கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின்! யார் இவர்? எதற்காகப் பாராட்டப்பட்டார்?

Aisha Fatima Jasmine acclaimed by Kamal Haasan!

சில மாதங்களுக்கு முன் ஆனந்த விகடனில் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தொடரை எழுதி வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். அந்த தொடரில் ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின் என்ற யுவதியை கமல் பாராட்டி உள்ளார்… ஏன் பாராட்டினார் என்பதை அவரே விளக்கி உள்ளார். அதை பார்ப்போம். 

சென்னை பெசன்ட் நகர்ப் பக்கம் போகும்போதுதான் அந்த ‘ஐயமிட்டு உண்’ குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தேன். வீட்டில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியைப்போல் இருமடங்கு இருந்தது. ஒருபுறம் குளிர்சாதனப் பெட்டி. மறுபுறம் நாம் உடைகள் வைக்கும் தடுப்பறைகள் கொண்ட பீரோ. குளிர்சாதனப் பெட்டியில் பழங்கள், உணவுகள் என நிறைந்திருந்தன. மறுபுறம் நிறைய துணிகள், காலணிகள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. விசாரித்தேன். வியந்தேன்.

திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின். பல் சீரமைப்பு மருத்துவர். தன் வீட்டில் மிஞ்சும் ஒன்றிரண்டு பேர் சாப்பிடும் அளவு உணவை தன் அபார்ட்மென்ட் அருகே நடைபாதையில் அமர்ந்திருக்கும் மூதாட்டி ஒருவருக்குத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறார். திடீரென ஒருநாள் அந்த மூதாட்டியைக் காணவில்லை. ‘அந்த மிஞ்சிய உணவை என்ன செய்வது’ என்று யோசித்தவர், ‘நம் அபார்ட்மென்ட்டில் உள்ள மற்ற வீடுகளில் இப்படி உணவு மிச்சமானால், அவர்கள் என்ன செய்வார்கள்? நம் அபார்ட்மென்ட்டிலேயே மொத்தம் 180 வீடுகள் உள்ளன. அப்படி எல்லா வீடுகளிலும் மிச்சமாகும் உணவைச் சேகரித்து அவற்றை ஒரு பொது இடத்தில் வைத்து ஏழைகளுக்கு விநியோகித்தால் என்ன?’ என்று சிந்தித்திருக்கிறார்.. பகிர்ந்து உண்ண வழிசெய்யும் இந்தச் சிந்தனையும் பகுத்தறிவுதான். 

‘அப்படிச் சேகரித்த உணவை தன் கைப்பட விநியோகிக்காமல் தேவையானவர்களே தேவைப்படும் நேரத்தில் எடுத்துக்கொள்ளும்படி செய்யலாம்’ என வாசித்து அறிந்திருக்கிறார். முன்பு பகுத்தறிந்தார், இப்போது வாசித்தறிந்தார். அப்படி அமைத்ததுதான் ‘ஐயமிட்டு உண்’ என்ற இந்த ‘சமுதாய குளிர்சாதனப் பெட்டி’. இது அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகிறதாம். ‘இப்படி எங்க ஏரியாவிலும் அமைக்கலாம்’ என்று இப்போது 200 தன்னார்வலர்கள் ஐஷாவுடன் கரம்கோத்திருக்கிறார்கள். மேலும், ‘இப்படி ஒரு நிகழ்ச்சியில் 100 பேர் சாப்பிடும் அளவுக்கான உணவு மிஞ்சிவிட்டது. அங்கு எடுத்துவரலாமா’ என்றும் கேட்கத்தொடங்கி, இதனால் பல வயிறுகள் பசியாறி வருகிறதாம். 

குப்பை பொறுக்குபவர்கள், கிடைக்கும் வேலையைச் செய்பவர்கள்… இப்படி அந்தக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தொடர்ந்து உணவு எடுப்பவர்கள் அனைவரும் சாமானியர்களே. ‘எங்களுக்கு மாசம் 9 ஆயிரம் கிடைக்குது. அதுல முக்கால்வாசி சாப்பாட்டுக்கே செலவு பண்ணிட்டிருந்தோம். இப்ப இங்க சாப்பாடு கிடைக்கிறதால மிச்சமாகும் அந்தப் பணத்தைவெச்சு எங்க பசங்களை பக்கத்துல உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சேர்க்கலாம்னு இருக்கோம்’ என்கிறார்களாம். 

18 மணி நேரம் வேலை செய்யும் ஒரு கால்டாக்ஸி டிரைவரின் கையில் அன்று காசு இல்லை. தாகம். பெசன்ட் நகர் 3வது நிழற்சாலையில் உள்ள இந்தக் குளிர்சாதனப்பெட்டியைப் பார்த்திருக்கிறார். ‘பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவர், பிறகு ஐஷாவை அலைபேசியில் அழைத்து, ‘தாய் மாதிரி இருக்கீங்க’ என்றாராம். 

ஆம், நமக்கு ஐஷா போன்றோர்தான் தாய். அரசு செய்ய வேண்டிய வேலையை ஐஷா போன்ற உண்மையான அம்மாக்கள்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஐஷா.

இவ்வாறு அந்த யுவதியை பாராட்டி உள்ளார் கமல்ஹாசன். 

Related Articles

ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் பொதுவெளியில்... ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் சொந்த அரசியல் விருப்பங்களை, பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து தடை விதித்...
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் ... மகாராஷ்டிரா மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதை அடுத்து மகாராசுடிரா விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் ப...
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் இசை... பாடலும் இசையும்:  பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ்இசை: அனிருத்Let me sing a kutti storyPay attention, listen to meEnnana EnglishJu...
கேட்கலனா கொல்வோம் – சாதிவெறியன்களு... சமீபத்தில் பரியேறும் பெருமாள் வெளியாகி சமூகத்தில் இந்த சாதி எப்படி குரூரமாகச் செயல்படுகிறது என்ற விவாதத்தை உண்டாக்கியது. ஒசூர் ராகவேந்திரா தியேட்டரில்...

Be the first to comment on "கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட ஐஷா ஃபாத்திமா ஜாஸ்மின்! யார் இவர்? எதற்காகப் பாராட்டப்பட்டார்?"

Leave a comment

Your email address will not be published.


*