எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை யாருடையது? நீதி கேட்கும் எழுத்தாளர்!

SJ Surya's Monster Movie story in controversy!

கல்கி இதழில் சினிமா விமர்சனம் எழுதி வருபவர் திரு. லதானந்த். விமர்சனம் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுதக் கூடியவர். இரண்டு புத்தகங்களும் எழுதி உள்ளார். ஆக ஒரு எழுத்தாளரின் கதை மான்ஸ்டர் படக்குழுவினரால் திருடப்பட்டுள்ளதா என்று பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து எழுத்தாளர் லதானந்த் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை இங்கே:

 

19.3.2017 தேதியிட்ட கல்கி இதழில் நான் எழுதிய,’குளுவான்’ என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.

 

அதை எஸ்.ஜே.சூர்யா நடித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ‘மான்ஸ்டர்’ என்ற தமிழ்ப் படத்தில் என்னிடம் அனுமதி பெறாமல் கையாண்டிருக்கிறார்கள். இந்தப் படம் 17.5.2019 அன்று வெளியாக இருக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.

 

இது தொடர்பாக ‘காலைக் கதிர்’ நாளிதழிலும் செய்தி வெளியாகி இருப்பதாக ஒர் அன்பர் புகைப்பட நகல் எடுத்து அனுப்பியிருந்தார்.

 

அதையும், நான் எழுதி, கல்கியில் வெளியான எனது ‘குளுவான்’ சிறுகதையின் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.

 

எளிதில் படிக்க வசதியாக வேர்ட் டாக்குமென்டிலும் கொடுத்திருக்கிறேன்.

 

//குளுவான்

லதானந்த்

எலித் தொந்தரவு ரொம்பச் சாஸ்தியாயிருச்சு. காரை நிறுத்தற ஷெட்டுக்குள்ளாற நிறைய கண்டான் முண்டான் சாமானங்கள் இருக்கிறது எலிக்குக் கொண்ட்டாட்டமாப் போச்சு. சில சமயம் ஸ்டோர் ரூமூக்குள்ளவும் எலிப் புளுக்கைகள் இருப்பதாக லதாள் வேற அடிக்கொருக்காப் புகார் சொல்லிட்டே இருக்கா. மாதப்பனுக்கும் எலினாலே அலர்ஜிதான்.

ஒரு தடவை புத்தம் புதுக் கார்ல அப்ஹோல்சரி மாத்தி வந்த அன்னிக்கே அதைக் கடித்துக் குதறிப் போட்ருந்துச்சு எலி. அந்த எலியைப் பழி வாங்கச் சமயம் பத்துகிட்டிருந்தான் மாதப்பன்.

“உங்களுக்கு எங்க மச்சா நேரம் சிக்குது? ஒண்ணா வேலை வேலைனு ராத்திரி பகலாச் சுத்து வேண்டியது… வீட்லிருக்கற நேரம்னா எப்பப் பாத்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் கிரகத்துக்கு முன்னால உக்காந்துகிட்டுக் தன்குத் தானே சிரிச்சுகிட்டிருக்க வேண்டியது. இந்த லட்சணத்துல எலியப் பத்துன நெனப்பு எங்க வரும்?”

“ஒரு படைப்பின் உன்னதத் தருணங்களை உருவாக்கும் உன்மத்த நிலையில் கணிப்பொறி முன் நான் அமர்வதை…..”

“இந்த ஜாலக்கெல்லாம் என்ர கிட்ட வேண்டாம். ஒழுங்காத் தமிழ்ல பேசுங்க. நீங்க அதுல என்ன கிரகத்தப் பாக்கறீங்கனு தெரியாக்கும்……”

”நிறுத்து! நிறுத்து! இப்ப என்ன பண்ணணும்? எலியை ஒழிச்சுக்கட்டிட்டுத்தான் மத்த வேலை. சரியா? ஒரு பிரபல எழுத்தாளரும்கூட எலிக் காய்ச்சல் பத்தி அப்பப்ப எழுதுனதிலிருந்து எனக்கும் ’கெதக்கு’னுதான் இருக்குது.”

”என்ன கிரகமோ! இந்தப் பீடைக்கு ஒரு வழி பண்ணிப் போடுங்க”

அபூர்வமா அன்னிக்குக்கு மாதப்பனுக்கு லீவு கிடைச்சது. பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டியதையும் அனுப்பியாச்சு. இன்னிக்கு எலிக்கு ஒரு முடிவு கட்டிரலாம்னு தீர்மானிச்சுக்கிட்டான் மாதப்பன்.

சரி! எலியை எப்படி அப்புறப்படுத்துறது?

”எலிப் பாசாணம் வாங்கியாருட்டுமா?”

“அய்யே! அதத் தின்னுபோட்டு ஊட்டுக்குள்ள வந்து செத்துப் போயிருச்சுனா நாத்தம் குடலைப் பிடுங்கீரும்”

“பூனை ஒண்ணு வளர்த்தலாமா?”

“வேண்டவே வேண்டாம் சாமி! எங்க தோட்டத்து ஆத்தா பூனை கடிச்சு செத்தே போச்சு”

சரின்ட்டு மாதப்பன் தன்னோட ஃபிரண்டு மண்ணடிமாரி கிட்ட ஐடியா கேட்டாரு.

”இதாம் மேட்டரா? எலி எப்பையுமே சொவ்த்தோட ஒட்டிகினுதாம்பா ஓடும். அதுனால இன்னா பண்றே… அங்க இங்க பேஜார் பட்த்தி எலியக் கெளப்பு. அது ஓடி வர ஸொல்லோ, வயில ஒரு பகலய வெய்மே. எலி, பகலைக்கும் சொவ்த்துக்கும் மிடிலா க்ராஸ் பண்ண ஸொல்லோ டப்புனு சொவ்த்தோட சேத்து ஜாம் பண்ணிருபா.” அப்படின்னு ஓசன குடுத்தாரு மாரி.

மாரி சொன்னபடியே செஞ்சு பாத்தாரு மாதப்பன். எல்லாம் ரொம்ப கரக்டா இருந்துச்சு. ஆனாப் பலகையைச் சாத்துறதுல டைமிங் தப்பி, லதாளோட கால் பெருவெரல் ஜாமாயிருச்சு.

ஓக்கே! எலிப் பொறி வச்சுப் புடிக்கலாம்னு முடிவு பண்ணுனாங்க.அப்பவே கடைக்குப் போயி எலிப்பொறி கேட்டான் மாதப்பன்.

”ரண்டு டைப்பு இருக்குதுங்க எலிப்பொறில. ஒண்ணுல தேங்காயையோ, மசால் வடையையோ இந்த மேடைல வெச்சு செட் பண்ணீட்டிங்கனாப் போதுமுங்க. அதைத் தொட்டாப் படீர்னு அடிச்சு எலி சப்பழிஞ்சு போயிரும்.

இன்னொரு டைப்புல டப்பா மாதிரிப் பொட்டிக்குள்ளாற மசால் வடையை வச்சு செட் பண்ணிருங்க. எலி உள்ளாற போயிக் கடிச்சுதுனா, கூண்டோட மூடி விசுக்குனு பூட்டிக்கும். அப்பறமா எலியக் கொல்லுறது நெம்ப ஈசிதானுங்க”

அப்படினு விளக்கினாரு கடைக்காரர்.

“சரிங்க. எலியப் புடிச்சப்பறம் என்னங்க பண்றது?”

கடைக்காரர் ரொம்ப சுஸ்த் ஆயிட்டாரு. ’இவனுக்கு மீசை வளந்த அளவுக்கு அறிவு வளரலை’னு நினச்சுக்கிட்டு மறுபடியும் விளக்கினார்.

“எலிப் பொறிய ஒரு சாக்குக்குள்ள விட்டு நேக்காத் திறந்தா, எலி சாக்குக்குள்ளாற சாடிரும். சாக்கக் கெட்டியாக் கட்டிட்டாத் தீந்தது திருவிழா.”

“ஏனுங்க… சாக்குக்குள்ள இருக்குற எலிய என்னங்க பண்றது?”

கடைக்காரருக்கு லேசா எரிச்சல் வந்துருச்சு.

அதைக் காமிச்சுக்காம, ”சாக்க ஓங்கித் தரையில அடிச்சா எலி குளோசாயிரும். இல்லாட்டி எங்காச்சும் தள்ளிப் போயிப் பொதருக்குள்ளாற திறந்து விட்ருங்க. இல்லாட்டி உங்க வீட்ல பெரிய நாயிருக்குதல்ல… அது முன்னால திறந்து விட்டீங்கன்னாப் பழமாட்டத் தின்னுடுமே!”

அப்படின்னு சாக்குக்குள்ளாற சிக்குற எலிய டிஸ்போஸ் பண்ண ஐடியாக்களை அள்ளிக் குடுத்தாரு.

மாதப்பனுக்கு மொதோ வகை எலிப்பொறி திருப்தியில்ல. கொஞ்ச நாளாவே அடி, ஒதை, ரத்தம் பாக்குறது எல்லாம் நிறுத்திப் போட்டாரா? அதுனால ரெண்டாவது டைப் எலிப்பொறி வாங்கீட்டு வீட்டுக்கு வந்தாரு.

மசால் வடை வெச்சு செட் பண்ணியாச்சு!

நடு ரத்திரி ’டப்’ப்புனு ஒரு சத்தம்! ஓடிப் போயிப் பாத்தா எலிப்பொறி மூடி சாத்தியிருக்குது.

’சிக்கினார் சீத்தலைச் சாத்தனார்’னு நினைச்சுகிட்டே எலிபொறியை லேசா ஆட்டிப் பாக்குறாரு மாதப்பன்.

நிசப்தமா இருக்கு. என்னடானு மூடியத் திறந்தா எலியையும் காணோம்! மசால் வடையையும் காணோம்!

சரின்ட்டு அடுத்த நாளு கெட்டியா மசால் வடையை செட் பண்ணினாங்க மாதப்பன் தம்பதி. காலைல பாத்தா எலிப்பொறிக்குள்ளாற பெரிய சைஸ்ல ஒரு எலி மாட்டியிருக்குது. குறுக்கயும் மறுக்கயும் அத்டனூண்டு டப்பாவுக்குள்ள ஓடுது

.

மாதப்பனுக்கு ரொம்ப ஜாலியாயிருச்சு.

புதுசா, மனசுக்குப் புடிச்ச ஃபேஸ்புக் ஃபிரண்டுங்க ரெண்டு பேரு போன்ல பேசுன மாதிரி குதூகலமாயிட்டாரு.

லதாளுக்கும் சந்தோஷம்தான். “இந்தப் பீடையச் கொண்டுபோயி எங்காச்சும் விட்டுப்போட்டு வந்துருங்க” என்றாள்.

சரீன்ட்டு முகநூல்ல ஆயிரம் லைக் கிடைச்ச அபூர்வப் பிறவியாட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு மாதப்பனும் எலிப்பொறியத் தூக்கிட்டுப் புறப்பட ஆரம்பிச்சாரு.

வீட்டைத் தாண்டி ரெண்டு அடி வெச்சிருக்கமாட்டாரு…

அதுக்குள்ள, “மச்சா! மச்சா!“ அப்பிடீன்னு சத்தம் போட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே ஓடிவர்ரா லதா.

“மச்சா! கார்ச் செட்டுக்குள்ள அந்தப் பழைய டயரை நீக்கிப் பார்த்தேனா? நீங்களுந்தான் பாருங்க!”

அங்கே ஏழெட்டு எலிக் குஞ்சுகங்க இன்னமும் கண்ணுங்கூடத் திறக்காமல் நெளிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க.

“மச்சா! ரொம்பக் குளுவானா இருக்குதுங்க. வாயில பாலுங்கூட ஒட்டிக்கிட்டிருக்குது பாருங்க. மொதல்ல அந்த கூண்டைத் திறந்து அந்தக் கிரகத்தை இதுங்க கிட்டக்க விடுங்க. குளுவானுங்களப் பாத்தா நெம்பப் பாவமா இருக்குதுங்க!”//

இவ்வாறு தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் லதானந்த்.

Related Articles

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு... ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...
தியேட்டர் கிடைக்காததால் இணையத்தில் வெளிய... வருகிற 10 ம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது நமக்கு தெரிந்த விஷியமே. இப்போது அந்தப் படங்களுடன் சேர்த்...
நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரப... இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. " போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வு...

Be the first to comment on "எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை யாருடையது? நீதி கேட்கும் எழுத்தாளர்!"

Leave a comment

Your email address will not be published.


*