கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

Onion Imports must be accelerated - Dr.Ramadas Report!

சென்னை கோயம்பேடு சந்தையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை விலைக் கடைகளிலும்  பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அவற்றையும் தாண்டி வெங்காய விலை உச்சத்தை நெருங்குவது மிகவும் கவலையளிக்கிறது.

கோயம்பேடு சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இப்போது மொத்த விற்பனை சந்தையில் ரூ.85 முதல் ரூ.95 ஆக அதிகரித்திக்கிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் பெரிய வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சிறிய வெங்காயத்தின் விலை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில்  கிலோ ரூ.180 வரையிலும், சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.200-க்கும் கூடுதலாகவும் உள்ளது.

வெங்காய விலை உயர்வுக்கான காரணங்கள் அனைவரும் அறிந்தவை தான். வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் ஆந்திரா, மராட்டியம் மற்றும் வட மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழை தான்  வெங்காய விலை உயர்வுக்கு காரணம் ஆகும். சென்னை கோயம்பேடு சந்தைக்கு சில வாரங்களுக்கு முன்பு வரை தினமும் 120 முதல் 150 சரக்குந்துகளில் வந்து கொண்டிருந்த பெரிய வெங்காயம், இப்போது  அதில் பாதிக்கும் குறைவாக 60 முதல் 70 சரக்குந்துகளில் தான் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், 60 முதல் 70 சரக்குந்துகளில் வந்து கொண்டிருந்த சிறிய வெங்காயம் இப்போது வெறும் 15 சரக்குந்துகளாக குறைந்து விட்டது. இரு வகை வெங்காயங்களின் விலை உயர்வுக்கு இது தான் முக்கியக் காரணமாகும்.

வெங்காயத்தின் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெங்காயப் பயன்பாட்டை குறைக்க முடியாது என்பதால், மக்களின் மாதாந்திர செலவு அதிகரித்து விட்டது. உணவகங்களில் வெங்காயத்திற்கு மாற்றாக வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதேநிலை  நீடித்தால் உணவகங்களில் உணவுகளின் விலைகள் உயர்த்தப்படும் ஆபத்தும் உள்ளது. இது பணிக்காக வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடும் ஏழை, நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் வெங்காய கையிருப்புக்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு   அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின் தேவைக்கும், வரவுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை; தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

வெங்காயத்தின் தேவைக்கு இணையாக வெங்காயத்தின் வரவை அதிகரிப்பதன் மூலமாக மட்டும் தான் விலையை கட்டுப்படுத்த முடியும். எகிப்து நாட்டிலிருந்து ஒன்றரை லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று கடந்த மாதமே மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும், பொதுத்துறை நிறுவனங்கள்  மூலமாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்வதற்காக நடைமுறை மிகவும் நீளமானது என்பதால், இன்று வரை எகிப்து வெங்காயம் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை. திசம்பர் மாத மத்தியில் தான் வெளிநாட்டு வெங்காயம் இந்தியா வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அதுவரை பொறுத்திருந்தால் வெங்காயத்தின்  விலை கிலோ ரூ.150 தாண்டிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, கொள்முதல் விதிகளை தளர்த்தியாவது வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்காயத்தின் தேவை – வரவு இடைவெளியை குறைப்பது ஒருபுறமிருக்க, விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தான் விலையை குறைக்க முடியும். தமிழக அரசு சார்பில் பண்ணைப் பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது என்ற போதிலும், தமிழகம் முழுவதும் மொத்தம் 79 பண்ணைப் பசுமைக் கடைகள் மட்டுமே உள்ளன. இவற்றில்  மட்டும் மலிவு விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வதால் வெளிச்சந்தையில் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. வெளிச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் விற்பனை மையங்களின் அளவை அதிகரிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்; அரசு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வது, வெங்காயம் இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மேலும் குறைத்து சந்தையில் அதிக  வெங்காயத்தைக் கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Articles

+2 மாணவர்களின் பெற்றோர்களே உஷார்! –... நாளை ( 16/05/2018) பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ரிசல்ட் என்றாலே அடுத்தநாள் பேப்பரை பார்க்க முடியாது. அவ்வளவு தற்கொலை ச...
கர்நாடக சீரியல் கில்லர் சயனைட் மோகனுக்கு... சீரியல் கில்லர் (Serial Killer) என்ற வார்த்தையை நாம் அடிக்கடி சினிமாக்களில் கேள்விப் பட்டிருப்போம். நாட்டில் தொடர் கொலைகள் நடக்கும் போதெல்லாம் தொடர் க...
இவர்களின் படங்களுக்கு விகடன் போட்ட மதிப்... சிவகார்த்திகேயன் படங்கள் : மெரினா - 43 3 - 42 மனம் கொத்திப் பறவை - 42 கேடி பில்லா கில்லாடி ரங்கா - 41 எதிர் நீச்சல் - 43 வரு...
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் ... அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத...

Be the first to comment on "கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!"

Leave a comment

Your email address will not be published.


*