பிச்சிப் பூ நாவல் விமர்சனம்!

Pichi poo naval review

எழுத்தாளர் பொன்னீலன் 80 ஆண்டுகளை கடந்துள்ளார், எழுத்துலகில் 55 ஆண்டுகளை கடந்துள்ளார். பல நூல்கள் அவர் எழுதியிருக்க அவருடைய பிச்சிப் பூ என்ற நாவலை (75 பக்கங்களே உள்ளன) பற்றி இங்கு பார்ப்போம். 

நாவலில் உள்ள கதாபாத்திரங்கள்: 

மூர்த்தியார் – கதை நாயகன்,

பெரிய நீலன் ( பேரின்பன் ) – மூர்த்தியாரின் பெரிய அண்ணன்

சின்ன நீலன் – மூர்த்தியாரின் சின்ன அண்ணன்

சாமிக்கண்ணு – மூர்த்தியாரின் அப்பா, 

பிரம்மசக்தி – மூர்த்தியாரின் அம்மா,

எஸ்தர் – பேரின்பனின் மனைவி,

சத்திய நேசன் – எஸ்தரின் மகன், 

சத்தியவதி – எஸ்தரின் மகள்

மீட் அய்யர் – கிறிஸ்துவ மத தொண்டர்

ஜோகன்னா – மீட் அய்யர் மனைவி

நேசமணி – சத்திய நேசனின் குரு

பாலையா – பனைத் தொழிலாளி

குட்டப்பன் – பாலையாவின் 2 சென்ட் கூட்டை தன்வசப்படுத்திக் கொள்ள முயல்பவர். 

சாமுருவேல் – நெய்யூர் டாக்டர்

வைகுண்ட சாமி ( முத்துக்குட்டி ) – பூவண்டன் தோப்பு மருத்துவர்

குணமுடையார் – கருங்குளம் பக்கத்தில் 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்

ஏஞ்சல் – குணமுடையார் மனைவி

தங்கைய்யா – கருங்குளம் ஊர்த்தலைவர்

இன்னாசியார் – வர்மக்கலை ஆசிரியர்

தங்கப்பூ – மூர்த்தியார் விரும்பிய பெண்

பிச்சிப் பூ – மூர்த்தியாரின் மனைவி

ஆண்டிச்சாமி – முருக பக்தர்

கதைச் சுருக்கம் : 

35 வயதான மூர்த்தியார் ஊரில் முக்கியமான கெத்தான ஆள். மரக்கட்டை செருப்பணிந்து நடப்பவர். அவருக்கு அண்ணன்மார் ரெண்டு பேர். அப்பா சாமிக்கண்ணு மூவரையும் படிக்க வைத்து கரைசேர்க்க விரும்பினார். ஆனா பெரிய நீலன் வேத பள்ளிக்கூடத்துல சேர்ந்து ஏசுவை கடவுளாக வணங்கத் தொடங்க மற்ற இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் விட்டுவிட்டார் சாமிக்கண்ணு. பாதிரியார் ஒருவர் சாமிக்கண்ணு வீட்டுக்கு வந்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஏசுவை வணங்கும்படி பேசினார். பிறகு ஒரு ஓலையில் எதோ எழுதி சாமிக்கண்ணுவிடம் கொடுத்துவிட்டு பெரிய நீலனுக்குப் பேரின்பன்னு பேரு வச்சாரு. அவரே பேரின்பன நாகர்கோயில் கல்கோயில்ல படிக்க வைக்கறாரு… அப்புறம் பி ஏ பெரிய படிப்பு படிக்க வைக்கறாரு. நாயர் சாதி, ஈழவர் சாதிய சேர்ந்த பி. ஏ படிச்ச ரெண்டு பேருல நாயருக்கு கவுர்மெண்டு வேல கிடைக்குது, ஈழவர் தாழ்ந்த சாதி என்பதால கிறித்துவனா மாறுனா தான் அரசு உத்தியோகம்னு கிடைக்கும்னு சொல்லிட்டாங்க… பேரின்பனுக்கு எஸ்தர கட்டி வைக்குறாங்க… சத்திய நேசன், சத்தியவதின்னு குழந்தைங்க பொறக்குறாங்க… 

வெளிநாட்டுல இருந்து கிறித்துவ மத பிரச்சாரத்துக்கு வந்தவரு மீட் அய்யரு. அவருடைய நோக்கமே தீண்டாமைய ஒழிக்கறது… ரோட்டுல வந்த ஒரு பெண் குழந்தைய ஜென்மி ஒருவன்ட்ட இருந்து வாங்குகறாரு… அப்றம் குழந்தைய கல்கோவில் பெண்கள் விடுதில சேக்குறாரு… மத்த குழந்தைகளாம் ஓடிப் போக ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியா விடுதி கட்றாரு மீட் அய்யர்… சத்தியநேசனும் சத்தியவதியும் நல்லா படிக்கறத ஆண்டுவிழால பாராட்டுறாரு மீட் அய்யரு… மீட் அய்யரோட 3வது மனைவி பத்தி குசுகுசுக்குறாங்க பெண்கள்… பிள்ளைகளுக்கு காசு கொடுத்து பள்ளிக்கூடத்துக்கு நல்ல துணிமணியோட வாங்கன்னு சொல்றாரு மீட் அய்யரு… கோர்ட் சிரஸ்தாரா இருக்க கூடிய பேரின்பனோட மகன் சத்தியநேசன் பெரிய படிப்பு படிக்க மீட் அய்யர்  சப்போர்ட் பன்றாரு… சத்தியநேசன ஜட்ஜ் ஆக்குறேனு சொல்றாரு… சத்திய நேசன் நல்லா படிக்குறான்… பிரபல வக்கீல் ஆவுறான்… சத்தய நேசனின் குரு நேசமணி கோர்ட்டுக்குள் நுழைகிறார்… நேசமணி எப்பேர்பட்டவர்னு கதை விரியுது… 

பாலையா பனைத் தொழிலாளி… அவருடைய 2 சென்ட் குடிசைக்காக குழந்தைய பொண்டாட்டிய நாசம் செய்ற குட்டப்பன பாளறுவாளால வெட்டி சாச்சுட்டு நேசமணிய தேடிச் செல்றாரு பாலையா… பாலையாவுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க “சாகும்வரை” ன்ற வார்த்தை வரவே இல்லையே, என் பாலையாவ தூக்குல போடுங்க ஆனா சாக கூடாது… என நேசமணி சொல்ல அரண்டு போன நீதிபதி ஆயுள் தண்டனை தந்தார்… இப்படிப்பட்ட நேசமணிகிட்ட தான் சத்திய நேசன் சீடரா வேல செய்யுறான்… 

சின்ன நீலனுக்கு உடம்பு சரியில்லாம போக, நெய்யூர் சாமருவேல் டாக்டர்ட்ட ( சாதி வேறுபாடு பாக்காத டாக்டர் ) போலாம்னு சொல்றாரு பேரின்பன்… ஆனா சின்ன நீலனோ அங்க போனா கிறித்துவம் பேசுவாங்கன்னு பயந்து சாமித் தோப்புக்குப் போறாரு சின்ன நீலன்… முத்துக்குட்டி எப்படி சாமி ஆனார், அவரை ராஜா எப்படி பரிசோதித்தார், எல்லா சன மக்களையும் முத்துக்குட்டி எப்படி ஆதரித்தார், முத்துக்குட்டியை பார்த்த கடுவாய் என்ன செய்தது, கடுவாயால் நம்பூதிரிக்கு என்ன நடந்தது என கதை விரிகிறது… இப்படிப்பட்ட முத்துக்குட்டியிடம் வந்து சேர்கிறார் சின்ன நீலன்… நோய் குணமாகிறது, ஆறு ஆண்டுகள் அய்யாவுடனேயே இருந்துவிட்டு கனவில் தன் குலசாமி முத்தாரம்மா அழைக்க அங்கிருந்து விடைபெறுகிறார் சின்ன நீலன். ஊருக்கு வந்து அம்மன் கோயிலை புதுப்பிக்கிறார் சின்ன நீலன். சாணாக்குடி அம்மனுக்கு கருங்குளத்து மேக்குப் பக்கத்துல ( மேக்குப் பக்கம் தூய்மையான தண்ணீர் நிறைந்த இடம் – உயர்சாதிக்காரர்கள் புலங்குவார்கள், கிழக்குப் பக்கம் அசுத்தமான இடம் – ஆடு மாடு குளிக்க கீழ் சாதிக்காரர்கள் குளிக்கப் பயன்படும் இடம் ) தண்ணி எடுக்க வுடாம சின்ன நீலன ஒருத்தன் தடுக்க, குணமுடையாரு என்ற வேதக்காரர் அதை பார்க்கிறார்… குணமுடையாரு கருங்குளத்துப் பக்கத்துல 2 ஏக்கர் நிலம் வச்சிருக்கவரு… வம்பு இழுக்க வர்றவிங்கள விரட்டி அடிக்க லைசன்சோட துப்பாக்கி வச்சிருக்கவரு,., சின்ன நீலன குளத்துக்குள்ள உதைச்சு தள்ளுனத பார்த்த குணமுடையாரு அங்க போறாரு… அவரால சின்ன நீலனுக்கு நல்லது நடக்கிறது. சின்ன நீலன் அந்தக்  குளத்திலிருந்து தண்ணி எடுக்க எந்தத் தடங்கலும் இல்லாமல் மாறுகிறது… அதன் பிறகு சின்ன நீலனின் அம்மன் கோயில் பிரபலமடைகிறது… அத பிடிக்காத கருங்குளத்து இளைஞர்கள் வம்பிழுக்க அம்மன் கொண்டாடியாரு நெருப்ப அவிங்க பக்கம் அள்ளிவீசி சாபம்விட அடுத்த ஏழுநாள் தொடர்ந்து மழ பேஞ்சி கருங்குளத்தோட நிலைமை அப்படியே தலைகீழா மாறுது… 

மூர்த்தியாரு எப்படி திருக்கார்த்தியல கொண்டாடுவாரு என்பது விவரிக்கப்படுகிறது…. மூர்த்தியார் யார் யாரிடம் என்னென்ன கலை பயின்றவர் என்பது விவரிக்கப்படுகிறது… எலும்பு முறிவுக்கு மூர்த்தியார் வைத்தியம் பார்க்கும் விதம் விவரிக்கப்படுகிறது… தங்கப் பூ என்ற பெண் மீது மூர்த்தியாருக்கு காதல் மலர்கிறது, அவளுக்காக அவளது தாய் மாமனோடு போட்டி போடுகிறான் மூர்த்தியார். தங்கப்பூவோ தன் மாமனுக்காக அலற மூர்த்தியார் போட்டியிலிருந்து விலகினார். அதோடு சரி மூர்த்தியாருக்கு அதன் பிறகு திருமண ஆசையே வரவில்லை. வண்டிமாடு ஓட்டுவதில் வல்லவரான வழிப்பறிக்காரர்களை துவம்சம் பண்ணக் கூடிய மூர்த்தியார் கேரளா வைக்கம் போராட்டம் குறித்து கேட்டு ஆச்சரியப்படுகிறார்… வண்டிமாடுகளை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு போராளிகளுடன் சேர்ந்து வைக்கம் சென்று வீடு திரும்பி யாருடனும் சாதி பார்க்காமல் பழகுகிறார் மூர்த்தியார். ஒருநாள் இரவு ஒரு ஊரில் வண்டி மாடுகளை நிறுத்திவிட்டு நிலாவெளிச்சத்தில் ஆலமர அடியில் படுத்துறங்க முற்பட புதுமாப்பிள்ளை அழுகும் சத்தம் கேட்டு அவன் பிரச்சினையை கேட்கிறார். ஊர்வழக்கப்படி முதல்ராத்திரி ஊர்த்தலைவருடன் தான் நடக்க வேண்டும் என்று அவன் சொல்ல அதிர்ந்த மூர்த்தியார் அதை தட்டிக் கேட்க செல்கிறார். மணப்பெண் இருக்க வேண்டிய இடத்தில் மூர்த்தியார் படுத்துக்கொள்ள ஊர்த்தலைவருடன் சண்டை நடந்தது… வண்டியில் வைக்கோல் வைக்கும் இடத்தில் மூர்த்தியாரால் காப்பாற்றப்பட்ட கலியாணப் பெண் இருக்கிறாள்… அவளை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் மூர்த்தியார்… ஊரார் சம்மதத்துடன் பிச்சிப் பூவை திருமணம் செய்து கொள்கிறார் மூர்த்தியார். பிச்சிப் பூவுக்கு சிலம்பம் வர்மம் உள்ளிட்ட கலைகளை சொல்லித் தருகிறார், அவள் மற்றவர்களுக்குச் சொல்லித் தரும் ஆசாத்தி ஆனாள்.

ஆண்டிச்சாமி என்பவரின் கனவில் அடிக்கடி முருகன் வந்து தன்னுடைய  கோயிலுக்கு முறைப்படி விரதமிருந்து வா என்று அழைக்க தாழ்ந்த சாதியை சார்ந்த ஆண்டிச்சாமி அதற்கு பெரிய மனிர்கள் உதவியுடன் பூக்குழிக்குள் இறங்க தயாராகினான். இதற்கு அப்புறம் என்ன நடந்தது என்பதை நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

வியக்க வைத்த சில தகவல்கள் : 

மாப்பிளக் கல்லு, அடியோலை ( அந்தக் காலத்துல வசதியானவுகதான் தோல் செருப்பு போடுவாக. சாதாரணப்பட்டவுக போடுறது அடியோலை. அடியோலைன்னா என்ன? ஒவ்வொரு காலுக்க அளவுக்கும் பனையோலையால தடுக்குப் போலப் பின்னி, பன நாருல வாரு போட்டு ஆளுக பயன்படுத்தக் கூடிய செருப்பு. வசதிக்குத் தக்கச் சாதா ஓலயயோ, குருத்தோலையயோ, நீள வாக்குல வார்ந்து, சாயத் தண்ணீயில அவிச்சிச் சாய ஓலையாய் பயன்படுத்தவும் செய்வாக. சாய ஓலைக்குக் கீழ வெள்ளை ஓலைகளக் கொடுத்துப் பொத்திப் பொத்தி வசதி உள்ளவக அடியோலைய மெத்த போலக் கனமா அமைச்சிக்கிடுவாக, மேல் வாருக்குப் பதிலா பன நார அருமையா வார்ந்து முடிச்சுப் போட்டுப் பயன்படுத்துவாக. நடக்கதுக்குப் பஞ்சு போல இருக்கும். பொடி சுடாது. வயசான தாத்தாமாரும் பாட்டிமாரும் இந்த அடியோலைகளப் பலவித நிறங்கள்ல பின்னிப் பிடி நாரும் போட்டுப் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுப்பாக.), மஞ்சனத்தி மரக்கட்டை செருப்பு,  நிழல் தாங்கல் ( நிழல் தாங்கல்னா என்ன ? பகலுல பள்ளிக் கூடமாகவும் ராத்திரி கூட்டுவழிபாட்டுக் கூடமாகவும் பயன்படக்கூடிய இடம் ) , கார்த்திகை மாதத்தில் வவ்வாலை வேட்டையாடி உண்ணுதல், பனந்தந்தி ( பனந்தந்தியா அது என்ன ? அக்காலத்துல செய்திகள ஊருக்கு ஊர் பரப்புறது பனந்தந்தி மூலந்தான். திருச்செந்தூர்ல இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் அன்னிக்கி ஒரே பனங்காடு தான். திருச்செந்தூர்ல ஒரு பனையில ஏறுன சாமர்த்தியமுள்ள தொழிலாளி பனைக்குப் பனை தாவி நொங்கும் பயினியும் சாப்பிட்டுக்கிட்டே திருவனந்தபுரத்துல போயி இறங்கிடுவான்… கடக்கரையை ஒட்டி அப்பிடி அடர்ந்து வளர்ந்து கிடந்தது பனங்காடு. அந்தப் பனங்காடு முழுசும் இந்தச் செய்தி வாய் மொழி மூலமாப் பரவிச்சி. ), அக்கினி காவடி ( அக்கினி காவடின்னா எப்படி? வட்டமான ஒரு வெங்கலச் சட்டி. அதுக்க ரெண்டு பக்கமும் வளையம் மாட்டி சட்டி நிறைய தேங்காய்ச் சிரட்டையை எரிச்சிக் கிடைக்கிற தழலுதான் அக்கினி. அதுக்கச் சூட்டுல வெண்கலச் சட்டி சிவந்து பழுத்துப் போய் இருந்தது. சட்டிக்க ரெண்டு பக்கமும் பக்கத்துக்கு ஒரு வளையம். ரெண்டு வளையத்திலயும் ரெண்டு சங்கிலிய மாட்டி மறுமுனைகள்ல இருந்த கொக்கிகள ரெண்டு பக்கமும் இடுப்புச் சதையில செருகி விடப்படும். ) போன்றவை புதிதாக உள்ளன. 

அட்டகாசமான வரிகள் : 

  1. குடும்ப வாழ்க்கை குடும்பத்துக்குத் தரக்கூடிய மிகப் பெரிய செல்வம் அவிக கொஞ்சி விளையாடிப் பெத்தெடுக்குற குழந்தைகதானே! 
  2. படிப்பு எங்கிறது ஏணி, சமதளத்துல வாழுற மனுசர மேல் தளத்துக்கு ஏத்திவிடுற ஏணி. 
  3. ஆடை இல்லாத மனுசர் அரைமனுசர். ஆடைதான் மனுசர முழுமனுசராக்கும். 
  4. சமத்துவத்த நோக்கி சட்டங்கள வளர்க்கணும், சட்டம் என்கிறது காலந்தோறும் வளர்ந்து வரப்பட்ட சமூக வாழ்வுக்குப் பொருத்தமா மாறிக்கிட்டே இருக்கணும்… 
  5. சாதி பாக்காத, மனுசராப் பிறந்த எல்லாரும் சமமானவியதான். நல்ல காரியம் செய்யியவிய நல்ல சாதி. கெட்ட காரியம் செய்யியவிய கெட்ட சாதி. 
  6. வேலை செய்யாமப் பிறர உறிஞ்சி வாழுற அட்டைப் பயலுகள நியாயமா நாட்டுலயே வச்சிருக்கப்படாது… 

இந்நாவலில் உள்ள பாலையா – அசுரன் பட சிவசாமியையும், குட்டப்பன்  – அசுரன் பட நரசிம்மனையும் ( வடக்கூரான் ), வக்கீல் நேசமணி – அசுரன் பட பிரகாஷ் ராஜையும் நினைவூட்டியது… 30 வது அத்தியாயத்தக்கு மேல தான் நாவலுக்கு ஏன் பிச்சிப் பூ என பெயர் வைத்தார்கள் என்பதற்கான அர்த்தம் புரிய வருகிறது. பிச்சிப் பூ, ஆண்டிச் சாமி கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் நிறைய உபயோகப்படுத்தி இருக்கலாமோ என தோன்றியது. சத்திய நேசன், மீட் அய்யர், சின்ன நீலன் போன்ற கதாபாத்திரங்கள் கதைக்கு அவ்வளவாக தேவையில்லாதது போல் தோன்றியது. 75 பக்கங்களே உள்ள இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து விடலாம். 

விலை : 70

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

Related Articles

ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் ச... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சம்ரதா கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. தடபுடலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நிறைந்த அந்தத் திருமணத்தில் பக்...
தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!... கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்! தன்னை தேடி வர...
குறிப்புகள் இல்லாமல் பதினைந்து நிமிடங்கள... கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். பிஜெபி புயலின் மத்த...
லவ் யூ சிதம்பரம்! – அசுரன் விமர்சன... தயாரிப்பு : v கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு. எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்மூலகதை : எழுத்தாளர் பூமணிஇசை : ஜீவி பிரகாஷ் குமார்ஒளிப்பதிவ...

Be the first to comment on "பிச்சிப் பூ நாவல் விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*