சினிமா பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பத்திரிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்ற அசுரன்!

Asuran - Applauded by Critics, Cini Celebrities, Journalists & Writers

1.அசுரன் திரைப்படம் பார்த்தேன். கரிசல் மண்ணோடு கலந்து கிடக்கிற பகையையும், வன்மத்தையும், அதிகாரத்தின் கைகளில் நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கோபத்தையும் பூமணியின் எழுத்துகள் ஆணித்தரமாக ஒலிக்க அதை தனுஷ் என்கிற நடிப்பு அசுரனுடன் இணைந்து வெற்றிமாறன் திரைக் கவிதையாக ஆக்கியுள்ளார். தனுஷ் மிக மிக மிக  பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். பூமணியின் வெக்கை நாவலை வெற்றிமாறன், மணிமாறன் மற்றும் சுகாவுடன் இணைந்து நேர்த்தியான திரைக்கதையாக வடிவமைத்துள்ளார். ஜிவியின் இசையில் பாடல்கள் மண்ணின் மணத்தை நமக்கு கடத்துகிறது. பின்னணி இசை அந்த கொலைப் பதட்டத்தை நமக்குள் இடையறாது ஏற்படுத்தியவண்ணம் இருக்கிறது. விரிவாக பேச நிறைய இருக்கிறது. வெற்றி ,தனுஷ், ஜிவிபி உள்ளிட்ட மொத்த குழுவிற்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள். – இயக்குனர் வசந்த பாலன்

2.“தமிழ் சினிமாவில் நாவல்களைத் தழுவிப் படமெடுப்பது ஆரோக்கியமான விஷயமாகத்தான் பார்க்கிறேன். நான், நேற்று படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்த எழுத்தாளருக்குமே தனது நாவல் திரைப்படமாகும்போது, அதைப் பார்க்க ஆவலாகத்தான் இருக்கும். எனது நாவலில் திருத்தம் செய்துதான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் நிகழ்வது, மகிழ்ச்சியளிக்கிறது” – எழுத்தாளர் பூமணி

3.தன்னுடைய மனைவி மக்களையும், தன்னுடைய இடத்தையும் காப்பாற்றிக்கொள்ள போராடும் ஒரு சராசரி அடித்தட்டு மனிதனின் கதை, அதை எல்லா வகையான ரசிகர்களும் ரசிக்கும்படி கத்தியோடும் ரத்ததோடும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் வெற்றிமாறன் அவர்கள். குறிப்பாக முதல்பாதி நெஜமாகவே வேற லெவல்..

தனுஷ் கேரக்டர் ஒரு வில்லனை அடிக்கும்போது தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தவர்களில் பலபேர் ‘அடி, வெட்டு’ என்று அதிக எமோஷனில் கத்த ஆரம்பித்தார்கள் அவ்வளவு தூரம் கதாபாத்திரங்களோடு ஒன்றியிருந்தார்கள் அதுதான் வெற்றிமாறன் அவர்களின் வெற்றி.. – நித்திலன் சுவாமிநாதன்

4.அசுரன்

முதல் பாதி தரம். ஒன்றரை மணி நேரப் படமாக எடுத்திருந்தால் , நச் என்று இருந்திருக்கும். வெற்றி மாறனின் மேக்கிங்கும் , தனுஷின் நடிப்பும் அசுரனை தமிழின் தவிர்க்க முடியாத படங்களின் வரிசையில் சேர்த்திருக்கும். 

படத்தை நீட்ட வேண்டி …தனுஷின் ஃப்ளாஷ் பேக் வருகிறது. ஒரு வரி வசனத்திலோ , ஆளவந்தானில் செய்தது போல , அனிமேஷனிலோ கடந்து செல்ல வேண்டியதை நேரமெடுத்து காட்சிப்படுத்தி பாரு , பாரு என்று பந்தி வைக்கிறார்கள். இடைவேளையில் ஏற்றிய டெம்போ , புஸுக் கென்று கவுந்து , வேறு ஒரு படத்தை முதலில் இருந்து பார்ப்பது போல பார்க்க ஆரம்பிக்கிறோம். ஃப்ளாஷ் பேக் தேவையேயில்லை. 

தமிழ் சினிமா இயக்குனர்களிடம் யாராவது கட்டிப்போட்டு சொல்ல வேண்டும். ஐயா நீங்கள் எல்லாம் கலைஞர்கள் , கிரியேட்டர்கள். எல்லா படத்திலும் எல்லா கதையிலும் நீதி சொல்கிறேன் , கருத்து சொல்கிறேன் , சமூகப் பிரச்சனைகளை முன்னெடுக்கிறேன் என்று செய்ய வேண்டியதில்லை. 

இயக்குநர்களுக்கு சமூகப் பிரக்ஞை கூடாது என்பதல்ல , எல்லா கதைகளிலும் வேண்டாம் என்கிறேன். கலை கண்முன்னே சிதைந்து செத்துக்கொண்டு இருப்பதை பார்க்க வேண்டி இருக்கிறதே !

சில இடங்களில் , சில காட்சிகள் மட்டும் ஃபெட்டிஷ் தனமாக இருந்தன. உதாரணமாக ,செருப்பை தலையில் சுமந்து செல்லும் காட்சி , பார்ப்பவர்களிடம் பரிதாபத்தை உருவாக்க வேண்டும் என்று நீட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது. நான்கைந்து முறை அவளை உதைத்து , அடித்து , கீழே தள்ளி …..தன் கலையின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். ஒரு முறை அந்தக் காட்சியைக் காட்டி , ஒரு முறை உதைத்து தள்ளுவது போல காட்டி இருந்தாலே , பார்வையாளர்களுக்கு பகீரென்றுதான் இருந்திருக்கும். பார்வையாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. 

அதே போல தனுஷின் மகன் இறந்து கிடக்கும் இடமும் !

கடைசியில் வன்முறைக்கு எதிராக வசனம் பேசி , படிப்பு தான் முக்கியம் என்று முடித்தாலும் , படம் வன்முறையைக் கொண்டாடுகிறது. வெற்றி மாறன் சினிமாவில் வன்முறையைத்தான் நன்புகிறார். அதுதான் சினிமா வெற்றி கொடுக்கும் என்று நினைக்கிறார்.

படம் நெடுக , உச்ச ஸ்தாதியில் பீஜிஎம் போட்டு , ரகளை ரகளையாக கேமரா கோணம் வைத்து அறுவாள் வெட்டுவையும் , ஈட்டிக்குத்துவையும் ரசித்து கொண்டாடித் தீர்த்திருக்கிறார். 

ஒவ்வொரு வெட்டுக்கும் , ஒவ்வொரு குத்துக்கும் , ஒவ்வொரு தலை அறுபடுதலுக்கும் , தியேட்டர் வெறி பிடித்து கூச்சலிடுகிறது. சென்னையில் பெரும்பாலும் கத்த மாட்டார்கள். பலாசோவிலேயே வன்முறைக் காட்சிகளுக்கு வெறி பிடித்து கூக்குரலிட்டார்கள். வெளியூர்களை நினைத்துப் பார்க்கிறேன். நிஜமாகவே கவலையாக இருக்கிறது. 

இடைவேளை வரை படத்தைப் பார்த்தால் , கதை , கண்டெண்ட் இருந்தால் குழப்பிக்கொள்ளாமல் , விஷுவலிலும் , இயக்கத்திலும் கவனம் செலுத்தலாம் என்பது தெளிவாகிறது. அவ்வளவு அழகாக இருக்கிறது மேக்கிங்க். எந்தப் பிசிறும் இல்லாமல் வழுக்கிக்கொண்டு செல்கிறது படம். உலகத் தரம். நம்மிடம் 1000 கதைகள் உள்ளன, 1000 கதாசிரியர்கள் கிடக்கிறார்கள். உபயோகப்படுத்திக்கொண்டால் , அற்புதமான ஃபிலிம் மேக்கிங்கில் கான்சண்ட்ரேட் செய்யலாம். 

இடைவேளை வரை இந்தச்சினிமா தனக்கான நியாயத்தை தன்னகத்தே வைத்திருந்தது. இடைவேளைக்குப் பிறகு இர்ரென்ஸ்பான்ஸிபி: மூவியாக மாறி , ரசிகர்களின் ரசனைக்குத் தவறாக தீனி போட்டு , எப்படியாவது சினிமா கமர்ஷியலாக ஜெயிப்பதற்கான வழியைத் தேடுகிறது . – எழுத்தாளர் அராத்து

5.அசுரன்!

‘கொம்மால.. எதுக்குடா வெட்றோம்… இப்ப புரியுதானு’ கேட்டா அது ‘வடசென்னை:. 

‘போயி புள்ளக் குட்டிங்களை படிங்க வைங்கடே…அது ஒன்னுத்ததேன் எவனும் உன்கிட்ட இருந்து புடுங்கிக்கிட முடியாது’னு சொன்னா… அது ‘அசுரன்’

ரத்தமும் சதையுமா வெட்டுப்பட்டு சாவுற வலி உனக்கு தெரியுமா? விஷப்பாம்பு தாக்க வருதுனு தெரிஞ்சா பாலாபிஷேகமா பண்ணிட்டு இருப்போம்? ஒன்னு ஓடுவோம். இல்லாட்டி கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லுவோமா இல்லையா? அப்படிதான் இந்த தன்மானக் கொலைகள் நடக்குது. சாதியின் பேர் சொல்லி நடக்கிற ஆணவக்கொலைகளை கௌரவக்கொலைகள்னு மைனர்குஞ்சுகள் ஆலமரத் தீர்பெழுதும் போது, பெண்களை சந்திக்கு இழுத்தும், உழுத நிலத்தைப் பிடுங்கிக்கொண்டும் போதாக்குறைக்கு தெருத்தெருவாய் காலை நக்கிப் பிழைக்கச் சொல்லும் ஆண்ட பரம்பரையை செருப்பால் அடிக்கத் துணிகிறவன் செய்யும் கொலைகளுக்குப் பெயரே ‘தன்மானக் கொலைகள்’

‘செய்யும் கொலைகளை நியாயப்படுத்தல. செய்ய வேண்டிய சூழலைத்தான் நியாயப்படுத்துறோம். மனிஷன மனிஷனா மதிங்க’ என்கிறான் அசுரன். ஒடுக்கப்பட்டோருக்கு செருப்பு போடுகிற உரிமையை மறுக்கும்  ஊர்கள் இருக்கின்றன இன்னமும். இரட்டைக்குவளைத் தேநீர்கடைகள் முற்றிலும் ஒழிந்துவிட்டதா? தொட்டால் தீட்டென்று குளிக்கப் போகும் ஆசாமிகள் மாறிவிட்டார்களா? கோவில் கருவறைக்குள் நுழைகிற உரிமை எல்லோருக்கும் வாய்த்துவிட்டதா? இடுப்பில் போட்டிருக்கும் துண்டை, தோளில் போட்டுக் கொள்கிற கம்பீரம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது. பிறப்பே தீட்டு… செத்துப்போனாலும் சுடுகாட்டுப் பாதையை மறித்து பாலத்திலிருந்து இறக்கி பிணத்தை எரிக்கிற தீண்டாமைப் பாதையில் நடக்கிறவர்களுக்குத்தான் தெரியும்.. ஒதுக்கப்பட்டதன் வலி… ஒடுக்கப்பட்டதன் வலி. 

‘பெட்டிக் கேஸோ கொலை கேஸோ அவனுங்கள்ல நாலு பேரை புடிச்சு கணக்கெழுதுங்கய்யா என்கிற சட்டத்துக்கு முன்பு குரல்வளை கிழியத்தான் போராட்டம் நடத்துகிறோம். அதற்கும் வழியில்லாமல் கழுத்தை நெறிக்கும் போதுதான் நெறித்தவர்கள் சங்கை அறுக்கிறோம். இதுக்குப் பேரு அசுரத்தனம்னா நாங்க அசர்ரவனுங்களா இல்லாம அசுரன்களாவே இருந்துட்டுப் போறோம்’ என கத்தியும் வேல்கம்பும் வீசி தலைப்பாகைக் கட்டிக்கொண்டு ரத்தம் தெறிக்கச் சொல்கிறான் அசுரன்.

‘டேய்… அன்பே சிவம்னு நல்லத்தனமா படமெடுத்தா உங்களுக்கெல்லாம் புரியாதுடா… இதான்டா எங்க வாழ்க்கை… எங்களுக்கும் உசுரு மசுரு எல்லாம் இருக்குடா … புரிஞ்சித்தான் தொலைகங்களேன்டா’ என படம் எடுத்தால் அவன் பெயர் ‘ அசுரன்’ என்னும் வெற்றிமாறன்.

படத்தில் இருக்கும் வெட்டிங் ஒட்டிங் குறைகள் தாண்டி , படத்தில் எரியும் குடிசைகளின் தீயை நம் சிந்தையில் இருக்கும் மட்டமான ‘சாதித் தீ ‘கொண்டே அணைக்க முயல்கிறான் இந்த அசுரன். படைப்பு பேசும் அரசியலுக்காகவே படக்குழுவுக்கு வாழ்த்துகள் -கலர்ஸ் தமிழ் எக்ஸ்யூட்டிவ் புரொடியூசர் பொன் விமலா

Related Articles

குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும்... தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில்....
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சின... இயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு ...
உங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாக இரு... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் " ஒரு நாடு எப்படி இருக்குங்கறத ரோட வச்சே சொல்லிடலாம் "...

Be the first to comment on "சினிமா பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பத்திரிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்ற அசுரன்!"

Leave a comment

Your email address will not be published.


*