ராஜ ராஜ சோழன் பற்றி பா. ரஞ்சித் பேசியது சரியா? வரலாற்று ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

ராஜ ராஜ சோழன் பற்றி பா. ரஞ்சித் பேசியது சரியா

பத்திரிக்கையாளம் மற்றும் எழுத்தாளர் கே. என் சிவராமன் அவர்களின் பதிவு :

 

* இன்றிருக்கும் தமிழக மக்கள் தொகை கிபி 9ம் நூற்றாண்டான பிற்கால சோழர் காலத்தில்  இல்லை…

 

* சாதிகள் பிற்கால சோழர் காலத்திலும் தொழில் சார்ந்தே இருந்தது – நெகிழ்வுத்தன்மையுடன். இன்றிருக்கும் இறுக்கம் அன்றில்லை. குறிப்பாக தீண்டாமை இல்லை.

 

* நிலங்களுக்கு உரிமையாளர்களாக மன்னர்கள் மட்டுமே இருந்தார்கள். அதை அனுபவிப்பவர்கள் மட்டுமே மக்கள். எல்லா சமூக மக்களும் தங்களுக்கான நிலங்களை அனுபவித்தார்கள். என்ன… அனுபவிப்பதை எந்த சமூகத்தாலும் விற்க முடியாது.

 

* பிராமணர்களுக்கு நிலங்களை ஒதுக்கும் ‘பிரும்மதேய’ வழிமுறை பல்லவர்கள் காலத்திலேயே தோன்றிவிட்டது. பிற்கால சோழர்கள் காலத்தில் அதன் எண்ணிக்கை அதிகமானது.

 

* ‘அரசு’ முறை தோன்றியபோதே அதன் உப விளைவாக தேவதாசி முறை  உருவாகிவிட்டது. போர் வீரர்களும் வணிகர்களும் சிற்பிகளும் கைவினைத் தொழிலாளர்களும் வேளாண் மக்களும் பாலியல் தொழிலை மேற்கொள்ளும் பெண்களை அணுகியிருக்கிறார்கள்.  

 

* அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து நீதி சாஸ்திரங்களையும் தழுவி கவுடில்யர் எழுதிய ‘அர்த்த சாஸ்திர’த்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை எப்படி ஒற்றர்களாக மன்னர்கள் பயன்படுத்த வேண்டும் என விளக்கியிருக்கிறார்.

 

* பிற்கால சோழர் காலம் வரை தமிழகத்தை ஆண்ட எல்லா சாம்ராஜ்ஜியங்களின் மன்னர்களும் எல்லா சமூகத்தை சேர்ந்த குறுநில மன்னர்களின் வீட்டில் இருந்தும் பெண் எடுத்தார்கள்; பெண் கொடுத்தார்கள். இதன் வழியாக எல்லா சமூகங்களும் (பின்னாளில் சாதியாக அணி திரண்டவை) அரசு அதிகாரங்களை அனுபவித்தன.

 

* விஜயநகர பேரரசு (நாயக்கர் காலம்) வலுவாக காலூன்றிய பிறகுதான் சாதி அமைப்புகள் தீண்டாமை என்னும் கொடூர கட்டத்தை நோக்கி நகர்ந்தன; இறுகின.

 

* கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நில உரிமையாளர்களாக தனி மனிதர்கள் மாறத் தொடங்கினார்கள். இதன் விளைவாக நில உரிமைகள் தொடர்பான போராட்டங்கள் வலுவடைந்தன. சாதி / தீண்டாமை கொடுமைகளுக்கும் இட்டுச் சென்றன.

 

* விஜய நகர பேரரசை உருவாக்கியவர்களும் அந்த அரசை தென்னிந்தியா முழுக்க பரப்ப ஆலோசனை வழங்கியவர்களும் 14 – 15ம் நூற்றாண்டை சேர்ந்த பார்ப்பனர்கள். கவனிக்க ‘அந்தணர்கள்’ என்ற பொருள் இவர்களுக்குப் பொருந்தாது. பார்ப்பன மேலாதிக்கத்தின் புள்ளி விருட்சமாக வளரத் தொடங்கியது இக்காலத்தில்தான்.

 

* பிற்கால சோழர்கள் காலத்திலேயே சாதி இறுக்கம் அடைந்துவிட்டது என்று இப்போது சொல்வதன் வழியாக விஜயநகர – நாயக்கர் கால கொடுங்கோன்மையை மறைக்கிறோம் என்று பொருள். அதாவது பார்ப்பனீய விஷத்தை மூடி மறைக்கிறோம் என்று அர்த்தம்.

 

* ஏனெனில் பிற்கால சோழர்களின் காலம் வரை மன்னர்களாக இருந்தவர்கள் யாரும் அந்தணர் குலத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இன்று இடைநிலை சாதிகளாக சொல்லப்படுபவர்கள்தான் – அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள்தான் – சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சிப் புரிந்தார்கள். விதிவிலக்காக அந்தணர்கள் சில காலம் ஆட்சி செய்திருக்கக் கூடும். ஆனால், பெரும்பான்மை அவர்கள் அல்ல. போலவே இக்காலத்தில் அந்தணர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கட்டளையிட்டு அமல்படுத்தும் இடத்தில் அவர்கள் அன்று இல்லை.

 

* ஆக, இன்று பிற்கால சோழர்கள் குறித்து அதுவும் சாதி தொடர்பாக பேசுவது என்பது முழுக்க முழுக்க பார்ப்பனீய விஷத்தை மறைக்கும் செயலே. இன்று இடைநிலை சாதிகளாக இருப்பவர்களை மறைமுகமாக தாக்கி அதன் வழியாக இப்போதைய பார்ப்பனீயத்துடன் கள்ளக் கூட்டு வைக்கும் நடவடிக்கையே.

 

* இன்று ஒடுக்கப்பட்ட சமூகம் / சாதியாக அறியப்படுபவர்கள் விஜயநகர – நாயக்கர் காலத்தில்தான் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

 

ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தது தேவரடியார் முறைதான்.

தேவதாசி முறை அல்ல.

 

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் தெலுங்கினத்தில் விலைமாதர்கள்.

தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு.

 

தேவரடியார்கள் தங்கள் நிலம் உள்ளிட்ட சொத்துக்களைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு கோயிலில் இருந்துகொண்டு  தெய்வப்பணி செய்த மிகப் புனிதமானவர்கள். தேவதாசிகள் என்பவர்கள் விலைமாதர்கள்.

 

தெலுங்கு நாயக்கர் ஆட்சிக்குப் பிறகுதான் தேவதாசி மரபு தமிழக கோயில்களில் உருவானது. தமிழர் மரபில் தேவதாசிகள் கிடையாது. தேவதாசிகளாக இருந்தவர்களும் தெலுங்கு சாதிப் பெண்கள்தான்.

 

தேவரடியார் என்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல; அவர்கள் சமூகம் கடந்து தொண்டு செய்த இறையடியார்கள். தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

 

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

 

பா. ரஞ்சித் கருத்து:

 

ராஜராஜ சோழன் தொடர்பான வரலாற்று  உண்மைகளை தான் பேசினேன். பல்வேறு புத்தகங்களில் உள்ள தகவல்களை தெரிவித்தேன். நிலப்பறிப்புக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினேன்.

 

என்னைப்போலவே பலரும் பேசினர். ஆனால் என் பேச்சு மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது.

 

உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. என் பேச்சால் மக்களிடையே பிரச்சினை ஏற்படுத்தவில்லை

 

– இயக்குனர் பா.ரஞ்சித்

Related Articles

இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத... இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும்...
வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலில... ரணசிங்கம் என்ற நாயகன் வழியாக ரத்தம் சொட்ட சொட்ட ஒரு சரித்திர நாவலை நம்முள் பதிய வைக்கிறார் எழுத்தாளர் வேல ராம மூர்த்தி. அந்தப் புத்தகத்தில் உள்ள உவமைக...
இவர்களில் “பொன்னியின் செல்வன̶்... கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி பல வருடங்களாகவே புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில...
வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு... ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...

Be the first to comment on "ராஜ ராஜ சோழன் பற்றி பா. ரஞ்சித் பேசியது சரியா? வரலாற்று ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?"

Leave a comment

Your email address will not be published.


*