மதுக்கடைகளின் எண்ணிக்கை, வணிக நேரத்தை குறைக்க நடவடிக்கை தேவை! அன்புமணி ராமதாஸ் அறிக்கை என்ன சொல்கிறது?

Report on reducing the business hours of bars by Anbumani Ramadoss

ஆந்திரத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் 880 மதுக்கடைகள், அதாவது 20% மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி மதுவிற்பனை நேரமும் 2 மணி நேரம் குறைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கடந்த மே மாதம் பொறுப்பேற்ற ஜகன்மோகன்ரெட்டி, அம்மாநிலத்தின் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளின் முதல்கட்டமாக ஆந்திரத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அரசுடைமையாக்கியுள்ள  அம்மாநில அரசு, 880 மதுக்கடைகளை செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் மூடியுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதியான நேற்று முதல் 3500 மதுக்கடைகள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மொத்தம் 12 மணி நேரம் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9.00 மணி மட்டுமே மது வணிகம் நடைபெறும் என்றும் ஆந்திர மாநில அரசு அறிவித்து, செயல்படுத்தியிருக்கிறது.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் முழு மதுவிலக்கு கனவு  அடுத்த 4 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் இதே போன்று தான் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட ஆந்திரத்தில் தனிநபர் மது பயன்பாடு அதிகம் என்ற போதிலும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு துணிச்சலாக  திட்டம் வகுத்து செயல்படுத்தத் தொடங்கியிருப்பது இலக்கை நோக்கிய தெளிவான பயணமாகவே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். அதேநேரத்தில்  மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், மது வணிக நேரத்தை குறைத்தும் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளையும் பா.ம.க. ஆதரித்து வருகிறது. அவ்வகையில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதைப் போன்றே, மது வணிக நேரத்தை குறைப்பதையும் முக்கியமான நடவடிக்கையாக பா.ம.க. கருதுகிறது. அதிலும் குறிப்பாக மதுவிற்பனை நேரம் மாலை நேரங்களில் குறைக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். மதுவிற்பனை மாலை நேரங்களில் தான் நடக்கிறது என்பதே அதற்கு காரணமாகும். அந்த கோணத்தில்  பார்க்கும் போது ஆந்திரத்தில் இரவு 8.00 மணியுடன் கடைகளை மூடுவது மது பயன்பாட்டை குறைக்கும். அத்துடன் மதுக்கடைகளுடன் இணைந்த பார்கள் கிடையாது; மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்காது என்ற ஆந்திர அரசின் கொள்கை முடிவு சாலை விபத்துகளைத் தடுக்கும்.

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையும், மது விற்பனையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6720 ஆக இருந்த மதுக்கடைகள் இப்போது 5198 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மது விற்பனை நேரமும் 12 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக  அதிமுக அரசின் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த 10 கோரிக்கைகளின் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆந்திரத்தில் அதிவேகத்தில் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு ஆகும். எனவே, படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்  நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும், விற்பனை நேரத்தை நண்பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை என்ற அளவில் குறைக்கவும் அரசு முன்வர வேண்டும். அத்துடன் மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்களை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, ஒரு சொட்டு மது கூட இல்லாத, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Related Articles

சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்... நடிகர் விவேக் : கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எ...
நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது ம... யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்கள...
பெண்கள் அரசியலுக்கு வர தயங்குவது ஏன்? அர... பிரதீபா பாட்டில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று தற்...
குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படு... நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ...

Be the first to comment on "மதுக்கடைகளின் எண்ணிக்கை, வணிக நேரத்தை குறைக்க நடவடிக்கை தேவை! அன்புமணி ராமதாஸ் அறிக்கை என்ன சொல்கிறது?"

Leave a comment

Your email address will not be published.


*