இன்று செல்போன் டவர் இல்லாத கிராமங்கள் குறைவு. செல்போன் டவர் வைத்துத் தான் முகவரி அடையாளம் சொல்லும் அளவுக்கு அவை பெருகி விட்டன. கதிர்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் செல்போன் டவர்களை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மாசு காற்றை சுத்திகரிப்பு செய்து சுத்தமான காற்றாக வெளியேற்றும் டவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? காற்று மாசுபாட்டைத் தடுக்கும் விதமாகச் சீனாவில் பரிசோதனை முயற்சியாக இந்தக் காற்று சுத்திகரிப்பு கோபுரத்தை சீனா நிறுவியுள்ளது.
உலகின் மிகப் பெரிய காற்று சுத்திகரிப்பு கோபுரம்
முந்நூற்று இருபத்து எட்டு அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ள இந்தக் கோபுரம் காற்றின் மாசு அளவைக் கணிசமான அளவு குறைத்திருப்பதாக இந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்தி கொண்டிருக்கும் தலைமை விஞ்ஞானி தெரிவித்தார். இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதும், உலகின் மிகப்பெரிய காற்று சுத்திகரிப்பானாக இந்தக் கோபுரம் அறியப்படுகிறது.
ஷான்சி மாகாணத்தின் தலைநகரமான சீயான் என்ற இடத்தில் தான் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சீன அறிவியல் அகாதெமியின் கீழ் இயங்கும் பூமி சூழலிய அமைப்பு என்னும் ஆராய்ச்சி நிறுவனமே இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு தலைமை தாங்கி செயல்படுத்தி வரும் தலைமை விஞ்ஞானிக் கோ ஜூஞ்சி, இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டதில் இருந்து, பத்து சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்குக் காற்றின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும், நாள் ஒன்றுக்கு சுமார் பத்து மில்லியன் கன மீட்டர் அளவுக்குச் சுத்தமான காற்றைக் கோபுரம் வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அதிக அளவுக்குக் காற்று மாசுபடும் நாட்களில், கோபுரம் கணிசமான அளவுக்கு பனிப்புகையை குறைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எப்படிச் செயல்படுகிறது?
நகரத்தில் மாசு காற்று முதலில் இந்தக் கோபுரத்தில் இயங்கும் பசுமை வெளியால் உறிஞ்சு உள்ளிழுக்கப் படுகிறது. பிறகு அந்த மாசு காற்று சூரிய சக்தியால் சூடாக்கப்படுகிறது. பின்னர் பல்வேறு சுத்திகரிப்பான்களின் உதவிக் கொண்டு, காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவு குறைக்கப்டுகிறது. அதன் பிறகு, மாசு குறைந்த காற்று மக்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதிநிலை இன்னமும் வெளியிடப்படவில்லை
மாசு அளவு சீயான் நகரத்தில் பனிக்காலங்களில் மிக அதிக அளவுக்கு இருக்கும் என்றும், சூரிய சக்தியை நம்பி இயங்கும் வகையில் கோபுரம் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அதனால் குளிர்காலங்களில் எந்தச் சிக்கலும் இல்லாமல் கோபுரம் தொடர்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக இந்தத் திட்டத்தை தலைமை விஞ்ஞானி தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோபுரம், போன ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. எனவே இந்தத் திட்டம் முழுமை அடைந்த ஒன்றாகக் கருத முடியாது இந்தத் திட்டத்தை பற்றிய முடிவுகளை, அறிவியல் முன்னேற்றங்களை இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் தங்கள் நகரில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, நல்ல தரமான, சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் இந்தக் கோபுரத்தின் தற்போதைய அதிகபட்ச இலக்கான பத்து சதுர கிலோ மீட்டார்கள் அளவுக்கு மட்டும் காற்றின் அளவில் மாற்றம் இருப்பதாகவும், அதற்கு மேல் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மற்ற பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டம் தொடர்ந்து நல்ல, ஆரோக்கியமான முடிவுகள் தரும் பட்சத்தில், இந்தக் கோபுரம் மேலும் 400 மீட்டார்கள் உயர்த்தப்பட்டு, ஐந்நூறு மீட்டார்கள் அளவுக்கு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
சீக்கிரம் இந்தத் திட்டத்தை தமிழகத்திலும் செயல் படுத்துங்கள். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி மட்டும் போராடுவது போர் அடிக்கிறது.
Be the first to comment on "செல்போன் டவர் தெரியும், சீனத்தின் காற்று சுத்திகரிப்பு டவர் பற்றி தெரியுமா?"