ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

Central Government, IIT Entrance Exams, Dr.Ramadas

ஐ.ஐ.டி. என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலத்துடன் குஜராத்தி மாநில மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எதிரான இந்த சமூக அநீதியை நியாயப்படுத்த தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனாலும், அதை ஏற்றுக் கொள்ளாத மத்திய அரசு, 2013-ஆம் ஆண்டு முதல் குஜராத்தி மாநில மொழியில் மட்டும் நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுப்பிய வினாவுக்கு, இத்தேர்வுகளை இப்போது நடத்தும் தேசியத் தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்த முன்வரும் மாநிலங்களின் மொழிகளில் மட்டும் கூடுதலாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று 2013&ஆம் ஆண்டில் இந்தத் தேர்வுகளை நடத்திய சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

அதை அந்த ஆண்டிலேயே குஜராத் அரசு ஏற்றுக் கொண்டதால் அந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் மராட்டிய அரசும் பொது நுழைவுத்தேர்வை ஏற்றதால் அம்மாநில மொழிகளான மராத்தி, உருது ஆகிய மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 2016-ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் பொதுத்தேர்விலிருந்து விலகி விட்டன. அதையடுத்து அந்த ஆண்டிலேயே மராத்தி, உருது ஆகிய மொழிகளில் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு நடத்துவதை சி.பி.எஸ்.இ நிறுத்தி விட்டது. ஆனால், குஜராத் பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலகிவிட்ட போதிலும், அம்மாநில மொழியில் மட்டும் தொடர்ந்து நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தங்கள் மாநில மொழியில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தொடரும்படி குஜராத் கோரியதே இதற்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய வினாவுக்கு இந்தத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை பதிலளித்துள்ளது.

தேசியத் தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் மிகவும் அபத்தமானது ஆகும். ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு தங்கள் மாநில மொழியிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்து மாநிலங்களின் கோரிக்கை ஆகும். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்; எந்தெந்த மாநில அரசுகள் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கின்றனவோ, அந்த மாநில மொழிகளில் மட்டும் தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்தது. இது கிராமப்புற மாணவர்களின் நலனை பாதிக்கும் என்பதால் தான் இந்த நிபந்தனையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும்,  18.12.2012 அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த நிபந்தனையைக் கண்டித்த நான், எந்த நிபந்தனையும் இன்றி தமிழ் மொழியிலும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

அதன்பின்னர் 2016-ஆம் ஆண்டில் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலகி விட்ட நிலையில் மராட்டியம், உருது ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வுகளை நிறுத்திய சி.பி.எஸ்.இ, குஜராத்தி மொழியில் மட்டும் தொடர்ந்து ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளை நடத்தியது தவறு. மாநில மொழிகளில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென்றால், அந்தத் தேர்வுகளை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கான பொது நுழைவுத்தேர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை  விதித்து விட்டு, குஜராத் மாநிலத்திற்கு மட்டும் நிபந்தனையை தளர்த்தியது எந்த வகையில் நியாயம்?

அதுமட்டுமின்றி, குஜராத் மாநிலம் கேட்டுக் கொண்டதால் அந்த மாநில மொழியில் மட்டும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு நடத்துகிறோம்; மற்ற மாநிலங்கள் கேட்காததால் அந்த மாநிலங்களின் மொழிகளில்  ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை என்று தேசியத் தேர்வு முகமை கூறுவது பெரும் மோசடி ஆகும். 2016-ஆம் ஆண்டில் நிபந்தனைகளை தளர்த்தி குஜராத்தி மொழியில் மட்டும் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளை நடத்த ஒப்புக்கொண்ட சி.பி.எஸ்.இ., தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் எந்தெந்த மாநில மொழிகளில் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம்  கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் மாநில அரசுகள் மீது தேசிய தேர்வு முகமை பழிபோடுவது தவறு.

ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன்  தலைவர் ஜி.கே.மணி பத்தாண்டுகளுக்கு முன்பே வழக்குத் தொடர்ந்துள்ளார். அவ்வழக்கில் சி.பி.எஸ்.இ அமைப்பும் எதிர்வாதியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. மாநில மொழிகளில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு சி.பி.எஸ்.இ முடிவு செய்திருந்தால், அது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழர்களுக்கு சி.பி.எஸ்.இ பெருந்துரோகத்தை இழைத்தது.

இப்போதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு அனைத்து மாநில மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை நடத்துவது தான். ஆனால், தேசிய தேர்வு முகமை அதன் தவறை மறைப்பதற்காக 2021-ஆம் ஆண்டு முதல் குஜராத்தி மொழியில் தேர்வு நடத்துவதை நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அது சரியல்ல. இதே தேசிய தேர்வு முகமை தான் நீட் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்துகிறது. அதேபோல், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வையும் 10 மொழிகளில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே 2020&ஆம் ஆண்டிலிருந்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும்.

Related Articles

தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பாலா கிடைத்து... சென்னை மனநல காப்பகத்தில் இருந்து படம் துவங்குகிறது. மனநல காப்பகத்தில் வரும் ஆர்யாவின் அறிமுக காட்சியும் பின்னணி இசையும் போதும் இது எப்படிபட்ட படம் என்...
தாமிரபரணி நினைவு தினம்! – தாமிரபரண... மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலாளர்அடிப்படை உரிமைகளுக்காக ஒன்று கூடி ரூ 50 கூலி உயர்வு கேட்டு பேரணி சென்ற பொழுது அன்றைய கருணாநிதி...
அதிகார திமிர் பிடித்தவரா கரூர் கலெக்டர்?... சுஜித்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்கப் போவதில்லை. அந்த அளவுக்கு நம்மை கலங்க வைத்தான் சுஜித். காரணம் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு. தமிழகத்தில் பெரும்பாலான ...
யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 ... யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசை இயக்குனர். இருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்க...

Be the first to comment on "ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!"

Leave a comment

Your email address will not be published.


*