மீன்குழம்பும் பொங்கப்பானையும்! – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

netizens criticise rajinikanth

1. ரஜினிக்கு இப்போதைய சூழலில் கட்சி ஆரம்பிச்சா வேலைக்காகாதுன்னு தெரிஞ்சுடுச்சு. இத்தனை வயசுக்கப்பறம் வந்து 5, 10% ஓட்டுக்கள் வாங்கவும் இமேஜ் பாதிக்குது. அதுக்காக இப்ப எழுச்சி வரட்டும்கறார்.  உண்மையிலேயே இப்பக் கூட வர மாட்டேன்னு உடைச்சு சொல்லிட்டாக் கூட நல்லதுதான்.

பாடுபட்டு கைக்காசு போட்டு மன்றத்து ஆளுங்க நிறைய நல்ல விசயங்கள் பண்றாங்க. நிறைய செய்திகள் பாக்கறேன். நல்ல விசயம்தான். ஆனா அதுக்கெல்லாம் பின்னாடி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அது ஏமாற்றமா மாறிட்டா அந்த வெறுப்பு ரொம்ப உக்கிரமா ஆகிடும். இப்படி போர் வரட்டும், எழுச்சி வரட்டும்னு இழுத்துட்டே போறது நல்லதில்லை. 

இதுக்காக எனக்கு மென்சன் பண்ணி திட்டப் போறவங்களுக்கு… உங்க மனசாட்சியையே கேட்டுப் பாருங்க. இந்தக் கருத்தையெல்லாம் மக்கள்ட போய் சேர்க்க 4 மக்களை களத்தில் சந்திச்சு கூட்டம் போட்டு சொன்னால் கூட மக்கள் நம்புவாங்க. களத்தையே சந்திக்காம ஒரு ப்ரஸ் மீட்ல எழுச்சியை வரவைக்க முடியும்னு அவர் நம்பறார்னா தமிழக அரசியலை இன்னும் அவர் புரிஞ்சுக்கலைன்னு தான் அர்த்தம். அல்லது இப்போதைக்கு தப்பிக்கற டெக்னிக். 

நான் எப்பவும் இவர் அரசியலுக்கு வரணும்னு நினைச்சதோ ஆதரிச்சதோ இல்லை. ஆனா அதை நம்பி காத்திருக்கறவங்களுக்காவது ஒழுங்கா ஒரு பதில் சொல்லலாம்.

இப்படி ஒரு சிஸ்டம் கொண்டு வரேன்னு கட்சி ஆரம்பிச்சு செயல்படுத்தி காட்டறது வேற. இதையெல்லாம் மக்கள் ஏத்துக்கிட்டு அலை அடிச்சப்பறம் வரேன்னு சொல்றது மொத்தமா தப்பித்தல்தான். அல்லது தற்காலிக தப்பித்தல். அரசியல்ல ரஜினியை எதிர்பாக்காத எனக்கே இது சலிப்பைத் தருதுன்னா… அதை எதிர்பாத்தவங்களுக்கு  எவ்ளோ ஏமாற்றமாகி இருக்கும்!? இன்னொரு 6 மாசம் கழிச்சு நான் எதிர்பார்த்த எழுச்சி வரலைன்னு சொல்றதை விட மேலும் இழுக்காம வரமாட்டேன்னு சொல்லிடறது பெட்டர்.

2. ரஜினி அறிவிப்பு

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மதன் கதாபாத்திரத்தில் கமல் நாகேஷிடம் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருப்பதுதான் எரிச்சல் தருகிறது அதனால், தான் செய்த ஊழலை ஒத்துக் கொண்டால் தானே உதவுதாகச் சொல்வார். 

அதற்கு நாகேஷ் ஆமோதித்து விட்டு உண்மையைச் சொல்லத் தயாராகி கமலிடம் காதைக் காட்டுமாறு கேட்பார். சரி என்று அவரும் இரகசியத்தைக் கேட்க அருகே காதை நீட்டும் போது மென்குரலில் ‘நான் ஒன்னுமே பண்ணல சார்’ என்பார். 

பழைய தங்கவேலு படத்திலும் வரும் இதேபோன்ற காமெடியில் அப்படித்தான் ஒருவன் ‘சார் நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன், பத்திரிக்கைல மட்டும் போட்றாதீங்க’ என்று பயத்துடன் சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அவரிடம் இரகசியமாக ‘நான் ஒன்னுமே பண்ணலங்க’ என்பான். 

தங்கவேல் கடுப்பாகி ‘டேய், இதையாடா பத்திரிக்கைல போட முடியும்’ என்று கேட்பார்.

அது நினைவிற்கு வந்து வெளிப்படையாகச் சிரித்துவிட்டேன் இன்று நடந்த பிரஸ் மீட்டை நினைத்ததும்.

3. இன்னிக்கு காலையிலிருந்தே பயமாக இருந்தது.

“அவர் கட்சி ஆரம்பிக்கமாட்டார்னு தொடர்ந்து எல்லா சேனல்களிலும் கற்பூரம் மேல சத்தியம் பண்ணி கூவிகிட்டே இருந்தீங்களே,  இன்னிக்கு தலீவர் பேரு அனவுன்ஸ் பண்ணீட்டா என்ன செய்வீங்க?” அப்பிடீன்னு கேட்டுட்டாட்டாங்க.

நானும் இன்னாடா பண்றது, சேனல்காரங்க கூப்பிட்டு கலாய்ப்பாங்களேன்னு கவலையா இருந்தேன்.

ஸ்ப்பா, நல்ல வேளை, தப்பிச்சேன்.

முதல்ல, மக்கள் எழுச்சி நடக்கணுமாம்ல!

4. ரஜினி அரசியலுக்கு வந்து, தேர்தல்ல நின்னு, ஜெயிச்சி ஆட்சி அமைக்கிறதெல்லாம் ரொம்ப தூரம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சிம்பிளான ஒரே கேள்விதான் இருக்கு எங்கிட்ட. இதுவரைக்கும் அரசியலுக்கு வர்றேன்னு சொன்ன எவனாவது ரஜினி மாதிரி தில்லா “சிஎம் கேன்டிடேட் நான் கிடையாது” ன்னு சொல்லியிருக்கானா? அப்படி சொன்னா அவருக்கு ஆதரவு தர்ற பலரே மனசு வருத்தப்படுவாங்கன்னு அவருக்கு தெரியும். ஆனாலும் அவர் தெளிவா அறிவிச்சிருக்காரு. 

இத நான் அரசியலுக்கு வந்தப்புறம் கூட சொல்லியிருக்கலாம்.. ஆனா அது மக்களை, அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையை கெடுக்குற மாதிரி ஆயிரும்னு சொல்றாரு. 

இப்படி பேசுன அல்லது பேசுற வேற ஒரு கட்சித்தலைவனை காட்டிருங்க. 

முடியாது. ஏன்னா எவனும் இல்ல. இதோ ஸ்டாலினுக்கு அப்புறம் கட்சி உதயநிதிக்குதான்னு தெரிஞ்ச உபிஸ் யாராவது இதுக்கு பதில் சொல்லலாம்.

5. #ஒரு_கதை…!

ஒரு ஊர்ல ஒரு கடைத்தெரு! நிறைய கடைகள்… நிறைய வாடிக்கையாளர்கள்! எப்போதும் ஜே..ஜேன்னு கூட்டம் கூடும்!  வழக்கம்போல ‘கப்பம்’ கேட்கிற ரவுடிக கூட்டம், லஞ்சம் வாங்குற கும்பல் என பல தொல்லைகள்! அதுல ‘அர்ணாஜலம்’ னு ஒரு ஆளு கடைத்தெரு நடுவில ஒரு கடை வெச்சிருந்தான்! அந்தக் கடைக்கு அவன் எப்ப வர்ரறான் எப்ப வெளில போவான் னு யாருக்கும் தெரியாது! ‘அவுசாரி போனாலும் மொகராசி வேணும்னு’ சொல்லுவாங்களே, அப்படி ஒரு ராசிஅவுனுக்கு! ஆளு பாக்க சுமாரான பர்சனாலிடிதான்னாலும் எப்பவும் பந்தாவா பஞ்ச் டயலாக் பேசி உட்டாலக்கடி வேலை பண்ணியே எல்லாத்தையும் பயங்காட்டி வெச்சிருந்தான். ‘அர்ணாஜலம்’ தன்னைச் சுத்தியும் ஒரு ஜால்ராக் கூட்டத்தை எப்பவும் வெச்சிருந்தான்! ஒரு மாமூல் வாங்கற கோஷ்டிகளுக்குள்ள ஒரு சவால் அவன் கிட்ட யாராவது ஒருத்தன் மாமூல் வாங்கிக் காட்டனும்னு! பெரிய ரவுடி ஒருத்தன் போய்க் கடை முன்னாடி நின்று” டேய் அர்ணாஜலம்! நீ இன்னா அவ்ளோ பெரிய ஆளா? ஒழுங்கா மாமூலை எடுத்து வைன்னானாம்! அர்ணாஜலத்துக்கு பயந்து வந்துச்சு! ஆனா வெளில காட்டிக்காம “டேய் நான் ஒரு ஒதே ஒதிச்சா.. அது நூறு ஒதி மாத்ரி” அப்டின்னு சொல்லிட்டு கல்லாவுல ஒக்காந்து பஞ்ச் டயலாக் பேசுனான்.

அதற்கு ரவுடி “டேய்ய்ய்ய்ய்ன்”னு கொரலு குடுத்தான்!

அப்பத்தான் வீட்ல கொழந்தைக்கு வெளையாட பொம்மைத் துப்பாக்கி வாங்கி வச்சுருந்தது நெனைவுக்கு வந்துச்சு.  எப்பவும் கல்லாவுல சம்மணம் போட்டு ஒக்காரும் அவன் ஒக்காந்த படியே பொம்மைத் துப்பாக்கிய எடுத்துக் காட்டி ‘டேய் நான் எந்நதிரிச்சா தெரியும்! ஆம்மா..!’ அப்டின்னான்!

அன்னேலிருந்து “நான் எந்திரச்சா தெரியும்” ங்கறது அர்ணாஜலத்தோட பெர்மனன்ட்  பஞ்ச் டயலாக் ஆகிடுச்சு’ அந்தக் கடைத்தெருவே அவனைப் பார்த்து பயந்துச்சுன்னா பாரேன்!

ஒரு நா அந்தக் கடைத்தெருவுல ‘தீ’ புடிச்சிருச்சாம், எல்லாரும் உயிர் தப்பிச்சாப் போதும்னு ஓடினாங்க!  அர்ணாஜலம் மட்டும் ஒக்காந்தபடியே “டேய் யாராவது வந்து என்னைத் தூக்கிட்டுப் போங்கடா!” ன்னு கத்திகிட்டே கெடந்தானாம்!  அப்ப ஓடிகிட்டிருந்த ஒருத்தன் ‘ஏன்டா கெழட்டு முன்டம்? இப்பக்கூட பந்தாவா? எந்திரிச்சு ஓடுடா..!” ன்னானாம்! அதற்கு நம்ப ‘அர்ணாஜலம்’ “ஐயா எனக்கு ரெண்டு காலும். இல்லீங்கய்யா! யாராவது தூக்கி விட்டாத்தான் நடக்கவே முடியும்” அப்டின்னானாம்!

 அதற்கு அவன் “அடப்பாவி எப்பப் பாரும் ரநான் எந்திரிச்சாத் தெரியும்! எந்திரிச்சாத் தெரியும்’ னு குட்டு மெரட்டல் உட்டுட்டு இருந்து ரகசியம் இதுதானா?  த்த்தூ … இதெல்லாம் ஒரு பொழப்பு! தொலஞ்சுபோன்னு சொல்லி ‘அர்ணஜாலத்தை’ காப்பாத்தி விட்டானாம்!!

ங்கொப்பரான சத்தியமா இது அரசியல் பதிவு இல்லீங்கோ!”

6. ரஜினியின் ‘கனவுத் திட்டங்கள்’ எல்லாம் கேட்க நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் செல்லுபடியாவதற்கு நீண்ட காலமாகும். நம் முன் உள்ள சூழல் அப்படி.

ஏனெனில் ஊழல் இல்லாத அரசியலை விரும்பும் நமக்கு கூட நிஜத்தில் அது கானல் நீர் என்கிற நிதர்சனம் நன்றாகவே புரிந்திருக்கிறது. குறைந்தபட்ச ஊழலைச் செய்திருந்தால்தான் அவரை அரசியல்வாதி என்றே நாம் ஓப்புக் கொள்கிறோம். அந்த அளவிற்கு இந்த அமைப்பு சீர்கெட்டிருக்கிறது. 

பொதுவில் நேர்மையாளராகவும் தன்னலமற்ற சேவைகள் செய்தவராகவும் களப்போராளியாகவும் அறியப்பட்ட ஒரு தனிநபர், அதை இன்னமும் பரவலாக்குவதற்கு அதிகார அரசியலுக்குள் நுழைய முற்பட்டால் நாம் எள்ளி நகையாடுகிறோம். கருணையேயின்றி அவரைத் தோற்கடிக்கிறோம். இதற்கு பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. 

இவர்களை நிராகரித்து விட்டு ஊழல்வாதிகளையே மீண்டும் அதிகாரத்தில் அமர வைக்கிறோம். ஏனெனில் அவர்களுக்குப் பின்னால் மிகப் பெரிய கட்டுமானமும் அமைப்பும் இருக்கிறது, அவர்களால்தான் நிலைக்க முடியும் என்று நம்புகிறோம். ஒருவகையில் அது கசப்பான உண்மையே. 

ஆனால் மாற்றங்களை எங்கிருந்தாவது துவங்கித்தான் ஆக வேண்டும் என்பதை வாக்காளர்கள் உணரும் சூழல் இன்றைக்கு இல்லை. 

குழப்பவாதி என்பதைத் தாண்டி ரஜினி அடிப்படையில் நேர்மையான அரசியலைத் தர விரும்புவராக இருக்கலாம். அவர் சொல்லும் ‘திட்டங்கள்’ அப்படிப்பட்ட சமிக்ஞைகளைத்தான் தருகின்றன. 

ஆனால் களத்தில் இறங்காமல் துவக்கத்திலேயே – அதுவும் பின்னால் நின்று கொண்டு – அவர் அவற்றை சாதிக்க முற்படுவது வீணான முயற்சி. பின்னால் நின்று கொண்டு நல்லாட்சியை நடத்தும் அளவிற்கு அவர் மகத்தான தலைவர் அல்ல. அவரின் பின்னால் இருப்பவர்களும், ‘சம்பாதிக்காமல்’ சேவை மனப்பான்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. 

இந்த நடைமுறை உண்மைகள் ரஜினிக்குப் புரியாமலிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. சினிமாவில் நாயகன் பேசும் ஆவேசமான வசனங்களையே மிதமான தொனியில் மேடையில் பேசுகிறார். இதற்கு சினிமாவில் கைத்தட்டுவார்கள். மேடையில் கூட சிலர் கைத்தட்டலாம். ஆனால் வாக்கு அரசியலில் இவை செல்லுபடியாகாது. 

அரசியல் மாற்றத்தை எந்த வகையிலாவது விழைவது நல்ல விஷயம்தான். ஆனால் அந்தப் பொன்னுலகத்தை துவக்கத்திலேயே அமைக்க விரும்புவது வெறும் கனவாகத்தான் முடியும். 

ஏற்கெனவே ஊழலிலும் மோசடியிலும் திளைத்திருக்கிற அரசியல் வணிகர்கள், ஆதாயம் அடையும் கூலிக்காரர்கள், அப்பாவி ஆதரவாளர்கள் ரஜினியின் இது போன்ற பேச்சைக் கேட்டு நகைக்கலாம். எக்காளத்துடன் நிராகரிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு ரஜினி ஒரு போட்டியாளர்.

ஆனால் அதிலுள்ள ‘நல்லனவற்றை’ கட்சி சார்பற்ற வாக்காளர்களும் மலினமாகப் பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். அது போன்றனவற்றை மெல்ல மெல்ல நடைமுறையில் சாத்தியப்படுத்தும் ஒரு ‘அசலான’ தலைவரை தேடுவதுதான் தமிழக வாக்காளர்களுக்கு நல்லது.

7.எழுச்சி என்ற தலைப்பில் ஷோபா சக்தி எழுதிய சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. ஃபிரான்ஸில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கதாநாயகன் வேலை பார்க்கிற தொழிற்சாலையில் திடீரென உடல் பரிசோதனையைக் கட்டாயமாக்கி விடுவார்கள். அவன் இலங்கையில் இருந்த போது விதைப்பையில் தாக்கப்பட்டு கொட்டை வீங்கி பல வாரகாலம் அவதிப்பட்டவன். தற்சமயம் திருமணமாகி மனைவியைப் பிரிந்து அயல்நாட்டில் வாழ்பவனுக்கு தினமும் ஓர் ஆள் தனது உடலை அழுத்தித் தடவி, குறிப்பாக அந்தரங்க உறுப்புகளை, பரிசோதிப்பது என்பது அவன் அனுபவித்த வலியையும் அதனால் உண்டான உளவியல் பாதிப்பையும் நினைவூட்டி விடும்.

இந்தப் பரிசோதனையில் இருந்து தப்பிப்பதற்காக உள்ளாடை ஏதும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவான். பாதுகாவலர் பரிசோதிக்கும் போது தனது ஆணுறுப்பை விறைப்பாக்கிக் கொள்வான். இதனால் அசூயை அடையும் பாதுகாவலர் அவனை மட்டும் பரிசோதிக்காமல் அனுமதித்துக் கொண்டிருப்பார். இதைக் கவனிக்கும் நிர்வாகம் இந்தப் பணிக்கு வேறு நபரை நியமிக்கும். யார் வந்தாலும் இத்தகைய அழிச்சாட்டியத்தை எத்தனை நாட்களுக்குத் தான் சகித்துக் கொண்டிருப்பார்கள்? 

இவனைப் பின்பற்றி தங்களை அவமதிக்கும் இப்பரிசோதனை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மற்ற தொழிலாளர்களும் உள்ளாடை அணிய மாட்டார்கள். விரைவில் இச்செய்தி பரவி நாட்டிலுள்ள அத்தனை ஊழியர்களும் இவ்வெழுச்சிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். அதனால் ஊழியர்களைப் பரிசோதிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஓர் எழுச்சிக்குத் தூண்டுதலாக இப்படி எதையாவது செய்ய வேண்டும். புரிகிறதா ரஜினிகாந்த்?

Related Articles

தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்ச... தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணைய...
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்!... இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம்  என்பதற்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதற்...
சித்தார்த் ஜீவி பிரகாஷ் நடித்த “சி... பூ, பிச்சைக்காரன் போன்ற அருமையான திரைப்படங்கள் தந்த இயக்குனர் சசியின் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ஜீவி பைக் ரேசராக நடிக்க சித்தார்த் டிராபிக் போ...
இன்ஜினியரிங் படிச்சதால தான் குடிச்சிட்டு... தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ்ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்எடிட்டிங்: பிலாமின் ராஜ்இசை: சாம் சிஎஸ்எழுத்து இயக...

Be the first to comment on "மீன்குழம்பும் பொங்கப்பானையும்! – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*