நன்றேது? தீதேது? புத்தகம் ஒரு பார்வை! – திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு!

A view on nandrethu theethethu book by Akaramutalvan

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் அகரமுதல்வன். கடங்க நேரியன், தோழமை பூபதி,  தீபச்செல்வன், யுகபாரதி, தமிழ் நதி, திருமுருகன் காந்தி,  எழுத்தாளர் பத்திநாதன், தேன்மொழி தாஸ், குணா கவியழகன், மகா. தமிழ் பிரபாகரன் போன்ற மிக முக்கியமான மனிதர்களுடன் நடந்த  உரையாடல் தொகுப்பு தான் இந்த நன்றேது? தீதேது? புத்தகம். அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர், புத்தக பதிப்பாளர், சினிமா பாடலாசிரியர், ஈழ எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்று பலதரப்பட்ட மனிதர்களுடன் நடத்தப்பட்ட இந்த உரையாடல் மூலம்… ஈழ அரசியல், தமிழ் தேசியம், நாம் தமிழர் கட்சி பற்றி தெரியாத சில தகவல்கள்,  எழுத்தாளர்களிடம் இருக்கக்கூடிய ஜாதி மத பாகுபாடு, அதிகார வர்க்கத்தினரிடம் பணம் வாங்கிக் கொண்டு சில உண்மை சம்பவங்களை மறைத்த கைக்கூலி பத்திரிக்கைகள் போன்ற நிறைய விஷயங்கள் இந்த புத்தகத்திற்குள் விவாதிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் இருக்கும் சில கேள்வி பதில்கள் இங்கே: 

அகர முதல்வன்: நீங்கள் நாம் தமிழர்கட்சிக்கு பிரச்சாரவேலைகளில் ஈடுபட்டீர்கள்.நாம் தமிழர் கட்சியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிற இடத்தை சொல்லமுடியுமா? 

கடங்க நேரியான்: நான் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவன் இல்லை. கடங்கநேரியில் நாம் தமிழர் கட்சிக்கு கொடியோ கிளையோ கிடையாது . தேசிய /திராவிட / இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் பிடிக்காத இன உணர்வு கொண்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆதரவாக செயல்படலாம் எனக் கேட்டார்கள். சரி எனச் சொல்லி வாக்குச் சாவடி பிரதிநியாக செயல்பட்டேன் . சாதி வெறி பீடித்த கிராமத்தில் இனவுணர்வை கொண்டு சேர்த்தது நாம் தமிழர் . முதன்முறையாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது . தேசபிதா (பிரபாகரன்) பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறார்கள். இவையெல்லாம் நாம் தமிழரால் தான் கடங்கநேரியில் சாத்தியப்பட்டது.

அகர முதல்வன்: தமிழ்ச் சூழலில் சில பதிப்பகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஊதியப் பிரச்சனைகள் குறித்து ஒரு பதிப்பாளராய் என்ன நினைக்கிறீர்கள்? 

தோழமை பூபதி: இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதிலும் பார்க்க தெளிவாக பதில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு ஊதியத்தை வழங்கத்தான் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. சில பதிப்பாளர்கள் ஊதியத்தை வழங்குவதில்லை எனும் குற்றச்ச்சாட்டு நிரந்தரமாகவே இருக்கிறது. ஆனாலும் எல்லா பதிப்பாளர்களும் அப்படித்தான் என்று சொன்னால் சொல்பவர்களை கண்டிக்கும் திராணி எனக்குண்டு. எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் சண்டை என்று சொல்வது இன்று வேறொரு தன்மை அடைந்து விட்டது. முந்நூறு பிரதியை அச்சிட்டால் அது விற்றுத்தீர முன்னர் அதற்கான ஊதியத்தை சில எழுத்தாளர்கள் கோருகிறார்கள். அவர்களின் உரிமையது. அவர்களின் பொருளாதார நெருக்கடி சார்ந்தும் இருக்கிறது. என்ற போதிலும் பதிப்பாளர்களுக்கும் பொருளாதார நெருக்கடி உண்டு என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களோ என்கிற யோசிப்புக் கூட எனக்கிருக்கிறது. இன்றைய சூழல் இன்னும் இறுகிப்போய்விட்டது. எழுத்தாளர்கள் சிலர்  வெளியில் சென்று எனக்கு அவர் ஊதியமே தரவில்லை ஆனால் புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது  என நண்பர்கள் மத்தியில் சொல்லிக் கொள்வதுபெருகிவிட்டது. ஆனால் இப்படிச் சொல்லுகிற சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் பதிப்பக அலுவலங்களுக்குள்ளேயே வருடக் கணக்காக கிடக்கும். இந்த விடயத்தில் இரு தரப்பினரும் அனுசரித்து பபுரிந்துணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது தான் விருப்பம்.

அகர முதல்வன்: 2016ம் ஆண்டு மாவீரர் தினம் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டது. அது எம் மக்களின் காயத்தில் பட்ட சிறு ஆறுதல். ஆனால் மாவீரர் தினத்தை அனுட்டிக்க செய்வதன் மூலம் தன்னை ஒரு நல்லிணக்க அரசாக சிறீலங்கா அரசாங்கம் உலகத்திற்கு தோற்றம் கான்பிக்குமல்லவா? 

தீபச்செல்வன்: மாவீரர் தினத்தை அரசு அனுஷ்டிக்கச் செய்தது என்பது தவறு. மாவீரர் தினம் ஈழச் சனங்களின் தினம். அதை அவர்கள்தான் அனுஷ்டித்தார்கள். மாவீரர் நாளுக்கு எத்தனைபேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்பதையும் பார்ப்போம் என்று அரசின் சார்பில் பேசவல்ல பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனா ரத்தின சவால் விடுத்தார். அதற்கு மக்கள் பதிலடி கொடுத்தார்கள். கிளிநொச்சி உள்ளிட்ட சில துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் சில மாதங்களின் முன்னர் வெளியேறினர். ஏதும் நெருக்கடிகள் நிகழலாம் என்ற அச்சத்தின் மத்தியில்தான் துயிலும் இல்லங்களுக்குள் காலடி எடுத்து வைத்தோம். துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்தவர்களை வெளியேற்றி இருந்தாலோ, அங்கு விளக்கேற்ற தடை விதித்திருந்தாலோ அது உலகளவில் அரசுக்கு பெரும் நெருக்கடியாய் மாறியிருக்கும்.  அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதித்தோம் என்று கூறி சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசு தப்பிக் கொள்ளப் பார்க்கும் என்பது உண்மை. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழ் சமூகத்தின் அரசியல், நம்பிக்கை, ஒற்றுமை, கனவு எல்லாமே துயிலும் இல்லத்திலிருந்துதான் எழும் என்று நான் நம்புகிறேன். துயிலும் இல்லங்கள் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்கள் புதைந்த இடங்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்களின் கல்லறையும் இலங்கை அரசு எப்படி ஒடுக்கியது என்பதை தான் துயிலும் இல்லங்கள் இன்று பேசுகின்றன. அவற்றின் குரல் மிக வலியது. அதனை மீட்பதும், அதிலிருந்து வாழ்வின் நம்பிக்கையை கட்டி எழுப்புவதும் அவசியமானது. இனி எங்கள் மாவீரர்களின் கல்லறைகள் இந்த உலகத்துடன் போராடும். விடுதலைப் புலிகளையும் அவர்களின் கனவுகளையும் இந்த அரசும் உலகமும் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். அந்தப் போராட்டத்தில் இது முதல்படி என்றே கருதுகிறேன்.

அகர முதல்வன்: அம்பேத்கர் மாணவர் விடுதியில் நீங்கள் தங்கியிருக்கிற போது நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திர கலியாண மண்டபம் என்று உரையாடும் காலம். பின்னர் ரஜினிகாந்த்தின் படத்திற்கே பாடல் எழுதியது. அந்தத் தருணம் உங்கள் எண்ணம் எப்படியிருந்தது? 

யுகபாரதி: தமிழ்த் திரையுலகின் உச்சபட்சமான எல்லை ரஜினிகாந்துக்கு பாட்டு எழுதுவதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல அவருக்கு பாடல் எழுதினால் தான் பாடலாசிரியராகவே அங்கீகரிக்கப்படுவீர்கள் எனும் சூழல் இன்றுவரை நிலவுகிறது. சந்திரமுகிப் பாடல் வாய்ப்பை நேரடியாக ரஜினியோ, பி.வாசுவோ அழைத்து தரவில்லை. நான் வாழ்வில் மறக்கவேகூடாத பெயர்களில் ஒரு பெயர் வித்யாசாகர். எனது வாழ்வில் அவர் ஒரு சகோதரன் அல்லது தந்தைக்கு நிகரானவர்.அவரை நான் போற்றுகிறேன். எனது வீட்டில் மிகப்பெரும் இசைஞானிகளின் புகைப்படங்களை வைத்திருக்கவில்லை. வித்யாசாகரின் புகைபடத்தைத் தான் வைத்திருக்கிறேன். “காதல் பிசாசே” என்கிற பாடலுக்கு பின்னர் எனக்கு வந்த நூறுபாடல்களையும் அவரே வழங்கியிருந்தார். சந்திரமுகி படத்திற்கு அவர் ஒப்பந்தமாகி அமைத்த முதல் மெட்டை எனக்கு வழங்கி நீ தான் எழுதவேண்டும் என்று சொன்னவர் வித்யாசாகர். ஆக அந்தப் பெருமைகள் யாவும் அவரைத்தான் சேரும்.

அகர முதல்வன்: நீங்கள் விரும்பும் தமிழ்தேசியம்? 

திருமுருகன் காந்தி: தமிழினத்தின் பீடையான சாதி, வர்க்க, பாலின ஆதிக்கத்தன்மைகள் களையப்பட்ட, அனைத்து தமிழ் மக்களும் சமத்துவம் என்கிற ஒரே விசையில் உரிமைகளும், பண்பாடுகளும் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் நிலம், அவர்களின் வளம் என்பதோடு முற்போக்கு மிக்க தேசியமாக அதுவிருக்கவேண்டும்.

அகர முதல்வன்: சினிமாவில்- திரையில் பெண், திரைக்குப் பின்னால் பெண் கசப்பான அனுபவங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படி ஏதும் உங்களுக்கு இருக்கிறதா? 

தேன்மொழி தாஸ்: திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு. திரைக்குப் பின்னால் பெண் கொன்று புதைக்கப்பட்ட கசப்பு.

அகர முதல்வன்: உங்கள் பார்வையில் தமிழ்தேசியம் என்றால் என்ன? 

மகா. தமிழ்ப்பிரபாகரன்: கோட்பாட்டிற்கும் செயல்பாட்டிற்கும் உள்ள இடைவெளியை குறைத்து மற்றொரு தேசியத்தின் பெயரால் முடக்கப்பட்ட தமிழ் தேசிய மக்களின் எண்ணங்கள் மீட்சி பெறுவதுடன், சமூக-சாதிய-பொருளாதார கூறுகளின் அடிப்படையில் சொந்த இனத்திற்குள்ளேயே உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்ட தேசியமாக தமிழ்த் தேசியம் வளம் பெற வேண்டும்.

இங்கே குறிப்பிட்டிருக்கும் ஒரு சில கேள்வி பதில்கள் எல்லாம் உதாரணங்கள் மட்டுமே. இவற்றை விட மிக முக்கியமான கேள்விகள் நுட்பமான கேள்விகள் எல்லாம் அந்த புத்தகத்தில் உள்ளது. புத்தகத்தின் அளவு மிகச் சிறியதாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் தகவல்கள் மிக முக்கியமானதாகவும் பெரிய அளவில் வெளியே பேசப்படாத தாகவும் இருக்கிறது. மிக குறைந்த விலையில் ஒரு புத்தகம்… படிப்பதற்கும் எளிமையாக இருக்கவேண்டும்… ஆனால் நிறைய தகவல்கள் இருக்கவேண்டும்… வழவழ என்று இழுத்தடிக்காமல் சீக்கிரம் படித்து முடிக்கும் படி இருக்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் தாராளமாக இந்த புத்தகத்தை வாங்கலாம். 

அதே மாதிரி நேர்காணல்கள் உரையாடல்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், கேள்வி பதில் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்  போன்று நீங்களும் எழுத வேண்டுமென்றால் எடுத்ததும்  பெரிதாக முயற்சி செய்யாமல் மிகச்சிறிய அளவில் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரு எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன் உரையாடல், கேள்வி – பதில் வகை புத்தகங்கள் நிறைய வந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பிரபல திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் அவர்கள் எழுதிய “மணிரத்னம் ஓர் உரையாடல்”. 

இந்த புத்தகம் வெளிவந்த நாள் முதல் இன்றுவரை பெரிய அளவில் பேசப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. (“குறிப்பு: இங்கு நன்றேது? தீதேது புத்தகத்தையும் அதிலுள்ள கருத்துகளையும், மணிரத்தினம் பற்றிய புத்தகத்தையும் அதிலுள்ள கருத்துகளையும் ஒப்பிடவில்லை. இது முழுக்க முழுக்க புத்தகத்தின் வகையை பற்றிய வரிகள்) ஒரே மனிதரின் வாழ்க்கை பற்றி, அவருடைய அனுபவங்களை பற்றி, அரசியல் புரிதலைப் பற்றி திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே கேட்டு சலிப்பு அடிக்காமல் மிக முக்கியமான மனிதர்களை, வேறுவேறு சிந்தனை கொண்ட மனிதர்களை சந்தித்து எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மழுப்பலும் இல்லாமல் கேள்விகளை பட்டு பட்டுனு உடைத்து அதற்கு தகுந்த பதில்களை வாங்கி, அதை சரியாக சீரமைத்து புத்தகமாக கொண்டு வந்து மிகக் குறைந்த விலைக்குக் கொடுத்துள்ளார். 

யூட்யூப் வீடியோக்களுக்கு நேர்காணல் எடுக்க  விரும்புபவர்கள், பத்திரிகைகளுக்கே கூட நேர்காணல் எடுக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்திலிருக்கும் கேள்வியின் தன்மையையும் பதிலிலிருந்து கேள்வியை மறுபடியும் உருவாக்கும் தன்மையையும் கற்றுக் கொள்ளலாம். (குறிப்பு: இந்த மாதிரி நேர்காணல் எடுக்க விருப்பபடும் ஆரம்ப கட்ட நிலை மனிதர்களுக்காக தான் இந்தப் புத்தகம் இவ்வளவு வெகுவாகப் பரிந்துரைக்கப் படுகிறது). ஈழ மக்களின் வாழ்க்கை பிரச்சனைகள், அங்கு நிலவும் அரசியல்…  இதுகுறித்து தன்னுடைய  படைப்புகளில் உரையாடும் அகரமுதல்வன் அது சம்பந்தப்பட்ட கேள்விகளை இந்த புத்தகத்தில் கேட்டுள்ளார்.  உங்களுக்கு பிடித்தமான ஒரு துறையில் நீங்கள் நேசிக்கும் அல்லது வியந்து பார்க்கும் மனிதர்களிடம் நேர்காணல் எடுக்க விரும்பினால் இதிலுள்ள கேள்வியின் தன்மையைப் போல்  கேள்வி கேட்டு பழகுங்கள். 

 

Related Articles

எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை... "பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்... " இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனி...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...
சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாக இர... பிரபல தமிழ் யூடுப் சேனலான Blacksheep குடும்பம் நாங்கள் அடுத்தகட்ட நிலையை அடையப் போகிறோம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர். இவ்வ...
தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...

Be the first to comment on "நன்றேது? தீதேது? புத்தகம் ஒரு பார்வை! – திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு!"

Leave a comment

Your email address will not be published.


*