திருநங்கையரை மூன்றாம் பாலினம் எனக் குறிப்பிடுவது சரியா? சரமாரியாக கேள்வி எழுப்பும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்!

Is it right to refer to transgender people as third gender

திருநங்கையரை மூன்றாம் பாலினம் என்று மட்டுமே இனி குறிப்பிட வேண்டுமென தமிழக அரசு குறிப்பிட்டிருப்பது மடத்தனமானதொன்று. பாலினங்களில் என்ன தரவரிசை முதலாம் இரண்டாம் மூன்றாமென? ஒவ்வொரு ஆட்சி முடியும் போதும் முந்தைய ஆட்சியில் இல்லாத திருத்தங்களை செய்ய எவ்வளவோ இருக்கையில் கலைஞர் அவர்கள் அந்த வார்த்தையை சட்டப்பூர்வமாய் மாற்றிய காரணத்திற்காக மட்டுமே நீக்க வேண்டுமென நினைப்பது மோடுமுட்டித்தனம்.  திருநங்கை என்ற வார்த்தையே அவர்களுக்கு சரியானது. பால்புதுனையினர் குறித்த பார்வைகளும் கோட்பாடுகளும் பாரிய அளவில் மாறியிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த அரசானை பால்புதுமையினர் குறித்த உரையாடல்களில் நிகழ்ந்த முன்னேற்றத்தை பின்னுக்கிழுக்கும் செயல். அறிவார்ந்த சமூகம் இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. – எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார்

‘ திருநங்கை’ என்பதற்கு பதிலாக இனி ‘ மூன்றாம் பாலினத்தவர்’ என்றே அவர்கள் குறிப்பிடப்படவேண்டும் என்கிறது தமிழக அரசு. கலைஞர் காலத்தில் இச்சொல் அதிகாரப் பூர்வமான பயன்பாட்டுக்கு வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். விரைவில் ‘மாற்றுத் திறனாளி’ என்கிற சொல் பயன்பாட்டுக்கும் இதே கதி வரக்கூடும். தோழி லிவிங் ஸ்மைல்  வித்யா பல்லாண்டு காலத்துக்கு முன்பே இந்த ‘மூன்றாம் பாலினம்’ என்கிற பயன்பாட்டை எதிர்த்துக் கேட்ட கேள்வி இப்போதும் அப்படியே இருக்கிறது. திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் ஆண்களா? இரண்டாம் பாலினம் பெண்களா? – எனக் கேட்பாள்.

மனித உயிர்களை இப்படி வரிசைப்படுத்தித் தரம்பிரிப்பதெல்லாம் மோசடி இல்லையா? திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என்று அழைப்பதை பெண்களும் எதிர்க்கவேண்டும். சிந்திக்கத் தெரிந்த ஆண்களும் எதிர்க்கவேண்டும். – பத்திரிக்கையாளர் கவின்மலர்

தங்களை சக மனிதர்களாகவும், மாண்புடனும் குறிப்பிடும் பெயரைச் சொல்லி இச்சமூகம் அழைப்பதற்காகவே, மாற்றுப்பாலினத்தவர்கள் பெரும் போராட்டங்களை சந்தித்திருக்கின்றனர். தமிழ்ச்சமூகம், பல்வேறு இழிவான பெயர்களைக் கூறி மாற்றுப்பாலினத்தவர்களை அழைத்த போது, 2006-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு ‘திருநங்கை’, ‘திருநம்பி’ எனப்பெயரிட்டு சட்டம் இயற்றினார். அந்த பெயரே தங்களை சக மனிதராக மற்றவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது என திருநங்கைகள் பலரும் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு ஆவணங்கள், செய்தி வெளியீடுகளில் ‘திருநங்கை’ என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற பெயரை பயன்படுத்துவதாக விமர்சனங்கள் சமீபத்தில் எழுந்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்ட ஏப்.15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ‘திருநங்கைகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் வரும் 2020 ஆம் ஆண்டு, ஏப்.15-ம் தேதி சமூக நலத்துறை சார்பில் ‘திருநங்கைகள் தினம்’ கொண்டாடப்படுவது குறித்தும், அவ்விழாவில் வழங்கப்பட உள்ள ‘சிறந்த திருநங்கை விருது’ பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள் தங்களின் ஆவணங்களை அனுப்பலாம் என்றும் குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்தும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில், ‘திருநங்கை’ என்ற வார்த்தை அச்சிடப்பட்ட இடங்களில் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற வார்த்தை கையால் எழுதப்பட்டிருந்தது. இந்த செய்தி வெளியீடானது, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோரின் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டுள்ளது.

‘திருநங்கை’ என்ற பெயர் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என மாறியது ஏன் என, தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். கடந்த பல மாதங்களாகவே சமூக நலத்துறை இயக்குநரகத்திலிருந்து தங்களுக்கு வரும் அறிவிப்புகளில் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

“2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, 06.11.2015 அன்று தமிழக அரசு அரசாணை எண்.71-ஐ பிறப்பித்தது. அதில், ஆண், பெண் இரு பாலினம் தவிர்த்து, மற்ற மாற்றுப்பாலினத்தவர்களை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என குறிப்பிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாகவே சமூக நலத்துறை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தி வந்திருக்கிறது. ஆனால், ‘திருநங்கை’ என்ற வார்த்தை அழிக்கப்பட்டு அதன் மீது ‘மூன்றாம் பாலினத்தவர்’ என எழுதப்பட்டுள்ளதால் இந்த விஷயம் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த விருதுகள், திருநங்கை மட்டுமின்றி திருநம்பிக்கும் வழங்கப்படுவதால், பொதுவான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது,” என்றார் அவர்.

மாவட்ட சமூக நல அலுவலர் ‘திருநங்கை’ என்ற வார்த்தையையே அந்த செய்தி வெளியீட்டில் ஆரம்பத்தில் பயன்படுத்தியதாகவும், அலுவலகத்தில் இருந்தவர்கள் அறிவுறுத்தலின்படி, ‘மூன்றாம் பாலினத்தவர்’ என மாற்றியதாவும் அந்த அதிகாரி நம்மிடம் தெரிவித்தார்.

‘திருநங்கைகள்’ என்ற வார்த்தையும் ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற வார்த்தையும் மாறிமாறி பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதில் குழப்ப நிலையே நிலவுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து , சமூக நலத்துறை இயக்குநரகம் தெளிவை ஏற்படுத்துவதற்காக, மாவட்ட சமூக நல அலுவலகம் காத்திருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

‘திருநங்கை’ என்ற பெயரை மாற்றி ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது சமூக நீதிக்கு எதிரானது என்கிறார், திருநங்கை மற்றும் திருநம்பியர்களுக்கான உரிமைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிரேஸ் பானு கூறுகிறார். திருநங்கைகளுக்கு எதிரான பல்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும் ‘மாற்றுப்பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019’-ஐ எதிர்த்து வரும் வேளையில், தமிழக அரசின் இந்த செயல்பாடு திருநங்கைகள் சமூகத்தை தனித்து விட்டது போன்று உள்ளது என அவர் கூறினார்

“2014-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக கருதலாமே என்று தான் கூறியிருக்கிறது. அப்படித்தான் அழைக்க வேண்டும் என கட்டாயமாக சொல்லவில்லை. ஆனால், மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களின் பாலினத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு என்கிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தை பின்பற்றுவதாக சொல்லும் தமிழக அரசு, பாலினத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறுவதை பின்பற்றுகிறார்களா? எங்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது.. அதனை தமிழக அரசு கடைபிடித்திருக்கிறதா? உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்திய அரசியலமைப்பில் முதல் பாலினம் யார், இரண்டாம் பாலினம் யார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அப்படி இல்லாதபட்சத்தில் ஏன் எங்களை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என எண்ணின் அடிப்படையில் அழைக்க வேண்டும்? பொதுப்பெயராக ‘திருநர்’ என அழைக்கலாமே” எனக்கேட்கிறார் கிரேஸ்.

‘திருநங்கை’, ‘திருநம்பி’ ஆகிய வார்த்தைகள்தான் தங்களை மரியாதைக்குரியவர்களாக உணர வைப்பதாக கூறுகிறார் கிரேஸ் பானு.

“திருநங்கை என்ற சொல் மரியாதைக்குரியது. கேலியான, இழிவான பெயர்களை சொல்லி எங்களை அழைத்த சமூகம், ‘திருநங்கை’ என்ற பெயர் வந்தவுடன் தான் எங்களை மனிதர்களாக அங்கீகரித்தது. நாங்கள் அப்படி அழைக்கப்படுவதை பெருமையாக கருதுகிறோம். சிறுவயது குழந்தைகளிடம் பெற்றோர்கள் எங்களை ‘திருநங்கைகள்’ என மரியாதையுடன் சொல்லிக் கொடுக்கின்றனர்.

பல போராட்டங்களுக்கு பின்னர் கிடைத்த இந்த பெயரை தமிழக அரசு ஏன் நீக்க வேண்டும்? மத்திய அரசு எந்தவொரு ஆவணங்களிலும் மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடவில்லை, மாற்றுப்பாலினத்தவர் என்று தான் குறிப்பிடுகிறது. மற்ற மாநிலங்களில் அவர்கள் மாநில பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றனர். திமுக உருவாக்கியதை மாற்ற வேண்டும் என்ற அரசியல் தான் இதில் தெரிகிறது” எனக்கூறுகிறார் கிரேஸ் பானு

நீதிமன்றம் செல்லாமல் திருநங்கைகளுக்கு வேலை கிடைப்பதில்லை என குறிப்பிடும் கிரேஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் திருநங்கைகளும் எழுத அனுமதிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தை நாடிய பிறகே இன்றும் பலர் அம்மாதிரியான தேர்வுகளை எழுத முடிகிறது என்றார். எனினும், திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு இல்லாததால் தேர்வுகள் எழுதினாலும் மறுக்கப்படுவதாக கூறுகிறார் கிரேஸ்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கென தனிப்பிரிவை அரசு ஏற்படுத்தியிருந்தாலும், தங்களுக்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லாதது, திருநங்கைகள் நலவாரியத்தில் போதிய மாற்றுப்பாலினத்தவர்கள் உறுப்பினர்களாக இல்லாதது, நலவாரிய அடையாள அட்டை, இலவச வீடுகள் பெறுவதில் சிக்கல் மற்றும் காலதாமதம் ஆகியவற்றை தமிழக அரசு முதலில் தீர்க்க வேண்டும் என கிரேஸ் பானு கோரிக்கை விடுக்கிறார்.

திமுக கொண்டு வந்தது என்பதற்காகவே ‘திருநங்கை’ பெயரை தமிழக அரசு நீக்கியிருப்பதாக, முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன் கூறுகிறார். “எங்கள் தலைவர் கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அந்த பெயரை நீக்குவது போன்று தெரிகிறது. இது நல்ல உதாரணம் அல்ல. ‘திருநங்கை’ என்ற வார்த்தைதான் அவர்களின் மனதை காயப்படுத்தாமல் ஊக்கப்படுத்தும். திருநங்கைகளுக்கென முன்னோடி திட்டமாக திருநங்கைகள் நல வாரியம் என பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தியிருக்கிறது. அதற்காகவே, அவற்றை அதிமுக அரசு செயலற்றதாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது,” என்றார்.

இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என பதிலளித்தார்.

மூன்றாம் பாலினம் திருநங்கைகளும், திருநம்பிகளும் என்றால் முதல் பாலினம் யார்? இரண்டாம் பாலினம் யார்? பாலினங்களை ஒன்று, இரண்டு, மூன்று என தரவரிசைப்படுத்துவது யார்? இந்த தரவரிசைகள் உருவாக்கும் ஆதிக்கப்பூர்வமான மறைமுக மதிப்பீடுகளை அரசே அங்கீரிக்கிறதா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

திருநங்கைகள் என இருந்ததை மூன்றாம் பாலினம் என மாற்றும் யோசனைக்கு அரசு ஏன் வந்தது என்ற கேள்வியைப் போலவே இவையும் விடையற்ற கேள்விகள். – பத்திரிக்கையாளர் நந்தினி வெள்ளையசாமி

இவ்வாறு தமிழக அரசின் தவறான முடிவு குறித்து இன்னும் பல எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Related Articles

தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் &#... சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்...
சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்... Pariyerum Perumal (2018) - IMDB Rating - 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் ந...
பெங்களூரு விமான நிலைய பேருந்துகளில் இனி ... பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC) சார்பில் பல்வேறு வழித்தடங்களில் விமான நிலையத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளின் எண்ணிக...
+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! –... நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை ச...

Be the first to comment on "திருநங்கையரை மூன்றாம் பாலினம் எனக் குறிப்பிடுவது சரியா? சரமாரியாக கேள்வி எழுப்பும் எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*