பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! – வெள்ளையானை புத்தக விமர்சனம்

The book review of vellai yaanai

இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு.

எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நாவல் வெள்ளை யானை. பிராமணர்களை தூக்கிப் பிடித்திருக்கிறார், வெள்ளைத் தோலுக்கு சொம்பு தூக்கி இருக்கிறார், கருப்பர் நகர மக்களை அநியாயத்துக்கு அப்பாவிகளாக காட்டி இருக்கிறார் என்று பல தரப்பட்ட விமர்சனங்கள் இந்தப் படைப்பின் மீது வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நாவல் அறம் என்பதை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது என்பதே உண்மை. வெள்ளை யானை படித்து முடித்த பிறகு கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் படியுங்கள் அல்லது கறுப்பர் நகரம் படித்த பிறகு ஜெயமோகனின் வெள்ளை யானை படியுங்கள். மொத்தத்தில் இரண்டு நாவல்களையும் அடுத்தடுத்து படித்தால் காலம் எவ்வளவு மாறினாலும் கறுப்பர் நகரத்து மக்களின் துன்பகரமான வாழ்க்கைச் சூழல் மாறவில்லை என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஏய்டன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, துரை சாமி, சாமி, ஜோசப், காத்தவராயன், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவுரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ் என்று பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த நாவலை நகர்த்திச் செல்கின்றன.

ஏய்டன் என்ற அயர்லாந்தைச் சேர்ந்த இளைஞன் வசதி குறைவான குடும்ப சூழலிலிருந்து வளர்ந்து படிப்படியாக உயர்ந்நூ பிரிட்டிஷ் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பாளராகப் பதவி வகிக்கிறான். அப்படி அவன் பொறுப்பில் இருக்கும் மதராசின் ஒரு பகுதியில் பறையர் சாதியைச் சார்ந்த ஒரு தம்பதியினரை நீலமேகம் என்ற உயர் சாதியை சார்ந்தவன் சவுக்கால் அடித்து வெளுக்கிறான். பிரிட்டிஷ் வழக்கப்படி யாரையும் சவுக்கால் அடிப்பது தவறான செயல். ஆனால் அப்படிப்பட்ட செயலை குதிரையில் வலம் வரும்போது நேரடியாக பார்த்ததும் ஏய்டன் நீலமேகத்தை கண்டிக்கிறான். உன்னிடம் அடி வாங்கிய அந்த ஏழைகளை தொட்டு தூக்கு என்கிறான். ஆனால் நீலமேகம் ஏய்டனிடனின் ஆணையை மீறி தன்னுடைய சாதி கௌரவமே முக்கியம் என்று தொட மறுக்கிறான். இங்கிருந்து தொடங்குகிறது நாவல்.

இந்தியாவில் உள்ள சாதி அமைப்பை பற்றி அவன் சிந்திக்க தொடங்குகிறான். ஏற்றத் தாழ்வுகளை காத்தவராயன், ஜோசப், பாதர் ப்ரெண்ணன் போன்றவர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்கிறான். ஒரு வகையில் வெள்ளையர்களின் ஆட்சி தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஆதரவாகவே உள்ளது என்பதையும் புரிந்து கொள்கிறான். கடைசியில் சவுக்கடி வாங்கிய தம்பதிகளுக்கு நீதி வாங்கித் தந்தானா? என்பதே நாவலின் மிச்சக் கதை.

பல்வேறு மனிதர்களின் மனநிலையை மிகத் துல்லியமாக வருணிக்கப்பட்டுள்ளது இந்த நாவலின் முக்கிய அம்சம்.

நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன். – அயர்லாந்தில் அடிமைப்பட்டு வளர்ந்த ஏய்டனின் மனநிலை

ஒரு தீண்டப்படாத தொழிலாளி கொல்லப்பட்டதற்கு விசாரணை வரும் என்றால் என்னுடைய நிர்வாக ஊழியர்கள் மனம் தளர்வார்கள். – ஐஸ்ஹவுஸில் பொறுப்பாளராக இருக்கும் பார்மரின் மனநிலை

ஒரு மனிதன் இன்னொருவன் முன் அந்த அளவு சிறுமையும் தாழ்மையும் கொண்டு நிற்பதை அவன் கண்டதே இல்லை. – காத்தவராயன் அய்யங்காரிடம் கெஞ்சுவதைப் பார்க்கும்போது ஏய்டனின் மனநிலை.

அச்சத்தால் மட்டும்தான் இந்தப் பெரும் கூட்டத்தை நாங்கள் ஆட்சி செய்கிறோம். அந்த அச்சம் அகன்றால் நாங்கள் இதன்மேல் அமர்ந்திருக்க முடியாது. இதோ இந்த எதிர்ப்பு சாதாரண விஷியம் அல்ல. மேல்சாதியையும் அரசாங்கத்தையும் எதிர்க்க முடியும் என்று இவர்கள் முதல்முறையாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது வனவிலங்குக்கு முதல் ரத்த ருசியைக் காட்டுவது போல. இதை இப்படியே விட்டால் பின் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இது உடனடியாக நசுக்கப்பட வேண்டும். – பறையர்களை மனிதர்களாக எண்ணாமல் விலங்குகளாக எண்ணி வேலை வாங்கிவிட்டு கசக்கி எரியும் அய்யங்காரின் மனநிலை.

ஆங்கிலேயனாக இருந்தாலும் சரி இந்தியனாக இருந்தாலும் சரி, அரசாங்கப் பதவியில் இருக்கும் ஒருவன் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு கட்டுப்படாமல் நேர்மை தான் முக்கியம் என்று மனசாட்சியோடு பணியாற்றினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை இந்த நாவலின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

408 பக்கங்கள் உடைய இந்த நாவலை முழுவதும் படித்து முடிக்க மூன்று நாட்களாவது தேவைப்படும். ஏய்டன் மற்றும் ஆண்ட்ரூஸ், ஜோசப் மூவரும் கருப்பர் நகரத்துக்குள் நுழைந்து காணும் காட்சிகளைப் பற்றிய அத்தியாயமும், ஐஸ்ஹவுஸில் தாழ்ந்த சாதியினர் முக்கால் நிர்வாணத்துடன் உடலில் புண்களுடன் வேலை செய்யும் விதத்தை விவரிக்கும் அத்தியாயமும், கருப்பன் மற்றும் காத்தவராயன் சேர்ந்து வேலைநிறுத்தம் செய்யும் இடத்தில் அய்யங்கார் செய்த அரசியல் இடம் பெற்ற அத்தியாயமும் நிச்சயம் நம் கண்களை கலங்க வைக்கும். என்ன எலவு நாடுடா இது? என்று இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பை பற்றி சிந்திக்கத் தூண்டும் அற்புதமான நாவல்.

Related Articles

கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்... அது என்ன கிகி சேலஞ்ச்! உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வ...
அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகா... தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்...
“யாருங்க அந்த அட்மின்? எனக்கே பாக்... திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலையை அகற்றினார்கள் அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள். உடனே சூட்டோடு சூடாக நாளை தமிழகத்திலும் ...
பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க... இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...

Be the first to comment on "பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! – வெள்ளையானை புத்தக விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*