காஞ்சி அத்தி வரதரின் குணம் என்ன?

characteristics of kanchi athi varadar

அத்தி வரதர் பெயர்க்காரணம்: 

 

அத்திப் பூத்தாற்போல எப்போதாவது தோன்றுவதால் தான் அவர் அத்திவரதர்.

 

ஆதிகாலத்தில் உலகம் கடலால் சூழப்பட்டிருந்தபோது கடலுக்கடியில் மட்டுமே ஜீவராசிகள் தோன்றின.

 

அவற்றுக்கு மேல வரத் தெரியவில்லை. நீர் வற்றித் தனித்தனிக் கடல்களாகச் சுருங்கியபோது கோண்டுவானாலாந்து உருவானது. 

 

இதுவரை 1939, 1979 ஆகிய ஆண்டுகளில் வந்துள்ளது அத்திவரதர் வைபவம். 40 வருடங்களுக்குப் பிறகு 2019 ல் இப்போது அத்திவரதர் வைபவம் நடக்கிறது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை அத்திவரதர் வைபவம் நடக்க உள்ளது.    

 

காஞ்சி அத்தி வரதரின் குணம்:

 

அத்தி வரதர் என்பவர் மற்ற தெய்வங்கள் போல் இல்லை.

ஏனெனில் பொதுவாக பகவான் விக்ரஹ ரூபத்தில் கோவில்களில் எழுந்தருளி காட்சி தருகிறார். அத்தகைய பகவான் யாரிடமும் அவ்வளவு சுலபமாகப் பேசியது கிடையாது.

 

இதில் காஞ்சி அத்தி வரதர் ஓர் உதாரணமாகத் திகழ்பவர். அவர் இடத்தில் பக்தியுடன் ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகள் என்ற பக்தரிடம் தினமும் அத்தி வரதர் கேட்கும் வரத்தைக் கொடுத்து சகஜமாகப் பேசியுள்ளார். 

 

தம்மீது பக்தி இருந்தால் தம்முடைய அர்ச்சா நிலையை மீறி பேசுவேன் என பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள பக்தியை காட்டினார் இந்த அத்தி வரதர்.

 

மேலும் இந்த அத்தி வரதருக்கு ஓர் உயர்ந்த குணம் உண்டு. நூற்று எட்டு திவ்ய தேசங்களில் கோவில் கொண்டுள்ள  பகவானுக்கு ஒவ்வொரு குணம் உண்டு. அதில் இந்த அத்தி வரதர் கேட்டவுடன் கேட்கும் வரத்தை பக்தனுக்குக் கொடுக்கும் குணமும் மற்றும் தியாகம் செய்யும் குணமும் கொண்டவர். அதனால் காஞ்சி வரதர் கோவிலை, ‘தியாக மண்டபம்’ என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த அத்தி வரதர் தம்முடைய பக்தனுக்காகக் கேட்கும் வரத்தைக் கொடுக்க எதையும் தியாகம் செய்பவர். யாரிடமும் எதையும் எதிர்பாராமல் தியாகம் செய்யும் விசேஷமான குணம் இவருக்கு உண்டு.

 

ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெரியோர்கள் அனைவரும், “இந்த அத்தி வரதரின் பெருமையே இவரின் தியாகம் தான்” என்று சொல்வதுண்டு.

ஏனெனில் திருமங்கை ஆழ்வார் ஶ்ரீரங்கம் கோவிலில் மதில் சுவர் கட்டுவதற்கு அந்நாட்டு ராஜாவின் வரிப் பணத்தைச் செலவு செய்த காரணத்தால் சிறை வைக்கப்பட்டார்.  அப்போது காஞ்சி அத்தி வரதர் ராஜாவின் கனவில் சென்று, “எம் பக்தனின் வரி பணத்தை நானே செலுத்த வழி சொல்கிறேன்” என்று செல்வம் இருக்கும் இடத்தை மன்னனிடம் கூறி திருமங்கை ஆழ்வாரை விடுவித்தார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் திருமங்கை ஆழ்வார் மதில் சுவர் கட்டியது ஶ்ரீரங்கம் ரெங்கநாதனுக்கு. ஆனால், மன்னனின் கனவில் வந்து காப்பாற்றியது காஞ்சி அத்தி வரதர். இதுவே இவரின் தியாக குணம். தம்மை அழைக்காமல் போனாலும் பக்தனின் துன்பத்தை கண்டு மனம் பொறுக்காத தயாளன் அத்தி வரதர்.

 

மற்றொரு முறை பகவத் ஶ்ரீராமானுஜர் ஶ்ரீரங்கத்தில் இருந்த போது ஒரு நாள் ஒரு பெரிய பண்டிதர் ஶ்ரீராமானுஜரை வாதத்திற்கு அழைக்கிறார். பதினெட்டு நாட்கள் வாதம் நடைபெறுகிறது ஶ்ரீராமானுஜர் தோற்கும் நிலை உருவாகிறது. அன்று இரவு ஶ்ரீராமானுஜர் வருத்தமுடன் உறங்கும் போது, கனவில் காஞ்சி அத்தி வரதர் தோன்றி ஒரு சில வேத வாங்கியங்களைச் சொல்லி, “இதை நாளைய தினம் வாதத்தில் சொல்லி நீ வெற்றியை காண்பாய்” என்று சொல்ல, மறுநாள் ஶ்ரீராமானுஜர் அந்த பண்டிதரை வாதத்தில் ஜெயிக்கிறார். ஶ்ரீராமானுஜர் இருந்து கைங்கர்யம் செய்தது ஶ்ரீரங்கம் ரெங்கநாதனுக்கு ஆனால் ஶ்ரீராமானுஜருக்கு துன்பம் வரும் போது ஓடி வந்து உதவி புரிந்தது காஞ்சி அத்தி வரதர்.

 

ஶ்ரீரங்கம் ரெங்கநாதனுக்கு நாயகியாக பக்தி செய்த ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளும் காஞ்சி அத்தி வரதரின் பெருமையைப் பாசுரங்களில் பாடியுள்ளார்.

 

இப்படி அனைவரின் துன்பத்தைத் துடைத்த தயாளர், தியாகம் செய்யும் குணம் கொண்டவர், கேட்பவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் குணம் கொண்ட காருண்யம் கொண்டவர் அத்தி வரதர்.

 

இப்பேர்ப்பட்ட  தியாகம் செய்யும் குணமும் கேட்டவுடன் கேட்கும் வரத்தை அளிக்கும் குணம் கொண்ட அத்தி வரதர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நமக்காக எழுந்தருளிக் காட்சி தருகிறார். “எம்முடைய அடியார்கள் கேட்கும் வரத்தை அளிக்கவே நான் உள்ளேன்” என்று திருமுகத்தைக் காட்டி சேவை சாதிக்கிறார். இந்த பவளவாய் தான் ஆலவட்டம் கைங்கர்யம் செய்த திருகச்சி நம்பிகளிடம் பேசியது. 

இந்த உள்ளம் தான் திருமங்கை ஆழ்வார் சிறையில் துன்பத்தை கண்டு உதவி புரிந்தது.

இந்த காருண்யம் தான் ஶ்ரீராமானுஜர் வாதத்தில் ஜெயிக்க உதவி புரிந்தது. இத்தனையும் செய்த அத்தி வரதர் நம்மையும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற வந்துள்ளார்.

 

அனைவரின் துன்பத்தைத் துடைத்து  கேட்கும் வரத்தை அளித்து தியாகேசனாக இருக்கும் பகவான் அத்தி வரதர் நம்மைக் காப்பாற்ற அவர் அனைத்தையும் தியாகம் செய்வார். 

அவரை நாம் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். நமக்காக தியாகம் செய்யும் அத்தி வரதரை பார்க்கும் போது நாமும் சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும். காமம், குரோதம், பேராசை ஆகியவற்றை தியாகம் செய்து பக்தியை மட்டுமே கேட்டு அவர் திருவடியில் பக்தி  வேண்டி இறுதியில் பிறவி இல்லா நிலையை அடைய அத்தி வரதரின் திருவடியில் சரணாகதி செய்ய வேண்டும்.

 

கண்ணதாசன் கவிதை: 

 

15-7-1979 அன்று அத்திவரதர் தரிசனத்தின் போது கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை இதோ. 

 

” நீண்டதோர் காலமாக நீரினுள் மூழ்கி நின்று

காண்பவர் வியக்கும் வண்ணம் கரை வந்த வரதன் தன்னை

மாண்புகழ் கொண்ட காஞ்சி மைந்தர்கள் வணங்கும் நாளில்

ஈண்டுலந்தின் இன்பமுற்றேன்

இறைவனின் செயலே யான்றோ! “

Related Articles

இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் ̵...  குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண...
வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப... விஜய் மல்லையா ஆரம்பித்து வைத்த வங்கி மோசடி நாடெங்கும் பரவி இன்று நிரவ் மோடி வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தினமும் வங்கி மோசடி குறித்த செய்திகள் நா...
நிஸான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் 100 ம... பண்டிகைக் காலம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது சிறப்பு விற்பனைகள் மற்றும் சலுகைகள்.  கார் பிரியர்கள் ஆவலுடன் எதிபார்க்கும் நிஸான் மற்றும் டட...
உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை... பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்...

Be the first to comment on "காஞ்சி அத்தி வரதரின் குணம் என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*