்கிறாள் ஆதினி. மகிழ்கிறாள். பொங்கப் பழ பூந்தேன் கட்டிகள் பரிசாக வைக்கப்படுகிறது. முதியவள் ஒருவள் பாரியை ஆசையோடு பார்த்து பேசி செல்கிறாள். மணப் பெண் மயிலாவை தாய்மாமனும் மணமகனும் தோளில் தூக்கி வைத்து ஊர் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாமரத்தில் தாவிக்கொண்ட மயிலா நீலனிடம் 3 கேள்விகளை கேட்டு மாங்காய் எறிகிறாள். பாண்டிய படை அமைக்கும் இடம்நோக்கிச் செல்கிறான் பாரி. செங்கடம்பு மரத்தினடியில் மணமாலை சூட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. 

உதிரனும் அங்கவையும் திருமணத்துக்கு வரவில்லை என்று ஆதினி வருந்தினாள். 12 வருடங்களுக்கு ஒரு முறை காய்க்கும் கிளிமூக்கு மாங்காயை நீலன் மயிலாவுக்கு பரிசாக வழங்க முடிவெடுத்து ஒரு வாரம் முன்பு காட்டுக்குள் போனவர்கள் இன்னும் திரும்பவில்லை என்ற செய்தி அறிந்து ஆள் அனுப்பிகிறான் பாரி. 

உதிரனும் அங்கவையும் இராவெரி செடியை பார்க்க போக இரிக்கிச் செடியை பற்றி கூறுகிறாள் பாட்டி ஒருத்தி. ஒளி உமிழும் இரிக்கிச் செடியை இருவரும் அதிசயமாக பார்க்கின்றனர். உதிரனை மூன்று அடவி ஈக்கள் கடிக்கிறது. அவன் மயங்குகிறான். அங்கவை சென்றி புகை போட தேடுகிறாள். கிடைக்கவில்லை. சோழனின் யானை படை வருவதை பார்த்து மயங்கி கிடக்கும் உதிரனை இண்டாங்கொடி கட்டி செம்பா தேவியை வணங்கிக் கொண்டு தூக்குகிறாள் அங்கவை. மரக்கிளையில் இருவரும் தங்க சோழப்படை அவர்களை கடந்து செல்கிறது. மூன்று நாள் கழித்து எயினூர் என்ற இடத்திற்குச் சென்று நடந்ததை கூறுகின்றனர் அங்கவேயும் உதிரனும். எவ்வியூர் சென்று செய்தி சொல்ல கிளம்பினான் உதிரன். பாரியை சந்தித்து தகவலை சொன்னான் உதிரன். சேரன், சோழன், பாண்டியன் மூவரும் பறம்பை சூழ கொற்றவை கூத்து களத்தில் தேக்கன் முடியன் உட்பட அனைவரையும் சந்தித்தான் பாரி. சேரன் படையை எதிர்கொள்ள தேக்கன், கூழையன், உதிரன் மூவரும், பாண்டிய படையை எதிர்கொள்ள காலம்பனும் நீலனும், சோழ படைக்கு பாரியும் நியமிக்கப்பட்டார்கள். ஆதினி மீது கொற்றவை இறங்க பாரி உட்பட பலர் தங்களது மார்பை கிழித்து சூளுரை எடுத்தனர். மூன்று திசைக்கும் படைகளை ஒருங்கிணைக்க வாரிக்கையன் நியமிக்கப்பட்டார். தன்னோடு இரவாதனை பிட்டனை சேர்த்துக் கொண்டான் பாரி.   

தாளமலையில் உள்ள நெடுங்காடர்கள் பற்றி ஹிப்பாலஸிடம் சொன்னான் சோழவேலன். பாழி நகரில் உள்ள விலை உயர்ந்த கற்களை பற்றி பேசுகிறான் சோழவேலன். சோழர் படை வர அதை விருக மரத்திலிருந்து பார்த்தனர் பாரி அணியினர். எயினி இருந்த அணியை குதிரைகளை தோகை நாய்கள் தாக்குகின்றன. குதிரைகளுடன் சென்ற நெடுமன் குதிரைகளை தோகை நாய்களுக்கு பறிகொடுத்து தோற்றான். தப்பி வந்த எயினி தேக்கனின் குதிரைப்படையை எச்சரிக்கிறான் தோகை நாய்கள் பற்றி சொல்கிறான். தேக்கனும் அதை மதித்தான். குதிரைகள் உள்ள குகையை தோகை நாய்கள் சூழ்ந்து ஊளையிட்டது. தேக்கன் அந்த நாய்களை கொல்ல ஆணையிடுகிறார். கூவல் குடியினர் மூலம் உதிரனை உதவிக்கு அழைக்கிறார். நாய்களை கொல்ல பறவை நாகங்கள் வேண்டும் என்கிறார். ஈங்கையனுக்கு நாய்ளை எப்படி அடக்குவது என தெரியும் என்பதால் அவனை அழைத்து வர செல்கிறான் உதிரன். தேக்கன் மரத்தில் ஏறி உதிரன் பொறுப்பில் இருந்த இடத்தில் இப்போது எந்த எதிர்ப்புமின்றி நுழைவதை கண்டான். 

காடையர்கள் தான் நீர் ஊற்றை சோழ படைக்கு கண்டுபிடித்து தருகிறது என்பதை உணர்ந்தான் பாரி. உதிரனோடு ஈங்கையன் வருகிறான். தோகை நாய்ளிடம் பறவை நாய்கள் தோற்றன. ஈங்கையன் அவற்றை தந்திரமாக ஏமாற்ற குடம் நிறைய இனிப்பு பாகுகளை கொண்டுவர சொன்னான். எழுமுட் பசையும் தெல்லுக்கொடி பசையும் பயன்படுத்த படுகிறது. தோகை நாய்ள் சரிகின்றன. குளக்கரையில் சோழ படை மீது தாக்குதல் நடத்துவோம் என்று பிட்டனிடம் சொல்கிறான் பாரி. வீரர்கள் செவ்வெண்ணையை கையில் தேய்த்துக் கொண்டு சங்கு அட்டைப் பூச்சிகளை பிடித்து வர அந்தக் குளத்தில் சங்கு அட்டைப் பூச்சிகளை கலக்க செய்கிறான் பாரி . நீர் அருந்திய யானைகளை அட்டைப் பூச்சிகள் கடிக்க அவை முன் தீப்பற்றிய எறியம்புகள் வர பெரும் கூச்சலோடு சிதறுண்டது சோழன் படை. தோகை நாய்கள் இறந்துவிட தேக்கனால்  சேர படையும் பின்வாங்கியது. 

பிட்டன் சோழ படையால் துண்டுதுண்டாக வெட்டப்பட அவன் எறிந்த ஈட்டி செங்கணச் சோழனின் வலது கால் தொடையை குத்தியது. சேர சோழ படைகள் தோல்வியை தழுவ நீலன், தேக்கன், காலம்பன், பழையன் உள்ள இடத்துக்கு வந்தான் பாரி. முறியன் மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் செய்து வைத்திருக்கும் திங்கள் மூலிகை பல நாட்களுக்கு உணவின்றி ஆற்றல் தரக் கூடியது. செங்கண சோழனுக்குப் பதில் அவனுடைய தந்தை சோழவேலன் களத்தில் இறங்கினான். மூன்று வேந்தர்களுக்கும் பொதுவான நாளை கணித்து தருகிறார் திசைவேழர். 

தேரில் அலவனோடு கபிலர் வருகிறார். இடையில் சாகலைவன் அவரோடு சேர்ந்து கொள்கிறார். படைகளை கடந்து செல்கிறது வளவன் ஓட்டிய தேர். பிறகு செம்பனை பார்க்கிறார் கபிலர். கபிலரை பார்த்ததும் ஓடி வந்து அவர் காலில் வந்து வணங்குகிறான் செம்பன். பிறகு மூஞ்சல் பகுதியை நோக்கி வண்டி செல்கிறது, அங்கு உள்ள அனைவரும் மூவேந்தர்கள் உட்பட கபிலரை வணங்குகின்றனர். அவருக்கு முந்நீர் வழங்குகின்றனர். கரும்பில் துளையிட்டு சாறு எடுக்கும் முறையை கபிலர் சொல்கிறார். அலவனுக்கும் முந்நீர் வழங்கப்படுகிறது. முந்நீர் குடிக்க போகும் முன் கருங்குரங்கு குட்டி மலம் கழிக்கிறது, உடனே பானத்தில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் சொல்லப்படுகிறது, குலசேகர பாண்டியன் மருத்துவர்களிடம் நஞ்சு கலந்துள்ளதா என பரிசோதிக்க சொல்கிறான். நஞ்சு இல்லை என கண்டறியப்படுகிறது, பாரிக்காக சமாதானம் பேசுகிறார் கபிலர். ஆனால் மூவேந்தர்களும் சமாதானம் அடையவில்லை. 

பாண்டுரங்கத்தை சுற்றிப் பார்க்கிறாள் சுகமதியோடு பொற்சுவை. பாண்டுரங்கத்தில் நீலவள்ளியோடு பொதிய வெற்பன் கூத்தடிப்பது நினைத்து வருந்தினாள். அங்கு உள்ள காமன் விளக்கை பார்த்தாள். அது பரிசாக வந்தது என தெரிந்து வெங்கல் நாட்டுக்குச் செல்ல விரும்பினாள். எல்லோரும் போர் களத்தில் இருக்க அரண்மனையில் இருந்த வெள்ளிகொண்டார் துணைக்கு செவியனை அனுப்பி வைக்கிறார். வெங்கல் நாடு அடைகின்றனர், மையூர் கிழார் அவர்களை வரவேற்றார். காமன் விளக்கை செய்த சிற்பியை வரச் சொல்கிறாள். மையூர்கிழார் அதனை செய்கிறார். வாக்கு தவறிய மையூர் கிழர் அறைக்கு வரமாட்டேன் என்கிறான் காராளி. பொற்சுவை அவனை தேடி போகிறாள். காமன் விளக்கில் உள்ள மலர் என்ன மலர் ?.என காராளியிடம் கேட்கிறாள் பொற்சுவை. காதல் மலரான நிலமொரண்டி  என்கிறான் காராளி. அந்த சிலை பாரியை நினைவில் வைத்து உருவாக்கிய சிலை என்கிறான் காராளி. 

கபிலரோடு வந்த அலவன் மூவேந்தர்களின் ஆயுதங்களை நஞ்சுகளை நோட்டமிட்டான். தனது இடத்துக்கு திரும்பி வந்த அலவன் முறியனிடம் தான் கண்ட நஞ்சுகளை பற்றி சொன்னான். பறம்பு வீரர்கள் சிலரை ஒற்றர்களாக அனுப்பலாம் என சிலர் சொல்ல பாரி அதை தவிர்த்தார். மயிலாவுக்கு வள்ளிக் கூத்து (கர்ப்பிணி பெண்களுக்கு நடக்கும் கூத்து) நடந்தது. மூவேந்தர்களும் சேர்ந்து பேரழிவை உண்டாக்கும் யட்சினி வழிபாட்டை செய்தனர். மயிலாவுக்கு சந்தன வேங்கை மரம் அருகே வள்ளிக் கானம் நடந்தது. கருங்கை வாணன் தனது தலைமையிலான குழுவை பறம்பு மலையில் ஏற்றினான். நீலன் தலைமையிலான பறம்பு வீரர்கள் அதை பார்த்து, மேலிருந்து பாறைக்கற்களை உருட்டிவிட கருங்கைவாணன் படை தெறித்து ஓடியது. கருங்கைவாணனை படைகளை சிதறவிடாமல் முன்னேற்றினான். வள்ளிக்கானம் நடக்கும் இடத்திற்கு ஆலாவில் ஏறி முன்னேறிச் சென்றான் வீரன் ஒருவன். திதியன் மற்றும் கருங்கைவாணனின் படை தொடர்ந்து முன்னேறியது. திதியனின் முன்னேற்றத்தை கொற்றனாலும் புங்கனாலும் சமாளிக்க முடியவில்லை. தோதக்கத்தி மரத்தின் மீது கொற்றன் ஒளிந்திருந்து திதியனை தாக்க முற்படுகிறான். திதியனும் கொற்றனும் இறந்தார்கள். கருங்கைவாணன் அணியை தீக்களி உதவியுடன் (சோமக்கிழவன் பூசிவிட்டான்) தீக்குள் மறைந்திருந்து தாக்கினர் நீலன் அணியினர். நெருப்பிற்குள் இருந்து வெளிவந்த நீலன் துடிச்சாத்தனின் தலையை சீவி சென்றான். அந்த தலை கருங்கைவாணனின் காலில் உருண்டது. நீலனும் புங்கனும் ஈட்டியால் தாக்கப்பட்டனர். நீலனை கருங்கைவாணன் அணி தூக்கிச் செல்கிறது, வேட்டூர் பழையன் அதிர்கிறார். 

வேந்தர் இடத்திற்குச் சென்று நீலனை கபிலர் பார்த்துப் பேசுகிறார். மூவேந்தர்களுக்கு உதவினால் நீலனை விடுவிக்கிறேன் என முசுகுந்தர் சொல்ல கபிலர் அதை ஏற்க மறுக்கிறார். முறியன் தந்த மூலிகை போர்வையை நீலனுக்கு போர்த்திவிட்டு நகர்கிறார் கபிலர். மூவேந்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கபிலரோடு வாரிக்கையனை அனுப்பி வைக்க முடிவெடுத்தான் பாரி. 

மூவேந்தர்கள் நிலைமான் கோல்சொல்லியை வைத்து போருக்கான விதிகளை வகுத்தனர். மூவேந்தர்களின் நிலைமான் கோல்சொல்லியாக திசைவேழரின் மாணவன் அந்துவன் நியமிக்கப்பட்டான். வாரிக்கையனை கூட்டிக்கொண்டு மூவேந்தர்களை நோக்கி வருகிறார் கபிலர். வாரிக்கையன் வௌவால்களை பற்றி பேசுகிறான். பொதியவெற்பனின் மனைவி பற்றி பேசுகிறான். பிறகு கோல்சொல்லி கபிலர் என்கிறான். குலசேகர பாண்டியனோ திசைவேழர் என்கிறார். திகைப்பூச்சி வைத்து குலசேகர பாண்டியனை மடக்கிய கதையை கபிலரிடம் சொல்லிவிட்டு திசைவேழர் யார் என்கிறான் வாரிக்கையன். 

குலசேகர பாண்டியனுக்கோ என்ன நடந்தது என புரியாமல் இருக்க முசுகுந்தர் திசைவேழரிடம் பேசி கோல்சொல்லியாக இருக்க ஒப்புதலை பெற்றார். திசைவேழரும் கபிலரும் போர் விதிகளை கேட்டுக்கொண்டு போர் நடக்கும் இடத்தை தேடி தேரில் சென்றனர். தவறான பாதையில் சென்ற வளவனை(முடத் திருக்கண்) கீழே இறக்கி ஓடவிட்டு அவன் பின்னாடி தேரை செலுத்த சொன்னார். தட்டியங்காடு பகுதியில் தேர் நின்றது. 

திசைவேழரை இரவு வேளையில் பார்க்க வந்தாள் பொற்சுவை. இந்த போருக்கான காரணம் நீங்களும் நானும் தான், பாண்டுரங்கத்தில் தேவாங்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது என்கிறாள். உன்னுடைய குருவான கபிலரிடம் தேவாங்கை பாண்டியர்களுக்கு கொடுத்து உதவ சொன்னால் போர் முடியும் என பொற்சுவையை சொல்ல சொல்கிறார் திசைவேழர். இதே நேரத்தில் விஷ கலப்பு என்ற குற்றச் சாட்டால் குலசேகர பாண்டியனால் சிறைப்படுத்தப் பட்டார் முசுகுந்தர். 

மலைக்குள் ஒளிந்து வாழும் கானவ குலத்தினர் (காக்கா விரிச்சியை வேட்டையாடுபவர்கள்) அறிமுகமாகிறார்கள். தட்டியங்காட்டு கருமணலும் ஈக்கிமணலும் எவ்வளவு தீங்கானது என்று விளக்குகிறான் இகுழிக் கிழவன். சுருளம்பாக மாறும் கல்லூழி வேர் பற்றி கூறுகிறான் இகுழிக் கிழவன். செங்காவி ஓணான்களால் தான் நாங்கள் காக்கா விரிச்சியிடம் இருந்து தப்பித்தோம் என்று கானவர் சொல்ல ஓணான்களுக்கு எங்களால் எந்த பாதிப்பும் வராது அதற்குப் பதிலாக நீங்கள் உங்கள் சுருளம்புகளை தர வேண்டும் என வேண்டிக் கொண்டனர் பறம்பினர். 

போர் தொடங்கியது. முதல் நாள் போரில் தேக்கனால் சாகலைவன் கொல்லப்பட்டான். அடுத்த நாள் அவனுக்குப் பதிலாக சூலக்கையன் நியமிக்கப்பட்டான். இரண்டாம் நாள் போர் தொடங்கியது. தேக்கனை எதிர்த்து சூலக்கையனும் கருங்கைவாணனும் சண்டை இட்டனர். ஓங்கல் மூங்கில் அம்பு உறுமன் கொடியின் குதிரை படையை மயக்கமடைய செய்தது. இதனால் கருங்கைவாணான் திசைவேழரிடம் சென்று நஞ்சு பயன்படுத்தக் கூடாது என்ற விதியை பறம்பு வீரர்கள் மீறி உள்ளனர் என்று வாதாட கபிலரும் வாரிக்கையனும் அந்த இடத்துக்கு வரவழைக்கப் படுகிறார்கள். வாரிக்கையன் நஞ்சை பற்றி பேசுகிறார். பிறகு வாதாடி வாரிக்கையன் வெல்கிறான். இரண்டாம் நாள் போர் முடிகிறது. தேக்கன் பாதிக்கப்பட்டிருந்தான் இருந்தாலும் இரவு ஓய்வெடுக்காமல் அடுத்தநாள் போருக்கு வருவேன் என அடம்பிடிக்கிறார். கருங்கை வாணன் போர் முறைகளை மீறலாம் என குலசேகர பாண்டியனிடம் சொல்கிறான். அவர் மறுக்கிறார். மூன்றாம் நாள் காலை போர் தொடங்குகிறது. சுருளம்புகள் காற்றினில் பறந்து மூன்றாம் நிலை வீரர்களை தாக்குகிறது. கருங்கைவாணன் தலைக்கு மேல் செல்லும் அம்புகளை பார்த்து மிரள்கிறான். அதையடுத்து தேக்கனை நோக்கி விரைகிறான் கருங்கை வாணன். தேக்கனுக்கு முன்னால் கூழையன் பாய்ந்து கருங்கை வாணனை எதிர்க்க கருங்கை வாணன் கூழையனை கொன்றான். மையூர் கிழாரை துரத்திச் சென்ற பழையன் இரு அம்புகளால் தாக்கப்பட்டான், அங்கிருந்து தப்பித்து ஆட்கொல்லி மரம் அருகே ஓட பின் துரத்தி வந்த இரண்டு தளபதிகளும் நூற்றுக்கணக்கான வீரர்களும் இறந்தனர். பழையனும் கூழையனும் மூன்றாம் நாள் போரில் இறந்தனர். 

கருங்கைவாணன் விதிமுறைகளை பின்பற்றாமல் போரிடுவோம் என சொல்ல குலசேகர பாண்டியன் மறுக்கிறார். மருமகள் பொற்சுவையை வைத்து பாரியை கொல்ல திட்டமிடுகிறார். யானைப் படை பறம்புக்குள் நுழைய காட்டெருமைகள் கொண்டு அவற்றை விரட்டுகிறான் காலம்பன். போரின் ஐந்தாம் நாள் முடிவில் காராளி உதவியுடன் கபிலரை சந்திக்கிறாள் பொற்சுவை. 

மூவேந்தரும் சேர்ந்து ஈங்கையன் உதவியுடன் பாரியை கொல்ல திட்டமிடுகின்றனர். மையூர்கிழார் நீலனை கொன்று பாரியை வர வைப்போம் என்கிறார். இரவாதன் மூஞ்சலை தாக்க தன்னுடைய திட்டத்தை முடியனிடமும் தேக்கனிடமும் கூறினான். பழையனுக்கு பதில் விண்டன் நியமிக்கப் பட்டான். ஐந்தாம் நாள் போர் தொடங்கியது. போரில் எதுவும் நடக்கவில்லை. பொற்சுவை பாரியின் (சதி திட்டத்தால் உயிருக்கு ஆபத்து) உயிரை காப்பாற்ற சுகமதியுடன் பல்லக்கில் செல்கிறாள். பாரியின் இடம் சென்று கபிலரை சந்தித்து பிறகு ஈங்கையனை (துரோகி) சந்திக்கிறாள். உடனே பல்லக்கு தூக்கி வந்த பாண்டிய வீரர்கள் ஈங்கையன் அம்பால் குத்தி சாய்க்க பறம்பு வீரர்கள் அவர்களை சாய்க்கின்றனர். பாண்டியர்களின் ஈட்டியால் பொற்சுவையும் சாய்ந்தாள். ஆறாம் நாள் போர் தொடங்கியது. தளபதியாக கருங்கைவாணனுக்கு பதில் மையூர்கிழார் நின்றார். இரவாதனின் படை மூஞ்சலை தாக்கி உள் நுழைந்தது. 

இரவாதன் கொல்லப்பட்டான். பறம்பு படை அதிர்ந்து நிற்க திசை வேழரிடம் இருந்து கபிலருக்கு அழைப்பு வருகிறது. பொதிய வெற்பனும் சோழவேழனும் விதியை மீறியதால் தான் இரவாதன் உயிரிழந்தான் என்பது தெரிய வருகிறது. போர் முடிவு முரசு ஒலித்த பிறகு நீலனை காப்பாற்றிய இரவாதன் தன் ஆயுதங்களை தரை சாய்க்க அவனுக்கு பின்னாடி இருந்தபடி அம்பெய்தி தாக்கி உள்ளனர் பொதியவெற்பனும் சோழவேழனும் என்பது. அதனால் இருவருக்கும் ஆயுதங்களை தொடக் கூடாது என்ற தீர்ப்பு திசைவேழரால் வழங்கப்பட்டது. குற்ற உணர்வால் தேக்கனும் திசைவேழரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். தேக்கன், இரவாதன் உடல்களை புதைக்கும் முன் எதிரிகளை வெல்வது இந்த வீரர்களுக்கு செய்யும் மரியாதை என்கிறான் பாரி. 

சோழ பாண்டிய வீரர்கள் அணலியாலும் இருள்வேல மர சிவப்பு பிசினாலும் ஆபத்தில் சிக்க…  கொட்டும் மழையில் இரவில் மூவேந்தர் படை மீது தாக்குதல் நடத்துகிறது பாரி படை. துடும்பனின் கழுத்தை சீவிச் சென்றது உதிரனின் வாள். காலம்பன் களத்திற்குள் இறங்கினான். பாரியும் களத்தில் இறங்கினான். நீலனை காப்பாற்ற வேண்டும் என்பதால் பாரியும் முடியனும் எந்தவித தாக்குதலையும் செய்யவில்லை. முடியன் வேட்டூர் பழையனை நினைக்க, பாரி தேக்கனை நினைத்தான்.   

எதிரிகளை வீழ்த்தி நீலனை யானை மேல் உட்கார வைத்து அழைத்து வந்தான் பாரி. 

செடிகள், பூக்கள், கனிகள் : 

நத்தைச் சூரி(கல்லை நொறுக்கும் அளவுக்கு ஆற்றல் தரும் செடி), கருங்காலி மரம், செங்கடம்பு, அகில் மரம், நாங்கில் மரம், சோமப் பூண்டு, வெடத்தப் பூ (காதலர்களின் பூ, இதனால் தான் வெடலைகள், வெடலைப் பருவம் போன்ற பெயர்கள் வந்தது), தாழம் பூ (மின்னல் ஒளியால் மலரும்), ஆட்கொல்லி மரம் (அருகே யார் சென்றாலும் அதன் இலை மேலே விழுந்து அரிப்பை ஏற்படுத்தும் விஷம் – பறவைகள் இந்த மரத்தில் அமராது), முயற்புல் (குதிரை உண்ணும்), தும்பை இலை ( குதிரை உண்ணும்), சிறகு நாவல் (காற்றில் பறக்கும் நாவல்), கடம்ப மரம் (முருகனின் உறைவிடம்), பூனை வணங்கிச் செடி(இதன் அடிவாரத்தில் தீனியிட்டாள் பூனை தீனியை தின்றுவிட்டு சிறிது நேரம் மயங்கிப் போகும்), செண்பக மரம், மயில்கொன்றை மரம், சேராங்கொட்டை விதை (இந்த விதையுடன் மூன்று மூலிகைகளை கலந்து உடம்பில் தேய்த்துக் கொண்டால் ஆட்கொல்லி மரம் அருகே செல்லலாம்), வெண்டாழை, செந்தாழை, பொன்வண்ண குறிஞ்சி, மழைவண்ண குறிஞ்சி, பவளக் குறிஞ்சி, பெருங் குறிஞ்சி, வாடாக் குறிஞ்சி, இராவெரி மரம் (பகலிலே வாங்கிய ஒளியை இருளில் பிரகாசிக்கும்), செங்கிளுவை மரம், குறுமுல்லை, புனுகு, நாகப் பூ, புன்னைப் பூ, பாதிரிப் பூ, குளவிப் பூ, தும்மி இலை, காமஞ்சுருக்கி (காம உணர்வை குறைத்து தூங்க வைக்கும்), கூரை பூக்கள், நாங்கில் மரம், குரம்பை புல், மூங்கிற் புல், மாந்தம் புல் (கடமான் உண்ணும்), சூல் மருது மரம், மயிலம் மலர், கிளிமூக்கு மாங்கா, இரிக்கிச் செடி, கரு நொச்சி (இதன் அடியில் புதையல் இருக்கும்), சிவப்பு சத்திர மூலக்கொடி, செங்கொடி வேலி, நிலமொரண்டி (காதல் மலர்), குமரி வாகை (வாகை மரத்தில் முதலில் பூக்கும் பூ), கவிர் மலர், ஈங்கை மலர், விரிமலர், சந்தன வேங்கை மரம், நாகசம்பங்கி மலர் (வள்ளிக்கானத்தின் போது பெண்கள் அருந்தும் மது தயாரிக்க இது பயன்படும்), தணக்கு மரம், அகில் மரம், தோதகத்தி மரம், தராக் கொடி & செவ்வகத்தி வேர் ( இதன் பால் இரும்பை உருவாக்கும் ), ஆச்சை மரம், ஓரவத்திக் கொடி (ஒரு ஆள் பருகும் அளவுக்கு நீரை தரும்), நீர் வேலிப் படர்கொடி, ஓங்கலம் (நஞ்சை முறிக்கும் மூங்கில்), விளாமரம், சுலுந்துக் கம்பு (இதன் விதைகளை நுணுக்கி பற்ற வைத்தால் மழையிலும் தீ அணையாமல் எரியும்),     

பூந்தேன் கட்டிகள் : 

நாவற்பழ பூந்தேன் (துவர்க்கும்), வேப்பம்பழ பூந்தேன் (கசக்கும்), கள்ளிப் பூந்தேன் (இனிக்கும்), கோட்டைப் பழ பூந்தேன், அத்திப்பழ பூந்தேன், பொங்கப் பழ பூந்தேன். 

விலங்குகள் & பறவைகள் : 

செம்மூக்கன் (எலிவகை – மண்ணை கடித்து துளையிட்டு நிலத்திற்குள் போகும் விலங்கு), இரலை மான் (சேரர்களின் ஆயுதங்கள் இந்த மானின் கொம்புகள் போலிருந்தன), செங்காற் சேவல், ஆளி (யானையை கொல்லும் மிருகம்), தோகை நாய் (குதிரைகளை கொல்லும் மிருகம்), நெடுங்காது முயல், குறுங்காது முயல், திகை பூச்சி (திகைக்க வைக்கும்), கடமான், அடவி ஈ, பறவை நாகம், சங்கு அட்டைப் பூச்சி, மலைக்காடை, கருங்கிளி, பனையேறி அணில் (குகைக்குள் உள்ள வௌவால்களை இறுவரை துரத்திச் சென்று விரட்டும்), செங்காவி நிற ஓணான் (காக்கா விரிச்சியின் முட்டையை தின்னும்), 

அணலி (நெருப்பு பூச்சி), இருள் வேல மரம், கொம்பு தூக்கி வண்டு, 

காதலர்கள் : 

உதிரன் – அங்கவை

நீலன் – மயிலா

பாரி – ஆதினி

கிழங்கு வகைகள் : 

சித்திர வள்ளிக் கிழங்கு, காட்டு வள்ளிக் கிழங்கு, ஏழு வகை கிழங்குகள் : நூரை, சவலன், நெடுவன், தீச்சி, நாச்சி, சம்பை, நூழி 

Related Articles

உத்தரகாண்டில் மூன்று புதிய அணைகளைக் கட்ட... இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இண்டஸ் நீர் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் மூன்று ஆறுகள் வீதம் பிரித்துக்...
எழுத்தாளர் தமிழ்மகனின் “மீன்மலர்&#... தமிழ்மகன் என்கிற பா. வெங்கடேசன் எழுதிய புத்தகம் மீன்மலர். இருபது வயதுகளிலயே எழுத தொடங்கி இளம் வயதிலயே தமிழக அரசின் இலக்கிய விருதுகளை வென்றுள்ளவர். மீன...
” என்ன வேலை செய்றீங்க? ” என்... வித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அ...
தானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர... தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் இயக்கம்: விக்னேஷ் சிவன் மூலக்கதை: ஸ்பெசல்26 ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் இசை: அனிருத் நடிகர்கள்: சூர்யா, கார்த்திக், க...

Be the first to comment on "வீரயுக நாயகன் வேள்பாரி பார்ட் 2 ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*