திருவள்ளுவரை, திருக்குறளை காவிச்சகதியால் கறைபடுத்த முடியாது! – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம்!

Thiruvalluvar and Thirukkural disgraced by saffronisation

#தமுஎகச_மாநிலக்குழு திருவள்ளுவர் சர்ச்சை குறித்து கண்டனம் தெரிவித்து உள்ளது. அது என்ன என்று பார்ப்போம். 

உலகப்பொதுமறையாம் திருக்குறளை யாத்தளித்த திருவள்ளுவரின் ஆளுமையையும் திருக்குறளின் மேன்மையையும் சிதைக்கும் விதமான சமீபத்திய நிகழ்வுகளைக் கண்டித்து தமுஎகச மாநிலத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 

 இன்றளவும் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிர்மறை பங்களிப்புகளை மட்டுமே செய்துவந்துள்ள சங்பரிவாரத்தினர் மக்களிடையே புதிய ஆதரவுத்தளங்களை உருவாக்கிக் கொள்வதற்காக பல மோசடிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலத்திலோ சமகாலத்திலோ சமூகத்தின் மதிப்பிற்குரிய ஆளுமைகள் எவரையும் தமது கருத்தியல் முன்னோடிகளாகக் கொண்டிராத இந்த சங் பரிவாரத்தினர் தமது கருத்தியலுக்கு நேரெதிர் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்ட ஆளுமைகளை உட்செரித்து தமது நோக்கங்களுக்கேற்ப திரித்து தம்மவராக முன்னிறுத்திக் காட்டிக்கொள்ளும் இழிசெயலில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவரை கைப்பற்றும் அவர்களது முயற்சி இதனொரு பகுதிதான். 

தருண் விஜய் என்பவரை வைத்து திருவள்ளுவரின் மேதமையைக் கொண்டாடப் போவதாக தோற்றம் காட்டிய அவர்கள், ஹரித்துவாரில் நிறுவப்போவதாக சொல்லி 2016ஆம் ஆண்டு கொண்டுசெல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை சாதிவெறியேறிய புரோகிதக் கும்பலின் எதிர்ப்பால் நிறுவப்படாமல் தரையிலே நீண்டநாட்களாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அறம் தோய்ந்த கருத்துகளுக்காக உலகத்தாரின் போற்றுதலைப் பெற்றவரான வள்ளுவரின் சிலை ஆதிசங்கரர் சிலையருகே வைப்பதற்கு தகுதியற்றதென்றும் ஹரித்துவாருக்கும் வள்ளுவருக்கும் என்ன தொடர்பு என்றும் இந்தக்  குறுமதியினர் சிறுமைப்படுத்துவதற்கு எதிரான கண்டனம் வலுப்பெற்றதால் அச்சிலை பிறிதோர் இடத்தில் நிறுவப்பட்டது.   

ஏற்கெனவே அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காவி வர்ணம் அடித்துப் பார்த்தும் அவரது கருத்துகளைத் திரித்து வெளியிட்டும் சமூக எதிர்வினையைச் சோதித்துப் பார்த்த வக்கிரத்தின் தொடர்ச்சியாகவே, இப்போது சங்பரிவாரத்தினர் திருவள்ளுவரை காவி உடையில் வரைந்திருப்பதுடன் குறளுக்கு இந்துத்துவச் சார்பேற்றிய புதிய பொருள்விளக்கங்களை பொய்யாய் புனைகின்றனர். இந்தச் சீர்குலைவு வேலைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தை அவர் திரும்பப்பெற வேண்டும் என்று தமுஎகச வற்புறுத்துகிறது. திருவள்ளுவரை கைப்பற்றும் சங்பரிவாரத்தினரின் இழிமுயற்சிக்கு எதிராக எழும் கண்டனத்தை திசைதிருப்பும் விதமாகவே தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருக்கிறதோ எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.  

வரலாற்றாய்வுகள், நம்பகமானச் சான்றுகள் வழியே நிலைநிறுத்தப்பட்டுள்ள உண்மைகள் மீது அவற்றுக்கு நேரெதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி பரபரப்பை உருவாக்குவது,  அதையொட்டி சமூகத்தில் பதற்றத்தையும் பிளவையும் உருவாக்கி ஒருதரப்பை தன்பக்கம் இழுத்துக் கொள்வது என்கிற சங் பரிவாரத்தினரின் வழக்கமான கெடுவுத்தியே திருவள்ளுவர் சிலை அவமதிப்பிலும் வெளிப்படுகிறது. இந்த அம்சத்தையும் கவனத்தில் கொண்டு திருவள்ளுவர் படத்தை, அவரது கருத்துகளை, சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுஎகச தமிழக அரசை வற்புறுத்துகிறது. 

இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம். 

Related Articles

சீமான் அவர்களின் பேச்சு கவலையளிக்கிறது! ... புதிய கல்விக் கொள்கை பற்றி சமீபத்தில் சூர்யா பேசியது விவாதத்தை உண்டாக்கியது. இதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீமானின் பேச்ச...
பள்ளி கல்லூரி மாணவிகள் கட்டாயம் படிக்க வ... தமிழகப் பெண்களைப் பொறுத்த வரை பெரும்பாலான கோலம் போடுவது எப்படி ? சமையல் செய்வது எப்படி ? போன்ற புத்தகங்களை தான் நேரம் செலவழித்து படிக்கிறார்கள். கொரிய...
அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குற... பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்...
சென்னையிலும் அதிகரித்து வருகிறது call bo... சமீப காலமாக ஆண் விபச்சாரன்களின் வாழ்க்கை முறை குறித்து சினிமா படங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உதாரணம் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்தில் ...

Be the first to comment on "திருவள்ளுவரை, திருக்குறளை காவிச்சகதியால் கறைபடுத்த முடியாது! – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம்!"

Leave a comment

Your email address will not be published.


*