சுஜாதா வின் “திரைக்கதை எழுதுவது எப்படி ? ” புத்தகத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் சுஜாதா எழுதிய ” சிறுகதை எழுதுவது எப்படி ? ” என்ற புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்.
இலக்கிய உலகில் ஆர்வம் மிக்க இளைஞர்கள், அடித்துப் பிடித்தாவது வெகுஜன எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்கள் ” சிறுகதை எழுதுவது எப்படி ” என்ற தலைப்பின் கீழ் சுஜாதா என்ற பெயரைப் பார்த்ததும் எதைப் பற்றியும் யோசிக்காமல் காசு கொடுத்து வாங்கிவிடுவார்கள். பாவம் அவர்கள் எல்லாம் அப்பாவிகளே!
” இப்ப நான் தின்னது மூணு நாளைக்கு அப்புறம் திங்கற முதல் ஆகாரம். ஏமாத்தி சம்பாதிக்கத் திறமை இல்லை. எங்க பார்த்தாலும் போட்டி… நாய்ப் பிழைப்பு… நம்பினா நம்பு நம்பாட்டா போ. நான் செய்யுற முதல் திருட்டு இது… உன்னை மாதிரி அப்பாவிகிட்ட தான் என்னால திருட முடியும்.
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘ சிறுகதை எழுதுவது எப்படி ?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ” என்று சுஜாதாவே தான் செய்த திருட்டு தனத்தை ஒப்புக் கொண்ட புத்தகம் அது. அவர் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு ” சிறுகதை எழுதுவது எப்படி ” தவிர சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்ற நுணுக்கங்களை அவர் குறிப்பிட வில்லை.
அதே போல திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்திலும் எதாவது தகடுதத்தம் வேலை செய்திருப்பாரோ என்ற அச்சம் சிலருக்கு எழ வாய்ப்புண்டு. ஆனால் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் அப்படி வாசகர்களை பெரிதாக ஏமாற்ற வில்லை. இன்னும் சொல்லப் போனால் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்திற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் வந்த புத்தகம்.
திரையுலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சுற்றித் திரிபவர்கள் அறையில் நிச்சயம் இந்தப் புத்தகம் இடம் பெற்றிருக்கும். அவ்வளவு தகவல்கள் கொண்ட புத்தகமா இது ?
” திரைக்கதை எழுத தெரிஞ்சவன் திரைக்கதை தான் எழுதுவான்… திரைக்கதை எழுதுவது எப்படின்னு புக் எழுத மாட்டான்… ” இது பாபி சிம்ஹா மற்றும் தமிழ்ப்பட சிவா நடித்த மசாலா படத்தில் இடம் பெற்றிருக்கும் வரி. இந்த வரிகள் உண்மை என்பதற்கேற்ப தான் இந்தப் புத்தகம் உள்ளது.
திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கான அடிப்படை தகவல்கள் மட்டுமே இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ( 120 ரூபாய் புத்தகத்தில் அவ்வளவு தான் கிடைக்கும். ). அதே சமயம் இந்தப் புத்தகம் மட்டுமே போதும் என்று கூட சொல்லலாம். அடிப்படை விஷியங்களில் நாம் திறமைசாலியாக இருந்தாலே போதுமானது.
திரைக்கதையின் பகுதிகள், அமைப்பு, கதை மூலங்கள், சினிமா சம்பந்தமான சில கலைச் சொற்கள், சப்ஜெக்ட், சீன், எதைச் சொல்வது, எதை விடுவது? , கதை மாந்தர்களும் பார்வையாளர்களும், கதை, காலம், முக்கிய நோக்கமும் உப நோக்கங்களும், ஆடியன்ஸ், கதையை நகர்த்துவது எப்படி ? , கதை வடிவம், திரைக்கதை எழுதலாமா ? , கதாபாத்திர படைப்பு, காட்சித் தொடர், கதை என்னும் கட்டடம் கட்டுவோம், திரைக்கதை வடிவம், முடிவாகச் சில விஷியங்கள் என்று ஒரு படம் எடுக்க தேவையான அடிப்படை தகவல்களை தனக்கே உரிய எழுத்து நடையில் சுவாரஸ்யமாக எழுதி உள்ளார்.
சினிமாவைப் பற்றி படிப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்கினால் நல்ல புரிதல் உள்ள இயக்குனராக மாற முடியும். அல்லது நல்ல புரிதல் உள்ள சினிமா விமர்சகராக மாற முடியும். நாளை முதல் ( ஜனவரி 4 முதல் ) சென்னையில் புத்தகத் திருவிழா நடக்க இருக்கிறது. ஏராளமான இளைஞர்கள் இந்தப் புத்தகத்தை வாங்க வாய்ப்பு உள்ளது. தனித்தனி படங்களின் திரைக்கதை புத்தகங்கள் என்னிடம் ஏற்கனவே இருக்கிறது என்பவர்கள் ஒருமுறை யோசித்துவிட்டு வாங்கவும்.
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : ரூ. 120
Be the first to comment on "சுஜாதா எழுதிய ” திரைக்கதை எழுதுவது எப்படி ? ” – இத படிச்சா டைரக்டர் ஆகிடலாம்!?"