அமேசான் தனது ப்ரைம் செயலியின் மூலம் காணொளி மற்றும் திரைப்பட சேவைகளை வழங்கி வருகிறது. அதை மேலும் இலாபகரமான ஒன்றாக மாற்றத் திட்டமிட்ட அமேசான் இந்தியா நிறுவனம், தற்போது இடையூறற்ற இசை ஸ்ட்ரீமிங் (Music Streaming) வசதியை தங்களது பயனாளிகளுக்கு வழங்கி இருக்கிறது. இது ப்ரைம் பயனாளிகளுக்கான பிரத்தியேக சேவை ஆகும். இதன் மூலம் பயனாளிகள் அளவில்லாத இசையைத் தரவிறக்கம் செய்து ஆப்லைனில் கேட்டு ரசிக்க முடியும். அமேசானின் தனி உதவி மென்பொருளான அலெக்ஸாவுக்கும் இது பொருந்தும்.
அமேசான் ப்ரைம் சேவை
அமேசான் ப்ரைம் சேவையை தற்போது பயன்படுத்த வருடத்திற்கு 999 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்பு அமேசான் ப்ரைம் செயலியில் காணொளி சேவை மட்டும் தரப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக விளம்பர இடையூறற்ற இசையையும் வழங்குகிறது. இந்தச் சேவையின் மூலம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்தும், இந்திய நிறுவனங்களில் இருந்தும் திரைப்படம் மற்றும் திரைப்படம் அல்லாத இசையைக் கேட்டு மகிழ முடியும்.
பத்து மொழிகளில்
அமேசான் ப்ரைமின் இந்த இசை சேவை பத்து மொழிகளில் தற்போது வழங்கப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் சேவையை வழங்குகிறது அமேசான். ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் ப்ரைம் செயலி நிறுவப்பட்டிருக்கும் அனைத்துச் சாதனங்களிலும் இந்தச் சேவையை பெற முடியும்.
இணைய இசை சந்தையில் அமேசானுக்கு முன்பு நுழைந்த கானா.காம , ஹங்கமா மற்றும் சாவன போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செய்து வருகின்றன. தற்போது இந்தச் சந்தையில் புதிதாக நுழைந்திருக்கும் அமேசான் நிறுவனத்தால் இணைய இசை சந்தையில் அதிர்வலைகள் ஏற்பட்டு இருக்கின்றன.
‘புதிய நிறுவனங்கள் ஒரு சந்தையில் நுழையும் போது நிச்சயம் அதிர்வலைகள் ஏற்படுத்தும். அதுவும் அமேசான் போன்ற நிறுவனங்கள் ஒரு சந்தைக்குள் நுழையும் போது அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நிறையச் சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் நிறையப் பயனாளிகளை பெற முடியும்’ என்று அமேசானின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு ஆய்வாளர் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு நிலவரத்தின் படி அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் செயலியில் 610000 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.தாமதமாக இந்த இணைய இசை சந்தைக்குள் நுழைந்ததற்குக் காரணம் போதுமான அளவிற்கு இந்தத் துறையை பற்றிய ஆய்வில் ஈடுபட்டது தான் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தச் சேவையை பற்றிப் பேசிய அமேசான் இசை இந்தியாவின் இயக்குநர் சஹஸ் மல்ஹோத்ரா ‘இந்தியா எங்களுக்குச் சிறப்பானதொரு சந்தை. இங்கே பல விதமான இசை மரபு உள்ளது. பல மொழிகளில் தனித்துவமான இசை உள்ளது. இதனால் ஒரு பெரும் இசை சேகரிப்பை உருவாக்கி அதன் மூலம் அனைத்து மொழி பேசுபவர்களும் தங்கள் மொழியில் இசை கேட்டு ரசிக்கும் வண்ணம் இந்தச் செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
இணைய இசை சந்தையில் அமேசான் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Be the first to comment on "விளம்பர இடையூறற்ற இசையை வழங்குகிறது அமேசான்"