புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை இணையதளங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் இளைஞிகளின் நிலை என்ன?

இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் பெரிய பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களை, இதழ்களை, செய்திகளை படிப்பது தான் மேதாவித்தனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி இணைய தளங்களில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சாமானிய வீட்டுப் பிள்ளைகள்.  படித்த படிப்பிற்கு சரியான வேலையில் அமர இயலாதவர்கள். இயலாதவர்கள் என்று சொல்வதை விட சூழல் அமையவில்லை என்று கூட சொல்லலாம். அவர்கள் தங்களுக்கான ஒரு நிலையான வேலை கிடைக்கும் வரை  இணையதளங்களில் எழுதும் இந்த தொழிலை நாமளும் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்வோம். இதன் மூலம் நம்மையும் தேற்றிக் கொள்வோம் என்று ஒரு ஆறுதலுக்காகத்தான் இந்த இணைய தளங்களில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். 

ஆனால் இந்த இணையதள  கம்பெனிகள் இவர்களை எப்படி பயன்படுத்துகிறது? 

புது செய்தியை எழுதுங்கள் ஆனால் சுருக்கமாக எழுதுங்கள் ட்ரெண்டிங்கில் இருப்பதை எழுதுங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதுபோல் ட்ரெண்டிங்கில் என்ன விஷயம் இருக்கிறது என்று ஆராயத் தோன்றும் எழுதுபவருக்கு.   ட்விட்டர் பக்கம் போனால் “14 years of puthupettai”  என்று இந்திய அளவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கும்.  அந்த விஷயத்தைப் பற்றி எழுதினால் நல்ல பார்வைகள் பெறும் என்று அந்த படத்தை தேடிப்பிடித்து பொறுமையாக பார்த்து அந்த படத்தில் உள்ள சிறப்பம்சங்களை எல்லாம் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை எழுதினால் நீங்க இந்த மாதிரி எல்லாம் கட்டுரை எழுத வேண்டாம் என்று சொல்வார்கள். 

சரி அந்த மாதிரி கட்டுரைகள் எழுத வேண்டாமா? இன்றைய இளைஞர்கள் எந்த மாதிரி விஷயத்தை இணையத்தில் அதிகம் தேடுகிறார்கள் என்று ஒரு ஆய்வு செய்தால் அது பெரும்பாலும் பாலியல் சம்பந்தப்பட்ட செய்திகளாக இருக்கும் அல்லது தொழில் தொடங்குவது சம்பந்தப்பட்ட செய்திகளாக இருக்கும் அல்லது சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் இயக்குநர்கள் நடிகர்கள் பற்றிய செய்திகள் ஆக இருக்கும்…  இவர்களைப் பற்றிய செய்திகளை தகவல்களை தேடிப் பிடித்து படித்து உட்கார்ந்து எழுதினால் இந்த மாதிரி கட்டுரைகளும் நன்றாகப் போவதில்லை என்று சொல்வார்கள். 

இவற்றையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம்.  திடீரென இந்த மாதிரி இணையதளங்கள் ஒரு வாரம் எழுத வேண்டாம் என்பார்கள். ஒரு வாரம் தானே என்று கூட பொறுத்துக் கொள்ளலாம். சில சமயங்களில் அலுவலகத்தில் ஆட்கள் இல்லை நீங்கள் இந்த மாதத்தில் மேலும் சில நாட்கள் எழுத வேண்டாம் என்று திடீர் என்று சொல்லிவிடுவார்கள். மறுபடியும் எப்ப எழுத வேண்டும் என்பது குறித்து எந்த தகவலும் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு கட்டுரை எழுதிக் கொடுக்கும் இளைஞர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எப்போது எழுதுவது இவ்வளவு நாட்கள் இந்த இணையதளத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் திடிரென எழுத வேண்டாம் என்று நிறுத்த சொன்னால் வாழ்வாதாரத்திற்கு வேறு என்ன செய்வது என்று அந்த இளைஞர்கள் அழாத குறையாக கேட்பார்கள். ஆனால் இணையதளம் நடத்துபவர்களுக்கு அதெல்லாம் காதில் விழவே விழாது. 

சரி இவர்களை விட்டு விடுவோம். இந்த கட்டுரைகள் எழுதித்தரும் இளைஞர்களின் வீட்டில் என்ன மாதிரியான பிரச்சினைகள் நடக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.  இந்த மாதிரி இணையதளங்களில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு மாத வருமானம் எவ்வளவு இருக்கப்போகிறது?  இணையதளம் நடத்துபவர்களின் கட்டளைப்படி கட்டுரைகள் எழுதினால் மாதத்திற்கு வெறும் 3000 நான்காயிரம் மட்டுமே வரும்.  இன்றைய நாட்டின் பொருளாதாரம் என்ன?  பெட்ரோல் விலை என்ன ஆகிக்கொண்டிருக்கிறது? அரிசி விலை தக்காளி விலை என்று சாப்பிடும் பொருட்களில் அத்தனை விலையும் மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.  இந்த 3000 நான்காயிரம் எப்படி அந்த இளைஞர்களுக்கு பத்தும் இதில் மாதத்திற்கு நெட்பேக் போடுவார்களா? இல்லை புத்தகம் வாங்குவார்களா? வீட்டிற்கு கொடுப்பார்களா? அந்த 3000 4 ஆயிரமும் எப்படி செலவாகிறது என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடும். கடைசியில் பஸ்சுக்கு காசு கூட பெற்றோர்களிடம் சொந்த பந்தத்திடம் வாங்குவது போல அவர்களுடைய சூழல் இருக்கும்.  இந்த 3000 நான்காயிரம் தொகையை நம்பி முழுநேரப் பணியாக வருடக்கணக்கில் இளைஞர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிர்ச்சியாக இருக்கிறது தானே?  இந்த தொகை எல்லாம் பத்தாது என்பதற்காக இணையதள நடத்துபவர்கள் விதித்த கட்டளைகளை தாண்டி  இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து நிறைய தகவல்களை சேகரித்து ஒரு கட்டுரை எழுதினால்  இவ்வளவு வார்த்தைகளில் எழுத வேண்டாம் வார்த்தைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் மீண்டும் வற்புறுத்துவார்கள். அந்த மாதிரி இணையதளத்தில் நீங்கள் மூன்று ஆண்டுகள் வேலை செய்கிறீர்கள் எனில் மூன்றாவது ஆண்டு உங்களுக்கு மாத சம்பளமாக வெறும் 12 ஆயிரம் 13 ஆயிரம் என்பதாகத்தான் இருக்கும். அதற்காக நீங்களும் படாத பாடுபட வேண்டியதிருக்கும். வீட்டில் உள்ள  பெற்றோர்கள் அந்த மாதிரி இணையதளங்களில் வேலை செய்யும் தன் மகனை நினைத்து மனம் வேதனைப்பட்டு வருந்தி அடிக்கடி மருத்துவத்திற்குச் செலவு செய்வது போல் உள்ளாகி விடுகிறார்கள். அம்மா அப்பாவின் செலவுகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் அவர்களின் மருத்துவ செலவிற்கு உறுதுணையாக நிற்க முடியாமல் வெறுங்கையுடன் அந்த இளைஞர்கள் படும் அவஸ்தை  சொல்லி மாளாது. அதாவது பரவாயில்லை, இந்த மாதிரி இணையதளம் நடத்துபவர்களே கட்டுரைகள் எழுதும் அந்த இளைஞர்களின் இக்கட்டான சூழலுக்கு உதவுவார்கள் என்று கேட்டால் “ம்ஹூம்” என்பதுதான் பதிலாக வரும்.  எனக்கும் அந்த இளைஞர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவே அவர்கள் நடந்து கொள்வார்கள். சம்பளமும் சரியான நேரத்தில் தரமாட்டார்கள். இன்னும் நான்கு நாட்களில் தந்துவிடுகிறேன், அடுத்த மாதத்தோடு சேர்த்து தந்து விடுகிறேன் என்று இந்த ஐயாயிரம் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தை கூட இழுத்தடித்து தருவார்கள். இந்த சொற்ப சம்பளத்தையும் தாமதமாக வாங்கினால் அந்த இளைஞனின் வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை இருக்கும்?  அவர்களுடைய அம்மா அப்பாவிடம் சொந்தக்காரர்கள் எத்தனை கேள்வி கேட்பார்கள்? பையனுக்கு வயசு என்ன ஆச்சு? சம்பளம் எவ்வளவு? பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு துளைத்து எடுத்து விடுவார்கள் அப்போது பெற்றோர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.  அந்த இளைஞர்கள் தாங்கள் வாங்கும் சொற்ப வருமானத்தை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு தலை குனியும் தருணங்களை அந்த இணையதளம் நடத்துபவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?  அவர்கள் ஒருபோதும் அதை உணர மாட்டார்கள் என்பதே உண்மை. 

சொந்த பந்தங்களோ அல்லது நெருங்கிய நண்பர்களோ அல்லது அந்த இளைஞர்களின் பள்ளி கல்லூரி ஆசிரியர்களோ, நீ என்னடா பண்ணிட்டு இருக்க எங்க வேலை செஞ்சுகிட்டு இருக்க என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான இணையதளங்களில் கட்டுரை எழுதுவது செய்தி எழுதுவது போன்ற வேலை செய்து வருகிறேன் என்று சொன்னால் உடனடியாக அந்த இணையதளத்திற்கு சென்று பார்ப்பார்கள். அந்த இணையதளத்திற்கு மக்களிடம் எவ்வளவு பெரிய மதிப்பு இருக்கிறது, இணையதளம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பாட்டில் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து விட்டு, வேலை செய்றதுனா ஏற்கனவே வளர்ந்த ஒரு இணைய தளத்திலோ அல்லது நல்ல அனுபவசாலிகள் இருக்கக்கூடிய ஒரு இணையதளத்திலோ வேலை செஞ்சா பரவால்ல…  எதுவுமே இல்லாத ஒரு இணையதளத்தில் போய் ஒக்கார்ந்து கொண்டு அதற்காக மாங்கு மாங்கென்று வேலை செஞ்சுகிட்டு வளர்ச்சி அடைஞ்சிரும் வளர்ச்சி அடைஞ்சிரும்னு நம்பிகிட்டு இருக்குறது சுத்த முட்டாள்தனம். இந்த மாதிரி இணையதளங்களில் உட்கார்ந்துகிட்டு அதற்காக மாங்கு மாங்கென்று வேலை செய்கிறது கண்டிப்பா உனக்கு சறுக்கல்தான் தரும். தயவு செய்து வேறு ஏதாவது வேலை இருந்தால் அதற்கு போ, இல்லையென்றால் எங்களிடம் சொல் நாங்கள் நல்ல கம்பெனியாக பார்த்து உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று அறிவுறுத்துவார்கள். 

ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டிய வயது இந்த வயதில், இந்த மாதிரி இணையதளங்களை நம்பி கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் இணையதளங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்று பெரிய பெரிய பத்திரிக்கையாளர்களை இதழ் ஆசிரியர்களே சொல்கிறார்கள். அதில் வருமானம் பார்ப்பது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது என்று புலம்புகிறார்கள். அவர்களே இப்போது யூடியூப் பக்கம் போகலாமா என்கிற ஒரு ஐடியாவில் இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால்  இந்த மாதிரி இணையதளங்களில் வேலை செய்யும் இளைஞர்களின் வீட்டில் பெரிய வசதிகள் இருக்காது. பெரும்பாலும் அந்த இளைஞனின் வருமானத்தை நம்பி தான் அந்த குடும்பம் இருக்கும்.  பையன் படிச்ச படிப்புக்கு பெரிய பெரிய வேலையில் போய் உட்கார்ந்து நல்லா கை நிறைய சம்பாதிப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் இந்த மாதிரி இணையதளங்களில் போய் சிக்கிக்கொண்டு வளர முடியாமல் அவதிப்படும் இளைஞர்களை, இளைஞிகளை நினைத்து  பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டிற்கு வரும் சொந்தபந்தம் அக்கம்பக்கத்தினர் என்று எல்லோரிடமும் நான் கனவு கண்டது ஒன்னு ஆனா நடக்குறது ஒன்னு என்று புலம்பி தீர்ப்பார்கள். 

இவற்றையெல்லாம் இந்த மாதிரி இணையதளம் நடத்துபவர்களிடம் சொன்னால், அது எங்களுக்கு தேவை இல்லாதது… அது உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை, நீங்கள் வேலை செய்கிறீர்கள் வேலை செய்வதற்கான பணம் நாங்கள் தருகிறோம் அவ்வளவுதான். மற்றபடி இந்த மாதிரி இணையதளம் எங்களுக்கு மட்டும் பெரிய அளவில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொடுப்பதில்லை. நாங்களும் ஒரு சில மாதங்கள் எல்லாம் எங்களுடைய கைக்காசை போட்டு தான் உங்களுக்கு சம்பளமாக தருகிறோம்.  உங்களுக்கு வருமான பிரச்சினையும் பொருளாதார பிரச்சனையும் இருக்கிறது என்பதற்காக இணையதளம் நடத்துபவர்கள் மீது ஒரேயடியாக குற்றம் சுமத்த வேண்டாம் என்று அவர்கள் பதில் சொல்வார்கள். 

அந்த இளைஞர்களிடம் இந்த மாதிரி பதில் சொல்லும் இணையதள நிர்வாகிகள் அந்த பக்கம் என்ன சொல்வார்கள் தெரியுமா, என்னமோ இந்த பசங்க எல்லாம் நாம தான் அவங்க வாழ்க்கையை கெடுத்து விட்ட மாதிரி பேசுவானுங்க, அவனுங்களா தான வேலைக்கு வந்து சேர்ந்தானுங்க, இந்த இணையதளம் ஆகட்டும் இதில் வேலை செய்த இளைஞர்கள் ஆகட்டும். இவற்றால் முழுக்க முழுக்க தலைவலி தானே தவிர எந்தவித லாபமும் இல்லை என்று அவர்களுக்குள் பேசிக் கொண்ட பிறகு, தங்களிடம் வந்து புலம்பிய அல்லது கேள்வி கேட்ட அந்த இளைஞர்களின் முகநூல் பக்கம் சென்று அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதை ஆராயும் மனப்பான்மையுடன் இருப்பார்கள் அந்த இணையதள நிர்வாகிகள். 

Related Articles

ஒருத்தர் விடாம எல்லோரையும் கலாய்ச்சிருக்... தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் பதற்றம் படபடப்பு என்ற சூழல் நிலவ அந்த சமயத்தில் அனைவரையும் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கும். அத...
ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்... பூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள...
காதும்மாவை விரும்பியவர்களுக்கு கோலமாவு க... இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அனிருத்தின் இசையில் வெளியாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. நயன்தாராவுக்கு தோழியாக...
தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!... பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எ...

Be the first to comment on "புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை இணையதளங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் இளைஞிகளின் நிலை என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*