அசுரனை பாராட்டிய இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் ராஜூமுருகன்!

Director Bharathiraja and Raju Murugan who praised the Asuran movie!

கடந்த இரு நாட்களாக சமூக வலைதளம் முழுக்க அசுரன் பற்றிய பதிவாகவே இருக்கிறது. அசுரன் படம் அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு சில இயக்குனர்களும் நடிகர்களும் இந்தப் படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் ராஜூ முருகன், நடிகர் கவிதாபாரதி ஆகியோர் இந்தப் படத்தை பாராட்டி உள்ளனர். 

1.அசுரன் – பிரிப்பவன் அல்ல; பிணைப்பவன்!

என் இனிய தமிழ் மக்களே, ‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை’யின் சார்பாக, உங்கள் பாரதிராஜா…

நமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்…சாதி, சமயம், மொழி, இனம், நாடு என்ற சுயசார்புப் பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன்… அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை – அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி – திரைப்படமாக எடுத்திருக்கிறார். ஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர்தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும், தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால். அப்படியான படங்கள் – அசுரனையும் மிஞ்சிய அப்படியான படங்கள் – தமிழில் ஓடட்டும்… அப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்…

அதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை – உயர் வகுப்பினரை -க்  காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துக்கள் வெளிவந்தன. பின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது. அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல; தமிழக மக்களை, ‘நாம்’ என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும். இருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை’ தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவுகண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும். அதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம் … உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது. கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம் தான் என்று உணர்வீர்கள். ஒரு முறை பார்த்தால் பிறரையும் பார்க்கச்சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்.

‘எல்லாவித அடையாளங்களையும் உதறுவதுதான் ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹாமனிதாயமாகும்.’ 

– (கவிஞர் பிரமிள்).

                                      அன்புடன், 

– பாரதிராஜா 

– 07.10.2019

2.’அசுரன்’ பார்த்தேன். மிக முக்கியமான படம். மனிதனை மனிதன் கீழ்மைப்படுத்தும் அநீதிக்கெதிரான வலிமையான குரல். நில அதிகாரத்துக்காக கட்டமைக்கப்படும் சாதிய வர்க்க அடக்குமுறைகளை துணிவோடு நேர்மையோடு பேசியிருக்கிறார் வெற்றி சார். மூலக்கதை தந்த பூமணி தோழருக்கும் அதை இவ்வளவு அதிர்வான திரைப்படமாக உருவாக்கிய வெற்றிமாறன் சாருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்… நமக்கு கிடைத்த பெரும் கலைஞன் தனுஷ். ஆன்மாவிலிருந்து நடித்திருக்கிறார். லவ் யூ பிரதர்..! இப்படியான ஒரு படைப்பை தயாரித்த தாணு சார், சிறப்பான இசையை தந்த ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளியை தந்த ஆர்.வேல்ராஜ் மற்றும் தரமாக நடித்திருந்த, உழைத்திருந்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்… – இயக்குனர் ராஜூ முருகன்

3.ரஞ்சித்தும், வெற்றிமாறனும்..

அசுரனை முன்வைத்து..

தனுஷ் என்னும் நல்ல விலைபோகக்கூடிய கதாநாயகனை வைத்துக்கொண்டு வணிகரீதியான வெற்றிப்படம் எடுக்கும் சூத்திரம் வெற்றிமாறன் அறியாததல்ல..

ஆனால் மீண்டும் ஒரு நாவலை அவர் திரைப்படமாக்கியிருப்பது பாரட்டத்தக்கது.. அதேபோல் இப்படியொரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்..

படம் சொல்லியிருக்கும் செய்தி, களத்தேர்வு, நடிப்புத்திறன், இசை எல்லாவற்றையும் தமிழ்ச் சமூகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது.. அதனை நானும் வழிமொழிகிறேன்..

ஆனால் இதுபோன்று படமெடுத்த வெற்றிமாறனின் நோக்கம் வெறும் பாராட்டுப் பெறுவதாக மட்டும் இருக்க முடியாது.. இது ஒரு பெரும் உரையாடலைத் தொடங்க வேண்டும்..

துரதிருஷ்டவசமாக வழக்கம்போல் இதிலும் சாதியப் பிளவுகளை முன்வைத்து வெற்றிமாறனையும், ரஞ்சித்தையும் மோதவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.. இது தவறானதும், தட்டையானதுமாகும்..

”பணம், காசு, சொத்து, நிலம் எல்லாத்தையும் புடுங்கிக்குவாங்க.. படிப்பை மட்டுந்தான் அவங்களால பறிக்க முடியாது.. படி..” இதுதான் சிவசாமி தன் மகன் சிதம்பரத்துக்கும் சொல்லும் செய்தி..                       

படத்தின் மூலம் வெற்றிமாறன் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குச் சொல்லும் செய்தியும் இதுதான்..

இதே போல், புள்ள குட்டிகளைப் படிக்க வைங்க என்றுதான் தேவர் மகன் சொன்னது..

எனில் படிப்பு மட்டுமே ஏற்றத்தைக் கொடுத்துவிடுமா என்றால், இல்லை என்பதே நேர்மையான பதிலாகவும், கொடூரமான எதார்த்தமாகவும் இருக்கிறது..

ஒடுக்குபவர்கள் அந்தந்தத் தெருவிலோ, ஊருக்குள்ளோ மட்டுமில்லை.. அவர்கள் மிக உயர்ந்த ஆட்சி அதிகாரங்களில் இருக்கிறார்கள்..

அந்த அதிகாரம்தான் கார்ப்பரேட்டுகளுக்காக சேரியையும், குடியானவத் தெருக்களையும் சேர்த்தே ஒடுக்குகிறது..

எல்லா சாதிகளிலும் ஒரு கணிசமான எண்ணிக்கையில் படித்து முன்னேறி பதவிகளிலும், வியாபாரத்திலும் செழித்து பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.. 

கொடுமை என்னவென்றால் இவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தில் படிப்பறிவற்ற, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களைக் கைதூக்கிவிட எந்த உதவியும் செய்வதில்லை..

மாறாக தங்கள் பவிசைக் காட்டுவதற்கு சொந்த ஊரில் பெரிய வீடு கட்டுவது, கோயில் மண்டபங்களைக் கட்டிக் கொடுப்பது போன்றவற்றை மட்டுமே செய்கின்றனர்.. குறைந்த பட்சம் உள்ளூர் பள்ளிகளுக்குக்கூட உதவுவதில்லை..

மூன்றாம் வகுப்பு தொடங்கி நுழைவுத் தேர்வு, நீட் தேர்வு, மண்ணின் மைந்தர்களின் உரிமைகளைப் பறித்து அரசுப் பதவிகளில் மற்ற மாநிலத்தவரும் வரலாம் என்கிற தாராளவாதம் என படிப்பையும், படிப்பு சார்ந்த வேலைகளைப் பறிக்கும் எல்லாக் கொடூரங்களிலும் இந்த நவபார்ப்பனர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள்..

முன்னேறியவர்கள் பணம் செலவழித்து நுழைவுத்தேர்வுக்குப் படிக்க வைப்பார்கள்.. அல்லது ஆள் வைத்துத் தேர்வெழுதுவார்கள்

ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடின்றி பொருளாதாரத்தில் பலவீனமானவர்கள் அனைவருமே இதில் பாதிக்கப்படுகிறார்கள்.. எதிர்காலத்தில் இன்னும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்..

அப்படியான அதிகார அடிவருடிகள்தான் சாதியப் போரைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 

ஒன்றுபட்டு உரிமை கேட்க வேண்டிய எளிய மக்கள் அடித்துக்கொண்டு பிரிந்து நிற்கிறார்கள்.. 

ஒன்றுபட்டு நிற்க வேண்டிய சிவசாமியையும், பாண்டியனையும் 

ரைஸ்மில் முதலாளி இப்படித்தான் மோதவிடுகிறார்

திராவிடம் VS தலித் என்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியலும் இதுவே..

கஞ்சிக்குச் செத்தவர்கள் அனைவரும் சாதி, மதம் மறந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரமிது..

அதாவது வெற்றிமாறன்களும், ரஞ்சித்களும் ஓரணியில் நிற்க வேண்டிய நேரம்.. நிற்பார்கள், அவர்களோடு நாமும் நிற்போம் – அருவி, படைவீரன், ராட்சசி போன்ற படங்களில் நடித்த நடிகர் கவிதாபாரதி. 

வட சென்னை படத்தை எப்படி சில சமூகத்தினர் எதிர்த்தார்களோ அதே போல தற்போது அசுரன் படத்தையும் சில சமூகத்தினர் எதிர்த்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர் கருணாஸ் இந்தப் படத்தில் வரும் ஒரு வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் கருணாஸை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

Related Articles

பொழுதுபோக்கு பூங்காவில் இயங்கும் பந்தைய ... ஹரியானா மாநிலம் பஞ்சகுளா பகுதியில் இயங்கி வரும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. யதவிந்த்ரா கார்ட...
அடுத்த பிரதமர் சீமான்! அடுத்த சிஎம் சிம்... சிவனேன்னு சினிமாவில் இருந்த சீமானை வாங்கண்ணே... வாங்கண்ணே... என்று இழுத்து வந்து தொண்டை கிழிய பேச மேடை அமைத்து தந்து... இயக்கம் ஆரம்பிக்க வைத்து... அத...
பிற மொழி கற்பது யாருக்கு அவசியம்?... பிறமொழி கற்பது தமிழர்களுக்கு தேவையா என்ற வினாவை எழுப்பி உள்ளார் இராசா கிருட்டினன் என்பவர். அவருடைய பதிவை பார்ப்போம். "எள்ளு எண்ணெய்க்காக வெயிலில் ...
செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்த... கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செ...

Be the first to comment on "அசுரனை பாராட்டிய இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் ராஜூமுருகன்!"

Leave a comment

Your email address will not be published.


*