குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூடவா, குட்டி படங்கள் ஒரு பார்வை!

A view on the movies about Child Labours - Vagai Soodava and Kutti

1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவா

இந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினை. இந்தப் பிரச்சினையைப் பற்றி பல படங்கள் பேசியிருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் எழுத்தாளர் சிவசங்கரியின் குட்டி, வாகை சூடவா, கோலி சோடா, காக்கா முட்டை, மெரினா, மெர்சல், வழக்கு எண் 18/9 போன்றவை.

முதலில் குட்டி படத்தைப் பற்றி பார்ப்போம். எழுத்தாளர் சிவசங்கரி, ஜானகி விஸ்வநாதன், தங்கர் பச்சான், இளையராஜா, பேபி ஸ்வேதா கூட்டணியில் உருவான படம். இந்தக் கூட்டணி தேசிய விருது பெறவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

மதுரை அருகே உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பத்து வயது சிறுமி ஒரு பணக்காரனின் வீட்டில் மாசம் ஐநூறு ரூபாய்க்கு வேலைக்காரியாகச் சேர்கிறாள். அங்கு உள்ள கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வது தான் அவளுடைய வேலை.

நகரத்திற்கு வந்ததும் அந்தக் கண்ணம்மா குட்டி ஆகிவிட்டாள். முதலில் நகரத்தின் பரபரப்பை, பிரம்மாண்ட கட்டிடங்களைப் பார்த்து பயப்படுகிறாள். பிறகு அந்த வீட்டில் உள்ள சிறுவனின் அதிகாரத்துக்குப் பயப்படுகிறாள். பிறகு ராட்சஷ கிழவிக்குப் பயப்படுகிறாள். இப்படி படம் முழுக்க அவளை பயமுறுத்திக் கொண்டே இருந்தாலும் வீட்டு முதலாளிகள், பக்கத்து வீட்டு சரோஜா, மளிகைக்கடை நாடார், மகளை வேலைக்கு அனுப்பாத அப்பா, கண்ணம்மாவுக்கு வேலை வாங்கித் தந்தவர்கள், பாசிமணியைப் பரிசாகத் தந்த எதிரி பாப்பா என்று அவளை ஆதரிக்கும் கதாபாத்திரங்கள் பல. சோடா புட்டி சிறுவன், கொடுமைக்கார கிழவி, பீடா வாயன் என்று கெட்டவர்கள் மிகச்சிலரே. ஆனால் அந்தக் கெட்டவர்கள் செய்யும் வேலைகள் மிகக்கொடூரமானவை. அதே போல படம் முழுக்க கண்ணம்மாவைப் போல நாடார்க்கடை சிறுவன், காலேஜ் டீ பாய், களிமண் கடன் கொடுக்கும் சிறுவன் என்று  பல சிறுவர்கள் ஆங்காங்கே வருகிறார்கள்.

படத்தின் முதல் காட்சி ரயில் நிலையத்தில். அப்போது,நம்ம இந்தியன் ரயில்வேய நம்பி ஒருத்தன் தண்டவாளத்துல படுத்து தற்கொலை பண்ணிக்கனும்னு நினைச்சானா அவன் ரயில் ஏறி சாக மாட்டான்… ரயில் வரும்னு காத்திருந்து காத்திருந்து பசில தான் செத்து போவான் என்று படத்தின் முதல் வசனம். இது போல சமூக அவலங்களை கிண்டலடிக்க ரமேஷ் அரவிந்த், விவேக் கதாபாத்திரங்கள்.

இதற்கு முன் ஒரு போதும்  காரில் பயணிக்காத குட்டி ரங்கநாதனின் காரில் ஏறிச்செல்கிறாள். உள்ளே பாரதியின் உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா என்று பாடல் ஒலிக்கிறது. உடனே ரங்கநாதன், உனக்கு பாரதி தெரியுமா என்கிறார். அவள் தெரியாது என்று சொல்ல குஷ்பு தெரியுமா என்கிறார். அதற்குத் தெரியும் என்று பதில் அளிக்கிறாள். இதைக்கேட்டு வாழ்க தமிழகம் என்று கிண்டலடிக்கிறார். இதே போல அவனுடைய மகன், துணிப்பையை கேட்ச் பிடிக்க தவறிவிடுவான். அப்போது, வெரிகுட் உனக்கு கண்டிப்பாக இந்தியன் டீமில் சான்ஸ் இருக்கு என்று கிண்டல். அதேபோல மளிகைக்கடை நாடார் வரும் காட்சியெல்லாம் சமூக அவலத்தை கிண்டல் செய்யும் வசனங்கள் இருக்கிறது. ஒருபக்கம் பாவாடையின் ஏழ்மையைப் பற்றி சோக்க்காட்சிகள் இடம்பெற இன்னொரு பக்கம் கிழிவியின் கொடுமைக்காட்சிகள். ஆக படத்தினை ரிலாக்ஸ் செய்யும் இரண்டு கதாபாத்திரங்கள் இவர்கள் தான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மனம் உருகும் காட்சிகள் இரண்டு உள்ளது. அதில் ஒன்று ரங்கநாதன் மண்குதிரையைப் பரிசாகப் பெறும் காட்சி. இந்த மண்குதிரையை செய்வதற்கு சிறுவன் ஒருவனிடம் மண் வாங்கியதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒளித்து வைப்பாள் கண்ணம்மா. இதே போல காட்சி காக்கா முட்டை படத்தில் மூத்திரத்தில் நனைந்த டவுசரை ஒழித்து வைப்பது போல் முதல் காட்சியாக வருகிறது.   இன்னொன்று குட்டி சொல்வதைக்கேட்டு நாடார் கடிதம் எழுதும் காட்சி. இதேபோல் ஒருவர் சொல்வதைக் கேட்டு இன்னொருவர் கடிதம் எழுதும் காட்சி குணா படத்தில் இடம்பெறுகிறது.

குட்டிக்கு கார் கதவை சாத்த தெரியவில்லை. இதே போல கார்க்கதவை சாத்த தெரியாத ஏழைகள் இடம் பெறும் காட்சி சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ரங்கநாதனின் மனைவி கல்லூரியில் ஆசிரியப்பணி செய்கிறார். அப்போது சக ஆசிரியர்களுடன் குட்டியைப்பற்றி பேசிக்கொணடிருக்கும்போது டீக்கடை சிறுவன் ஒருவன் வருகிறான். அவனைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நிலவும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். இதே போல காட்சி பிரம்மனின் குற்றம் கடிதல் படத்தில் வருகிறது. அந்தப் படத்தில் பாலியல் கல்வி பற்றி ஆசிரியர்கள் பேசிக்கொணடிருக்க, இரண்டு சிறுவர்கள் ஓடி வந்து ஒருவர் மாற்றி ஒருவர் புகார் அளிக்க அவர்களைச் சுட்டிக்காட்டி பேசுவார்கள் ஆசிரியர்கள்.

பாவாடை போன்று ஏழை வியாபாரிகள் சாலையோரம் கடை போட்டிருக்கும் போது அவர்கள் மீது லாரி ஏறுகிறது. இதே போல காட்சி அங்காடித்தெரு, சதுரங்கவேட்டை, மனிதன் படத்திலும் வருகிறது. பக்கத்து வீட்டு சரோஜா முதலாளி பையனால் பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். உடனே பழியை அந்த வீட்டில் பணிபுரியும் ட்ரைவர் மீது சுமத்துகிறார்கள். இதேபோல் பணக்காரன் செய்த தவறுக்கு ஏழையை ஏமாந்தவனைப் பழியாக்கும் காட்சிகள் 8 தோட்டாக்கள், தனி ஒருவன், ஒரு கிடாயின் கருணை மனு, வழக்கு எண் 18/9,… இன்னும் சில படங்களில் வந்துள்ளது.

கண்ணம்மாவின் அப்பா பாவாடை, லாரியில் அடிபட்டு இறந்து விடுவார். அப்பா இறப்பதற்கு முன்புவரை கண்ணம்மாவின் வாழ்க்கை வேறு. கூலி வீடுகளில் அப்பா இல்லையென்றால் அந்த வீட்டுப் பிள்ளைகளின் நிலைமை கேள்விக்குறி. இதே போல காட்சி வழக்கு எண் 18/9(ஜோதி), கற்றது தமிழ்(ஆனந்தி), காக்கா முட்டை, அங்காடித்தெரு, சதுரங்கவேட்டை படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இறுதியில் குட்டியை அவளுக்குத் தெரியாமலே விற்பனை செய்து மும்பை போகும் ரயிலில் அவளை ஏற்றிவிடுகிறான் பீடா வாயன். இதே போல பெண்ணை விற்று மும்பைக்கு அனுப்பும் காட்சிகள் அவள் பெயர் தமிழரசி, கற்றது தமிழ் படங்களில் இடம்பெற்றிருக்கிறது. ரயிலில் தொடங்கி ரயிலில் முடிகிறது கண்ணாம்மாவின் கதை.

குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ரங்கநாதன் வீட்டு நாய்க்குட்டி எப்போதும் நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருக்கும். கண்ணம்மா எப்போதும் தரையிலயே அமர்ந்திருப்பாள். கண்ணம்மா, சரோஜா இருவரும் எப்போதும் காலணி அணிந்திருக்கமாட்டார்கள். பிளாஸ்டிக், செம்பு சாமான்கள் வந்துவிட்டதால் பானைகள் வியாபாரமாவதில்லை, என் தம்பிக்கு என் அம்மா தான் பால் கொடுக்கும் போன்ற வசனங்கள் கவனிக்கத்தக்கவை.

அடுத்தது வாகை சூடவா. சற்குணம், ஜிப்ரான், ஓம் பிரகாஷ் கூட்டணியில் தேசிய விருது பெற்ற படம். படத்தின் தலைப்புக்கான பான்ட் ஸ்டைலே கதையை உணர்த்திவிட்டது. எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் தான் நகைச்சுவை தோன்றுகிறது என்று தொல்காப்பியம் கூறுகிறது. இந்த நான்கு காரணிகளும் இந்த கதைக்களத்தில் உள்ளது. அதனால் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற படமாக உள்ளது. வாத்தியார் படம் ஓடுகையில் திரையில் சண்டை போடும் நம்பியாரை சுட்டுத்தள்ளுகிறான் நரிக்கொறவன்(சூரி செய்துள்ளார்,வெயில் படத்திலும், வடிவேலு எம்ஜிஆருக்கு அரிவாள் தூக்கிப் போடும் காட்சியும் இதேபோல் உள்ளது. ). அதிலிருந்து தெரிகிறது அந்தப்பகுதி மக்கள் எவ்வளவு அறிவிலியாக இருக்கிறார்கள் என்று.  புதுக்கோட்டையிலிருந்து கண்டெடுத்தாங்காடு எனும் ஊருக்கு கிராம சேவா அமைப்பின் கீழ் மாதம் முப்பது ரூபாய்க்கு வாத்தியார் வேலை பார்க்க வருகிறார் பத்திர எழுத்தாளர் அண்ணாத்துரையின் அப்பாவி மகன் வேலுத்தம்பி. இந்தக் கதை அப்படியே முந்தானை முடிச்சு படத்துடன் ஒத்துப்போகிறது. அதனால் தான் இந்தப் படத்தில் முருங்கைக்காயை சுமந்தபடி அறிமுகம் ஆகிறார் பாக்கியராஜ் சார். தனது மகனை அரசு உத்தியோகம் பெறச்சொல்லி வற்புறுத்துகிறார். அரசு உத்தியோகம் பெறுவதில் அப்பாவின் மானம் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்ட வேலு, வாத்தியார் உத்தியோகம் பார்க்க கிளம்புகிறார். சுழல் காற்று சுழன்று கொண்டிருக்க, லாரியின் மேல்பகுதியில் அமர்ந்தபடி ஊருக்குள் நுழைகிறார். அவர் வந்த லாரி அங்கே செங்கல் லோடு ஏத்த வரும் லாரி. லாரியின் முகப்பு கண்ணாடியில் மண்கள் படிந்து கிடக்கிறது. அந்த லாரியின் ஓட்டுநராக சதீஷ். சிறுவர்களிடம் வாய் கொடுத்து வாங்கிக்கொள்பவர்.     வாத்தியாரை முதலில் வரவேற்பது குருவிக்காரர். அந்தக் காலத்திலயே வான சாஸ்திரம் படித்தவர். அந்த ஊரை அவர் கண்டெடுத்ததால் அந்த ஊருக்கு அப்படி ஒரு பெயர் வந்துள்ளது. அங்கு மனிதர்களின் எண்ணிக்கை கூடியதால் மரங்கள் வெட்டப்பட, குருவிகளின் அலறல் சத்தம் அவரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. இரண்டு முதலாளிகளின் கீழ் அடிமையாகிக் கிடக்கும் தனது ஊரை மீட்டெடுக்க வருபவன் இவன் தான் என்பதை குருவிகளின் சத்தத்தை வைத்து உணர்கிறார் குருவிக்காரர். இந்தக் கதாபாத்திரம் மெட்ராஸ் படத்தில் வரும் ஜானியை நினைவூட்டுகிறது. சுற்றியிருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் இந்தக் கதாபாத்திரங்களை மன நோயாளிகளாக பார்க்காமல் அவர்களின் முன்வாழ்க்கைக்கு மதிப்பளித்து தங்களது வீட்டில் ஒருவராகப் பார்க்கிறது.

ரேடியோ பெட்டிக்குள் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்பிய, செங்கமண்ணை தின்றால் ரத்தச்சோகை வரும் என்று தெரியாத சிறுவர்கள்,  வேலுத்தம்பியை கோமாளியாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். வீண் பழி சுமத்துகிறார்கள். இதற்கு நடுவில் டூனாலெட்டின் புதிர்க்கணக்கு, இருப்பிடத்தை பறிகொடுத்த ஆடு, போஸ்ட்வுமன் என்று நக்கலுக்கு சில கதாபாத்திரங்கள். வாத்தியாரை ஏமாத்த நினைத்து பிறகு அவர் ஊரைவிட்டு போகிறார் எனத் தெரிந்து வருந்தும் குறும்புக்கார காதலி. மக்களை அறிவிலியாகவே வைத்து தனது பரம்பரை வாழ்வதற்காக வேலை வாங்கும் ஆண்டை, ஆண்டைக்கு போட்டியாளன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் பக்கா.

வாத்தியாரை கல்லால் அடிப்பேன் என்றவன் வாத்தியாருக்காக ஆண்டையின் ஆட்கள் மீது கல்வீசி மிதி படுகிறான். நான் கூட்டுறது பெருக்கறது மட்டும் செய்றேன் என்னைய மட்டும் பாடம் படிக்க கூப்டாதீங்க என்ற சிறுமி முதல் ஆளாக பாடம் படிக்க சேர்கிறாள். ஆண்டையை கண்டதும் கைகட்டி நிற்கும் மக்கள் விழித்துக்கொண்டு அவரை எதிர்க்கிறார்கள். சார் என்று அழைத்த சிறுவர்கள் அண்ணா என்று அழைக்கிறார்கள். அரசு வேலையை தனது கனவாக கொண்ட வேலு இந்த மக்களுக்காக வேலையை விட்டுவிட்டு சம்பாத்தியம் இல்லாமல் வேலை செய்யத் துணிகிறான். இப்படி படத்தில் அத்தனை சிறப்பம்சங்கள். கதை விவாதக்குழு தீயாக வேலை செய்திருக்கிறது.

இந்தப் படம் பார்த்து முடித்ததும் அவர்களுடன் வாழ்ந்ததை போன்றதொரு உணர்வு. அதற்கு காரணம் கலை இயக்குனர், ஒளி – ஒலிப்பதிவு, பின்னணி இசை. 1966ம் ஆண்டுக்குரிய கலை அம்சங்கள் அற்புதம். காபிக்கொட்டை அரைக்கும் கருவி, இலங்கை வானொலி ரேடியோ பெட்டி, மணி வைத்த போஸ்ட்வுமன் சைக்கிள், கிணற்றில் நீர் இரைக்கும் கருவி என்று பல அம்சங்கள். பீரியட் பிலிம் என்பதால் கலர் டோன் மாற்றிய ஒளிப்பதிவு. இதே போல கலர் டோன் மாற்றிய படங்கள் பரதேசி, மெர்க்குரி படத்தின் இரண்டாம் பாதி என்று சொல்லலாம். ஜிப்ரானின் இசை பக்கா. பாடல்கள் இனிமையாகவும், வலியை உணர்த்துவதாகவும், விழிப்புணர்வு உண்டாக்குவதாகவும், உத்வேகம் கொடுப்பதாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் சில இடங்களில் ஒலித்த பின்னணி இசை அறம் படத்திலும்(அதுவும் எளிய மக்களின் வலியை உணர்த்துவதால்)சில இடங்களில் வருகிறது.

பறவைகளை வைத்து சயனம் பார்த்தல், தக்கையின் அசைவுகளை வைத்தே தூண்டிலில் சிக்கியிருப்பது என்ன மீன் என்று கண்டறிவது, அய்யனார் சாமியை வழிபடுதல், குருவிக்காரருக்கு முப்பது படைத்தல், இரவு நேரத்தில் கூட்டு சேர்ந்து பாடுதல், ரெட்ட மூக்கு வெத்தல கொடுப்பது, பனை மரத்தடியில் காடை முட்டை சுட்டுத் திண்பது, இருளில் தீப்பந்தம் ஏந்திச் செல்லுதல், பனை மரத்தில் சன்னை மீன் ஏறுவது, கூடையை வைத்து கோழி குருவியை அமுக்குவது, உடன் பிறந்தவளை அக்காயி என்று அழைப்பது, கருப்பட்டிக்கு நாக்கைச் சுழட்டித் திரிவது, எருக்கலாம் பூமாலை சூட்டுவது, மின்மினிப் பூச்சியை நெற்றிப்பொட்டில் பொட்டாக சூட்டுவது, கள்ளிப்பூ மூக்குத்தியாக, விளாங்காய், துரத்தும் ஆட்டுக்கு கருவேலங்காய் என்று வாழ்வியல் பதிவுகள் கவனிக்கத் தக்கவை. படத்தில் சூழலுக்குத் தகுந்தது போல், சூழலைக் கிண்சலடிப்பது போல் பாடல்கள் ரேடியோவில் ஒலிக்கிறது. இது போன்ற காட்சிகள் பல படங்களில் வந்துள்ளது. எ.கா குரங்கு பொம்மை, தரமணி, தாண்டவம், யார் அவர்கள்…

கண்டெடுத்தாங்காடு பகுதியில் சிறுவர்கள் ஓட பின்னணியில் செங்கச்சூலைக்கார பாடல் ஒலிக்கிறது. இதே போல் காட்சிகள் வெயில், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வந்துள்ளது.

 

Related Articles

கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்ப... சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படம் திரையிடப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் பேசக்கூடிய வியக்ககூடிய படமாக இருக்கும் இந்தப் படத்த...
ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1... தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை ...
ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை... எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதும் அவருடைய வாசகர் வட்டம் எப்படிபட்டது என்பதும் தீவிர புத்தக வாசிப்பாளர்களுக்...
65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! –... 65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் " ந...

Be the first to comment on "குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூடவா, குட்டி படங்கள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*