இந்திய சினிமாவின் பிரச்சனை இது தான். படிக்கும் வயதில் சரியாக படிக்காமல் பஸ் ஸ்டாப்புகளில் அமர்ந்து கொண்டு போகும் வரும் பெண்களை ஈவ் டீசிங் செய்யும் வெட்டிப்பசங்களை ஹீரோவாக காட்டுவது இன்னும் வேலை வெட்டி இல்லாததால் கையில் பொருள் சங்கிலி எடுத்துக்கொண்டு அடுத்தவனை வெட்டச்செல்வது.. இல்லாவிட்டால் பெரிய தாதாவிடம் அடியாளாக இருப்பது போல் ஹீரோக்கள் இருப்பார்கள். அந்த படங்களில் ஒரு வேலைவெட்டிக்கும் போகாமல் எப்படி சம்பாதிக்கிறார்கள்?
அவர்களுக்கு எப்படி இந்த நைக் ஷூ போட காசு வந்தது? இவையெல்லாம் தேவையில்லை.
மேலும் இது போன்று ஊர் சுற்றும் ஹீரோக்களின் மீது ஹீரோயின்களுக்கு கண்டவுடன் காதல் பற்றிக்கொள்ளுமாறு சில காட்சிகள். பிறகு வேலைவெட்டிக்கு போகாத பயலை நம்பி ஹீரோயின் தன் வீட்டை விட்டு வெளியே ஓடி வருவது போல ஒரு காட்சி
அந்த ஹீரோவுக்கு துணையாக அதே போன்று வேலையற்ற நண்பர்கள் என்று எதையெல்லாம் நாம் அன்றாட வாழ்க்கையில் மோசமாக நினைப்போமோ அதை எல்லாம் சினிமாவில் ஜோடித்து சிறப்பானதாக காட்டுவார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு இல்லாதவன் தனது சொந்த முயற்சியில் முன்னேறுவதாக காட்டமாட்டார்கள். கூட நான்கு பேருடன் சேர்ந்து டாஸ்மாக் சென்று சரக்கடிப்பதாக தம் அடிப்பதாக காட்டுவார்கள். மேலும் இந்த படத்தை பாருங்கள். இதில் வரும் இந்த அர்ஜுன் ரெட்டி எனும் சாடிஸ்ட் சைக்கோ கேரக்டர் ஒரு லட்சத்தில் ஒருவனுக்கு இருக்கும்.
இது போன்ற ஒருவனைக்கண்டால் அவனை உடனே மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவே சமூகத்தில் பலரும் விரும்புவோம் ஆனால் இந்த படத்தில் பாருங்கள்.
இவன் ஒரு டாக்டர் என்று மசாலா தடவி இவனது சைக்கோ தனங்களை ஜோடித்து இவனை பெரிய ஹீரோ மெட்டீரியல் ஆக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை நான்கு மொழிகளில் படம் பிடித்து வெளியிடுகிறார்கள் சினிமா எடுப்பவர்களுக்கு அது ஒரு தொழில்.
பணம் போட்டு லாபம் எடுக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அசுரன் படத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சார்ந்த ஏழை சம்சாரியின் வாழ்க்கையை மிகச்சிறப்பாக படம்பிடித்திருப்பார் வெற்றிமாறன். இந்தியாவில் சிவசாமியை போல பல கோடி மாந்தர்கள் உண்டு. நானே தினமும் இரண்டு சிவசாமியை ஆவது எனது கிளினிக்கில் பார்த்து வருகிறேன் .
ஆனால் இந்த அர்ஜுன் ரெட்டி கபீர் சிங் ஆதித்ய வர்மா போன்றவர்களை மருத்துவக் கல்லூரியில் பார்த்ததில்லை.. சினிமாக்களில் மட்டுமே இதுபோன்ற சைக்கோக்களை பார்க்கலாம் பெண்களை அடிக்கும் சைக்கோக்கள் சீரியல் கில்லர்கள் ரவுடிகள் தாதாக்கள் ( தமிழ் சினிமா நல்ல தாதாக்கள்) வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் வாலிபர்கள் கும்பலாக தண்ணி அடிக்கும் காட்சிகள் இவற்றை எல்லாம் தாண்டி பயணிக்கும் கதைக்களம் கொண்ட படங்களே வெகுஜன மக்களுக்கான சினிமாவாக இருக்க முடியும்.
Be the first to comment on "அர்ஜூன் ரெட்டி மாதிரி ஒரு சைக்கோ எந்த மருத்துவ கல்லூரியிலும் கிடையாது ! – மோசமான சினிமா குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவு!"