வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கவும் இனி போக்குவரத்து காவலர்களிடம் செலுத்த வேண்டிய அபராத தொகையை ஆன்லைன் கட்டணமாக மட்டுமே செலுத்த முடியும். கட்டணத்தைக் கடன் அட்டை, பற்று அட்டை, பேடிஎம் போன்ற இ-வாலட்டுகளின் மூலமும் செலுத்தலாம்.
போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஏ. அருண் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது ‘வாகன ஓட்டிகள் இனி அபராத தொகையை பணமாகப் போக்குவரத்து காவலர்களிடம் தரக்கூடாது. போக்குவரத்து காவலர்கள் யாராவது பணமாக அபராத தொகையை கட்டச் சொல்லி கேட்டால் அது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.’
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரிசோதனை முயற்சியாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நேற்று முதல் இந்தத் திட்டம் முழுவதுமாக சென்னை மாநகரில் பின்பற்றப்படுகிறது.
அபராத தொகையை பணமாகச் செலுத்தும் வழிமுறைகள்
அபராத தொகையை பணமாகச் செலுத்த விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது இ-சேவா மையங்களிலோ செலுத்தி ரசீது பெற்று அதை நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் சம்மன் அனுப்பப்படும், அப்படியும் கட்டாதவர்களுக்கு வாரண்ட் அனுப்பப்படும்.
உணவகங்களில் அட்டையைத் தேய்த்து பணம் செலுத்துவதை போலவே இனி அபராத தொகையையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Be the first to comment on "அபராத தொகையை இனி ஆன்லைன் கட்டணமாக மட்டும் செலுத்த முடியும் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம்"