அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்!

Director Vasantha Balan Talks about 100th Days of Asuran Success

பூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில் நானும் இயக்குனர் லிங்குசாமி உட்பட்ட சில திரைப்பட நண்பர்களும் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து  பேசிக்கொண்டிருந்தோம். இது சிறிய கதையாக இருக்கிறது இதை எப்படி திரைப்படமாக மாற்றுவது என்று அதுகுறித்து பலவாறு யோசித்த வண்ணம் இருந்தோம். கடைசியில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு சமயங்களில் நான் அடுத்த திரைப்படம் இயக்குவதற்கான சூழ்நிலை வரும்போது என்னுடைய நண்பன் வரதன் வெக்கை நாவலை திரைப்படமாக்கலாம் என்று கூறிக் கொண்டே இருப்பான். சிறிய  கதையாக இருக்கிறது அதை விரிவாக ஆக்குவது எப்படி என்று தொடர்ந்து விவாதிப்போம். திட்டம் அவ்வப்போது கையில் எடுக்கப்பட்டு கைவிடப்படும் . என்னை போன்று திரை உலகம் முழுக்க வெக்கை நாவலை திரைப்படமாக ஆக்குகிற முயற்சிகள் தொடர்ந்து கையில் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒரு சமயம் நடிகர் சத்யராஜ் அவர்கள் நடிக்க இருப்பதாக இருந்து திரைப்படம் கைவிடப்பட்டதாக திரை உலகத்தில் பல கதைகள்  உலவும். நானும் விருதுநகர் செல்லும்போதெல்லாம் கோவில்பட்டிக்கு சென்று எழுத்தாளர் பூமணியை சந்தித்து வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து உரையாடியிருக்கிறேன்.அவரும் திரைப்படமாக மாறினால் சந்தோஷம் என்று ஒரு விட்டேத்தியான மனநிலையோடு அந்த பேச்சைத் தொடர்வார் ஆனாலும் அவருக்குள் வெக்கை நாவல் திரைப்படமாக ஆகவேண்டும் என்ற எண்ணம் மிக வலுவாக இருந்தது. அப்பொழுது சுசீந்திரன் அவர்கள் இயக்கத்தில் பாண்டிய நாடு திரைப்படம் வெளிவந்து இருந்தது. ஏறக்குறைய வெக்கை நாவலின் பல்வேறு கூறுகள் வேறு வடிவத்தில் பாண்டிய நாடு திரைப்படத்தில் இருப்பதை பரவலாக  நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டோம். பாண்டியநாடு திரைப்படத்தின் திரைக்கதை மூத்த மகன் கொலைக்கு, தந்தையும் இளைய மகனும் தனித்தனியாக பழி வாங்குவதாக அமைந்திருக்கும். ஆகவே இனிமேல் வெக்கை நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்து யோசிப்பது வீண் என்று என் நண்பர்கள் உட்பட நானும் அந்த முடிவுக்கு வந்துவிட்டோம்.

எழுத்தாளர் பூமணி அவர்களை சந்தித்தபோது பாண்டியநாடு திரைப்படத்தின் கதையை அவரிடம் விவரித்தேன். பூமணி மிகவும் வருத்தத்துக்கு உள்ளானார். இந்த சமயத்தில்தான் வெக்கை நாவலை வெற்றிமாறன் திரைப்படமாக எடுப்பது குறித்த அறிவிப்பு வெளியானது. மிகப்பெரிய ஆச்சரியமும், மிகப்பெரிய எதிர்பார்ப்பும் என்னிடம் உருவானது. எப்படி வெக்கை நாவலை ஒரு திரைப்படமாக வெற்றிமாறன் உருவாக்கப் போகிறார் என்ற பல்வேறு ஆச்சரியங்களும் கேள்விகளும் என் மனதில் சுழன்ற வண்ணம் இருந்தன. சிறிய கதையை வைத்துக்கொண்டு இவர் எப்படி  திரைப்படமாக மாற்றுவார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

பொல்லாதவன் திரைப்படம் கமர்ஷியல் தன்மையுடன் உள்ள திரைப்படம் அதன் திரைக்கதை வேறு வகை சேர்ந்தது. ஆடுகளம் திரைப்படத்தின் திரைக்கதையும் விசாரணை படத்தின் திரைக்கதையும் ஒரே வடிவமைப்பைக் கொண்டவை. வெற்றிமாறன் இரு சிறுகதைகளை  ஒரே நேர்கோட்டில் இணைப்பதில் தேர்ந்தவர். ஆடுகளத்தில் பேட்டைக்காரனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் சண்டையை முதல் பாதியிலும் குருவுக்கும் சீடனுக்கும் நடக்கிற சண்டை இரண்டாம் பாதியிலும் அமைந்திருக்கும். அதே போன்று விசாரணை திரைப்படத்திலும் கர்நாடகத்தில் காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட இளைஞர்களை இன்ஸ்பெக்டர் மீட்பது முதல் பாதியிலும் , இரண்டாம் பாதியில் காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வந்த  இளைஞர்கள் எப்படி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது விவரிக்கப்பட்டிருக்கும்.

இப்படி திரைக்கதையில் இரு வேறு சம்பவங்களை அல்லது கதைகளை ஒன்றாக இணைத்து ஒரே திரைக்கதையாக எழுதுகிற ஆற்றல் வெற்றிமாறனுக்கு மிக எளிதாக கைகூடி வந்திருக்கிறது. வெற்றிமாறனுடைய கடந்த நான்கு படங்களை நாம் கூர்ந்து பார்க்கும் போது ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைந்திருப்பதை கண்டிருக்கிறோம். ஒரு பைக் திருடு போன கதையை மட்டும் வைத்துக்கொண்டு பொல்லாதவன் மிக அழகான கமர்சியல் திரைக்கதையாக மாற்றியது. சேவற்சண்டையை வைத்துக்கொண்டு ஆடுகளம். அப்பாவி இளைஞர்கள் குற்றவாளிகளாக எப்படி ஆக்கப்படுகிறார்கள் என்பது விசாரணை. வடசென்னையை எடுத்துக்கொண்டால் பல்வேறு கதாபாத்திரங்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் இணைக்கிற லாவகம் வெற்றிமாறனுக்கு எளிதாகவே உள்ளது.

ஆகவே வெக்கை நாவலை வெற்றிமாறன் மிக அழகான திரைக்கதையாக மாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. திரைப்படம் வெளியான நாளில் திரைப்படத்தைக் கண்டபோது, அவர் விசாரணையிலும் ஆடுகளத்திலும் கையாண்ட அதே யுக்தியை அசுரன் திரைப்படத்திலும் கையாண்டு இருப்பதை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. முதல் பாதி வெக்கை  இரண்டாவது பாதி கீழ் வெண்மணி சம்பவம் மற்றும் பஞ்சமி நில மீட்பு என்று இருவேறு கதைகளை ஒரே நேர்கோட்டில் உணர்ச்சிகள் மாறாமல் கதையின் கருத்து மாறாமல் நிலம் சம்மந்தமான பிரச்சனையை அடிநாதமாக வைத்துக் கொண்டு மொத்த கதையையும் அழகாக எழுதியிருந்தார். திரைக்கதை அமைப்பில் மட்டுமல்ல அந்த படத்திற்கான படமாக்கத்திலும் உணர்வுக் கடத்தலை பார்வையாளனுக்கு கடத்தியது தான் வெற்றி.

இந்த காலகட்டத்தில் அசுரனுடைய வெற்றி என்பது மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் ஏனெனில் தமிழ் மண் மணத்துடன் கூடிய தமிழ் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்தது. ஒரு நாவலில் இருந்து ஒரு தமிழ்த்திரைப்படம் உருவாவது மிக மிக ஆரோக்கியமான விஷயம். நாளைய உதவி இயக்குனர்களுக்கு புதிய வழிகாட்டியாக அசுரன் மாறி இருக்கிறது. தமிழ்ச்சிறுகதைகள், தமிழ் நாவல்களில் இருந்து திரைப்படங்கள் உருவாக்குகிற புதிய பாணியை ( பழைய பாணி தான். ஆனால் அசுரன் வெற்றி அதை புதிய பாணியை பார்க்க வைக்கிறது.) வெற்றிமாறன் வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார் அசுரன் திரைப்படத்தின் மூலம், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர் அடுத்து இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தைக் காண கோடிக்கண்களுடன் காத்திருக்கிறேன்.

Related Articles

பேஸ்புக்கில் புதிதாக வரவிருக்கிறது டவுன்... பேஸ்புக் பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான டிஸ்லைக் (DisLike) பட்டனுக்கு மாற்றாக அந்த நிறுவனம் நிறைய புதிய மேம்படுத்தல்களைச் செய்து வருகிறது. பேஸ்புக...
K – 13 படம் எப்படி இருக்கு?... இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் K-13. நாயகன் திரைப்பட இயக்குனர், நாயகி எழுத்தாளர்(காட்சிப் பிழை என்ற புத்தகம் எழுதியுள்ளா...
குற்ற உணர்ச்சியால் வாடிய நாயகர்கள் பற்றி... நாட்டாமை படத்தில் நாட்டாமை தவறான தீர்ப்பு சொல்லிவிட்டதால் உண்மை தெரிந்த அந்த இடத்திலயே குற்ற உணர்வால் அதிர்ச்சி தாங்காமல் உயிரை விடுவார். அது போல தாம்...
251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி த... நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்த...

Be the first to comment on "அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்!"

Leave a comment

Your email address will not be published.


*