நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்கிறார்கள் என்பது உண்மையா?

About Tamil movie mentioned actor charactor

பொல்லாதவன் படத்தில் தனுஷின் அப்பாவை காலில் வெட்டி விடுவார்கள். அப்போது ஹாஸ்பிட்டலுக்கு தனுஷின் அப்பாவைப் பார்க்க வரும் செல்வாவிடம், “நான் சப்பைதான… நீ திருப்பி அடிச்சா என்னால திருப்பி அடிக்க முடியுமா… அங்கயே விழுந்து செத்தர மாட்டேன்…” என்று சொல்வார் தனுஷ். சப்பை என்று சொல்லும் அவர் தான் கடைசியில் அத்தனை பேரையும் வீழ்த்திவிட்டு ஹீரோவாக நிற்கிறார். இதுபோன்று சப்பைங்க தான் ரியல் ஹீரோக்கள் என்று உணர்த்தும் சினிமாக்கள் தமிழில் கொஞ்சம் வந்துள்ளன. அவற்றைப் பார்ப்போம். 

சப்பாணி

பதினாறு வயதினிலே படத்தில் வரும் சப்பாணிக்குத் தான் இந்தப் பட்டியலில் முதலிடம் வழங்கப்படும். சிறுவர்கள் முதல்கொண்டு ஊரே அவரை சப்பாணி சப்பாணி என்று கூப்பிட, அவர் தன்னை சப்பாணியாகவே நினைத்து வாழ்ந்து வருவார். சப்பாணி என்பதால் அவரை ஒரு ஆம்பளையாகவே யாரும் மதிக்க மாட்டார்கள். அதே படத்தில் எல்லா பெண்களும் மற்ற ஆண்கள் மீது மஞ்சள் தண்ணி ஊத்தி விளையாட, சப்பாணியும் அவர்கள் முன்பு சென்று என் மீதும் மஞ்சள் தண்ணி ஊற்றுங்கள் என்று நிற்பார். ஆனால் எந்தப் பெண்களுமே அவரை ஒரு ஆம்பளையாகவே மதிக்க மாட்டார்கள். வீட்டில் இருக்கும் மயிலும் அப்படியே பார்க்கிறாள். பரட்டை, சப்பாணியை தனக்கு சேவகம் செய்யும் ஆளாக பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் சப்பாணி மீது மயிலுக்கு காதல் வர சப்பாணியை இனி யாரும் சப்பாணி என கூப்பிடக் கூடாது என முடிவு எடுக்கிறாள். கோபால கிருஷ்ணனாக மாற்றுகிறாள். சப்பாணி கூப்புட்டா சப்புன்னு அறைஞ்சிடு என்கிறாள். இதே சப்பாணி கிளைமேக்சில் பரட்டையைக் கொன்றுவிட்டு மயிலைக் காப்பாற்றி ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். 

ஆரண்ய காண்டம்

“சப்பையும் ஆம்பள தான்… எல்லா ஆம்பளையும் சப்ப தான்…” என்ற வசனத்தை நம்மால் அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? இந்தப் படத்தில் ஹீரோ ஒரு சப்பை. அவனுடைய பெயரே சப்பையாகத் தான் இருக்கும். சிங்கப் பெருமாள் என்ற தாதா வீட்டில் எடுபிடி வேலை செய்யும் ஒருவனாக வாழ்ந்து வருகிறான் சப்பை. தாதா, அவனுக்கு கீழ் வேலை செய்யும் ரவுடிகள், இப்படி இருக்கும் ஒரு வீட்டில் சப்பையாக இருப்பவனை ஹீரோவாக காட்ட தனி தைரியம் வேண்டும். சப்பையும் அந்த வீட்டில் பாலியல் அடிமையாக இருக்கும் பெண்ணும் நெருங்கிப் பழகும்போது கூட அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் அவன் சப்பை தான. பெருசா என்ன செஞ்சிற போறான்… என்ற மிதமிதப்பு. சிங்கப் பெருமாளே கூட அப்படித்தான் நினைக்கிறான். ஆனால் சப்பையிடம் தான் அந்தப் பெண் மனம் விரும்பி படுக்கையை பகிர்கிறாள். சப்பையின் மனதை முழுதாக வென்று விடுகிறாள். நாம ரெண்டு பேரும் எங்கயாச்சும் ஓடிப்போய் நிம்மதியாய் வாழலாம் என்று திட்டம் வகுக்கிறார்கள். எங்கு ஓடிப் போனாலும் எப்படியும் சிங்கப் பெருமாள் தேடிவந்து பிடித்து விடுவான் என்பதால் சிங்கப் பெருமாளை வீழ்த்த இருவரும் திட்டமிடுகிறார்கள். ஆனால் அது முடியாதே என்று இருவரும் குழம்பி தவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சப்பை எதோ ஒரு ஆக்ரோசத்தில் சிங்கப் பெருமாளை சுட்டுவிடுகிறான். 

 

எல்லோரும் “என்னது சப்பை சிங்கப் பெருமாள சுட்டுட்டானா…” என்று வியக்கிறார்கள். இப்போது சப்பையை அந்தப் பாலியல் அடிமைப் பெண் சுட்டுத் தள்ளிவிட்டு ஒட்டுமொத்த பணத்தையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி தனக்கான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறாள். அப்போது அவள் சொல்லும் “சப்பையும் ஆம்பள தான்” என்ற வசனம் மிக முக்கியமானது. நீங்கள் எவனை சப்பை சப்பை என்று மட்டம் தட்டுகிறீர்களோ அவர்கள் தான் உண்மையில் எதோ ஒரு தருணத்தில் பெரிய ஹீரோவாக தெரிகிறார்கள். 

கடுகு

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் இது. இந்தப் படத்தில் நடிகை தேவையாணியின் கணவர் தான் ஹீரோ. சந்தானம் நடித்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் தேவையாணியின் கணவரை சந்தானம் பங்கமாய் கலாய்த்து தள்ளி இருப்பார். எல்லோரும் இவரை காமெடி பீஸ் என்று பங்கமாய் கலாய்த்து தள்ள இவர் தான் என் படத்தின் ஹீரோ என்று துணிச்சலாக அறிவித்தார் இயக்குனர் விஜய் மில்டன். இந்தப் படம் எங்க உருப்படப் போவுது என்று பலர் விமர்சிக்க நம்பிக்கையுடன் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுத்தார் இயக்குனர் விஜய் மில்டன். படத்தில் அவர் மாஸ் ஹீரோ எல்லாம் இல்லை. “தப்பு பண்றவன விட தப்ப தட்டிக் கேட்காம வேடிக்கை பாக்குறான் பாரு அவன்தான் உண்மையான குற்றவாளி” என்பது தான் படத்தின் மையக் கரு. படத்தில் ஹீரோ சாதாரண வேலையாளாக இருப்பான். ஆனால் குற்றம் நடக்குறப்ப அதை மத்தவாங்க மாதிரி வேடிக்க பாக்காமல், “தட்டிக் கேட்க நீ யாரு?” என்று வலிமை மிக்கவர்கள் கேள்வி கேட்க இவ்வளவு நாள் தன்னை சப்பையாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறான் நாயகன். அவனுக்குள் ஒளிந்திருக்கும் புலிக்கலைஞன் வெளியே வருகிறான். தன்னுடைய நகங்களை அந்த வலிமை மிக்க பலமான தீயவர்கள் மீது பதிய வைக்கிறான். இப்படிப்பட்ட ஒரு கதையை படமாக எடுத்து சிலிர்க்க வைத்து மிரட்டிய இயக்குனர் விஜய் மில்டனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

டிமாண்டி காலனி

இந்தப் படத்தில் நான்கு இளைஞர்கள். அதில் ஒரு இளைஞனை மற்ற மூன்று இளைஞர்களும் சேர்ந்துகொண்டு சப்பை சப்பை என்று மட்டம் தட்டுகின்றனர். சும்மா ஒரு ஜாலிக்காக அங்கு இருக்கும் திகில் பங்களாவான டிமான்டி காலனிக்கு நால்வரும் செல்கின்றனர். அப்போது ரமேஷ்திலக் சப்பையை பயமுறுத்துவதற்காக பேய் மாதிரி எல்லாம் பயமுறுத்துகிறார். ஏற்கனவே பயந்த சுபாவமான சப்பை மேலும் பயப்படுகிறான். ஒரு கட்டத்தில் அங்கு இருக்கும் டாலரை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்கள். அடுத்த சில நாளில் ஒரு ஜோசியரைப் பார்க்க போகிறார்கள். அந்த ஜோசியர் மற்ற மூவருக்கும் ஜாதக பலன்களை சொல்லிவிட, சப்பைக்கான ஓலைச்சுவடியை மட்டும் தேடித்தேடி பொருத்தம் இல்லாததால் உங்களுக்கான ஓலை இல்லை, நீங்க நாளைக்கு வாங்க நான் ரெடி பண்ணி வைக்குறேன் என்கிறார். அடுத்த சில நிமிடங்களில், ஹீரோவுக்கு போன் பண்ணி அந்த ஜோசியர் உண்மையை சொல்ல முற்படுகிறார். ஜோசியர் எதோ சொல்ல வந்தாரு ஆனா போன்ல சரியா கேக்கல என்று நாயகன் அவர் வீட்டிற்குத் திரும்பி போனால் ஜோசியர் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். நாயகன் மிரண்டு போகிறான். 

அவர்கள் அன்று இரவு ஜாலியாக படம் பார்க்கத் தொடங்க சப்பை தூங்கியபடியே இருக்கிறான். அடுத்தடுத்து அவர்கள் இருக்கும் அறையில் மர்மங்கள் நடக்கின்றன. முதலில் டாலரை திருடியவன் இறந்து போகிறான். அடுத்து நாயகனும், ரமேஷ் திலக்கும் மட்டும் இருக்கிறார்கள். அப்போதும் சப்பை தூங்கியபடியே இருக்கிறான். இப்போது நாயகனுக்கு ஜோசியர் போனில் என்ன பேசினார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்க அந்தப் போனை எடுத்து ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவானதை கேட்கிறான். அப்போது அந்த ஜோசியர், “தம்பி உங்க கூட இருக்கறவர் செத்து ரெண்டு நாளு ஆகுது தம்பி” என்று பதட்டம் நிறைய பேசியதை அரண்டு போய் கேட்கிறார்கள் இருவரும். 

இப்போது சப்பை எழுந்து அவர்கள் பக்கம் வர, அந்த டாலரை திருடியதால் தான் எல்லாம் என்று அந்த டாலரை அவர்கள் வெறுத்தாலும் கடைசியில் ஹீரோவும் இறந்து போகிறான். கிளைமேக்ஸில் சப்பை அந்த லாரியில் அமர்ந்துகொண்டு அந்த டிமாண்டியின் டாலரை கையில் வைத்திருக்கும் காட்சி அவ்வளவு மிரட்டலானதாக இருக்கும். திருட்டுப் பொருள் என்னைக்கா இருந்தாலும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அழுத்தமாகக் கூறியிருப்பார் இயக்குனர். 

ஒரு குப்பைக் கதை

இந்தப் படத்தில் நாயகனை சப்பை என்று யாரும் கூற மாட்டார்கள். இயக்குனரும் நாயகனை “சப்பை” என்பதுபோல் காட்டி இருக்க மாட்டார். ஆனால் நாயகனின் மனைவி, பொய் சொல்லி தன்னை ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்ட குப்பை அள்ளும் நாயகனை எதற்கும் லாய்க்கு இல்லாதவன் என்பதுபோல் பார்க்கிறாள். நாயகனை விட்டுவிட்டு வேறொருவனுடன் ஓடிப் போய் ஏமாந்து மீண்டும் நாயகனிடமே திரும்புகிறாள். இவ்வளவு நாட்கள் சப்பையாகத் தெரிந்த கணவன் இப்போது ஹீரோவாகத் தெரிகிறான் மனைவிக்கு. 

சலீம்

இந்தப் படத்தில் சலீம் மிக அமைதியான ஒழுக்கமான நேர்மையான மனிதராக இருப்பான். தியேட்டருக்குத் தன் காதலியுடன் படம் பார்க்கச் சென்றபோது சிலர் நாயகியிடம் வம்பு இழுக்க சலீம் வம்பு இழுத்தவர்களிடம் மன்னிப்பு கேட்பான். நாயகிக்கு அப்போது எரிச்சலாக இருக்கும். அவனுங்கள சட்டைய பிடிச்சு கேள்வி கேட்காம மன்னிப்பு கேட்குற நீயெல்லாம் “ஆம்பளையா” என்பது போல் பார்ப்பாள். உன்னுடனான கல்யாணமே வேண்டாம் என்று கல்யாண பத்திரிக்கைகளை கிழித்து எரிவாள். அதே போல, சலீம் பணியாற்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் திருட்டு வேலையும் பித்தலாட்டமும் செய்யும் மருத்துவர்கள் ஒன்றுகூடி சலீமை அசிங்கப்படுத்தி சிரிக்க சலீம் வெகுண்டு எழுகிறான். தப்பு செய்தவனை தேடிப்பிடித்து கடத்தி வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே மிரள வைக்கிறான். 

விஸ்வரூபம்

விஸ்வரூபம் பார்ட் 1 படத்தில் முதல் இருபது நிமிடங்கள் கமல் மென்மையான மனிதராக நடித்திருப்பார். “அய்யய்ய இது என்ன இப்படி இருக்கு” என்பது போல் பார்க்கும் அவரது மனைவி கணவனை சப்பையாகப் பார்க்கிறாள். ஆனால் உமர்ரின் ஆட்கள் வந்தபிறகு அல்லாவை வேண்டிவிட்டு கமல் போடும் சண்டைக் காட்சியில் மிரண்டு போய்விடுகிறாள் மனைவி. இவ்வளவு நாட்கள் சப்பையாகத் தெரிந்த கணவன் இப்போது மரணமாஸ் ஹீரோவாகத் தெரிகிறான். 

கவண் 

இந்தப் படத்தில் மிகச் சில நிமடங்களே வந்து செல்வார் பவர் ஸ்டார். இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பவர் ஸ்டாரை பார்த்து ஒருவர் “உங்களுக்கு இசையை பத்தி என்ன தெரியும்” என்று கேட்க, “உங்க அளவுக்கு இல்லனாலும் எனக்கும் ஓரளவுக்கு தெரியும்” என்று சொல்லும் பவர்ஸ்டார் இசை வாசித்து காட்ட இவ்வளவு நேரம் அவரை இளக்காரமாகப் பார்த்தவர்கள் இப்போது மிரண்டு போய் பார்ப்பார்கள். அப்போது அவர் ஒரு வார்த்தை சொல்வார், “ஒருத்தர் எல்லா விஷயங்கள்லயும் காமெடி பீஸா இருக்கறது இல்ல…” என்று. எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை. 

சப்பை என்று நாம் யாரை புறக்கணித்து மிதிக்கிறோமோ, அவர்கள் மேலே எழுந்து ஹீரோவாக வருகிறார்கள். ஆனால் நாமோ சப்பை சப்பை என்று யாரையாவது கமென்ட் அடித்து கொண்டு கடைசி வரை சப்பையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Related Articles

புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கூறியத... பிரபலங்களின் கருத்துக்கள்:புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்தி படிக்கக் கூடாது எனக் க...
குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும்... தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில்....
“பர்த்டே செலிபிரேசன் வீடியோ லின்க்... கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் முழுக்க அதிகம் பேசப்பட்ட வார்த்தை "link bro" என்பது தான். இலங்கையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் உல்லாச வீடிய...
எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ரா... இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்த...

Be the first to comment on "நாம் யாரை சப்பை என்கிறோமோ அவர்களே சாதிக்கிறார்கள் என்பது உண்மையா?"

Leave a comment

Your email address will not be published.


*