அரசியலில் தோற்று சினிமாவுக்கே திரும்ப வேண்டும்! – கமல் ரசிகரின் வேண்டுகோள்!

Kamal must return back to cinema! - Fan's Request

நவம்பர் 7 கமல்ஹாசன் பிறந்த தினம். அதையொட்டி இன்று சமூக வலைதளங்கள் முழுக்க கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாகவே இருக்கிறது. இந்நிலையில் எழுத்தாளர் சி சரவணகார்த்திகேயன் கமல் அரசியலில் தோற்று மீண்டும் சினிமாவுக்கே திரும்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவை பார்ப்போம். 

 என் பத்து வயதிலிருந்து கமல் ரசிகன். அதற்கு முன்பு ரஜினி ரசிகனாய் இருந்து திருந்தியவன். கால் நூற்றாண்டு காலம் ஒரே நடிகனுக்கு ரசிகனாய் இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்று சொல்வேன். அவரது நடிப்புக்கு மட்டுமல்ல, பேச்சுக்கும், திரைக்கதைக்கும் பெரும்ரசிகன் என்றாலும் அதெல்லாம் இல்லை என்றாலும் ஒரு நடிகனாக மட்டும் அவரது ரசிகனாகவே இருந்திருப்பேன். இதை இன்னும் வலுவாகத் தொனிக்கும்படி சொன்னால் உருப்படாத அரசியல்வாதியாக அவர் பாதை திரிந்து போன இன்றைய தேதியிலும் அவர் நடிப்புக்கு ரசிகனாக இருப்பதில் எந்தத் தயக்கமும் சங்கடமும் இல்லை. அதனால் தான் கமல் கலைஞன்!

இந்தப் பிறந்த நாளில் அவர் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டைப் பற்றி மட்டும் பேச விரும்புகிறேன். “அவர் மேக்கப் வெறி கொண்டவர், அதையே நடிப்பு என்று நம்புகிறவர், ரசிகர்களை நம்ப வைத்தவர், மற்றபடி அவர் பெரிய நடிகர் இல்லை.” அவரை மட்டம் தட்டப் பலரும் பயன்படுத்தும் கருத்து இது. மிகப் பிழையான புரிதல் இது (அல்லது திரித்தல் வேலை).

கமல் பல வேடங்கள் ஏற்று நடிக்கும் வேட்கை உள்ளவர். அது உண்மையில் ஒரு நல்ல நடிகனுக்கான அளவுகோல்களில் ஒன்று தான். அவனால் எப்படி வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியும் என அதில் அறிய முடியும். அப்படி நடிக்கையில் அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க அவர் மேக்கப் போட்டுக் கொள்கிறார். நாயகன் படம் வழியாகக் கிடைத்த ஹாலிவுட் மேக்கப்மேன் தொடர்புகள் மூலம் தன் பெரும்பாலான படங்களில் அப்படி வேறு வயது அல்லது தோற்றம் கொண்ட பாத்திரங்களைக் காட்ட மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார். அதில் என்ன தவறு? எவ்வளவு நாள் தான் மச்சம், மரு, தழும்பு, நிறம், நரை முடி, பூனைக்கண், கண்ணாடி, ஹேர்ஸ்டைல் கொண்டே ஒருவரே ஏற்கும் இரு பாத்திரங்களை வித்தியாசப்படுத்திக் கொண்டிருக்க முடியும்?

இந்தியன் படம் அதன் அழகான உதாரணம். இந்தியன் படத்தில் அவர் வெறும் மேக்கப் போட்டு தான் வந்து நின்றாரா? அந்த வயதான பாத்திரத்தில் அவரது நடிப்பு – முகபாவம், உடல்மொழி, வசன உச்சரிப்பு, குரல் எல்லாமே – அபாரமாய் வெளிப்படவில்லையா? மேக்கப் என்பது அப்பாத்திரத்தின் மீது கூடுதல் நம்பகத்தன்மையை அளிக்கப் பயன்பட்டதே ஒழிய அது மட்டுமே இல்லை. காட்சிக்குப் பின்னணி இசை மாதிரி. இவ்விடத்தில் இதை மேக்கப் வெறி எனச் சுருக்குவது எவ்வளவு அயோக்கியத்தனம் அல்லது அறியாமை! தசாவதாரம் படம் அதன் உச்சம். அது கமலால் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியும் என்று காட்டவே எடுக்கப்பட்டது தான். அதை மிகச் சிறப்பாக நிறைவேற்றி இருந்தார். திறம்பட்ட நடிப்பு தான் அதன் ஆதாரம். மேக்கப் அதில் ஒரு கருவி மட்டுமே.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய சினிமாவின் சிறந்த நடிகன் கமல் ஹாசனே. அவரளவோ, மிகச் சில படங்களில் அவரைத் தாண்டியும் சென்றோர் மிகச் சிலர் மட்டுமே. மோகன்லால் போல். சிவாஜி கணேசன் போல். மற்றபடி தனுஷ் போன்ற சிறுவர்கள் அவ்விடத்தை நெருங்க இன்னும் நூறு நடிப்புப் பங்களிப்புகள் செய்ய வேண்டும் என்பதை அவர்தம் ரசிகர்கள் உணரவும் ஏற்கவும் வேண்டும்.

அரசியலில் தோற்று மீண்டும் சினிமாவின் பக்கம் அவர் திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு பதிவிட்டுள்ளார் தீவிர கமல் ரசிகரான எழுத்தாளர் சி சரவணகார்த்திகேயன். பெரும்பாலான கமல் ரசிகர்கள் இதை தான் வேண்டுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

Related Articles

வாத்தியார் பிள்ளைகள், டாக்டர் பிள்ளைகள் ... நீட் தேர்வுக்கும் தமிழகத்துக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் குறிப்பிட...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...
கரு கலைப்பு மாத்திரை உண்டால் மார்பகப் பு... விகடனில் தொடராக வந்து இப்போது அதன் தொகுப்பு புத்தகம் கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது. காமம் பற்றிய இணையதள பக்கங்கள், புத்தகங்கள் போன்றவற்றால் ...
தலையில் காயம்பட்டு வந்தவருக்குக் காலில் ... தமிழ் சினிமாக்களில் நாம் அடிக்கடி காணும் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. தலைவலி என்று சென்ற நோயாளிக்குத் தவறுதலாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து விடுவா...

Be the first to comment on "அரசியலில் தோற்று சினிமாவுக்கே திரும்ப வேண்டும்! – கமல் ரசிகரின் வேண்டுகோள்!"

Leave a comment

Your email address will not be published.


*