கலகலப்பு – படம் முழுக்க நகைச்சுவை காட்சிகளை வைத்து நம்மை கலகலப்பாக்கும் இயக்குனர் சுந்தர் சியின் சினிமா பயணத்தில் முக்கியமான படம்
” கலகலப்பு “
விமல் – சிவா
தன்னுடைய பரம்பரை சொத்தான ஹோட்டலை எப்படியாவது மேம்படுத்தி ஆக வேண்டும் என்று முயற்சிக்கும் சீனுவாக விமல் அசத்தி இருப்பார். லட்சியம் ஒருபக்கம், மாதவியுடனான காதல் ஒருபக்கம், அஞ்சுவட்டி அழகேசனின் வட்டி தொந்தரவு ஒருபக்கம், முதுகுவலி ஒருபக்கம் என்று மனுசன் அலப்பறை செய்திருப்பார். இவருடைய சகோதரராக மிர்ச்சி சிவா வருகிறார். சகோதரன் காதலுக்கு உதவி செய்வது, ஓவியாவை காதலிப்பது, நண்பர்களுடன் திருட்டு வேலையில் ஈடுபடுவது என்று தன்னுடைய பங்கிற்கு அலப்பறை செய்கிறார்.
இவர்களுக்கு ஜோடியாக வருகிறார்கள் அஞ்சலியும் ஓவியாவும். சீனுவின் ஹோட்டலுக்கு செக்கிங் இன்ஸ்பெக்டர் ஆக வரும் அஞ்சலி பின்னாட்களில் சீனுவின் இன்னோசன்ட் குணத்தால் அவருக்கு காதலியாக மாறுகிறார். அதேபோல சிவாவின் காதலியாக ஓவியா. நால்வரும் எப்படியாவது ஹோட்டலை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று முயல்கிறார்கள். அவர்களின் ஹோட்டல் இருக்கும் இடத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று முயல்கிறது ஜான்விஜய் அணி. வைரக் கற்கள் உள்ள செல்போனை தேடி அலைகிறது கருணாகரன் அணி. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சிரிப்போ சிரிப்பு.
திரும்பிய இடமெல்லாம் சிரிப்பு:
விமல், சிவா, அஞ்சு வட்டி அழகேசனாக பல மாறுவேடங்களில் வரும் இளவரசு, ஜான்விஜய், கருணாகரன், யோகிபாபு என்று திரும்பிய இடமெல்லாம் நகைச்சுவைக்கு பெயர்போன நடிகர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். இவர்கள் போதாதென்று இரண்டாம் பாதியில் சந்தானமும் மனோபாலாவும் அறிமுகமாகிறார்கள். நகரத்தில் சென்றுகொண்டிருந்த கதை சட்டென்று கிராமத்திற்குச் சென்று பிறகு அங்கிருந்து மீண்டும் நகரத்திற்கே வருகிறது. எங்க போயி எப்படி சுத்தி வந்தாலும் சிரிப்புக்கு மட்டும் பஞ்சமில்லை.
எதை தூக்கி போட்டாலும் அதை சீனுவிடம் தூக்கி வரும் நாய் கூட இன்றும் நம் நினைவில் நீங்காது இருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நாய்களை காட்டி இருப்பார்கள் ஆனால் கலகலப்பு படத்தில் வந்த நாய்க்கு எப்போதுமே தனி மவுசு.
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் ( மே 11, 2012) ஏழு வருடங்கள் ஆகப் போகிறது. ஆதித்யா சிரிப்பொலி போன்ற சேனல்களில் பலமுறை இந்தப் படத்தின் காமெடியை பார்த்து ரசித்திருப்போம். முடிந்தால் இன்று ஒருமுறை உங்களுக்குப் பிடித்தவர்களுடன் இந்தப் படத்தை பாருங்கள். கலகலப்பாக இருங்கள்.
Be the first to comment on "நல்லத செஞ்சுட்டு தோக்குறதுல கூட ஒரு சுகம் இருக்கு! – 7 yearsof கலகலப்பு!"