10 வருடங்களில் 11 தேசிய விருது வென்ற பொல்லாதவன் இயக்குனருக்கு இன்று (4-9-19) பிறந்தநாள்!

Birthday of the director Vetrimaaran

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை என்று பத்து வருடங்களில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் ஆடுகளம் (6), விசாரணை(3), காக்கா முட்டை (2) என்று பதினோரு தேசிய விருதுகள் வென்று இன்றைய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் தன் பள்ளி, கல்லூரி அனுபவங்களை இயக்குனர் பாலுமகேந்திராவுடனான அனுபவங்களை மனைவி ஆர்த்தி உடனான அனுபவங்களை ஆனந்த விகடனில் மைல்ஸ் டூ கோ என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார். அவர் எழுதிய மைல்ஸ் டூ கோ புத்தகத்தில் இருந்து முதல் மூன்று அத்தியாயங்களை இங்கு பார்ப்போம். 

 மைல்ஸ் டு கோ… – 1

அடர்ந்து இருள் படர்ந்து கிடக்குது காடு.

செல்ல வேண்டும் பல காத தூரம்.’

மைல்ஸ் டு கோ… உன் வாழ்க்கையின் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ மறக்கக் கூடாத மந்திரம் இது. ‘நீ கடக்கவேண்டியது வெகுதூரம்’னு ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன இந்த வாக்கியம் ஒருத்தரை உற்சாகப்படுத்தலாம்; ஆறுதல்படுத்தலாம்; பாராட்டலாம். உன் உச்சத்தை உடனே தொட்டுடாதே… `தொட்டுட்டோம்’னு நினைப்பு வந்துட்டாக்கூட, அதுக்கு அப்புறம் வளர்ச்சி இல்லை’னு ஒருநாள் சொன்னார் என் டைரக்டர். உண்மைதான். உச்சிக்குச் சென்றுவிட்டால், எல்லா பக்கங்களும் சரிவுதான். அதான் எப்பவும் நான் எனக்கே சொல்லிக்கொள்கிற மந்திரம்…  ‘மைல்ஸ் டு கோ’!

சைதாப்பேட்டை பக்கம் பேர்ன்பேட்டை என்ற இடத்தில், ஓர் ஒண்டிக்குடித்தன ரூமில் இருந்து பள்ளிக்குப் போய் வந்தப்பவும் நான் வெற்றி மாறன்தான். வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் ‘விசாரணை’ படத்துக்காக விருது வாங்கினப்பவும் அதே வெற்றி மாறன்தான். பேர்ன்பேட்டைக்கும் வெனிஸ் விழாவுக்கும் நடுவில் நான் கடந்த மைல்கள்தான் இதுவரையிலான என் வாழ்க்கை. அப்படி நான் நினைச்ச, நடந்த, நடந்து கடந்த, கடக்க விரும்பும் மைல்களைப் பத்தி பேசலாம். இந்த முன்-பின் காலப் பயணத்தைப் பிரிக்கிற புள்ளியா இப்போ கண் முன்னால் நிற்பது ‘விசாரணை’!

ஆரம்பம் தற்செயலா நடந்ததுதான். ஒருநாள் தனுஷிடம் ‘தியேட்டர்ல மூணே மூணு நாள் ஓடுற ஒரு படம் இருக்கு. தயாரிக்கிறீங்களா?’னு கேட்டேன். ‘உலகத்துல எந்த டைரக்டரும் ஒரு தயாரிப்பாளரிடம் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்க’னு சிரிச்ச தனுஷ், என் மீதுள்ள நம்பிக்கையில் கதையைக்கூட கேட்காமல் அங்கேயே `ஆரம்பிச்சிடலாம்’னு சொன்னார்.

அந்த அளவுக்கு ‘விசாரணை’ மேல் எனக்கு நம்பிக்கை வரக் காரணமான மனிதர் சந்திரகுமார். ‘விசாரணை’யின் மூலக்கதையான ‘லாக்கப்’ நாவலை எழுதியவர். இந்த நாவலை எங்க டைரக்டரிடம் வொர்க் பண்ணின ஞானசம்பந்தன் என்கிற தங்கவேலவன்தான் படம் பண்ணலாம்னு என்னிடம் கொண்டுவந்து தந்தார். இப்ப அவரும் படம் பண்ணப்போறார். ‘உங்கள் நாவலைப் படமாக்குறேன்’னு நான் சொன்னதும், ‘அன்னைக்கு நாங்க அழுத அழுகை, அந்த நாலு சுவர் தாண்டி வெளிய கேட்டுடாதானு ஏங்கினோம். நாளைக்கு இந்த உலகமே அதைக் கேட்கப்போகுது தோழர்’னு சந்திரகுமார் சொன்ன வலி நிறைந்த அந்த வார்த்தைகள்தான் இந்தப் படைப்பின் ஆதாரம். 

விசாரணை’ படத்தை உலகத் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கணும்னு முடிவுபண்ணினேன். அதனால்தான் தனுஷிடம் அப்படிக் கேட்டேன். திரைப்பட விழாக்கள் கலையை, திறமையை வெளிக்காட்டும் தளம் மட்டுமே கிடையாது; மாற்று சினிமாவுக்கான மாற்றுச் சந்தையையும் கண்டுபிடிக்கிற இடம். அந்த மார்க்கெட் நோக்கித்தான் ‘விசாரணை’ படத்தைக் கொண்டுபோக நினைச்சேன். அப்ப என் மனசுல வந்த முதல் விழா, கேன்ஸ் திரைப்பட விழா.

கோடம்பாக்கத்தில் இருக்கிற எல்லா சினிமாக்காரனுக்குமே ஒரு கர்வம் இருக்கும். முக்குல நின்னு கடன் சொல்லி ஒன் பை டு டீ குடிச்சாலும் ‘நாங்கள்லாம்…’ங்கிற மிதப்புல எப்பவும் இருப்போம். ஆனா, கேன்ஸ் நகர வீதிகளில் பத்து நாட்கள் நடந்தாப் போதும்…. அந்தக் கர்வத்தை எல்லாம் அடிச்சு நொறுக்கிடும். `சினிமா என்கிற கடல்ல ஒரு துளியாக்கூட இருக்க நமக்குத் தகுதி இருக்கா?’னு ஒரு நிதானம் வந்துடும். அப்படி ஓர் ஊர்; அப்படி ஒரு விழா.

சினிமாவுக்காக தமிழன் என்ன வேணும்னாலும் செய்வான்’னு சொல்வாங்க. ஆனா, அந்த ஊர் மக்கள் முன்பு நாமெல்லாம் ஒண்ணுமே இல்லை. காலையில் 9 மணி ஷோ. அந்த தியேட்டர்ல 1,500 பேர் படம் பார்க்கலாம். 7:30 மணிக்கு கிளம்பிப் போறேன். அன்னைக்கு லேசா மழை. எனக்கு முன் 2,000 பேர் குடையோடு நிக்கிறாங்க. சினிமாவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்காங்க. அந்த ஊர் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் எல்லார்கிட்டயும் ஒரு ப்ளக்கார்டு இருக்கு. அதுல `வெளிய ரொம்பக் குளிரா இருக்கு. ஒரு டிக்கெட் இருந்தா, நானும் உங்ககூட வந்து படம் பார்த்திடுவேன்’கிற வாசகங்கள். எக்ஸ்ட்ரா டிக்கெட்டைக்கூட ரசனையா கேட்கிறாங்க.

சுத்தி எங்கே பார்த்தாலும் சினிமாதான். ஒரு ஹோட்டல்… `ஹில்டன்’னு நினைக்கிறேன். காரிடார்ல உட்காந்து சாப்பிடலாம். அங்கே ஒரு சேர்ல ஒரு நடிகையோட சிலை. அவங்க கேன்ஸ் வந்தபோது கடைசியா உட்கார்ந்து சாப்பிட்ட இடமாம் அது. அப்படி சினிமாவையும் சினிமாக்காரர்களையும் கொண்டாடுற இடம் கேன்ஸ். சினிமாவில் நானும் ஓர் அங்கமா இருக்கேன்னு பெருமையா உணரவெச்ச இடம். அந்தத் திரைப்பட விழாவுக்கு நம்ம படமும் போகணும் என்பதுதான் அப்போ எங்க கனவு.

கேன்ஸ் பட விழாவுக்கு எந்த வெர்ஷனை அனுப்பலாம், எப்படி எடிட் பண்ணலாம்?’னு எடிட்டர் கிஷோரோட ஆபீஸ்ல பேசிட்டு இருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கிஷோர் மயங்கி விழுந்தார். ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டு ஓடினோம். அவரோட கடைசி மூச்சு, எண்ணம் எல்லாத்திலும் `விசாரணை’ படம்தான் இருந்தது. ஒரு வாரப் போராட்டத்துக்குப் பிறகு, இனி அவர் இல்லை என்பதை ஜீரணிக்கவே எங்களுக்கு பல நாட்கள் ஆகிடுச்சு. அதுக்குள்ள கேன்ஸ் பட விழாவும் முடிஞ்சிருச்சு.

அந்த வெர்ஷனை அனுராக் காஷ்யபுக்கு அனுப்பியிருந்தேன். அவர் படம் பார்த்துட்டு ‘இந்திய சினிமாவுக்கு ஒரு புதுத் திரைமொழி வரப்போகுது’ என்பதை இந்தப் படம் தெளிவா சொல்லுது’னு ‘விசாரணை’ படத்துக்குப் பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்தான் வெனிஸ் திரைப்பட விழாவுக்கு டி.வி.டி அனுப்பச் சொன்னார். `நானே நேர்ல போய் கொடுக்கிறேன்’னு கிளம்பிப் போயிட் டேன். `அந்தத் தேர்வாளர் தனியாத்தான் படம் பார்ப்பார்’னு சொன்னாங்க. எக்ஸாம் எழுதிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிற ஒரு சின்னப் பையன் மனநிலையில் நான் வெளியே காத்திருந்தேன். பொண்ணு பார்த்துட்டுப் போய் `லெட்டர் போடுறோம்’னு சொல்வாங்களே…  அந்த மாதிரி `மெயில் அனுப்புறேன்’னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார் அந்த மனுஷன். எனக்கு பக்குனு ஆகிடுச்சு. அதுக்குள்ள சென்னையில் இருந்து உதவியாளர்கள் `என்ன ஆச்சு… என்ன ஆச்சு?’னு கேட்டுட்டே இருந்தாங்க. நானும் ‘அவ்ளோதான்டா… அடுத்த வேலையைப் பார்க்கலாம்’னு சொன்னேன்.

 

அடுத்த நாள் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பாளர் குனித் மோங்காவிடம் பேசினப்ப, ‘படம் கொஞ்சம் லெங்த்தா இருக்கு’னு தேர்வாளர் சொன்னதா சொன்னார். உடனே 140 நிமிஷம் இருந்த படத்தை 95 நிமிஷத்துக்குக் குறைச்சு திரும்ப அனுப்பினேன். தேர்வாளரும் அவர் டீமும் படம் பார்த்துட்டு ‘இது நல்லா இருக்கு’னு சொன்னாங்க. சில நாட்கள் கழிச்சு, அவர் கால் பண்ணி `வெற்றி… உங்க படம் நல்ல படம். ஆனா, முதல் லிஸ்ட்ல உங்க படம் வரலை. பார்த்துட்டுச் சொல்றோம்’னு சொன்னார். ‘விசாரணை’ படம் எடுத்ததுக்கான நோக்கமே போயிடும் போலிருக்கே’னு நான் பதறிப்போய் அனுராக்கிட்ட சொன்னேன்.  `கவலைப்படாதீங்க வெற்றி. உங்க படம் நிச்சயம் வரும்’னார்.

பிறகு எல்லாத்தையும் மறந்துட்டு மனைவிகூட ஒருநாள் வெளியே போயிருந்தேன். ரொம்ப நாட்கள் கழிச்சு அவங்ககூட டின்னர். அப்ப ஒரு மெயில். `விசாரணை’ வெனிஸ் விழாவுக்கு செலெக்ட் ஆகிருக்கிறதா தகவல் அனுப்பியிருந்தாங்க. `வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வான முதல் தமிழ் சினிமா இதுதாம்மா!’னு மனைவிகிட்ட என் சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிறேன். அந்த விழாவுக்கு சந்திரகுமாரையும் கூட்டிட்டுப்போயிருந்தேன். மனசுக்குள் ஓர் ஆத்ம திருப்தி.

வெனிஸ்லயே படம் பார்த்த இயக்குநர் ஏ.எல்.விஜய் சென்னைக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வெச்சு, `விசாரணை’ படம் தனக்குள் ஏற்படுத்தின பாதிப்பைச் சொன்னார். அடுத்து, நான் மணிரத்னம் சாருக்கு படத்தைக் காட்டணும்னு ஆசைப்பட்டேன். அவர் படம் பார்த்துட்டு, ‘கமர்ஷியல் படம் பார்த்துடுவேன். ஆர்ட் படங்கள் கொஞ்சம் மெதுவா இருக்கும். அதனால, யோசிப்பேன். `விசாரணை’ அந்தக் குறைகூட இல்லாத கம்ப்ளீட் சினிமா’னு பாராட்டினார். ரஜினி சார் பார்த்துட்டு, ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும் வெற்றி சொல்லுங்க?’னு அவ்ளோ சந்தோஷப்பட்டார். படம் வந்த பிறகு, பத்திரிகைகள் பாராட்டுறதைவிட, ரிலீஸுக்கு முன்னரே விமர்சனம் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அது ஒரு குருட்டுத் தைரியம்தான். ஒருவேளை அவங்களுக்குப் பிடிக்காமப்போனா, பாதிப்பாகிடும். தைரியமா பிரஸ் ஷோ போட்டேன். அவங்களும் படத்தை மிகச் சரியா கொண்டுபோய் மக்களிடம் சேர்த்தாங்க.

‘பொல்லாதவன்’ கமர்ஷியல் கதை. ஓடிடும்னு தெரியும். அதே டீம் சேர்ந்து `ஆடுகளம்’ பண்ணும்போது பெரிய எதிர்பார்ப்பு, பெரிய ஓப்பனிங் இருக்கும்னு தெரியும். `விசாரணை’ படத்துக்குத்தான் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனா, மக்கள் கொடுத்த அங்கீகாரம் ரொம்பப் பெருசு. முதல் காட்சியில் ஆரம்பிச்ச கைதட்டல்கள் தொடர்ந்து கேட்டுட்டே இருக்கு. இந்தியாவில் கலாபூர்வமான, உயர்ந்த ரசனை கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள்தான்னு நினைக்கிறேன்.

இப்பதான் சினிமாவில் நான் என் முதல் அடியையே எடுத்துவெச்சிருக்கேன். இன்னும் போகவேண்டியது வெகு தூரம்னாலும் நான் இங்கு வந்து சேர்ந்த பாதையும் நீளமானது. இந்தச் சமயத்துல அந்த நீளமான பாதையும், ‘இவ்வளவு பேர் பாராட்டும்போது இதைக் கேட்டு மகிழ சார் இல்லையே’ங்கிற எண்ணமும் ஒரு புள்ளியில் குவியும்போது அந்த நாள் நினைவுக்கு வருது.

டிசம்பர் 26, 1997… சாலிகிராமம் ஸ்டேட் பேங்க் காலனி, மூணாவது தெரு. வீட்டின் முதல் மாடி. பெரிய பூட்ஸ், இன் பண்ணின சட்டை, நிறைய வளர்ந்த சுருள்சுருளான முடி. லயோலா மாணவன் என்ற பெருமிதம், நிறைய சினிமா பார்த்ததால் வந்த ‘எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன், ‘எக்ஸ்க்யூஸ் மீ’னு சத்தமாக் கூப்பிடுறேன். ஓய்வா எதையோ வாசிச்சிட்டு இருந்தவர் தலையைத் தூக்கி, ‘என்ன வேணும் உனக்கு?’ங்கிற மாதிரி பார்த்தார்.

‘ஹலோ மிஸ்டர் பாலுமகேந்திரா. மை நேம் இஸ் வெற்றி மாறன். ஃபாதர் ராஜநாயகம் ஆஸ்க்டு டு மீட் யூ.’

‘வெளியில போ… நாளைக்கு வா பார்க்கலாம்.’

அன்னைக்கு அதட்டி மிரட்டி ஓடவைத் தவர்தான், பின்னாட்களில் என் கர்வத்தை நீக்குவார்; சினிமா போதிப்பார்; அப்பாவைப் போல் அரவணைப்பார்; முரண்படுவார்; என்னைக் கண்டு மிரள்வார்னு அப்போ எனக்குத் தெரியாது!

– பயணிப்பேன்…

மைல்ஸ் டு கோ… 2

பாலுமகேந்திராவிடம் நான் உதவி இயக்குநராகச் சேர ஆசைப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. அவர்லயோலா கல்லூரியில் சினிமா பற்றி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு வொர்க்‌ஷாப் நடத்துவார். அங்கு மட்டும் அல்ல… சினிமா வொர்க்‌ஷாப் எங்கு நடத்தினாலும் ஒரு கதையுடன்தான் தொடங்குவார். அது நம் ஊர் உலகத்துக்கே தெரிந்த பாட்டி வடை சுட்ட கதை. 

‘` `ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க’ என்றதும் கதைக் கேட்கும் அந்தக் குழந்தை உடனடியாக ‘ம்’ சொல்லும். அந்த ஒரு வரியை குழந்தை முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டது என்பதற்கான அடையாளம் அந்த ‘ம்’. இப்படி இலக்கியத்திலும் கதை சொல்லலிலும் வாசகன் என்பவன் ஒரு சகப் படைப்பாளி. காரணம், ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்க…’ என்ற கதையைக் கேட்கும் குழந்தை, அந்த இடத்தில் தன் பாட்டியையும் தன் ஊரையும் ஃபில் இன் தி பிளாங்க்ஸ்போல் நிரப்பிக்கொள்ளும். இப்படி வாசிப்பவன் அவனாக சில விஷயங்களை உருவாக்கிக்கொள்வான். 

ஆனால் சினிமா ஊடகத்தில் அதற்கு அனுமதி இல்லை. ஒரு ஊர்ல ஒரு பாட்டி… ஓகே. அந்த ஊர் எது… கிராமமா, நகரமா, மாநகரமா? கிராமம் என்றால்… அது கடற்கரைக் கிராமமா, மலை அடிவாரமா, சமவெளிப் பகுதியா? வடை சுட்ட பாட்டிக்கு என்ன வயது? தாத்தா, உயிரோடு இருக்கிறாரா… இல்லையா? அவர் வசதியான பாட்டியா, ஏழைப் பாட்டியா?… இப்படிப் பல விஷயங்களை இயக்குநர் முதலில் தீர்மானிக்க வேண்டும்.”

இப்படி இலக்கியத்தையும் சினிமாவையும் வித்தியாசப்படுத்த இந்தப் பாட்டி கதையுடன் தொடங்கும் அந்த வொர்க்‌ஷாப் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதுதான், ‘சினிமா கத்துக்கணும்னா, அதை இவர்கிட்டதான் கத்துக்கணும்’ என அவரது அலுவலகம் நோக்கி என்னை அழைத்துச் சென்றது.

அப்போது `தமிழ் தெரிந்த ஓர் ஆள் தேவை’ என ஃபாதர் ராஜநாயகத்திடம் பாலுமகேந்திரா சார் சொல்லியிருந்தார். அந்த நம்பிக்கையில்தான் அன்று அவர் முன்பு நின்றிருந்தேன்.

`‘ஹலோ மிஸ்டர் பாலுமகேந்திரா. மை நேம் இஸ் வெற்றி மாறன். ஃபாதர் ராஜநாயகம் ஆஸ்க்டு டு மீட் யூ.’’ 

‘`வெளியில போ… நாளைக்கு வா பார்க்கலாம்.’’ 

மறுநாள்… 

“நான் லயோலா ஸ்டூடன்ட். ஃபாதர் ராஜநாயகம் என்னை அனுப்பினார். உங்க வொர்க்‌ஷாப் அட்டெண்ட் பண்ணேன். இப்போ உங்ககிட்ட உதவியாளரா சேர ஆசை” என்றேன்.

என்னை தீர்க்கமாகப் பார்த்தார். “ஃபாதர் அனுப்பினாரா?’’

“ஆமா சார். தமிழ் தெரிஞ்சவன் வேணும்னு நீங்க அவர்கிட்ட சொல்லியிருந்தீங்களாம்!’’

“தமிழ் இலக்கியம் தெரிஞ்சவன்ல சொல்லியிருந்தேன்.’’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. நான் அப்போது எம்.ஏ ஆங்கில இலக்கிய மாணவன். தமிழில் ஜெயகாந்தன், பாலகுமாரனைத் தவிர வேறு எதையும் படித்திராதவன். காதல் கடிதங்கள்கூட ஆங்கிலத்தில்தான். 

“சரி… இங்கிலீஷ்ல உனக்குப் பிடிச்சப் புத்தகங்களைச் சொல்லு.’’

‘‘ `To Kill a Mockingbird’, ‘Roots’, ‘One Flew Over the Cuckoo’s nest.’ ’’

மூன்று புத்தகங்களைச் சொன்னபோது அவரிடம் எந்தச் சலனமும் இல்லை; எந்த மாற்றமும் இல்லை. நின்றிருந்த என்னைப் பார்த்து “உட்காரு’’ என்றார்.

‘புத்தக வாசிப்பு, ஒருவனுக்கு என்ன கொடுத்துவிடும்?’ என சிலர் கேட்பது உண்டு. பாலுமகேந்திரா போன்ற ஒரு பெருங்கலைஞனின் எதிரே அமர்வதற்கான இருக்கையை அதுதான் எனக்கு வாங்கித் தந்தது. சந்தோஷத்துடன் அவர் முன்பு அமர்ந்தேன். ஹாலிவுட்டின் `ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ தொடங்கி அவர் இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ வரை எனக்குப் பிடித்த படங்கள் பற்றி ஒவ்வொன்றாகச் சொன்னேன்.

நான் சொன்ன புத்தகங்களும் படங்களும் அவருடைய விருப்பப் பட்டியலிலும் இருந்தன என்பதை  பின்நாளில் அறிந்தேன். அதனால்தான் என்னவோ, ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ ஒரு ரசனை இருக்கு’ என நினைத்து, என்னை நெருங்க அனுமதித்திருக்கிறார். ஒருவரை, தன் உலகுக்குள் அவர் அனுமதிப்பது அத்தனை சாதாரணம் அல்ல. தன் அலுவலகம், உதவி இயக்குநர்கள் என்ற மிகச் சிறிய வட்டம்தான் அவர் உலகம்.

`எனக்குப் பெருசா உலகத்தைப் பத்தி தெரியாதுப்பா. நீங்கதான் சொல்லணும்’ – இது அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

`தமிழ் இலக்கியம் தெரிந்தவர்தான் வேண்டும்’ என அவர் உறுதியாக இருக்க, `‘நான் வாசிக்கிறேன் சார்…’’ என்றேன்.

தி.ஜானகிராமன், கல்கி, நா.பார்த்தசாரதி, அசோகமித்திரன், பிரபஞ்சன்… என பெரிய பட்டியல் தந்து, இவர்களின் நூல்களை வாசிக்கச் சொன்னார். உரையாடல் ஒரு மணி நேரம் தாண்டியிருக்கும்.

`‘ஒரு வாரம் கழிச்சு, போன் பண்ணிட்டு வா’’ என்றார்.

அன்றே கல்லூரி நூலகம் சென்று ‘அம்மா வந்தாள்’, ‘இருவர்’, ‘மரப்பசு’ என பல நாவல்களை மாரத்தான்போல வாசித்தேன்.

அப்போது, என் அப்பா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். அவர் ஒரு வெட்னரி சயின்டிஸ்ட்; படங்கள் பார்க்கும் பழக்கம் இல்லாதவர். படிப்பில் நான் வீக் என்பதில், அவருக்கு எப்போதும் வருத்தம். `சினிமா பார்க்கப்போறேன்’ என மகன் சொன்னாலே, தந்தைகள் வருந்தும் காலம் அது. நான், `சினிமா வேலைக்குப் போறேன்’ என்றதும் யோசித்தார்.

“யார்கிட்ட சேரப்போறே?’’ என்றவருக்கு, பாலுமகேந்திரா தெரிந்திருக்கவில்லை. `‘யாரு  அவன்?’’ என்றார். மகன்களுக்குத் தக்க சமயத்தில் உதவத்தானே அம்மாக்கள் இருக்கிறார்கள். “ `மூன்றாம் பிறை’ எடுத்தவர்’’ என அவருக்குத் தெரிந்த, பிடித்த படத்தைச் சொல்லி அறிமுகம் செய்துவைத்தார் அம்மா.

`‘ஓ… அவனா… அவன் நல்ல டைரக்டர்தான்’’ -உடனே ஓ.கே சொன்ன அப்பா, அப்போது சொன்ன வார்த்தைகள் எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது…

`‘தம்பி… சினிமாங்கிறது ஒரு சயின்ஸ். அதை சயின்ட்டிஃபிக்கா அப்ரோச் பண்ணு. அதை அகடமிக்கா படி. அந்தத் தொழில்நுட்பத்தைக் கத்துக்கொடுக்கும் காலேஜ்ல சேரு’’ என்றார்.

எனக்கும் அது சரி எனப் பட்டது. 

என் நண்பன் சக்தியிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘நான் முதல்ல ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்றேன், எப்படி இருக்குனு பார்த்துட்டு வந்து சொல்றேன். அப்புறம் நீ வந்து சேர்ந்துக்கோ’ என்றான். பள்ளி நாட்கள் முதலே அவன் என் `தியேட்டர் மேட்’.

அவனுக்கு அப்ளிகேஷன் வாங்க நாங்கள் இருவரும் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் சென்றோம். ஏற்கெனவே எங்கள் குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டிய மதன் கேப்ரியல் சார், அங்கு இருந்தார். விஷயத்தைச் சொன்னதுமே விசாரணையைத் தொடங்கிவிட்டார்.

`‘வீட்டுல நல்ல வசதியாப்பா?’’

‘`ஓரளவுக்கு சார்.’’

`‘உன் வருமானத்தை நம்பி அவங்க இல்லைல?’’

‘`இல்ல சார்…’’

‘`அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு உனக்கு சாப்பாடு போடுவாங்களா?’’

`‘போடுவாங்க சார்.’’

அவர் கேள்விகள் எங்களைப் பயம்கொள்ளவைத்தன. பிறகு, அவரே அந்தக் கேள்விகளுக்கான காரணத்தையும் விளக்கினார்.

`‘இங்க மூணு வருஷம் படிக்கணும். அப்புறம் சில வருஷங்கள் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைசெய்யணும். அதுவரை உன் குடும்பம் உனக்குத் துணையா இருக்கணும். அப்படி இல்லைன்னா… 

கொஞ்சம் யோசிங்க.’’

‘`மச்சான்… இங்க மூணு வருஷம் படிச்சாலும் திரும்ப வேற ஒரு இயக்குநர்கிட்ட போய் அசிஸ்டென்ட்டா வேலைசெய்யணும். இதுக்குப் பதிலா ஒருத்தர்கிட்ட இப்பவே வேலைக்குச் சேர்ந்து, மொத்தமா அவர்கிட்டயே கத்துக்கலாமே’’ என்றான் சக்தி.

எனக்கும் `அதுதான் சரியாக இருக்கும்’ எனத் தோன்றியது.

ஒரு வாரம் கடந்திருந்தது. பாலுமகேந்திராவுக்கு போன் செய்தேன். 

`‘வெற்றியா… எந்த வெற்றி?’’ என்றார். எனக்கு பகீரென இருந்தது. 

‘`ஃபாதர் ராஜநாயகம் சொல்லி நான் வந்து பார்த்து…” என நான் நினைவுபடுத்த, ‘`ஓ… அந்தப் பையனா, நாளைக்கு வா” என்றார்.

மறுநாள் ஓடிப்போய் நின்றேன். வாசித்த நாவல்களைச் சொன்னதும் அவருக்குச் சந்தேகம். ஒவ்வொரு நாவலின் கதையையும் நடுநடுவே கேட்டார். `‘சினாப்ஸிஸ் எழுதத் தெரியுமா?’’ என்றார். இலக்கியம் படிக்கும் மாணவனுக்கு வேலையே அதுதானே… தலையை ஆட்டினேன். பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து `பாதுகாப்பு’ என்ற ஒரு சிறுகதைக்கு சினாப்ஸிஸ் எழுதச் சொன்னார். அரை மணி நேரத்தில் அரைப் பக்கம் எழுதி நீட்டினேன். அதை வாங்கி தனக்குப் பின்னால் போட்டவர், 686 பக்கங்கள்கொண்ட ‘மோகமுள்’ நாவலைக் கொடுத்தார். ‘`இதுக்கு சேப்டர்வாரியா சினாப்ஸிஸ் எழுது. வெள்ளிக்கிழமை போன் பண்ணிட்டு எடுத்துட்டு வா பார்க்கலாம்’’ என்றார்.

இரண்டு நாட்களில் 686 பக்கங்கள். அதற்கு சினாப்ஸிஸ். கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடும். விடாமல் வாசித்து எழுதினேன். இந்த முறை சேர்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் சென்றேன். தன் இடது கையில் சினாப்சிஸையும் வலது கையில் நாவலையும் வாங்கியவர், அவற்றை அப்படியே தனக்குப் பின்னால் தூக்கிப்போட்டு, அடுத்த புத்தகத்தை எடுத்துக்கொடுத்தார். அவர் தூக்கி எறிந்த பகுதியில் சினாப்ஸிஸ் மலையே இருந்தது. எல்லோருக்கும் இதுதான் டெஸ்ட் என்பது அப்போதுதான் தெரிந்தது.

அப்போது சாருடன் ஒருவர் இருந்தார். அவ்வளவு நெருக்கத்தில், எல்லா உதவிகளையும் செய்துகொண்டிருந்ததால், அவர்தான் அப்போதைய அசிஸ்டென்ட் எனத் தெரிந்தது. அவர் வெளியே வருவார் எனக் காத்திருந்தேன். வெளியே வந்தார். அவருடன் டீ குடிக்கச் சென்றேன். தன்னை முத்துக்குமார் என அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆமாம், அவர்தான் இன்றைய பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

சினாப்ஸிஸ் எழுதுவது தொடர்ந்தது. வாரம், ஒரு நாள் போவேன். ஒரு புத்தகம் தருவார், சினாப்ஸிஸ் எழுதுவேன். இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு நாள் காலை 11 மணிக்கு அழைத்தேன்.

`‘குட்மார்னிங்’’ என்றதும், `‘என்னய்யா 11 மணிக்கு குட்மார்னிங். தினமும் போன் பண்ணி கேட்டுட்டுத்தான் வரணுமா? 

9 மணியானா ஆபீஸுக்கு வரணும்னு அறிவு வேணாமா?’’ என்றார்.

நான் அவரிடம் ஏற்கெனவே உதவியாளனாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதே எனக்கு அப்போதுதான் உறைத்தது!

– பயணிப்பேன்…

மைல்ஸ் டு கோ… 3

‘ஏம்பா… ஒரு காமன்சென்ஸ் வேணாமா… ஒவ்வொரு நாளும் போன் பண்ணிட்டுத் தான் வரணுமா? காலையில 9 மணியானா ஆபீஸுக்கு வர வேணாமா?’ – பாலு மகேந்திரா சார் கேட்டபோதுதான், அவர் என்னை ஏற்கெனவே உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்த்துக்கொண்டார் என்பது தெரிந்தது. மூன்று மாதங்கள் கல்லூரியும் அவரின் அலுவலகமுமாகக் கழிந்தன.

சாரிடம் நான் வேலைக்குச் சேர்ந்தது, என் அன்றாட வாழ்க்கையையே மாற்றியிருந்தது; என் முக்கியத்துவங்கள் மாறியிருந்தன. எப்போது வேண்டுமானாலும் அவர் என்னை அழைக்கலாம். உடனே சென்றாக வேண்டும். மறுநாள் கல்லூரிக்குச் செல்வதுகூட நிச்சயமற்றதாக இருந்த காலம் அது. ‘என்ன மச்சான் நாளைக்கு கிளாஸுக்கு வருவியா?’ – நண்பர்கள் கேட்டால், ‘சார் போன் பண்ணச் சொல்லியிருக்கார். அவர் கூப்பிட்டார்னா, அங்கே போயிடுவேன், இல்லைனா காலேஜ் வருவேன்’  – இப்படித்தான் இருந்தன அந்த நாட்கள்.

பி.ஏ நாட்களிலேயே என் சினிமா ஆர்வத்தை பேராசிரியர்கள் அறிவார்கள். எம்.ஏ நுழைவுத்தேர்வில் நான் அதிகபட்ச மதிப்பெண். என் ஹெச்.ஓ.டியான வீ.ஜே.மேத்யூ அட்மிஷன் சமயத்தில், ‘நீ எதுக்கு எம்.ஏ படிக்க வர்ற?’ என்றார்.

சின்னப் பதற்றத்துடன், ‘ஏன் சார், நான் வரக் கூடாதா?’ என்றேன்.

‘இல்லப்பா, நீ சினிமாவுல ஆர்வமா இருக்க. சினிமாவுக்குப் போயிடுவ. அப்புறம் எதுக்கு உனக்கு இலக்கியம்?’- அன்று அவர் இப்படிக் கேட்டதற்கு நான் சொன்ன பதிலை இன்று நினைத்தாலும் என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.

‘அப்படிச் சொல்லாதீங்க சார். சினிமாவும் இலக்கியமும் எனக்கு ரெண்டு தண்டவாளங்கள் மாதிரி. ரெண்டும் இல்லைனா, ரயில் பயணிக்காது’ சீரியஸாகச் சொன்னேன்.

‘உன்னால, இலக்கிய ஆர்வம் இருக்கிற வேறு ஒரு மாணவனுக்கு ஸீட் கிடைக்காமப் போகுதுப்பா. அவன் சேர்ந்தாலாவது படிச்சு உருப்படியா ஏதாவது செய்வான்’ – அட்மிஷன் ஷீட்டில் வேண்டாவெறுப்பாகக் கையெழுத்திட்டார்.

எவ்வளவோ பேராசிரியர்கள் இருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமானவர்கள் சிலர் இருப்பார்கள். அப்படியான ஒரு பேராசிரியர் ஜோசப் சந்திரா. அவ்வளவு எனர்ஜெட்டிக்காக வகுப்பு நடத்துவார். `என்ன ஆனாலும் சரி… டிகிரி முடிக்காமப் போயிடாத!’ -எம்.ஏ ஸீட் கிடைத்ததும் அவர் அழைத்துப் பேசினார். நான் எப்படியும் சினிமாவுக்குச் சென்றுவிடுவேன் என்பதுதான் அவருடைய முடிவும்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஏ மூன்றாவது செமஸ்டரில் சாரிடம் சேர்ந்து கல்லூரிக்கும் அவரின் அலுவலகத்துக்கும் போய்வந்துகொண்டிருந்த சமயம். நண்பர்களுக்கு நடுவே இடைவெளி விழத் தொடங்கி யிருந்தது. அந்த மாற்றங்கள் எதுவும் என்னைப் பாதிக்க வில்லை. நான் முன்பைவிட மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் என் வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன்.

அப்போது ரஜினி ஹேமா என்கிற தோழி இருந்தாள். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். அவளின் கைனடிக் ஹோண்டாவை எடுத்துக்கொண்டுதான் சாரின் அலுவலகம் செல்வேன். திரும்புவதற்குள் கல்லூரி முடிந்திருந்தாலும் எனக்காகக் காத்திருப்பாள். பிறகு, அங்கிருந்து அவள் தங்கியிருந்த எக்மோர்  ஒய்.டபிள்யூ.சி.ஏ ஹாஸ்டலுக்குச் சென்று அவளை டிராப் செய்ய வேண்டும்.

அவளுடன் செலவிடும் நேரமும் குறைந்தது. கல்லூரியில் அட்டெண்டன்ஸ் குறைந்தது. எப்போதுமே ஃபைன் கட்டி தேர்வு எழுதும் அளவுக்குத்தான் என் வருகைப்பதிவு இருக்கும். ஆனால் அந்த ஆண்டு, அதற்கும் வழி இல்லை. ‘சினிமாவா… எம்.ஏ-வா?’ முடிவெடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை. ஒரு நொடிகூட தடுமாற்றம் இல்லை; யோசிக்கவும் இல்லை. ‘சினிமாதான். அதுவும் சாரிடம்தான்’ என்பதில் தெளிவாக இருந்தேன். எம்.ஏ பாதியில் நின்றது.

அதன் பின்னர் தினமும் சாரின் அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன். அந்த நாட்களில்தான் நா.முத்துக் குமாருடன் நட்பானேன்.

‘வாங்க, நம்ம சினிமா நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ அன்று முத்துக்குமார் அழைத்துச்சென்ற இடம், வடபழநி குமரன் காலனியில் ஒரு வீடு. ‘இவர் சீனிவாசன். சாரிடம் சேர முயற்சி பண்ணிட்டிருக்கார்’ – அன்று அறிமுகமாகிய சீனிவாசன்தான் இன்றைய சீனுராமசாமி. `சார் அழைப்பார்’ என்பதற்காகவே  ராஜ் டி.வி வேலையை விட்டு விட்டுக் காத்திருந்தார். ‘என்னது… சார் உங்களைச் சேத்துக்கிட்டாரா… நான் அவருக்காக எட்டு மாசமாக் காத்திருக் கேனே!’ – அதிர்ச்சியானார். அதே அறையில் இருந்த வேறு ஒருவர் `ஐகோ’ என்கிற ஐந்துகோவிலான். பாரதிராஜாவின் துணை இயக்குநர். சீமானின் படங் களுக்கு வசனம் எழுதிக்கொண்டி ருந்தார். அவரும் அப்போது தனியாகப் படம்பண்ணும் முயற்சியில் இருந்தார்.

பாலு மகேந்திரா சாரின் அலுவலகத்தில் ஒரு ஹால், இரண்டு ரூம்கள், ஒரு கிச்சன் உண்டு. ஓர் அறையில் பழைய துணிகள், படப் பிடிப்பு சாமான்கள் நிறைந்து கிடக்கும். இன்னோர் அறைதான் அவருக்கானது. அந்தப் பத்துக்குப் பத்து அறையின் தரை முழுவதும் பெட். முக்கால் பாகம் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கும்.  ஏ.சி குளிர் ஜில்லென இருக்கும். அவர் அமர கொஞ்சம் இடம் மட்டுமே ஓரமாக இருக்கும். அந்த அறைக்குள் நுழைவது அவர் உலகுக்குள் நுழைவது போன்றது. நாங்கள் ஹாலில் காத்திருப்போம். யாராவது சீனியர் அசிஸ்டென்ட் வந்தால், அவரை மட்டும் அந்த அறைக்குள் அழைத்துச் சென்று டிஸ்கஷன் தொடங்குவார். நாங்கள் ஏக்கத்துடன் அந்த அறைக் கதவையே பார்த்துக்கொண்டிருப்போம். அந்த வீடுதான் அவர் என்றால், அந்த அறைதான் அவரின் இதயம்.

அவரின் அறைக்குள் நுழைவது எப்படி சாதாரண விஷயம் இல்லையோ, அதேபோல அவரை தொப்பி இல்லாமல் பார்ப்பதும் முடியாத காரியம். தன் தொப்பி அடையாளத்தில் கவனமாக இருப்பார். அதுவும் கண்ணை மறைக்கும் வகையில் தொப்பியைப் போட்டிருப்பார்.

ஒருநாள் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு மரக்கிளை அவரின் நெற்றிப்பொட்டில் தட்ட, கால் தடுக்கிக் கீழே விழுந்தார். நாம் கால் தடுக்கிக் கீழே விழுந்தால் காயம் இல்லாமல் தப்பிக்க, கைகளை தரையில் ஊன்றுவோம். ஆனால் அவரின் ஒரு கை, தொப்பி கீழே விழாமல் அனிச்சையாகப் பிடித்துக்கொண்டது. தொப்பி, அவருக்கு உடம்பில் ஓர் உறுப்புபோல. 

இப்படி சார் உடனான ஒவ்வொரு நாளும் அன்பும் அதிர்ச்சியுமாகவே நகரும். பல சமயங்களில் ‘என்ன சொல்வாரோ?’ என்ற பயத்திலேயே சொதப்புவோம்.

‘குட்மார்னிங் சார்’ எனச் சொன்னதில் தொடங்கி ‘தேங்க்ஸ் சார்’ சொல்லி வீட்டுக்குப் போகும் வரை, தண்ணீரில் மூழ்கிய பந்து போலத்தான் எங்கள் தவிப்பும் இருக்கும். சமயங்களில் சும்மாவே திட்டு விழும். ‘என்னப்பா இப்படி உட்கார்ந்திருக்க?’ என்பார். எழுந்து நின்றால், ‘என்னய்யா இப்படி நிக்கிற… உக்காருய்யா’ என்பார். உட்கார்ந்தால், ‘ஏம்ப்பா கையைக் கட்டிட்டு இருக்க… நான் உன்னை என்னப்பா பண்ணினேன்?’ என்பார். ‘அதை ஏன் எடுக்குற?’ திடீரெனக் குரலை உயர்த்துவார். ‘வெட்டி, நான் சொல்றது உனக்குப் புரியலையாடா?’ என அலுத்துக்கொள்வார். அவருக்கு ‘வெற்றி’ வராது, எப்போதும் நான் அவருக்கு ‘வெட்டி’தான்.

எட்டு வருடங்கள். அவரின் நிறைகுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அவருடன் இருக்க முடியும். காரணம், அவரின் உலகம் மிகச் சிறியது. அவரும் அடிக்கடி, ‘நான், என் வீடு, என் அசிஸ்டென்ட்ஸ், எனக்கு இந்த நாலு தெருதானேடா வாழ்க்கை’ என்பார்.  உண்மைதான், அவருக்கு உதவி இயக்குநர்கள்தான் எல்லாமும். இயக்குநர் என்றால், உதவி இயக்குநர்களுடன்தான் குப்பை கொட்டியாக வேண்டும். சினிமா இயக்குநர்களின் வரம், சாபம் இரண்டுமே இதுதான்.

எட்டாக் கனியாக எங்களை ஏங்கவைத்த அவரின் அறைக்குள் முதல்முதலாக நுழைந்த அந்தத் தருணம் மறக்க முடியாதது. அப்போது நானும் முத்துக்குமாரும் மட்டுமே இருந்தோம். பகல் 11 மணி இருக்கும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ‘வாங்கப்பா… ரூம்ல போய்ப் பேசுவோம்’ என்றார் சார்.

எங்களால் அதை நம்பவே முடியவில்லை. அதை அடுத்தகட்ட புரமோஷனாகவே நினைத்தோம். அந்த அறை நுழைவுக்கான அன்பு அழைப்பு, ‘நீங்கள் என் உதவி இயக்குநர்’ என அவர் எங்களை அங்கீகரித்ததின் அடையாள மாகவேபட்டது. அதை நானும் முத்துக்குமாரும் அடுத்தகட்ட நகர்வாகக் கருதி, பெரிய சாதனை புரிந்துவிட்ட உணர்வுடன் அவரைப் பின்தொடர்ந்தோம்.

ஒவ்வோர் அறைக்கும், ஒரு வடிவம் உண்டு; ஒரு வாசம் உண்டு. அந்தந்த அறைகளில் நின்று பேசும்போது வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. மற்ற இடங்களைவிட, கிச்சனில் நின்று அம்மாவிடம் பேசுவது இன்னும் நெருக்கமானது. நம் இருக்கைக்கே வந்து பேசும் மேனேஜரை நமக்குப் பிடிக்கும். அதே மேனேஜர் அவர் அறைக்கு நம்மை வரச் சொன்னால், இனம் புரியாத ஓர் உணர்வுடன் செல்வோம்.

அப்படி முதல்முறையாக சாரின் அறைக்குள் நுழைந்தோம். எங்களிடம் பாலு மகேந்திரா என்கிற அதிசயத்தின் படைப்பாற்றலுக்குள் நுழைந்து, அவரையும் அவரின் சினிமாவையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம். புது வேலை தொடர்பாகப் பேசினார்.

“ரெண்டு விஷயம் இருக்குப்பா. டி.வி-க்கு ஒரு புராஜெக்ட் பண்ணணும். `அழியாத கோலங்கள்’ படத்தோட எக்ஸ்டென்ஷன் மாதிரியான ஒரு வொர்க் பண்ணலாம்னு இருக்கேன். இல்லைன்னா, ஒரு ட்ரெயின் ஸ்கிரிப்ட் இருக்கு. அதையும் பண்ணலாம்னு இருக்கேன். முதல்ல இந்த ‘அழியாத கோலங்கள்’ எக்ஸ்டென்ஷனுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க!”

அதுதான் உதவி இயக்குநராக எனக்கு அவர் தந்த முதல் அசைன்மென்ட்.

– பயணிப்பேன்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றிமாறன்! (4-9-19)

Related Articles

அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்ப... பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப...
ஒரு படம் எப்படி இருக்கனும் எப்படி இருக்க... வேற்று மொழி படங்களை ரீமேக் செய்யும்போது தமிழுக்கு (ரீமேக் செய்யப்படும் மொழி பேசும் மக்கள் ரசனைக்கு) தகுந்தாற்போல சில மாறுதல்கள் செய்ய வேண்டும். ...
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பார்வையில் ... 1.நான்காம் சுவர் (பாக்கியம் சங்கர்)பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானத...
தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தா... தமிழகத்தில் மாதாமாதம் ஒரு எலக்சன் நடந்தால் எப்படி இருக்கும்...! ஒரு சின்ன கற்பனை. அதெப்படி மாதம் ஒரு எலக்சன் நடத்த முடியும், அப்படியே எலக்சன் நடத்தினா...

Be the first to comment on "10 வருடங்களில் 11 தேசிய விருது வென்ற பொல்லாதவன் இயக்குனருக்கு இன்று (4-9-19) பிறந்தநாள்!"

Leave a comment

Your email address will not be published.


*