இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படமான “பரியேறும் பெருமாள்” படம் ஒரு பார்வை !

A view on Pariyerum Perumal movie

சாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது என்ற வரி மிக முக்கியமானது. அனைத்து கல்வி நிலையங்களிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய வரி. 

இசை சந்தோஷ்நாராயணன் வரும்போது குருவி சத்தம், பா. ரஞ்சித் வரும்போது சிட்டுக்குருவி/ குயில் சத்தம், மாரி செல்வராஜ் வரும்போது நாய் சத்தம் திரையில் ஒலிக்கிறது. நாய் சத்தம் கேட்டதும்… கருப்பி கதையை பார்த்ததும்  நாயை மையமாக வைத்து எழுதப்பட்ட “அவர்கள் எனக்கு சுரேஷ் எனப் பெயரிட்டார்கள்” என்ற சிறுகதை தான் நியாபகத்துக்கு வந்தது.

முதல்காட்சியிலயே கருப்பி வருகிறது. அங்கும் இங்கும் அலைந்துவிட்டு கருப்பி என்றழைத்ததும் பரியனிடம் வருகிறது. நாய் குளிக்கும் குளத்தில் மனிதர்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், தண்ணீரில் வாய் கொப்பளிக்கிறார்கள். நாயை அவர்கள் நாயாகப் பார்க்காமல் மனிதனாக கருதி வளர்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது அந்தக் காட்சி. அதே குளத்தில் எங்க வந்து எவ்வளவு திமிரா நாய வச்சு வேட்டையாடுறாங்க பாரேன்… என்று குளத்தில் கும்பலாக மூத்திரம் பெய்கிறார்கள் ஆதிக்க சாதிக்காரர்கள். ஆதிக்க சாதிக்காரர்கள் மனிதனை மனிதனாகப் பார்க்காமல் நாயாகப் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சி.

வழக்கமாக எல்லா தமிழ் சினிமாக்களிலும் அறிமுகப் பாடல் என்பது நாயகனை பற்றி இருக்கும். ஆனால் இங்கு நாயைப் பற்றி… நாய்க்கான ஒப்பாரி பாடல் அறிமுகப் பாடலாக இருக்கிறது. இதன் மூலமாக கருப்பி படத்தின் இன்னொரு நாயகனாக தெரிகிறது. வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே என்ற பாடல் அருமையான கதைசொல்லி என்பதை உணர்த்துகிறது.

ரயில் தண்டவாளத்தில் கருப்பியை கட்டி வைக்கிறார்கள். பரியன் காப்பாற்ற ஓடுகிறான். அவன் கண் முன்னே கருப்பி கண்டந்துண்டமாகிறது. இந்தக் காட்சி கற்றது தமிழ் படத்தில் வரும் காட்சியை நினைவூட்டியது. பிரபாவும் ஆனந்தியும் நாய்க்குட்டியை துரத்திக் கொண்டே ஓடுவார்கள். பலனின்றி நாய்க்குட்டி ரயிலில் சிக்கி இறந்துவிடும். அதே போல இந்தப் படத்திலும் கருப்பி இறந்துவிடுகிறது. இரண்டு காட்சிகளுமே கண்களை கலங்க வைக்கும் காட்சிகள். 

கருப்பி பாடலை உலகெங்கும் ஏன் சாகிறோம் என்று தெரியாமல் சாகும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. நாய் மேல் அதீத அன்பு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்துமே தவிர இறந்த குழந்தைகளுக்கு இது எப்படி புரியும் என்ற சந்தேகம் இருந்தது. பிறகு வலிய தாங்காம துடிச்சியா… கடைசி நிமிசம் என்ன நினைச்சியா…  பாடல் வரிகளை கூர்ந்து கவனித்தால் புரிகிறது. இந்தப் பாடல் நாய்   மனிதர்களுக்கு மட்டுமின்றி ஏன் சாகிறோம் என்று தெரியாமல் சாகும் அனைத்து ஜீவராசிகளுக்குமே பொருந்தும். 

திருநெல்வேலி நகரத்தை அறிமுகப் படுத்தும்போது பெரிய பெரிய தலைவர்களின் சிலைகள் காட்டப்படுகிறது. இரட்டை இலை காட்டிய எம்ஜிஆர் சுதந்திரமாக இருக்கிறார். திருநெல்வேலி மாநகராட்சி வ.உ.சி கட்டிடம் முன்பு உள்ள சிலை சுதந்திரமாக இருக்கிறது. திமுக அண்ணா சுதந்திரமாக இருக்கிறார். காமராஜர் இந்திராகாந்தி சுதந்திரமாக இருக்கிறார். அம்பேத்கர் சிறைக்குள் இருக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிறைக்குள் இருக்கிறார். இதை பார்க்கும்போது திருநெல்வேலி எவ்வளவு சாதி வெறிப்பிடித்த நகரம் என்பது புரிகிறது. தாமிரபரணியை விட கூவம் புனிதமானது என்று ராம் சார் ஏன் சொன்னார் என்பது புரிய வருகிறது. அதே சமயம் மகாத்மாவை கொல்ல ஒரு சதித்திட்டம் என்ற சிறுகதையும் நினைவுக்கு வருகிறது.  

ஜன்னல் சீட்டில் மகன் அமர பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு நம்பிக்கை வார்த்தைகள் பேசி வருகிறார் அம்மா. அம்மா அப்பாவுக்கு பணிந்து நடக்கும் மகன் என்றும் மகனை நம்பி  அம்மா அப்பாக்கள் இருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. 

காந்தி போட்டோ வைத்திருக்கும்  பிரின்சிபால் அப்பா என்ன பண்றார் என்ற கேள்வி கேட்க பரியனின் அம்மா பதில் சொல்ல முற்பட அம்மாவை தடுத்து அப்பா வண்டிமாடு வச்சிருக்கிறார் என்று பொய் சொல்கிறான் பரியன். அப்பா கூத்துக்கலைஞர் என்று சொன்னால் கூத்தாடி புள்ளயா என்று எங்கே கேவலமாய் பேசிவிடுவார்களோ என்ற பயம். சமூகமும் கூத்துக்கலைஞர்களை இளக்காரமாகவே பார்க்கிறார்கள் என்பது இந்தக் காட்சியில் தெரிய வருகிறது. 

நல்லா படிச்சா தான் என்ன ஆக முடியும்… என்று பிரின்சிபால் கேட்க டாக்டர் ஆக முடியும் சார் என்கிறான் பரியன். இது லா காலேஜ் இங்க படிச்சா அட்வகேட் தான் ஆக முடியும் என்று பிரின்சிபால் சொல்ல நா அந்த டாக்டர் சொல்லல டாக்டர் அம்பேத்கர் மாதிரி ஆகனும் என்கிறான் பரியன். உடனே பியூனிடம் அவனுடைய டிசியில் அதை குறித்து வைக்க சொல்கிறார் பிரின்சிபால். கல்லூரி பிரின்சிபால் எவ்வளவு சாதிவெறியோடு இருக்கிறார் என்பதை இந்தக் காட்சி உணர்த்துகிறது.  மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி ஒரு கல்லூரியின் நிர்வாகத்தினரே இப்படி சாதி வெறியோடு தான் இருக்கிறார்கள்  என்று சுட்டிக்காட்டுகிறது இந்தக் காட்சி. 

டீக்கடையில நின்று டீ குடிக்கிறார் மேஸ்திரி தாத்தா. அவர் ஏற வேண்டிய பஸ் வந்ததும் அவசர அவசரமாக காசை கொடுத்துவிட்டு பாதி டீயை அப்படியே வைத்து பஸ்ஸில் ஏறுகிறார்.

கண்ணாம்மா காதல் எனும் கவிதை சொல்லுதே… என்ற காதல் பாட்டு ஓட தன்னை பஸ்ஸில் ஏற்றிவிட்ட இளைஞனின் கையை எடுத்துவிடுகிறான் கிழவன். கீழே விழுந்த இளைஞனின் பின்மண்டையில் நல்ல அடி. தாத்தா உடனே அழுவது போல் நடிக்க ஆரம்பிக்கிறார். அந்த இளைஞனின் காதலி பஸ்சின் பின்பக்க சீட்டிலிருந்து அழுகிறாள். ஆணவப் படுகொலைகள் நடக்க முதியவர்களிடம் இருக்கும் சாதி வெறியே முக்கியமான காரணம் என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சி. அதே சமயம் இந்த கொலைகார தாத்தா மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த மூக்கையா தாத்தாவையும் நினைவூட்டுகிறார். 

இந்தியாவின் முதல் தலித் குடியரசு தலைவர் கே.ஆர் நாராயணன் மரணம்… ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவன் பலி… RSS தலைவர் சுதர்சன் மீது செருப்பு வீச்சு… ஆகிய மூன்று செய்திகளும் சொல்லும் அரசியல் நறுக். அதே சமயம் பத்திரிக்கைகள் செய்திகளை எப்படி சொல்கிறார்கள் என்பதும் கவனிக்க தக்க வகையில் உள்ளது போஸ்டர் விளம்பரம்.  மற்ற ஜாதி தலைவர்குள் இறந்தால் சாதிய அடையாளத்தை போடாத பத்திரிக்கை உலகம் தலித் என்றால் மட்டும் அதை குறிப்பிட்டு போடுவதை உணர்த்துகிறது இந்தக் காட்சி. 

லா காலேஜ் முன்பு ஏகப்பட்ட கட்சி கொடிகள். முதலாமாண்டு மாணவர்கள் வருவதை சீனியர் மாணவர்கள் போஸ்டர் ஒட்டி பட்டாசு வெடித்து வரவேற்கிறார்கள். அப்படி வரவேற்பதிலும் கூட சாதிக்கு ஏற்றவாறு தனித்தனி குழுவாக உள்ளனர் மாணவர்கள். 

பரியேறும் பெருமாள்… பரின்னா குதிர… குதிர மேல ஏறி வர்ற பெருமாள்… என்று பரியன் தன் பெயருக்கான விளக்கம் சொல்லுதல் அற்புதம். ஒரு காலத்தில் குதிரை வண்டியில் ஏறி போறவனுக்கு குனிந்து முதுகை காட்டிய சமூகத்தில் இருந்து பரியேறிய பெருமாள்… என்றதும் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது. 

புளியங்குளத்துல யார் இருப்பாங்க… புளியங்குளத்துல யார் இருப்பாங்கன்னு தெரியாதா உனக்கு… என்று கூட்டம் வினவ, இன்னொரு சீனியர் புளியங்குளமா… ஆர் கே ராஜா தெரியுமா… எதா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு… நம்ப பையன் நீ…  என்று ஆறுதலாக பேசுகிறார். மாணவர்கள் எவ்வளவு சாதி வெறியோடு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் காட்சி. 

புஷ்பலீலா, எம் ஆனந்த், ஜோதி மகாலட்சுமி போன்ற நிஜ பெயர்கள் திரையில் ஒலிப்பதை கேட்க சந்தோசமாக இருக்கிறது. நிஜத்தில் நெருங்கிய நண்பனாக இருக்கும் ஆனந்தை அப்படியே திரையில் காண்பித்தது செம. ஆனந்த் என்ற பெயரைக் கேட்டதும் ஆனந்த் – ஷா என்ற சிறுகதை  நியாபகத்துக்கு வருகிறது. 

பரியேறும் பெருமாள் மேல ஒரு கோடு… என்று பரியன் சொன்னதும் வகுப்பில் உள்ள எல்லாரும் சிரிக்கிறார்கள். அந்தப் பேரின் விளக்கத்தை கேட்ட டீச்சர் வாழ்க்க பூரா அந்தக் கோடு இல்லாம பாத்துக்கோ என்று சொல்லும் தொனி அக்கறை மிக்க தொனி. 

அதே வேறொரு டீச்சர் ஹிஸ்ட்ரி ஆஃப் கோர்ட்ஸ் நடத்துகிறார். ஆங்கிலத்தில் நடத்துவது புரியல என்று உண்மையை சொன்னதும் பலர் சிரிக்கிறார்கள் (அப்படி சிரித்த பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதே உண்மை. ஆனால் பரியனை போல மற்றவர்களால் உண்மையை ஒத்துக்கொள்ள முடியவில்லை, எங்கே அசிங்கப்பட்டு விடுவோமோ என்ற பயம்). டீச்சரோ எரிஞ்சி விழுகிறார். ஆனந்த்தோ இங்கிலீஸ் தெரிலனு சொன்னா உன்ன பீ மாதிரி பாப்பானுங்க என்று அறிவுறுத்துகிறார். தமிழ் மீடியத்தில் படித்து கல்லூரிக்குள் நுழைந்து முதலாமாண்டை சந்தித்த சந்திக்கும் மாணவ மாணவிகளுக்கு நெருக்கமான காட்சி இது. ஆங்கிலம் புரியவில்லை என்று பரியன் அதோடு நிற்கவில்லை. வகுப்பிலிருந்து எல்லோரும் கிளம்பிய பிறகு   ஜோ-விடம் பாடம் குறித்து விசாரிக்கிறான். படிக்க வேண்டும் என்ற பரியனின் அக்கறை மற்றும் விடாமுயற்சியை குறிக்கிறது. தமிழில் தேர்வு எழுதலாம் என்று தெரிந்ததும் குஷியாகிறான். அம்மா சத்தியமா என்ற சொல் கற்றது தமிழ் படத்தில் வரும்  நிஜமாத்தான் சொல்றியா என்ற வசனத்தை நினைவூட்டுகிறது. 

பரியேறும் பெருமாள் பிஏபிஎல் என்று எழுதி பிஏபிஎல் மேல் கோடு போடுகிறான் பரியன். வணக்கம் வணக்கம் பாடல் ஒலிக்கிறது. புளியங்குள மக்களின் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களின்  வாழ்வியல் பதிவு செய்யப்படுகிறது.  கபடி, கிட்டி போன்ற விளையாட்டுகள் விளையாடுவது, குளத்தில் தாமரை செடிகளுக்கு இடையே விளையாடுவது, ஒன்றுகூடி இசை இசைத்து நடனமாடி மகிழ்வது, வம்பு இழுப்பது, வாழைத்தார் சுமப்பது என்று புளியங்குள மக்களின் வாழ்வியல் பதிவுகள் அருமை. இங்கிலீஸ் கிளாஸ் நடக்கிறது. பரியனும் ஆனந்தும் பல் குத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் எழுந்து என்ன சார் நாங்க காலேஜ் ஸ்டூடன்ட், எங்கள போயி இப்ப இங்கிலீஸ்ல பேரு எழுது அட்ரஸ் எழுதுனு சொல்றிங்க என சொல்ல அந்தப் பெண்ணை ஆசிரியர் அழைத்து போர்டில் ஆங்கிலத்தில் எழுத சொல்கிறார். நகர் என்பதை நெகர் என எழுதியிருக்கிறாள். இதையடுத்து பரியனும் ஆனந்தும் சேர்ந்து சிரிக்கிறார்கள். இதை ஆசிரியர் கவனித்து அவர்களை மேலே எழுப்புகிறார். பரியனிடம் பெயரை கேட்கிறார் ஆசிரியர். பரியேறும் பெருமாள் என்று பெயரை சொல்ல வகுப்பிலுள்ள மற்றொரு மாணவன் பிஏபிஎல் மேல ஒரு கோடு என்று கலாய்க்கிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள். பரியன் மாதிரியான ஆட்கள் கல்வி பெறுவதன் அவசியத்தை கட்டாயத்தை மற்ற மாணவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவனுடைய அறியாமையை ஆர்வக் கோளாறு தனத்தை கலாய்க்கவே செய்கிறார்கள் மாணவர்கள்.  

அடுத்ததாக A ல ஆரம்பிக்கிற பத்து வார்த்த கேட்கிறார் ஆசிரியர். A for anand என்று பரியன் சொல்வது அபத்தம். சின்ன c ஆ பெரிய C ஆ என்று ஆனந்த் கேட்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனந்த் மாதிரி நிறைய மாணவர்கள் நிஜத்தில் இப்படி இருக்கவே செய்கிறார்கள். ஆனால் பரியன் நன்றாகப் படிக்கும் மாணவன். அவனுக்கு ஆங்கிலம் வரவில்லை என்றாலும் A for apple கூடவா சொல்ல தெரியாது? ஒட்டுமொத்த படத்திலயே அபத்தமான காட்சி என்றால் அது இந்தக் காட்சி தான். 

நம்மள அசிங்கப்படுத்துன இங்கிலீஸ்காரன்லா வெளிய போட்டான் நிமிர்ந்து பாரு என்ற வசனம் அருமை. நம்மை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை பற்றியும் இந்திய சுதந்திரத்தை பற்றியும் குறிப்பிட்டு சொல்வது போல் இருக்கிறது. 

வகுப்பிலிருந்து வெளியே வரும் ஜோவை சீனியர் மாணவிகள் வழிமறிக்கிறார்கள். ரேகிங் என்ற பெயரில் பேச தொடங்குகிறார்கள். என்ன கலர் கலரா வளையல் போட்ருக்க… உனக்கு இங்க பாடம் சொல்லி தராங்களா இல்ல வளைகாப்பு நடத்துறாங்களா… என்று கேட்க, இல்ல இது எனக்குப் பிடிக்கும் அதனால போட்ருக்கேன் என்று சொல்கிறாள் ஜோ. உனக்கு பிடிச்சிருந்தா போடுவியா சீனியருக்குப் பிடிக்கல கழட்டு… என்று சொன்னதும் ஜோ கையை தட்டிதட்டி வளையலை உடைக்கிறாள். 

ரேகிங் என்பது மாணவர்கள் மட்டுமே செய்வார்கள் என்பது இல்லாமல் மாணவிகளும் செய்வார்கள் என்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது. அதேபோல தன்னுடைய சாதி என தெரிந்ததும் சீனியர் மாணவிகள் முன்னாடியே சொல்லி இருக்கலாம் அல்ல என்கிறார்கள். சாதி பாகுபாடு மாணவர்களிடம் மட்டுமல்ல மாணவிகளிடமும் உள்ளது என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சி. மாவீரன் கிட்டு படத்திலும் இதுபோன்ற காட்சி உள்ளது குறிப்பிடத் தக்கது. 

கொலைகார தாத்தா சைக்கிளில் வருகிறார். காதலித்த தங்கையை அண்ணன் அடித்து சாய்த்துவிட தாத்தாவோ கொன்று தூக்கில் தொங்க விடுகிறார். அதை அப்படியே தற்கொலையாக மாற்றுகிறார். மாவீரன் கிட்டு படத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட பெண்ணை பெற்ற அப்பாவே கத்தியால் குத்திவிட்டு அழுவார். சொந்த பந்தங்களின் காரணமாக பெற்ற மகளை சாகடிப்பார். ஆக ஆணவக் கொலைகள் நடப்பதற்கு முக்கிய காரணமே சொந்த பந்தங்கள் தான் என்பது தெரிய வருகிறது. 

ராதா மோகன் இயக்கிய கௌரவம் படத்திலும் இதுபோன்ற காட்சி வருவது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் கூடப் பிறந்த அண்ணனே தங்கையின் சாவுக்கு காரணமாக இருப்பான். ஆனால் அப்பா அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். இருந்தாலும் கொலை நடக்கிறது. காரணம் சொந்த பந்தங்களின் தூண்டுதல். ஆசிரியர் சொன்ன A,C வீட்டுப் பாடத்தை ஜோ எழுதிவந்து பரியனிடமும் ஆனந்திடமும் தருகிறாள். அதை ஆசிரியரிடம் நீட்டும்போது வீட்டுப்பாடம் என்று சொல்லி பரியன் நீட்டுகிறான். வீட்டுப்பாடம் என்றதும் எல்லோரும் சிரிக்கிறார்கள். இதேபோல டீச்சர் என்றதற்கு ஆசிரியை எழுந்துவிழுகிறார். வீட்டுப்பாடம், டீச்சர் போன்ற வார்த்தைகளை பள்ளியோடு விட்டுவிட வேண்டுமா என்ன? அரசுப் பள்ளிகளில் தான் டீச்சர் என்கிறார்கள். ஆக அரசுப்பள்ளி மாணவர்களை வெறுப்பது போல் நடந்துகொள்கிறார்கள் கல்லூரியில் உள்ள சில ஆசிரியர் ஆசிரியையகள் என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சி. 

பள்ளிக்கூடம் மாதிரி போர்டுல எழுதி போட முடியாது, வாய்ல சொல்லுவேன் நீங்க எழுதிக்கனும் என்கிறார் ஆசிரியர். ஆசிரியர் சொல்ல சொல்ல ஆனந்த் முட்டை முட்டையாக எழுதுகிறான். பரியன் என்ன எழுதுவது என தெரியாமல் முழிக்கிறான். ஆனந்த் முட்டை போடுவது போலவே பரியனும் முட்டை போடுகிறான். இப்போது பக்கத்தில் இருக்கும் மாணவனை பார்த்து எழுத வேண்டியது தானே? என்ற கேள்வி எழுகிறது. பரியன் பக்கத்தில் யாரும் இல்லாதது போல் காட்டி இருக்கலாம். 

பரியன் எழுதிய நோட்டை ஆசிரியர் வெடுக்கென பிடுங்கி  முட்டையை படித்து காண்பிக்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். ஆசிரியர் சிரிக்க தூண்டுகிறார். கோட்டாவுல வந்த கோழிக்குஞ்சு என்கிறார். பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். SC பசங்க என்றாலே ரவுடிங்க படிப்பு வராத மக்குங்க என்பது தான் சில ஆசிரியர்களின் புரிதலாக இருப்பதை இந்தக் காட்சி சுட்டிக் காட்டுகிறது. சாட்டை படத்திலும் இது போன்ற காட்சி உள்ளது குறிப்பிடத் தக்கது. 

கோபத்த சீண்டுனாலே போதும் ரவுடி ஆயிருவானுங்க என்ற மனநிலையில் அந்த ஆசிரியர் கோட்டாவுல வந்த கோழிக்குஞ்சு என கூறியிருக்கலாம். பரியன் எல்லாருடைய நோட்டையும் பிடுங்கி ஆசிரியரிடம் வாசிக்க சொல்லி நீட்டுகிறான். ஆனால் ஆசிரியரோ வெளிய போ வெளிய போ என்று கத்திக்கொண்டே இருக்கிறார். பிரச்சினையை பெரிதாக்குவற்கான முயற்சி அது. 

எல்லாருடைய நோட்டு புத்தகத்தையும் ஆசிரியர் விரித்து பார்க்கிறார். வெறும் கிறுக்கல்களாக இருக்கிறது. தூக்கி எரிகிறார். ஆக வகுப்பில் உள்ள பெரும்பாலானவர்களும் பரியனை போலவே ஆங்கிலம் அறியாதவர்கள் என்றாலும் அதை அவர்கள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. படிக்க வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் இருந்திருந்தால் அவர்களும் பரியனை போலவே தன் பிரச்சினையை வெளியே சொல்லி இருப்பார்கள். நிஜ வாழ்விலும் இது போன்ற மாணவர்கள் தான் அதிகம் என்பதை சுட்டுகிறது இந்தக் காட்சி.

உங்குளுக்கு இங்கிலீஸ் பிடிக்கலனா பேசாத இருக்க வேண்டியது தானே என்று ஜோ கேட்க எனக்கு இங்க்லீஸ் பிடிக்காதுனு உங்களுக்கு யாரு சொன்னா என்கிறான் பரியன். நீங்க அப்படி தான நடந்திங்க என்று ஜோ சொல்ல நான் ஒன்னும் அப்படி நடக்கல… எல்லோரும் என்னைய அப்படி நடத்துறாங்க… என்ற வசனம் முக்கியமானது. இந்த ஏரியா பையனா… இவன் இப்படித்தான்… என்று அவர்களுக்கென்று ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு அதன்டியே நடத்துவது காலங்காலமாக நடந்து வருகிறது. 

பத்தாம் வகுப்பில் 390 மார்க் எடுத்தும் ஆங்கிலத்தில் பெயில் என்கிறான் பரியன். ஆங்கிலத்தில் 7 என வைத்துக்கொண்டால் மற்ற பாடங்களில் குறைந்தது  80 மதிப்பெண்களாவது எடுத்திருக்க வேண்டும். அவ்வளவு நன்றாக படிக்கும் மாணவனுக்கு ஆங்கிலம் மட்டும் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு பரியன் சொல்லும் “எல்லா உங்க பாழாப் போன இங்கிலீசால தான்… அத சொல்லிக்கொடுத்தவனுக்கும் அது தெரில அதனால எனக்கும் அது வரல” என்ற பதில் அருமை. 

அரசுப்பள்ளிகளில் உள்ள பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் எப்படி பேசுவது என்றே தெரிவதில்லை. அதனால் அவர்கள் மாணவ மாணவிகளுக்கும் அக்கறையாக சொல்லிக் கொடுப்பதில்லை என்ற உண்மை இந்தக் காட்சியில் புலப்படுகிறது. 

அக்டோபர் தேர்வில் பரியன் எதுவும் எழுதாமல் சோகமாக அமர்ந்திருக்கிறான். டீச்சர் அவன் அருகே வந்து என்ன என்று கேட்கிறார். பிட் அடிக்க உதவுகிறார். அக்டோபர் தேர்வு அவ்வளவு எளிதாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுகிறது. அதே சமயம் நல்ல உள்ளங்கள் கொண்ட டீச்சர்கள் நிறைய இருக்கிறார்கள் என்ற உண்மையும் புலப்படுகிறது.

rkr ராஜா தாத்தா பற்றி பரியன் சொல்கிறான். rkr ராஜா தாத்தா கோயில் உண்டியல் திருட்டு கேசில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டிருக்கும் இளைஞர்களுக்காக காவல் நிலையத்திற்குள் செல்கிறார். அப்போது அங்க உள்ள போலீஸ் பேசும் 

“இவனுங்க தான் நாய்கூட நாய் மாதிரியே சுத்திட்டு இருக்கானுங்க… இந்தப் பயலுக ஏன் பன்னிருக்க கூடாது… “, ” கெழட்டு நாயி பெரிய வக்கீல் மாதிரி எங்கட்ட வந்து கேள்வி கேக்குறியா…”, ” அய்யா சாமி விட்ருங்கனு கெஞ்சி கேட்டாலும் பரவால… கத்துறான்…” என்ற வசனங்கள்  குறிப்பிடத் தக்கவை. 

ஊருக்காக குரல் கொடுக்கும் rkr ராஜா வேண்டிக்கொண்டதன் பேரில் வக்கீலுக்குப் படிக்கிறான் பரியன். பெரும்பாலானவர்கள் படிக்கனுமே என்று படிக்க பரியனோ ஒரு சமூகத்தின் எழுச்சிக்காக படிக்கிறான். குடும்ப பொருளாதார சூழலை மேம்படுத்த கஷ்டப்பட்டு படிக்கும் அத்தனை இளைஞர்களும் பரியனாக தெரிகிறார்கள். அதே சமயம் rkr ராஜா தாத்தா மாவீரன் கிட்டு படத்தில் வரும் சின்ராசு கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறார். 

வக்கீலுக்குப் படி… அப்பத்தான் ஊருக்காக தைரியமா நெஞ்ச நிமித்தி எல்லோருக்கும் கேட்கற மாதிரி பேச முடியும்… என்று rkr ராஜா தாத்தா சொல்லும்போது பார்க்கும் நமக்கே உத்வேகமாக இருக்கிறது. 

“நான்லா ஸ்கூலுக்குப் போன… பாஸ் ஆனேன்… அப்பா லா ஜாயின் பண்ண சொன்னாருனு ஜாயின் பண்ண… ” என்று ஜோ சொல்வது பெரும்பாலான உயர்சாதி வீட்டுப் பெண்களின் நிலையை விளக்குகிறது. உயர்சாதி வீட்டுப் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களை சுற்றித் தான் நிறைய வேலிகள் இருக்கிறது. அதனால் தான் சாதி வேறுபாடு பற்றி எதுவும் அறியாமல் அப்பாவியாக இருக்கிறாள் ஜோ. 

உங்காந்து கத்துக்கொடுத்தா கத்துக்குவிங்களா என்று ஜோ கேட்க ஏங்க கால்ல உழுந்து கத்துக்குவங்க என்று பரியன் சொல்கிறான். படிப்பில் அவ்வளவு ஆர்வம். ஆங்கிலம் கற்றுக்கொடுப்பவர்கள் எல்லாருமே தேவதைகள் என்று பரியன் சொல்லும்போதும் நீ வேணா பாரேன் உனக்காக ஆயிரம் தேவதைகள் வருவாங்க என்று ஜோ சொன்னதும் ஏனோ கற்றது தமிழ் ஆனந்தியை நினைவூட்டுகிறது. டீச்சரையும் தேவதை என்கிறான் பரியன். உண்மையில் ஏழை வீட்டு பிள்ளைகளுக்கு என்று நிறைய தேவதைகள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத் தக்கது. 

பொட்டக் காட்டில் பூவாசம் பாடலில் தாமிரபரணி படுகொலை குறித்து போஸ்டர் ஒட்டுகிறார்கள். அதேபோல நான் யார் பாடலில் நீருக்குள் மூழ்கியவனை போலீஸ் தடியால் அடிப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த இரண்டு காட்சிகளும் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் சிறுகதையை நினைவூட்டுகிறது.  

பொட்டக் காட்டில் பூவாசம் பாடலில் ஜோவும் பரியனும் நெருங்கிப் பழகுகிறார்கள். கையில் jo என எழுதிவிட்டு p என எழுதுகிறாள். பரியனை காதலிக்கிறேனா என்று ஜோவுக்கு குழப்பமாக இருக்கிறது. ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் காதலிப்பது போல் தெரிகிறது. இன்றைய பெஸ்ட்டி கலாச்சாரத்தை புரிந்துகொண்டவர்களுக்கு பரியன் ஜோ நட்பு புரியும். 

கொலைகார தாத்தா இளைஞனை ஆற்றில் மூழ்கடித்து சாகடிக்கிறார். இப்படி தொடர்ந்து சாகடிக்கும் தாத்தா மேல் யாருக்கும் சந்தேகமே வந்தது இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. ஆற்றில் முதியவரை காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பலி மக்கள் உருக்கம் என்று பத்திரிக்கையில் செய்தி வருகிறது. அதற்குமேலே மாஞ்சோலை கலவரத்தில் இறந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க நிலம் வேண்டி போராட்டம் என்ற செய்தியும் அதில் உள்ளது. ஆக தொடர்ந்து எதோ ஒரு ரூபத்தில் தாழ்ந்த சாதி மக்களுக்கு துன்பம் வந்துகொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சி.

அக்காவின் கல்யாண பத்திரிக்கையை பரியேறும் பெருமாளுக்கு மட்டும் வாங்கிச் செல்கிறாள் ஜோ. உடனே ஜோவின் மீது ஒருகண் வைக்கிறார்கள் குடும்பத்தினர். வீட்டு விசேசங்களுக்கு அழைத்து வரப்படும் நண்பர்களில் எந்தெந்த நண்பர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதை பெற்றோர்கள் உலகம் அறிந்துகொள்ள முற்படுகிறது என்பதை காட்டுகிறது இந்தக் காட்சி. 

பரியனுக்கும் ஜோவுக்கும் தமிழில் FLAMES போட்டு பார்க்கிறார் ஆனந்த். தமிழில் FLAMES  என்பதெல்லாம் செம காமெடி. Flames ல அப்படி என்ன தான் இருக்கும்… என் ஜோ அதுக்கும் மேல என்கிறான் பரியன். அவர்களுடைய நெருக்கமான நட்பை ஆனந்த் உள்பட எல்லோரும் காதல் என்றே நினைக்கிறார்கள். ஜோ ஒரு நாள் வரவில்லை என்றாலும்  பரியனால் இருக்க முடியவில்லை. மற்றவர்கள் என்ன தான் சொல்லி குழப்பினாலும் தங்கள் இருவருக்குள் உள்ளது நட்பு மட்டுமே காதல் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறான் பரியன். என்ன தான் ஆண் பெண் நட்பு என்றாலும் அதை காதலாக தான் இந்த சமூகம் பார்க்கிறது என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சி. 

பரியனை தனியாக அழைக்கிறாள் ஜோ. ஜோ அழைத்ததும் ஓடுகிறான் பரியன். அவனுக்கு மட்டும்  பத்திரிக்கை வைக்கிறாள். மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தில் பூங்குழலி கொடுத்ததாக இருந்தது. ஒரேயொரு பையனுக்கு என்றதும் கூட துணைக்கு ஒரு சொந்தக்கார பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள், பையன் எப்படி என தெரிந்துகொள்ள. பெற்ற பெண் மீது நம்பிக்கை இல்லாமல் வேவு பார்ப்பதற்காக இப்படி உறவுக்கார பெண்களை அனுப்பி வைப்பது உயர்சாதி பெண்களுக்கு அதிக அளவில் நடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் உயர் சாதி பெண்கள் வெறும் பொம்மைளாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜோ வீட்டு கல்யாணத்துக்கு போவற்காக பேண்ட் சட்டை கடன் வாங்குகிறான் பரியன். அந்த பகுதிவாழ் மக்கள் எவ்வளவு ஒட்டி உறவாடி வாழ்கிறார்கள் என்பதை காமிக்கிறது இந்தக் காட்சி. ஆனந்தை திருமணத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறான் பரியன். பத்திரிக்கை வைக்காத காரணத்தால் வர மறுக்கிறான் ஆனந்த். நெருங்கிய பழகிய நண்பர்கள் என்றாலும் சுயமரியாதையில் கரெக்டாக இருக்கிறான் ஆனந்த். 

திருமண மண்டபம் முன் பரியனுக்காக காத்துக்கிடக்கிறாள் ஜோ. சரியாக அந்த நேரம் பார்த்து சித்தியின் நெக்லஸ் காணோம் என்று ஜோவை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அவள் காரில் ஏறி செல்ல பரியன் பஸ்ஸில் வந்து இறங்குகிறான் கையில் கிப்ட்டுடன். ஜோவை தேடிவிட்டு  மண்டபத்துக்குள் அமர்கிறான் பரியன். சரியாக அவனிடம் வந்து அமர்கிறார் ஜோவின் அப்பா. வா போலாம் என்று அவனை தனியாக அழைத்துச் சென்று ரூமிற்குள் நுழைகிறார். 

ரூமிற்குள் உட்கார வைத்து ஊரைப் பற்றி அப்பாவை பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க ஜோ வீட்டு ஆண்கள் சடாரென்று ரூமிற்குள் நுழைந்து அடிக்க துவங்குகிறார்கள். அடித்து முடித்து மூத்திரம் பெய்கிறார்கள். பரியனுக்கும் ஜோவுக்கும் நடுவில் இருப்பது என்னவென்றே தெரியாமல் சாதியை மட்டுமே முன்னிறுத்தி தாக்குகிறார்கள் சொந்தக் காரர்கள். 

ஒன்னா படிச்சா நீயும் எம்பிள்ளயும் ஒன்னாயிடுவிங்களா… அவ கூடலாம் நீ பழகலாமா இன்னையோட நீ வேற பொண்ணு வேறனு ஓடிப் போயிடு… இல்லனா சங்க அறுத்துருவானுங்க… உன்ன கொல்றதும் இல்லாம என் பிள்ளையையும் கொன்றுவாங்கடா… என்று ஜோவின் அப்பா பேசும் வசனங்கள் மிக முக்கியமானவை. பெண்ணை பெற்ற உயர்சாதி அப்பாக்கள் சாதி வெறியோடு இருக்க காரணம், கூட இருக்கும் சொந்தபந்தங்களே என்பதை மீண்டும் தெளிவுறுத்துகிறது. 

பெண்ணின் அப்பாவே ஒப்புக் கொண்டாலும் ஒட்டுறவு விடுவதில்லை. அதே சமயம் ஜோவின் அப்பா கொஞ்சம் பக்குவமானவராகவும் இருக்கிறார். அதனால் தான் பரியனை அடித்தவர்களை அவர் தடுக்கிறார் . மாவீரன் கிட்டு படத்தில் வரும் கதாநாயகியின் அப்பாவை நினைவூட்டுகிறார் இவர். 

பரியன் நடந்து முடிந்த சம்பவத்தினால் சில நாட்கள் கல்லூரிக்குப் போகாமல் ஊரில் வாடுகிறான் பரியன். பரியனை காணாததால் ஜோ கல்லூரியில் ஏங்குகிறாள். பல நாட்கள் கழித்து ஜோவும் பரியனும் தனிமையில் வகுப்பறையில் சந்திக்கிறார்கள். கல்யாணத்துக்கு ஏன் வரல என்று திட்டுகிறாள். உனக்காக எவ்ளவு அழுதேன் தெரியுமா என்கிறாள் ஜோ. பரியனுக்கு திருமண மண்டப அறைக்குள் நடந்த கொடுமை நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் பரியன் ஜோவிடம் எதுவும் கூறவில்லை. எங்கு என்னால் அப்பாவை வெறுத்துவிடுவாளோ என்ற பயம் பரியனுக்கு. ஜோ சண்டைபோட்டுவிட்டு வகுப்பை விட்டு கிளம்ப கருப்பி வகுப்பிற்குள் நுழைகிறது. மிக அழகான காட்சி அது. 

அடைபடும் கதவுக்குள் 
உடைபடம் உயிர்… 
விடுகின்ற பொழுதிலும் 
பொசுங்கிடும் உயிர்… 
பறந்திடும் பறவையும் 
துரத்திடும் உயிர்… 
பூத்திடும் நிலத்திலும்
நசுங்கிடும் உயிர்…
பெய்கின்ற மழையிலும்
எரிந்திடும் உயிர்…
சிரிக்கின்ற மனிதரும் 
வெறுத்திடும் உயிர்…
பார்க்கின்ற கடவுளும்
மறந்திடும் உயிர்…
வருகின்ற சாவையும் 
பொறுத்திடும் உயிர்…
நான் யார்…
நான் யார்…
நீ ஒழி…
நான் யார்…
நீ மழை…
நான் யார்…
நான் யார்…
நான் யார்…
நான் யார்…
நான் யார்…
ரயில் தேடி
வந்து கொள்ளும்
நான் யார்…
பூக்கும் மரமெங்கும் 
தூக்கில் தொங்கும் 
நான் யார்…
நதியில் செத்த
மீனாய் மிதக்கும் 
நான் யார்…
குடிசைக்குள் கதறி எரிந்த
நான் யார்…
தேர் ஏறாத சாமியிங்கு
நான் யார்…
உன் கை படாமல்
தண்ணீர் பருகும்
நான் யார்…
ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க
நான் யார்…
மலக்குழிக்குள் மூச்சையடக்கும்
நான் யார்…
நான் யார்…
நான் யார்…
அரசன் என்று 
சொல்வோருமுண்டு
ஆடிமை என்று 
நினைப்போருமுண்டு…
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு…
போர் செய்த கதையும் உண்டு…
மரித்த பின் உடல் எங்கும்
நீலம் பரவும் 
நான் யார்…
புதைத்தபின் நீல 
கடலில் நீந்தும்
நான் யார்…
மரித்த பின் உடல் எங்கும்
நீலம் பரவும் 
நான் யார்…
புதைத்தபின் நீல 
கடலில் நீந்தும்
நான் யார்…
நான்… யார்…
மரித்த பின் உடல் எங்கும்
நீலம் பரவும் 
நான் யார்…
புதைத்தபின் நீல 
கடலில் நீந்தும்
நான் யார்…
மரித்த பின் உடல் எங்கும்
நீலம் பரவும் 
நான் யார்…
புதைத்தபின் நீல 
கடலில் நீந்தும்
நான் யார்… 

தமிழ் சினிமாவில் வந்த நல்ல பாடல்களில் மிக முக்கியமான பாடல் இது. 

ஜோ பரியனிடம்  சண்டை போட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி கிளம்புகிறாள். பரியனோ அங்க இங்க என்று அலைந்து பொது நூலகத்தை கடந்துவந்து ஒயின்ஷாப்பில் அமர்கிறான். ஆனந்த் அவனுக்கு பெப்சி வாங்கி தந்து ஏமாற்றுகிறான். இதற்கு பெயர் தானே அக்கறை. நண்பன் கெட்டு போய்டக் கூடாது என்று நினைக்கும் நல்ல நண்பர்கள் எத்தனை பேருக்கு கிடைக்கப் போகிறார்கள். 

பரியன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஐயர் ஒருவர் உண்மையான சரக்கை குடுக்க பரியன் அதை மொடக் மொடக்கென குடிக்கிறான். அது ஏன் ஐயர் கொடுத்து குடிப்பது போல் காட்சி உள்ளது? என்ற கேள்வி எழுகிறது. அதே சமயம் ஐயருங்களும் குடிக்கிறாங்க என்ற உண்மை புலப்படுகிறது.  

பரியன் குடித்தது தெரியாமல் அவனை பஸ் ஏற்றிவிடாமல் வகுப்பிற்கு அழைத்துச் செல்கிறான் ஆனந்த். வகுப்பிற்கு வந்த பிறகு தான் ஆனந்துக்கு தெரிகிறது பரியன் உண்மையிலயே குடித்திருக்கிறான் என்று. அவனுக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் ஆனந்த் பரியனை படுக்க வைக்கிறான். பெஞ்சில் படுத்திருப்பதை ஆசிரியர் கண்ணுக்கு தெரியாதா? கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பது போலவோ அல்லது பெஞ்சுக்கு பின்புறம் படுக்க வைத்திருக்கலாம் அல்லவா? 

பரியன் அமைதியாகப் படுத்திருக்காமல் நான் வந்தது தப்பா என்று கத்துகிறான்.  ஆசிரியை உடனே அவனை வெளியே போக சொல்கிறார். அப்போது, ” டேய் நீ எவ்ளவுதான் கத்துனாலும் இங்க இருக்கறவன் எவனுக்கும் உன் பிரச்சினை புரியாதுடா… ” என்ற வசனம் கவனிக்க தக்கவை. இதேபோல வசனம் ஒருநாள் கூத்து படத்திலும் வந்துள்ளது. ஏழையா இருக்கறவன் பேசுனாலும் புரியாது, பேசலனாலும் புரியாது என்ற வசனம் தான் அது. நம்முடைய பிரச்சினையை புரிந்துகொள்ள ஆர்வமில்லாதவர்களுக்கு நாம் என்ன தான் சொன்னாலும் கத்தி கதறுனாலும் அது வெறும் புலம்பலாகவும் வெற்றுச்சத்தமாகவும் மட்டுமே கேட்கும். 

வகுப்பறைக்கு குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் பிரின்சிபால் அவனுடைய டிசியை கசக்கி முகத்தில் எறிந்து நாளைக்கு வரும்போது அப்பாவோட வா என்கிறார். நிஜ அப்பாவை கூட்டி வராமல் லோக்கல் நடிகர் ஒருவரை அப்பா என்று அழைத்து வருகிறான் கல்லூரிக்கு. இந்தக் காட்சிகள் மிகுந்த சலிப்பை உண்டாக்கியது. அடுத்து இதுதான் நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டது.  காரணம் இதுபோன்ற காட்சிகள் நிறைய படங்களில் வந்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கிய குறும்படம் ஒன்றில் இதேபோல காட்சிகள் உள்ளன. இந்த போலி அப்பாவிடம் பரியனுக்காக ஜோ வந்து கெஞ்சும் காட்சி செம. புதுமையாக இருந்தது.   

ஜோவின் அண்ணன் அமரும் பெஞ்சில் பரியன் அமர்கிறான். இதற்காக இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. ஆனந்த் அப்போது வந்து பரியனை அடித்து இழுத்துச் செல்கிறான். 

எதுக்குலே அவன அடிச்ச… என்று ஆனந்த் கேட்டதும் உங்காளு தான அவன், போயி அவன்ட்ட கேளு என்று சொல்கிறான் பரியன். சாதி பாத்தாடா பழகுறேன் நானு… நீ என்ன காரணத்துக்காக அடிச்சேனு சொல்லு… நானும் கூட சேந்து அடிக்குறேன்… என்கிறான் ஆனந்த். இந்த இடத்தில் ஆனந்த் ஹீரோவாக தெரிகிறான். சாதி பார்க்காமல் பழகும் ஆனந்துகள் இந்த சமூகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது இந்தக் காட்சி. 

திருமண மண்டபத்தில் என்ன நடந்தது என்பதை ஜோவிடம் பரியன் சொல்லாமல் தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆனந்திடம் சொல்லாமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. நெருங்கிய நண்பனிடம் சொல்லாமல் தவிர்ப்பது ஏனோ? ஆனந்துக்கு தெரிந்தால் ஆனந்த் சண்டைக்கு போவான் என்பதால் சொல்லாமல் இருந்திருக்கலாம். 

பரியன் பஸ்ஸில் சென்றுகொண்டிருக்க இடையில் பஸ்ஸை நிறுத்தி நான்கு பேர் அவனை அலேக்காக தூக்கிச் செல்கிறார்கள். வாழைத் தோப்பிற்குள் நடக்கும் சண்டைக்காட்சி மிக யதார்த்தமாக இருந்தது. ஒருவனை கொல்வதற்கு துடியாய் துடிக்கும் மனிதர்கள் இந்தக் காட்சியில் தெரிகிறார்கள். 

ஊர் எல்லைக்குள் நுழைந்ததும் துரத்தியவர்கள் விலகி செல்கிறார்கள். பரியன் தனக்கு நடந்ததை ஊர்க்காரர் ஒருவரிடம் சொல்ல, அவரோ எதற்கும் பயப்பட கூடாது திருப்பி அடிக்கும் தைரியம் வேண்டும் என்பது போல் பேசுகிறார். இந்தக் காட்சி சாதிவெறியை காட்டாமல் ஊர்க்காரர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. அதேபோல சிறுவர் பெரியவர் என்றில்லாமல் பாடலுக்கு ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கிறார்கள்.

பரியன் பஸ்ஸில் ஏறுகிறான். கொலைகார தாத்தா அவனை அழைத்து அருகே அமர வைக்கிறார். ஊரை விசாரிக்கிறார். புளியங்குளத்துக்காரன் என தெரிந்ததும் சட்டென்று எழுந்து தூர நிற்கிறார். தொட்டாலே தீட்டு என்ற மூடநம்பிக்கை நம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளதை காட்டுகிறது. குறிப்பாக வயதானவர்கள் புத்தியை காட்டுகிறது. 

தன்னுடைய சாதிக்கார சீனியர்களிடம் பரியன் நடந்ததை சொல்கிறான். உனக்கு இருக்கற மாதிரி எனக்கும் ஆளுங்க இருக்கறாங்க என்று பரியன் காட்டியிருக்கலாம். ஆனால் வன்முறை வேண்டாம் என்று அவர்களிடமிருந்து விலகுகிறான். வேகமாக ஓடி ஜோவின் அண்ணன் அமரும் பெஞ்சில் அமர்ந்து பரியன் என்று பெயர் எழுதுகிறான். பெஞ்சில் பேர் எழுதி வைத்து இடம் பிடிக்கும் குழந்தைதனம் கல்லூரி மாணவர்களிடமும் உள்ளது என்பதை காட்டுகிறது. 

பரியனின் நான்காம் தேவதையான டீச்சர் ஒருவர் பரியனையும் ஜோவையும் அழைத்து இருவருக்குள் என்ன நடந்தது என விசாரிக்கிறார். ஏன் உனக்கு ஜோவ பிடிக்கலயா என்று டீச்சர் கேட்க சட்டென்று  பரியன் டீச்சர் அவ என் ஜோ என்கிறான். ஜோ மீது காதலை காட்டிலும் அதீத அன்பு வைத்துள்ளான் பரியன் என்பதை காட்டுகிறது. ஒருவேளை 2005ல் பெஸ்ட்டி என்ற வார்த்தை இருந்திருந்தால் பரியனுக்கும் ஜோவுக்கும் இடையெயான உறவு புரிந்திருக்கலாம். 

பரியன் வராண்டாவில் நடந்துசென்று கொண்டிருக்க சட்டென்று அவனை லேடீஸ் பாத்ரூமுக்குள் தள்ளி கதவை சாத்துகிறான் ஜோவின் அண்ணன். பிரின்சிபால் வந்து கதவை நீக்குகிறார். பரியன் அமைதியாக எழுந்துவந்து வகுப்பிற்குள் அமர்கிறான். பிறகு பெஞ்சுகளை தூக்கி போட்டு உடைக்கிறான். பிரின்சிபால் அவனுடைய அப்பாவை அழைத்து வரச் சொல்கிறார். இந்தமுறை போலி அப்பாவை கூட்டிவராமல் தன்னுடைய நிஜ அப்பாவை கூட்டி வருகிறான் பரியன். 

பரியனின் நிஜ அப்பா சம்படி ஆட்டத்தில் பெண் வேடமிட்டு ஆடுபவர். அவரை கல்லூரிக்கு அழைக்கிறான் பரியன். அப்பாவோ அங்கெலாம் நான் எதுக்குப்பா என்று தலையை சொறிகிறார். அப்பாவ தான் வர சொன்னாங்க என்று அப்பாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்கிறான். 

பிரின்சிபால் அப்பாவை மட்டும் தனியாக உள்ளே அழைக்கிறார். எப்பா உள்ள போனா யாருக்கும் பயப்படாம பேசலாமல்ல… என்று பரியனின் அப்பா கேட்க, அப்படித்தான் பேசனும் என்கிறான் பரியன். மிக முக்கியமான காட்சி இது. அப்பாவி அப்பாவிடம் பிரின்சிபால் அதிகம் பேசவில்லை. படிக்காத அம்மா அப்பாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் ஒவ்வொரு மாணவனுக்கும் இந்தக் காட்சி முக்கியமானது.  

பரியனை அழைக்கிறார். இப்படியொரு அப்பாவியான அப்பாவ வச்சுக்கிட்டு ஆள மாத்தி கூட்டியாந்திருக்கியேடா  என்கிறார் பிரின்ஸ்பால். உடனே நாமம் போட்டிருக்கும் ஆங்கில ஆசிரியர் பரியனை சஸ்பெண்ட் பன்ன சொல்கிறார். அந்த ஆசிரியரை வெளியே அனுப்புகிறார் பிரின்சிபால். காரணம் அந்த ஆசிரியருக்கு சாதி ரீதியாக பரியனை பிடிக்காது. 

எங்கப்பா ரோட்ல செருப்பு தைக்கறவரு… அவருடைய பிள்ள நான்… உனக்கு பிரின்சுபால்…. என்னைக்கும் எப்பவும் அப்பாவ மாத்தாதடா… என்கிறார் பிரின்சுபால். இந்த வசனம் ஒன்று போதும். இனிமேல் அப்பாவை மாத்தும் காட்சி தமிழ்சினிமாவில் யாரும் எடுக்க மாட்டார்கள். 

பீ திங்குற பன்னி மாதிரி என்ன அடிச்சு அடிச்சு விரட்னுவங்க… ஓடியா ஒளிஞ்சு போயிட்டன் நா… அப்பறம் எது அவசியம்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன்… அன்னைக்கு என்ன அடக்கனும்னு நினைச்சவன்லா இன்னிக்கு ஐயா சாமின்னு கும்புடுறான்… என்ற வசனங்களை ஏழை வீட்டு மாணவ மாணவிகள் தங்கள் மனதில் ஆழமாகப் பதித்துகொள்ள வேண்டும். கீழ்மட்டத்திலிருந்து உயர நினைப்பவனுக்கு இந்தக் கதாபாத்திரம் சிறந்த முன்னோடி. 

ரூம்ல போயி தூக்கு மாட்டிட்டு சாகறதவிட சண்டைபோட்டு சாவட்டுமே… அவனுங்கள நம்மளால திருத்த முடியுமா… இவன மட்டும் ஏன் அடக்க பாக்குறிங்க… என்று பிரின்சுபால் பேசும் வசனங்கள் செம. அடங்கமறு அதேசமயம் கல்வியில் கருத்தாய் இரு என்று பொருள் தருகிறது இந்த வசனங்கள். பிரின்சுபால் பக்கத்தில் அம்பேத்கர் போட்டோ இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரியனின் அப்பாவை ஒன்பது அப்பா என்று கேலி பேசி அவருடைய வேட்டியை உருவுகிறான் ஜோவின் அண்ணன். அதை பார்த்த பரியன் அப்பா என்று கத்திக் கொண்டு ஓடுகிறான். இதேபோல நாயகன் அப்பா என்று கத்திக்கொண்டு ஓடும் காட்சி குரங்குபொம்மை படத்தில் வந்துள்ளது. 

பரியனின் அப்பாவை ஓட ஓட விரட்டி துணியை உருவி கீழே தள்ளுகிறான் ஜோவின் அண்ணன். பாடம் படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பதை உணர்த்தும் காட்சி. 

ஜோவின் அப்பா ஜோவின் அண்ணன் செய்த காரியத்தை கண்டித்து ஜோவின் அண்ணன் சக்ரலிங்கத்தை அடிக்கிறார். உடனே சக்ரலிங்கம், உன் பொண்ணு அவன் பின்னாடி நாய் மாதிரி சுத்துறா… என்னைக்காவது ஒருநாள் உம்பிள்ள அவங்கூட ஓடிப்போவ போறான்… என்று ஏத்திவிடுகிறான். ஏற்கனவே  சொன்னது போல பெண்ணின் அப்பா அமைதியாக இருந்தாலும் கூட இருக்கும் சொந்த பந்தங்கள் விடுவதில்லை. பரியனை கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். 

கௌரவ கொலைகள் செய்வதை சாமிக்கு செய்யும் கடமையாக எண்ணி கொலை செய்யும் மேஸ்திரி கொலைகார தாத்தாவை நாடி செல்கிறார்கள் ஜோவின் குடும்பத்தினர். வேறொரு பையனுடன் சுற்றுகிறாள் என்று தெரிந்ததும் ஒரு பெண்ணுக்கு மொட்டை அடிக்கிறார் கொலைகார தாத்தா. இதுபோல ஒவ்வொரு ஊரிலும் ஒரு கிழவன் இருக்கிறானோ என்ற அச்சம் எழுகிறது.  

பரியேறும் பெருமாளை ரொம்ப நல்ல பையன், நா வேணா பேசி பாக்கட்டுமா என்கிறார் கொலைகார தாத்தா. அப்படி இருந்தும் ஜோ குடும்பத்தினர் விடுவதாயில்லை. பையன் விலகி போகிறான் பெண் தான் பின்னாடி சுற்றுகிறாள், பையன் நல்ல பையன் என தெரிந்தும் அவர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. எவ்வளவு வெறி என்று வியப்பாக இருக்கிறது. அதே சமயம் பரியன் கையில் கத்தியோடு நின்றுகொண்டிருக்க அவனை வழிமறித்து வன்முறைக்கு போக வேண்டும் என்கிறார் பரியனின் அம்மா. வன்மம் யார் மனதில் அதிகம் என்று இப்போது புரிகிறது. 

நல்ல பையன் என தெரிந்தும் மனசாட்சியே இல்லாமல் பரியனை கொலைசெய்ய ரெடி ஆகிறார் கொலைகார தாத்தா. பரியனிடம் ஜோ கண்ணை மூடிக்கொண்டு பேசும் காட்சி செம. இந்தக் காட்சியில் வெள்ளை சுடிதார் அணிந்த ஜோ ஒரு தேவதையாக தெரிகிறாள். அவர்களுக்கு பின்னாடி கொலைகார தாத்தா! பக் பக்கென்று இந்தக் காட்சிகள். 

யதர்ச்சையாக கொலைகார தாத்தாவை பார்த்த பரியன் அவருக்கு  காலில் அடிபட்டிருக்கு என தெரிந்ததும் சைக்கிளில் உட்கார வைத்து அழுத்திச் செல்கிறான். ரயில் பாலம் வந்ததும் அவனை சைக்கிளோடு கீழே தள்ளி மயங்க வைத்து ரயில் ரோட்டில் இழுத்துப் போடுகிறார். சாதி ஆதிக்கத்தினால் இதுவரை ரயில் ரோட்டில் விழுந்து இறந்துபோன அத்தனை இளைஞர்களும் கண்முன்னே வந்து செல்கிறார்கள்.

கருப்பி எப்படி ரயில் ரோட்டில் கட்டப்பட்டிருந்ததோ அதேபோல இப்போதும் பரியனும் ரயில் ரோட்டில் படுத்துக் கிடக்கிறான். கருப்பியின் ஆத்மா பரியனை எழுப்பிவிடுகிறது. கவிதை போல் இருக்கிறது இந்தக் காட்சி. 

சுடுகாட்டில் சண்டை நடந்துகொண்டிருக்க ஜோவின் அப்பா காரில் வருகிறார். உடனே பரியன் கல்லை எடுத்து எறிகிறான். இந்தக் காட்சி பேண்ட்ரி படத்தை நினைவூட்டியது. 

” வாங்க சார்… வாங்க… எப்படி செத்துக் கிடக்குறான்னு பாக்க வந்திங்களா… யோவ் நீங்கள்லாம் மனுசங்களாயா… அன்பா கூப்டான்னு வீட்டுக்கு வந்தா அடைச்சு வச்சு அடிச்சு மூஞ்சில ஒன்னுக்குப் போயும் உங்க வெறி தீரல இல்ல… கேவலம் ஒரு கிழவன என்ன கொல்ல அனுப்ச்சிருக்கிங்க… த்தூ… இதுக்குப் பேருதான் வீரமாய்யா… யோவ் இன்னிக்கு உன்பொன்னு உன்ன பாத்து சிரிச்சால்ல… அப்பான்னு கூப்டால்ல.,. அந்த சிரிப்பும் அப்பாங்கற வார்த்தையும் நான் உனக்குப் போட்ட பிச்சை… நீங்கலாம் நினைச்சிட்டிருக்கிங்க… இந்த மானம் மரியாதை கௌரவம் இந்த மசுத்தெல்லாம் நீங்க தான் காப்பாத்திருக்கங்கனு நினைச்சு… நான் காப்பாத்திருக்கேன்… இதெல்லாம் போயி உன் பொண்ணுட்ட சொல்லிருந்தேன்னு வை… அவளே உன் மூஞ்சில காரித்துப்பிட்டு தூக்குல போய் தொங்கிருப்பா… அதனால தா எல்லாத்தயும் பொறுத்துக்கிட்டேன்… இப்ப என்னய்ய என்ன… நான் செத்தா தான் நீ அவளுக்கு அவ நம்புற அப்பாவா கிடைப்பன்னா… வாய்யா நீயே வந்து கொல்லு…  வாய்யா நீயே வந்து கொல்லு…   என்ன கொன்னதுக்கப்புறமும் உங்க பொண்ணு மேல உங்களுக்கு நம்பிக்கை வரலன்னா போயா… போயி அவளயும் சேத்து கொல்லு…

யோவ் உங்களுக்கு என்னய்யா பிரச்சினை… எதுல்லய்யா நா உங்களவிட கீழ போயிட்டேன்… இப்ப சொல்றேன்… ஏர் பிடிச்ச கைல நானும் வாள் பிடிச்சவன் தான்… அதுனால நா இங்க தான் இருப்பேன்… நா ஆசைப்பட்டது தான் படிப்பேன்… உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க போங்க… ” என்ற பரியனின் வசனங்கள் அருமை. இந்த வசனங்களுக்காகவே இந்தக் காட்சியை மீண்டும் மீண்டும்  பார்க்கலாம். கொலைகார தாத்தா ரயில் ரோட்டில் விழுந்து இறந்தபோது தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது, பறந்திருக்கும். இப்படிப்பட்ட வில்லனையும் வில்லனின் மரணத்தையும் தமிழ்சினிமா இதுவரை கண்டதில்லை. கொலைகார தாத்தாவால் இறந்தவர்களின் செய்திகள் போஸ்டரில் வந்தது போல் கொலைகார தாத்தாவின் மரணமும் வருகிறது. செம டுவிஸ்ட் இது. 

ஜோ, ஜோவின் அப்பா, ஜோவின் அண்ணன், பரியன் நால்வரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சி மிக,முக்கியமானது. குறிப்பாக கீழ்வரும் வசனங்கள் கவனிக்கத்தக்கவை. 

” தம்பி… உன்ட ஒன்னு கேப்பேன்… மறைக்காம சொல்லனும்… “

” சொல்லுங்க சார்… “

” நாங்க இவ்ளோ பண்ணிருக்கோம்ல… நீ ஏன் என் பொண்ணுகிட்ட சொல்லவே இல்ல… “

” உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார்… உங்க பொண்ணுக்கு என்ன விட உங்கள தான் சார் ரொம்ப பிடிக்கும்… எனக்கு கிடைச்ச மாதிரி அப்பா வேற யாருக்கும் கிடைச்சிருக்க மட்டாங்கன்னு ரொம்ப சந்தோசமா சொல்லிட்டே இருப்பா… அதான் சொல்லல… “

” தேங்க்ஸ் பா… எனக்கும் தெரியும் தம்பி… என் பொண்ணுக்கு என்ன எவ்ளோ பிடிக்கு மோ அதே அளவுக்கு உன்னையும் பிடிக்கும்… தம்பி என் பொண்ணு உன் மேல இவ்ளோ பைத்தியமா இருக்காளே… அதே மாதிரி உனக்கு அவ மேல எந்த நினைப்பும் வரவே இல்லையா… “

” தெரில சார்… அது என்னன்ன தெரிஞ்சிக்கறதுக்குள்ள தான் நாய அடிக்கிற மாதிரி அடிச்சு ரத்தம் சதைன்னு குத்திக் கிழிச்சுட்டிங்களே… ஆனா உங்க பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ சார்… அவ நினைச்சத நினைச்ச இடத்துல பேச முடியுதுல்ல… ஆனா என்ன பாருங்க… நான் என்ன நினைச்சேன்னு சொல்றதுக்கே செத்து தொங்க வேண்டியதா இருக்கு… “

” சாரிப்பா… நீ ரொம்ப நல்ல பையன்… நீ ஆசைப்பட்ட மாதிரியே வாழ்க்கைல பெரிய ஆளா வருவ… நல்லா படி… இப்போதைக்கு என்னால இதான் சொல்ல முடியும்… பாக்கலாம்… நாளைக்கு எது வேணாலும் எப்டி வேணாலும் மாறலாம் இல்லையா… யாருக்குத் தெரியும்… “

” எனக்குத் தெரியும் சார்… நீங்க நீங்களா இருக்கற வரைக்கும்… நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பார்க்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது… இப்டியே தான் இருக்கும்… ” என்ற வசனங்கள் செம. சமமாக உக்காந்து பேசலாம் வா என்று அழைப்பது போல் உள்ளது இந்த வசனங்கள்.

கடைசியாக காட்டப்படும் இரண்டு டம்ளர்களும் நடுவே காட்டப்படும் மல்லிகைகளும் கவிதை போல் உள்ளன. 

 

Related Articles

இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...
பத்து பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட R... கோடை விடுமுறைக்கு சமுத்திரக்கனி படம் ரெடி. தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவ மாணவிகளின் உயிரை காவு வாங்கும் காலம் அது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அ...
நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்க...
எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் கையில் பண... பணக்காரர்கள் ஏழை வேடமிட்டு மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான். ஆனால் உண்மையான ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் உருண்டு பிரண்டு எவ்வளவு சம்பாதித்தாலும் க...

Be the first to comment on "இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படமான “பரியேறும் பெருமாள்” படம் ஒரு பார்வை !"

Leave a comment

Your email address will not be published.


*