பிள்ளையார் அனைவருக்கும் பிடித்த கடவுள். எந்த ஒரு காரியமும் தடையில்லாமல் நிறைவேற விநாயகரை வழிபட்டு ஆரம்பிப்பது நமது வழக்கம். விநாயகரின் பிறந்த நாளான விநாயக சதுர்த்தியை எவ்வாறு கொண்டாடலாம் எனப் பார்ப்போம்.
விநாயக சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டை தூய்மை செய்து கோலமிட வேண்டும். ஒரு பலகையில் தலைவாழையிலையின் நுனி வலப்புறமாக இருக்கும்படி அமைக்க வேண்டும். அதன் மேல் அரிசி பரப்ப வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி, சந்தானம், குங்குமம் இட்டு, புது சுட்டித்துண்டு அணிவித்து, மாலைகள் போட்டு அலங்கரிக்க வேண்டும். பின்பு, அலங்கரிக்கப்பட்ட விநாயகரை, அரிசி பரப்பிய பலகையில் வைக்க வேண்டும்.
குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்க வேண்டும். மலர்கள், இலைகள், அருகம்புல் 21 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. அவைகளாவன: அறுகம்புல், அரளி, விரலி, மரிக்கொழுந்து, ஜாதிமல்லி, வெள்ளெருக்கு, கரிசலாங்கண்ணி, எருக்கு, மாதுளைப்பூ, புன்னை, மந்தாரை, மகிழம்பூ, வெட்டிவேர், தும்பை, சம்பங்கி, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வந்தி, பவழமல்லி.
இவை அனைத்தும் இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக் கொண்டு பூஜை செய்யலாம். அர்ச்சனை செய்து பின் தூபம், தீபம் காட்டி, நைவேத்யம் செய்ய வேண்டும்.
அப்பா சிவன் அபிஷேகப் பிரியர். மாமா திருமால் அலங்காரப் பிரியர். நமது பானை வயிற்றோனோ நைவேத்தியப் பிரியர்.
அதனால் தான் தமிழ் பாட்டி ஔவையார்
“பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நான்கும் உனக்கு நான் தருவேன் நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா”
என்று விநாயகரை வேண்டுகிறார்.
அருனகிரிநாதரோ
“கைத்தலம் நிறைகனி அப்பமொடு அவல் பொரி” என்று பாடுகிறார்.
பிள்ளையாரின் பிரியமான பட்சணம் மோதகம் என்ற கொழுக்கட்டை விநாயக சதுர்த்திக்கு முக்கியமான நைவேத்யமாகும். இதை தவிர அப்பம், அதிரசம், சுண்டல், அவல், பொரி, பலவிதமான கனிகள் வைத்து விநாயகரை வணங்க வேண்டும்.
களிமண்ணால் செய்த புதிய விநாயகர் சிலை இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யலாம்.
விநாயக சதுர்த்தி அன்று ஆனைமுகனை வணங்கி அருள் பெறுவோம்!
Be the first to comment on "விநாயக சதுர்த்தியை வீட்டில் எவ்வாறு கொண்டாடலாம்?"