உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ – யுனிசெப் அமைப்புகளின் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது, உலகம் முழுவதும் முறையாக தாய்ப்பால் கொடுக்காததன் காரணமாக லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் உடல்நலக்குறைவின்றி வாழ தாய்ப்பால் மிக முக்கியமானது. எந்தவித நோய்த்தொற்றுக்களுக்கும் உடனடியாகப் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது தாய்ப்பால்.
மேலும் தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மார்கள் மார்பக புற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் தாய்ப்பாலால் குழந்தையின் கவனமும் அறிவுத்திறனும் மேம்படுகிறது. ஆதலால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை தாய்மார்கள் தங்களின் அழகை குறைக்கும் செயலாகப் பார்க்கக் கூடாது.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டினால் குழந்தைகளை நோய்த் தொற்றுகளிலிருந்தும் இறப்பிலிருந்தும் பாதுகாக்கலாம். இதனை செய்யாமல் விட்டுவிடுவதால் அல்லது குறைவான காலத்துக்கு பாலூட்டுவதால் குழந்தைகள் வயிற்றுப்போக்கு உள்பட இதர நோய்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இறப்புக்குள்ளாகின்றனர். இவ்விதம் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்கலாம்.
இனிவரும் காலங்களில்…
தாய்ப்பால் ஊட்டுவதில் தற்போது திருநங்கைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உலகிலயே தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அவருக்கு தற்போது முப்பத்தி ஐந்து வயது. வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுள்ள இவர், குழந்தை பிறப்பதற்கு ஐந்து மாதத்திற்கு முன்னரே கனடாவில் இருந்து ஹார்மோன் மாற்றக்கூடிய முறைகள் மூலம் பால் சுரப்பை செயல்பட வைத்திருக்கிறார்.
இவர் குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் ஊட்டலாம். அதற்குப்பிறகு அவர் உண்ணும் உணவுப்பொருளை பொறுத்து பால் சுரப்பு இருக்கும். இந்த சாதனை ” மவுண்ட் சினாய் செண்டர் ஃபார் டிரான்ஸ்ஜென்டர் மெடிசின் அண்ட் சர்ஜரி” என்ற மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களில் மிக முக்கியமானவை அவர்களின் அழகு பறிபோகிறது என்பதே. அடுத்ததாக அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் தவறான ஆலோசனைகள், அவர்களை கவர்ந்திழுக்கும் வித்தியாசமான ஊட்டச்சத்து பொருட்களின் விளம்பரங்கள், தாய் தன்னுடை உடல் நலனில் அக்கறை கொள்ளாது திருமணத்திற்கு முன்பு தின்றுத் திரிந்த உணவுப்பொருள்களை குழந்தை பிறந்த பிறகும் விரும்பிச் சாப்பிடுவது போன்றவையாகும்.
Be the first to comment on "தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன – உலக சுகாதார நிறுவனம் தகவல்"