தன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்திருக்கும் மனிதர்களைப் பற்றி பார்ப்போம்! – அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன?

மருதமலை படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் வடிவேலு நகைச்சுவை போலீசாக நடித்து இருப்பார். அப்போது அவர் ஸ்டேஷனில் இருக்கும் போது ஒரு பெண் மணக்கோலத்துடன் ஓடி வருவார்.  அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணை துரத்திக்கொண்டு வந்த ஆண்களையும் நிறுத்தி அவர்களை பற்றி விசாரிப்பார்கள். அப்போது அந்த மனிதர்கள் தங்களுடைய பெயர்களை சொல்வார்கள். மாட்டு ரவி, பாம்பு சேகர், பிளேடு பாலு, கடப்பாரை கனேசன் என்பது போல அவர்களுடைய பெயர்கள் இருக்கும். என்னடா இது பேரு? எல்லா பேருக்கு முன்னாடி அடமொழி வைத்திருக்கிறீர்கள் என்று வடிவேலு கேட்க அடைமொழி தான் எங்களுடைய அடையாளமே என்பார்கள் அந்த ஆண்கள். 

அந்த படத்தில் காட்டப்படுவது போல,  நிஜத்திலும் சில டம்மி பீஸ் ரவுடிகள் இருக்கிறார்கள் அந்த மாதிரியான டம்மி பீஸ் ரவுடிகள் எல்லாம் பெரும்பாலும் சாதி சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தான். தங்களுடைய ஜாதி பெயரை தங்களின் இயற்பெயர்க்குப் பின்னால் சேர்த்துக் கொள்வது ஒரு தனி கெத்து என்றும் அது எதிரில் நிற்பவனை மிரட்டக் கூடியது என்றும் பொது மக்களிடம் ஒரு கௌரவத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், அந்த ஜாதி பெயரை அடைமொழியாக வைத்துக் கொண்டிருக்கும் டம்மி பீசுகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.  அரசாங்க சான்றிதழ்கள் பள்ளி கல்லூரி சான்றிதழ்களை தவிர மீதி எல்லா இடங்களிலும் அவர்கள் தங்களுடைய பெயருக்குப் பின்னால் தங்களின் சாதி பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களிடம் ஏன் இந்த மாதிரி பெயரை வைத்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள், அரசாங்க சான்றிதழ்கள் அனைத்திலுமே ஒவ்வொரு மனிதனுடைய ஜாதி இருக்கிறது, அப்படி சான்றிதழ்களில் ஜாதி இருக்கும்போது நான் என்னுடைய பெயருக்கு பின் என் ஜாதியை சேர்த்துக் கொள்ளக் கூடாதா இதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். 

அவர்கள் அப்படி பெயர் வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை ஒட்டி வைத்து விடுகின்றனர். அந்த சிறுவர்கள் தங்களின் பின்புறத்தில் வால் முளைத்தது போல அந்த ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டு திரிகின்றனர். அந்த சிறுவர்களிடம் இப்படி எல்லாம் செய்யக் கூடாது இது தவறு என்று சொன்னால், எங்க அப்பா அம்மா என்ன சொல்றாங்களோ அது தான் சரியாக இருக்கும் என்று வக்கணையாக விவரம் பேசுகிறார்கள். அவர்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் நாம்தான் மன உளைச்சலுக்கு ஆளாவோம். அதே போல இன்னும் சில தரப்பினர் தங்களுடைய கெத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தன் பெயருக்குப் பின்னால் எதைச் சேர்க்கிறார்கள் என்று பாருங்கள். 

Arvind mech, Kumar mech, Dinesh mech  என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இந்த மாதிரியான பெயர்களை நீங்கள் சமூக வலைதளங்களில் நிறைய இடங்களில் பார்க்கலாம். குறிப்பாக யூடியூப் கமெண்ட்களில் இந்த மாதிரியான பெயர்களை பார்க்கலாம்.  இவர்கள் மேலே பேசப்பட்டது போல டம்மி ரவுடி டம்மி பீசுகள்போல் நிஜ உலகில் தன் பெயருக்குப் பின்னால் இப்படி சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று பெயரை சேர்த்துக் கொள்கின்றனர். இப்படி தன் பெயருக்குப் பின்னால் நான் மெக்கானிக் மாணவன் என்பதை அழுத்தமாக சொல்வது கூட ஒருவகையில் அதிகாரம் தான் என்கின்றனர் சிலர். இந்த மாதிரி சில இளைஞர்கள் பற்றி, பரிதாபங்கள் கோபி சுதாகர் இருவரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது என்னடா புதுசா ஒன்னு கொண்டு வரீங்க பேருக்கு பின்னாடி மெக்கானிக்கல்னு போட்டா நீங்க பெரிய ஆளா? பேருக்கு பின்னாடி ஜாதி போடுற மாதிரிதான் இதுவும் தெரியுது என்று அவர்கள் ஒரு வீடியோவில் இதை ஜாலியாக பேசி இருந்தார்கள். மூடர் கூடம் நவீனும் கூட இது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். முன்பெல்லாம் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போட்டு நான் இவ்வளவு உயர்ந்தவன் இவ்வளவு செல்வாக்கானவன் என்பதை வெளியே காட்டிக் கொள்வார்கள். இப்போது அதே மாதிரி நான் மெக்கானிக்கல் படித்தவன்  என்பதை  போட்டுக்கொண்டு பொது சமூகத்தில் நான் கெத்தானவன், நான் திமிரானவன் என்பதை காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள் அந்த மாதிரியான இளைஞர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மாதிரி வார்த்தைகளை தன்னுடைய இயற் பெயருக்குப் பின் வைத்துக் கொள்ளும் இளைஞர்கள், பெரியவர்கள் பெண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொது சமூகத்தைப் பொறுத்தவரையில் கோமாளிகள் போல் தெரிகிறார்கள். இந்த மாதிரியான கோமாளிகள் தன் பெயருக்கு பின்னாடி எப்படி ஜாதி சங்க தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களோ அல்லது ஜாதிக்கு என்று தனியாக இருக்கும் சாமிகளின் பெயர்களை வைத்துக் கொண்டார்களோ அதே போல தான் ஒரு சில படித்த மேதாவிகள்… அறிஞர்களின் புரட்சியாளர்களின் கவிஞர்களின் பெயர்களை தங்கள் பெயர் பின்னாடி சேர்த்துக்கொள்வதும் என்கின்றனர். இந்த இடத்தில்தான் முற்போக்கு இளைஞர்களும் பிற்போக்கு இளைஞர்களும் மோதிக் கொள்கின்றனர். இருவருக்குள்ளும் நெருப்பு பற்றிக் கொண்டு அனல் வார்த்தைகளை எல்லாம் கக்கிக் கொள்கின்றனர். 

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியின் பெயரை நிறைய இளைஞர்கள் இளம் பெண்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் அல்லது முன்னால் வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரி இளைஞர்களிடம் இந்த ஜாதி பெயரை வைத்திருக்கும் இளைஞர்கள் சென்று வாதிடுகிறார்கள் இப்படி மட்டும் பெயர் வைக்கலாமா என்று? அதேபோல லெனின், அம்பேத்கர் கார்கி, சேகுவாரா, பெரியார், கார்ல் மார்க்ஸ், கலைஞர் போன்ற  அரசியல் மற்றும் கட்சித் தலைவர்களின் பெயர்களை நிறைய இளைஞர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் வைத்திருக்கிறார்கள்.  அவர்களிடமும் சென்று அந்த ஜாதி பெயரை வைத்திருக்கும் இளைஞர்கள் இப்படி மட்டும் பெயர் வைக்கலாமா என்று வாதிடுகிறார்கள். 

நீங்கள் எப்படி உங்களுக்கு பிடித்த தலைவர்களின் பெயர்களை உங்கள் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் வைத்துக் கொள்கிறீர்களோ அதே போலதான் நாங்களும் எங்களுடைய ஜாதியின் பெருமை பேசிய தலைவர்களின் பெயரை எங்கள் பெயருக்கு பின்னால் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டு அவர்களின் பெருமையை காப்பாற்றுகிறோம் என்று நரம்பு புடைக்க பேசுகின்றனர். இவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவர்களுக்கெல்லாம் மத்தியில் தனித்தன்மையுடன் மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்  வகையில் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் சிலரின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். கண்டிப்பாக அவர்கள் சினிமா ரசிகர்கள்தான்.   சிம்பு விக்னேஷ், தனுஷ் பாலாஜி,  ரஜினி குமார், அஜித் செல்வம்,  விஜய் பாலா போன்ற பெயர்களை எல்லாம் முன்னணி நடிகர்களின் படம் ரிலீஸின் முதல் நாள் கட்டவுட்களில் பார்க்கலாம்.  இவர்கள் தங்களுடைய வீரத்தை தங்களுடைய ரசிகர்கள் வட்டத்துக்குள் சினிமா ரசிகர்கள் வட்டத்திற்குள் மட்டுமே காட்டி கொள்கிறார்களே தவிர சமூகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. அதனால் இவர்களை விளையாட்டு பசங்க என்று விட்டுவிடலாம். 

நம்முடைய இயற்பெயர் தான் நாம் யாரென்று வெளியே சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு நம்முடைய பெயருக்கு முன்னாலும் பின்னாலும் ஜாதி பெயரை, தலைவர்கள் பெயரை, விலங்குகள் பெயரை அடை மொழியாக வைத்துக் கொண்டால் நாம் அந்த மாதிரியான தன்மையுடன் இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பலருடைய பெயருக்கு முன்னால் அப்பாவின் இனிசியல் அல்லது கணவனின் இனிசியல் மட்டுமே போட்டுக்கொள்ளும் முறை இருந்தது. 

ஆனால் இப்போது இனிசியல் யாரும் பெரிதாக போட்டுக் கொள்வதில்லை. குறிப்பாக சமூக வலைதளங்களில் யாரும் இனிஷியல் வைத்த பெயர் உபயோகிப்பதில்லை. அதற்குப் பதிலாக தங்களுடைய  பெயர்களுக்குப் பின்னால் கணவர் பெயரையோ அல்லது அப்பாவின் பெயரை வைத்துக் கொள்கிறார்கள் பெண்கள்.  அதேபோல ஆண்கள் தன்னுடைய பெயருக்கு பின் அப்பாவின் பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள். இவர்களிடமும் ஒரு குறை இருக்கிறது,  இவர்கள் எல்லாம் ஏன் காலங்காலமாக தன்னுடைய பெயருக்கு பின் ஆண் பெயர் வைத்தால் ஒரு அடையாளம் கிடைக்கும் என்று ஒரு ஆணின் பெயரே வைக்கிறார்கள் ஏன் அம்மாவின் பெயரையோ அல்லது மனைவியின் பெயரையோ எந்த ஆணும் வைப்பதில்லை. ஏன் பெண்களே கூட தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் அம்மாவின் பெயரை வைப்பதில்லை என்கிற கேள்வி எழுகிறது. 

 இப்படியே பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால்  விதவிதமான பெயர்களை வைத்துக் கொள்ள இந்த காலத்து இளைஞர்கள் முற்றிலும் தங்களுடைய பெயரை வடிவமைப்பதில் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.  தங்களுடைய மனைவியின் பெயரை தங்களின் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் சேர்த்துக் கொள்கிறார்கள். அதாவது சமூக வலைதளங்களில் அப்படி வைக்கிறார்கள். இன்னும் சில இளைஞர்கள் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் அப்பா பெயரை வைக்காமல் அம்மா பெயரை வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில இளைஞர்கள் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் அக்காவின் பெயரோ அல்லது தங்களுக்கு பிறந்த மகளின் பெயரோ வைத்துக் கொள்கிறார்கள். இந்த மாதிரியான மாற்றங்கள் உண்மையிலேயே பாராட்ட கூடியவை, வரவேற்க்கக் கூடியவை. 

 இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ஒரு சிலர் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் தங்களுடைய ராசி பெயரையும் தங்களுடைய நட்சத்திரத்தையும் வைத்துக்கொள்கிறார்கள்.  அதனால் அந்த விஷயங்களை அப்படியே விட்டு விடலாம்.  இதே போல சில படித்த இளைஞர்கள் தங்களுடைய பெயருக்கு பின்னால் தங்களின் ரத்தவகை என்ன என்பதை சேர்த்துக் கொள்கிறார்கள், அந்த மாதிரியான பெயர்களும் சமூக வலைதளங்களில் நிறைய வருகின்றன. உதாரணம்: vickiy O+, krish A+. இது என்ன விதமான மனநிலை என்று தெரியவில்லை. பெயருக்குப் பின்னால் ரத்த வகைகளை சேர்த்துக் கொள்பவர்களை கூட ஓரளவுக்கு நல்ல நோக்கத்துடன் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று  பாராட்டலாம்.  இதே போல தங்களுடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் தங்களுடைய ஊரின் பெயரை சேர்த்துக் கொண்ட சில மனிதர்களும் இருக்கிறார்கள்.  இந்த மாதிரி ஊரின் பெயர் ரத்தத்தின் வகை ராசியின் பெயர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்  போன்ற பெயர்களை பெயர்களுக்கும் முன்னாலும் பின்னாலும் வைப்பதில் கூட எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் அரசியல் தலைவர்கள் (போட்டோவை பெயரை வைத்து ஏமாற்றுபவர்கள்)& (புரட்சித் தலைவர்களை இங்கு குறிப்பிடவில்லை) அல்லது ஜாதி தலைவர்கள் பெயரை வைத்திருக்கும் நபர்கள் தான் ஏதோ ஒரு விதத்தில் இந்த சமூகத்திற்கு பாதிப்பை உண்டாக்குகின்றனர். 

Related Articles

தானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர... தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் இயக்கம்: விக்னேஷ் சிவன் மூலக்கதை: ஸ்பெசல்26 ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் இசை: அனிருத் நடிகர்கள்: சூர்யா, கார்த்திக், க...
வெறும் கையால் கழிப்பறையைச் சுத்தம் செய்த... அரசியல்வாதிகளின் கரங்கள் கறை படியாதிருத்தல் அறம். ஆனால் மற்றுமொரு அரசியல்வாதியின் கரங்களில் கறை பட்டிருக்கிறது. இம்முறை நேர்மறையாக. மத்திய பிரதேசம் ரே...
உங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்... கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ உலகில் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலான எலக்ட்ரானிக் ஸ்கின் பேட்சுகள் வெளிவர தொடங்கியுள்ளது. இப்போது அவற்ற...
சிட்டுக்குருவிகள் பற்றிய அரிய தகவல்கள்! ... மனிதர்களின் நீண்டகாலத் துணை சிட்டுக்குருவிகள்.  சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் 13 ஆண்டுகள்.சிட்டுக்குருவிகள் நம் வீடுகளில் பாதுகாப்பான...

Be the first to comment on "தன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்திருக்கும் மனிதர்களைப் பற்றி பார்ப்போம்! – அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*