ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்!

Learn about Icehouse and Leggings

ஐஸ் ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஐஸ் ஹவுஸில் குளிர் தாங்க முடியாமல் சட்டை இல்லாமல் நம்ம தமிழர்கள் வேலை செய்தார்கள் மற்றும் லெக்கின்ஸ் குளிர்பிரதேச உடை என்பதையும் தவிர வேற எந்த தொடர்பும் இல்லை. 

ஐஸ்ஹவுஸ் என பெயர் கொண்ட கட்டிடங்கள் ஆங்கிலேய ஆட்சி நடந்த நாடுகள் முழுசும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன.  அதாவது குளிர்சாதன பெட்டிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மேன்மை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அதிகாரிகள் எங்கே எங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அருந்தும் சாராயத்தில் ஐஸ் கட்டிகள் மிதக்க வேண்டி ஐஸ் அவுஸ் கட்டிடங்களும் பாறை பாறையாக கப்பலில் வரும் ஐஸ் கட்டிகளை உடைத்து பிளக்க அடிமைகளும் தேவைப்பட்டார்கள். 

1833 ஆம் ஆண்டு பிரிட்ரிக் டியூடர் என்கிற பாஸ்டனை சேர்ந்த ஐஸ் வணிகர் வட அமெரிக்காவின் குளிர் ஏரிகளில் இருந்து மாபெரும் ஐஸ் பாளங்களை ‘கிளிப்பர் டாஸ்கானி’ என்கிற கப்பலில் இந்தியாவிற்கு கொண்டு வந்தார். நம்ம சுப்பனும் குப்பனும் ஐஸ் கட்டிகளை பார்த்தது அப்ப தான்யா முதன் முதலில் நடந்தது. ஆறு மாசம் பயணம் செய்து வந்த ராட்சச பனிமலைகள் அடுத்த ஒரு வருஷத்துக்கு ஒரு உருகாம வைத்து பாதுகாக்க பம்பாய் கொல்கத்தா மற்றும் சென்னை பட்டணத்துல மூன்று ஐஸ் ஹவுஸ் கட்டினாரு திருவாளர் டியூடர்.  இன்று நாம் பார்க்கிற இந்த சென்னை ஐஸ் ஹவுஸ் ஒன்றுதான் அதே வடிவத்தில் மிச்சம் இருக்கு. ஆனால் இப்போது நாம் பார்க்கிற ஜன்னல்கள் எல்லாம் அப்போது கிடையாது. வெறும் சுவர்கள் மட்டுமே. பம்பாய் ஐஸ் ஹவுஸையும் கொல்கத்தா ஐஸ் ஹவுஸையும் எந்த ரியல் எஸ்டேட் காரன் எப்போ ஏப்பம் விட்டானோ தெரியல. 150 வருஷ கதைகளை உள்ளே நடந்த பயங்கரங்களை சாதனைகளை எல்லாவற்றையும் சுமந்துகொண்டு இன்றைக்கும் அதே ஐஸ் ஹவுஸ் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது காலத்தின் மௌன சாட்சியாக. 

இதே ஐஸ் ஹவுஸில் தான் இந்தியாவின் முதல் தொழிலாளர் புரட்சி நடந்தது தெரியுமோ? திரு. வி. க தன் சுயசரிதையில் இதை பற்றி எழுதியிருக்கிறார். ஜெயமோகன் ‘வெள்ளையானை’ என்கிற தன் வரலாற்று புனைவு ஒன்றில் பதிகிறார். ஐஸ் கட்டிகளை உடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் 1878ல் தங்கள்மீது சுமத்தப்பட்ட மிகக் கடும் பணிச் சூழலை எதிர்த்து sit in strike செய்திருக்கிறார்கள்.   அன்றைய சென்னையில் இரு நகரங்கள் இருந்திருக்க வேண்டும். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே இருந்த பகுதி வெள்ளையர் நகரம். வெள்ளையர் களுக்கான ஏவல் கூவல் பணி செய்த ஏழை இந்தியர்கள் வாழ்ந்தது கருப்பு நகரம். சென்னை நகரம் பெரும் பஞ்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அன்றைய அடிமை நிலைமையில் அவர்கள் இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை செய்திருக்க வேண்டும் என்றால் கற்பனையிலும் எட்டாத பயங்கரங்களை அவர்களின் முதலாளிகள் செய்திருக்கவேண்டும்.  வெளிச்சமும் வெப்பமும் உள்ளே வராத மரணக் கிணறு போன்ற அமைப்பில் உள்ள வட்டமான சுற்றுச் சுவர்களில் உள்ளே எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ?

காலம் முன்னே நகர்ந்தது. நசுக்கப்பட்ட பல தொழிலாளர்களின் வாழ்வை சமூகம் உயர்த்தியதோ என்னவோ அவர்களின் இழிநிலையை பல சமயம் அறிவியல் கண்டுபிடிப்புகள் தான் மாற்றின. steam processing  என்கிற ஐஸ் உருவாக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் பின் ஐஸ் கட்டிப் பாளங்களை கப்பலில் கொண்டுவர வேண்டிய தேவை இல்லாமல் இங்கேயே ஐஸ் உருவாக்க முடியும் என்கிற நிலை வந்தது. பிரெட்ரிக் டியூடரின்  வியாபாரமும் சரிந்தது. ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் விற்க முடிவு செய்தது அமெரிக்க கம்பெனி. பிலிகிரி அய்யங்கார் என்கிற திருவல்லிக்கேணி வக்கீல் ஐஸ்ஹவுஸ் கட்டிடத்தை வாங்கி castle kernan என்கிற பெயர் சூட்டி  அழகான ஜன்னல்களை அமைத்தார். 

வருடம் 1897 பிப்ரவரி 6.  ஐஸ் ஹவுஸ் கட்டிடமே ஆனந்த யாழினை மீட்டியது. அன்று அங்கே ஒரு யுக புருஷனின் காலடி பட்டது. அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்து புகைவண்டி நிலையத்தில் இருந்து நேரே ஐஸ்ஹவுஸ்க்கு வந்தார். ஒன்பது நாட்கள் இங்கே தங்கிய சுவாமிஜி தன் பொறி பறக்கும் 7 பிரசங்கங்களை நிகழ்த்தியதும் இங்கேதான். 

அவரின் விருப்பப்படி சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்பவர் 1897ம் மார்ச் மாதம் இங்கேயே வந்து தங்கியிருந்து ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளையை ஐஸ் ஹவுஸ்ஸில் உருவாக்கினார். 

பிலிகிரி ஐயங்காரின் மரணத்திற்குப் பிறகு 1917இல் அரசு ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தை எடுத்துக் கொண்டது.  சென்னை மாகாணத்தின் முதல் இந்து பெண் பட்டதாரியும் விதவைப் பெண்களின் கல்விக்காக அயராது உழைத்தவருமான சகோதரி சுப்புலட்சுமியின் கோரிக்கைப்படி ஐஸ் ஹவுஸ் கட்டடம் படிக்கும் விதவை பெண்களின் விடுதியாக கொடுக்கப்பட்டது. அவர்களை பாதுகாக்க சுப்புலட்சுமியின் சித்தி வெளி வெராண்டாவில் இரவெல்லாம் காவல் இருப்பாராம். அந்த இடம் சித்தி வெரண்டா என்றே பலகாலம் அழைக்கப்பட்டது. 

1922 அரசு ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தை ஆசிரியர்கள் விடுதியாக மாற்றியது. லேடி வெல்லிங்கடன் ஆசிரியப் பள்ளிப் பயிற்சிக் கல்லூரி தொடங்கியபின் ஐஸ் ஹவுஸ் கட்டிடம் விடுதியானது. பள்ளி வகுப்பறை ஆகவும் ஆனது. 1963 ஐஸ் ஹவுஸ் என்கிற பெயர் விவேகானந்தர் இல்லம் என்று மாற்றப்பட்டது. 

பிப்ரவரி 1987 சுவாமிஜியின் சென்னை விஜயத்தின் 100வது ஜெயந்தியை கொண்டாட அரசு விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ணா மிஷனுக்கு வழங்கிவிட்டது. 

லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்: 

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து என்ற ஜேசுதாஸின் அந்த நாளைய பாடலை யாரேனும் காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி கருப்பு ஸ்டிக்கர் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் என ரீமேக் செய்தாலும் செய்யலாம். இன்று லெகின்ஸ் அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை. 

எல்லா உடைகளுக்கும் ஒரு வரலாறும் ஒரு பின்புலமும் இருப்பதுபோலவே லெக்கின்ஸ்ற்க்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெகின்ஸ் என்பது ஆண் பெண் இருவருக்குமான உடையாகத்தான் ஆரம்பித்தில் இருந்தது.  பதினாறாம் நூற்றாண்டிலிருந்து வலம்வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும் பெண்களும் தங்கள் கால்சராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ள கண்டு பிடித்த உடையே லெக்கின்ஸ்.  அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒரு வழியாக 1960 க்கு பின் அமெரிக்காவில் இன்று இருப்பது போன்ற லெகின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ் காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இலைகளால் உருவாக ஆரம்பித்தது இதே காலகட்டத்தில்தான். 

பின் கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை இந்திய பெண்களுக்கு பிடித்தமான உடை ஆகிப்போனது.  கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் தான் சென்னை போன்ற தென்னிந்திய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக சல்வர் கமீஸ் என்கிற உடை.  தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின் அதை அணியும் பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை வந்தது. கமீஸ் எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்துவிடும்.  கால் பகுதிக்கான சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. (சல்வாருக்கும் சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும். ச்சூரி என்றால் இந்தியில் வளையல்). இந்தப் பிரச்சினையை லெக்கின்ஸ் தீர்த்தது. 

கருப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில் ஐந்து ஆறு லெக்கின்ஸ் வாங்கி கொடியில் தொங்க போட்டுவிட்டால் கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து ‘மேட்சிங்’ லெக்கின்ஸ் அணிந்தால் பிரச்சனை போயே போச்சு.  காலை தூக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் ஒரு தாதா மென்மையான உடை என்கிற சவுகரியம். ‘அயர்ன்’ செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி. லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள். ‘லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா’ என்று விவாதம் நடத்தி லெக்கின்ஸ் அணிந்த பெண்கள் அறியாதபடி ஆபத்தான கோணங்களில் அவர்களை படம் எடுத்து ஒரு பத்திரிக்கை வெளியிட்டது. 

பத்திரிகைகள் யாவும் தம் பருத்த கால்களில் முக்கால் அளவு வெளியே தெரிய அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியைத் தூக்கி உள்ளே இருக்கும் பட்டாபட்டி உள்ளாடையை வெளிப்படுத்தும் ஆண்களை படம் பிடித்து போடவே மாட்டார்கள். அவர்களின் உடைகளை பற்றி விவாதம் நடத்த மாட்டார்கள். 

ஏனெனில் ஆணின் உடை எவ்வளவு ஆபாசமேயானாலும் விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனைப் பொருள். இந்த விவாதங்கள் வரும்போது ‘நாங்க இதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன உங்க பார்வையை சரியா பாருங்க’ என்று பெண்கள் தரப்பும் ‘உங்க பாதுகாப்புக்கு தானே நாங்க பேசறோம்’ என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிட்டுவர்.  ஜீன்ஸ் அணிந்த பெண் நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும் மேலே துப்பட்டா அணியாத பெண் கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெகின்ஸ் அணியலாமா? கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டெல்லி பஸ்சில் நடந்த நிர்பயா சம்பவத்திற்குப் பின் பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர் ‘பெண்கள் நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால் அவர்களுக்கு அது பாதுகாப்பு’ எனக் கூறினார். 

இன்னும் சிலர் வழங்கிய அறிவுரைகள் ‘பெண்கள் சரியான டிரஸ் போட்டுகிட்டா ஆம்பள ஏன் சார் பாக்கப் போறான்? மற்றும் ‘பெண்கள் ஒழுங்கா இருந்தா நம்ம கலாச்சாரமே சீராக இருக்கும்…’ இத்தியாதி… இத்தியாதி…  பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும் குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கிக் கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம். 

லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையைக் கூட மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமும் தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால் எந்த பவித்ரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும். 

ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ‘உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக் கூடும்’ என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர். உடைகளில் கவுரவம் என்பது பெண்ணின் கருத்தோட்டத்திலும் பெண்ணை வெறித்து பார்க்க கூடாது என்ற கண்ணியம்,  ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியது ஒரு நாகரீக சமூகத்தின் சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்துவிடும். ஏனெனில் உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால் மாறாத மானுட மதிப்பீடு என்பது ஆண் பெண்ணை பார்க்கும் பார்வை, ‘இவள் உடல் மட்டுமல்ல ஒரு உயிர் ஒரு அறிவு ஒரு ஆன்மா என்ற பார்வை. இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும் பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள் ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  நமக்கு வேறு என்னதான் வழி?

Related Articles

டெங்கு காய்ச்சலும் நிலவேம்பு கசாயமும் பன... கடந்த ஆண்டு டெங்குவினால் தமிழிகம் சந்தித்த இன்னல்கள் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. தற்போது மழை, குளிர் என்று தொற்றுகள் அதிகம் பரவு...
165 தமிழர்கள் என்ன ஆனார்கள்? ஒட்டுமொத்த ... தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? பல்வேறு நாடுகளில் தமிழர்கள், தமிழ் வம்சாவளிகள் முக்கிய பதவியில் இருந்தாலும் அந்நாடுகளில் வாழும் சாமான்யனின் நிலை...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும்! ... காதலா காதலாஇயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்நடிகர்கள்: கமல், பிரபுதேவா(ஓவியர்), ரம்பா & சௌந்தர்யா(ஓவியக்கல்லூரி மாணவிகள்)கதை: ஒரு பொய் பல...
சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?... நாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத...

Be the first to comment on "ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்!"

Leave a comment

Your email address will not be published.


*