ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் “மண்டேலா” படத்தின் குறைகள்!

Know about Mandela tamil movie

முதலில் இந்த படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் கலைஞர் டிவியில் நடைபெறும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டவர். அந்த சமயத்தில் தர்மம் என்கிற குறும்படம் எடுத்து அந்த படத்திற்காக தேசிய விருது வென்றவர் இந்த இயக்குனர்.  குரங்கு பொம்மை என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த அவருடைய வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருந்தன. ஆனந்த விகடனே அந்த வசனங்களை குறிப்பிட்டு எழுதி இருந்தது.  நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றியாளராக முதல் பரிசு பெற்ற இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனின் நெருங்கிய நண்பர்தான் இந்த மண்டேலா பட இயக்குனர். 

நிறைகள்

ஊருக்காக அதாவது இரண்டு ஜாதிக்காரர்கள் எப்போதும் அடித்துக்கொண்டே இருக்கும் அந்த வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு ஊருக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை மட்டும் கட்டி வைத்திருக்கிறார்கள் அந்த ஒரே ஒரு கழிவறை ஏக்கத்துடன் பார்க்கிறார்கள் இளம்பெண்கள் ஆனால் அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த இரண்டு ஜாதிக்காரர்கள் கழிவறையை அடித்து நொறுக்குகிறார்கள்.  அந்த கழிவறையில் மனிதர்கள் மலம் கழிப்பதற்கு முன்பு தெருநாய் ஒன்று மலம் கழித்து வைத்துவிடுகிறது. அதை யார் சுத்தம் செய்வது என்று அவர்களுக்குள் போட்டி போட்டு அடித்துக் கொள்கிறார்கள். அப்போது அந்த நாயின் மலத்தை சுத்தம் செய்வதற்காக வருபவர்தான் இந்த படத்தின் ஹீரோ என்கிற போது இந்தப் படம் பெரிய அங்கீகாரத்தை பெறப் போகிறது என்பது தெரிந்துவிட்டது.  அடுத்ததாக ஹீரோவை எல்லோரும் இழிச்ச வாயன், ஸ்மைல் என்று அழைக்கிறார்கள். என்னடா இது ஒரு ஹீரோவை இவ்வளவு கேவலமாக இவ்வளவு அடிமைத்தனமாக காட்டுகிறார்களே என்று மேம்போக்கான சினிமா ரசிகர்களுக்கு தோன்றலாம். ஆனால் இவன் தான் பின்னாளில் பெரிய ஹீரோவாக உயர போகிறான் என்பது தெரிந்ததும் அவர்கள் ஹீரோவை ரசிக்கிறார்கள். 

ஒரு சாதிக்கு ஒரு நீதி மற்றும் ஏலே ஏலோ என்கிற இரண்டே பாடல்கள்தான் படத்தில் கவனிக்கும் படியாக இருக்கிறது. குறிப்பாக அந்தப் பாடல்களின் வரிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. இந்த காலத்தை சமூக அவலங்களை பகடி செய்யும் வகையில் அழகாக எழுதி இருந்தார்கள் அந்த வரிகளை.   இந்த படத்தை பார்க்கும் போது 16 வயதினிலே படம் நினைவுக்கு வந்தது. அந்த படத்தில் எல்லோரும் நாயகனை சப்பானி சப்பானி என்று அழைப்பார்கள்.  அதேபோல இந்த படத்திலும் இளிச்சவாயன் என்று அழைக்கிறார்கள். கடைசியில் அந்த சப்பானி கோபாலாக மாறி ஹீரோவாக உயர்கிறான். அதேபோல இந்த படத்தை அடுத்து யோகி பாபு மண்டேலாவாக உயர்கிறார்.  

கொஞ்சம் கூட சுய மரியாதையை இல்லாமல் பெரிய ஜாதி காரர்களுக்கு ஜால்ரா அடித்து வாழும் மக்களின் உண்மை நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருந்தது பாராட்டுக்குரிய விஷயம்.  அதேபோல அரசு ஊழியர்களின் நேர்மையைப் பற்றி இந்த படத்தில் சிறப்பாக கூறியிருந்தார்கள். ஒரு அரசு ஊழியர் நேர்மையாக இருந்தால் அந்த ஊரே மொத்தமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை புரட்சிகராமாக இல்லாமல் “அழகாக” சொன்ன முதல் படம் மண்டேலா தான். 

குறைகள்

இந்த படத்தின் குறைகள் என்னென்ன சொல்லலாம் வாருங்கள் பார்ப்போம்.  ஒருவன் தன்னுடைய பெயரையே மறந்து போகும் அளவுக்கு… எல்லோருக்கும் வேலை செய்து கொடுத்து விட்டு அதற்கான காசு வாங்காமல் அவர்கள் கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொண்டு வரக்கூடிய அளவுக்கு ஒரு மனிதன் இந்த காலத்தில் கேனையனாக இருக்கிறானா என்று நினைக்கும் போது இது பொய்யான ஒரு கதை என்று தோன்றுகிறது. பெரியார் தாசனை இந்த படத்தில் அவமானப் படுத்தி இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். ஜாதி ஒழிய வேண்டும் என்று தீவிரமாக போராடிய ஒரு சமூக சீர்திருத்தவாதி பெரியார். அவருடைய தாசனாக இருக்கும் ஒருவர் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு ஜாதியில் இருந்து ஒரு பெண் களை கட்டிக் கொள்கிறார். இது எப்படி ஜாதியை ஒழிப்பதற்கான சரியான வழிமுறை… மிக முட்டாள்தனமான காரியம் என்று கேள்வியை எழுப்புகிறது. 

 விலைமதிப்பற்ற தங்களுடைய வாக்கை வருடம் வருடம் அதாவது ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்தப் பெரியார் தாசனுக்கு அளித்து அவரையே காலங்காலமாக தலைவராக வைத்திருக்கும் அந்த ஊர் மக்கள் மற்ற ஊர் எவ்வளவு செழிப்பாக எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்காமலா இருப்பார்கள்.  நிஜத்தில் அப்படி ஒரு பஞ்சாயத்து தலைவர் ஒரு கிராமத்திற்கு இருக்கிறார் என்றால் அந்த ஊர் மக்கள் படத்தில் காண்பிப்பது போல அடிமைத்தனமாக எல்லாம் இருக்க மாட்டார்கள். அடித்து நொறுக்க கூடிய உணர்ச்சிகரமான மக்களாகத்தான் இருப்பார்கள். உரிமைகளை கேட்டு வாங்குவது குறித்து அவ்வளவு தைரியமான மனிதர்களாக இருக்கிறார்கள் இப்போதைய மனிதர்கள்.  அந்த வகையில் இந்த கதையை நம்பகத்தன்மை குறைவாக உள்ள ஒரு கதை என்றே சொல்லலாம்.  அதேபோல இந்த படத்தின் ஹீரோவாக நடித்த மண்டேலா இந்த ஊருக்கு அடிமையாக வாழ்கிறார். அவரே ஒரு அடிமை என்கிற போது அவருக்கு இன்னொரு அடிமையாக கிருதா என்கிற இளைஞர் வாழ்ந்து வருகிறார். 

அதே போல ஆனந்த விகடனின் விமர்சனத்தில் இலவசங்கள் குறித்த சரியான புரிதல் இயக்குனருக்கு இல்லை என்று எழுதி இருந்தார்கள். விகடனின் அந்த வரிகளை ஏற்றுக்கொள்ள முடிந்தது. உண்மையில் இலவசங்கள் என்பது இந்த சமூகத்திற்கு தேவையான ஒன்று. மக்களுடைய பணத்தை தான் திருப்பி மக்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை இயக்குனர் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி காட்சிகளை மாற்றி அமைத்திருக்கலாம். 

இருந்தாலும் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்த்திய இந்த படத்திற்கு கண்டிப்பாக ஆஸ்கர் கொடுக்கலாம். 

பெரிய தலைகள்

இவ்வளவு அற்புதமான படத்தை எழுத்தாளர் சாரு நிவேதிதா ஏன் அவ்வளவு மோசமாக திட்டினார் என்று தெரியவில்லை.   5 நிமிடம் கூட இந்த படத்தை என்னால் பார்க்க முடியவில்லை அவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று சொன்னார் எழுத்தாளர் சாருநிவேதிதா.  அவர் அப்படி சொல்வதற்கு அந்த ஒற்றைக் கழிவறை காட்சி தான் காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. 

மண்டேலா என்கி ஒரு இன மக்களின் தலைவர் பேரை காமெடி படத்திற்கு தலைப்பாக வைக்க கூடாது என்று அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் அப்போது கேள்வி எழுப்பினார்.  இந்த தலைப்பை வைக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் இப்போது இந்த தலைப்பிற்காக பெருமை படுவார்.

நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம்… இந்த படத்தின் கதை எழுத்தாளர் நாஞ்சில்நாடன் எழுதிய இந்நாட்டு மன்னர்கள் என்ற சிறுகதையை தழுவி எழுதப்பட்ட கதை ஆகும்.  ஒருவேளை இந்த படம் தேசிய விருது வாங்கினால் அது எழுத்தாளர் நாஞ்சில் நாடனை மிகப்பெரிய அளவில் கௌரவிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இனிவரும் காலங்களில் இளம் இயக்குனர்கள் எல்லோரும் எழுத்தாளர்களை தேடி புத்தகங்களை வாசிக்க கூடிய வாசகர்களாக மாறி நல்ல நல்ல படைப்புகளை தருவதற்கு இது ஊக்கமளிக்க கூடிய செயலாக இருக்கும். 

யோகி பாபுவின் அர்ப்பணிப்பு: 

 இந்த படத்திற்காக இந்த படம் நல்ல முறையில் வர வேண்டும் என்பதற்காக  “உண்மையாக செருப்படி வாங்கிக் கொண்டு நடித்தார் யோகி பாபு” என்ற செய்தியை படிக்க முடிந்தது. அவர் செருப்படி வாங்கி நடித்ததற்காகவே இந்த படத்திற்கு ஆஸ்கர் கொடுக்க வேண்டும். பன்னி மூஞ்சி வாயன் என்று எத்தனை பேர் கேலி பேசி இருப்பார்கள்… அவருடைய அப்பாவித்தனமான முகத்திற்காகவே ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும்…

 இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் அந்த படத்தினை அதிகமாக ஒளி பரப்பி மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய் டிவியின் முயல வேண்டும். இயக்குனர்  மணிவண்ணன் எடுத்த அமைதிப்படை படத்தை போல இந்தப் படமும் மிக முக்கியமான அரசியல் படம். 

Related Articles

“ருத்ர தாண்டவம்” படத்தால் உண... எந்தெந்த பத்திரிக்கைகள்"அறம்" தவறாமல் நடந்து கொள்கின்றன... எவையெல்லாம் ஜால்ட்ரா அடிக்கும் பத்திரிக்கைகளாக இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள முடிந்...
பாகிஸ்தான் குழந்தையை தத்து எடுத்து வளர்க... இந்த சமூகத்தில் செவிலியர்களுக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு.( கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களையும் சாலையில் இறங்கி போராட வைத்தது நமது தமிழ...
கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாது... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் ...
வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண... நெருக்கடியான வாழ்வில் ஒரு இளைப்பாறுதலை, நிழலை நமக்குப் பண்டிகைகளே தருகின்றன. சிறு வயதில் நமது ஊர்களில் கொண்டாடிய பண்டிகைகள் இன்னமும் நம் மனதில் பசுமைய...

Be the first to comment on "ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் “மண்டேலா” படத்தின் குறைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*