உடலெனும் வெளி! – உருவ கேலி செய்யும் பழக்கம் நமக்கு எங்கிருந்து வந்தது?

Udalenum Veli book review

இந்த சமூத்திற்கு எந்த விஷயங்கள் மிக முக்கியமாக தேவைப்படுகிறதோ அந்த விஷயங்களை தான் இந்த சமூகம் புறக்கணித்து தள்ளும், குழி பறித்து புதைக்கும். திடீரென அந்த நல்ல விஷயங்கள் பூதாகரமாக வெளியே வரும்போது பலருடைய முகங்கள் பயத்தில் வெளுத்துப்போய் விடுகின்றன.  இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் அடங்கிய ஒரு புத்தகம் நான் அம்பை எழுதிய “உடலெனும் வெளி”. தவறு யார் செய்தாலும் சரி, எங்கே நடந்தாலும் சரி, தவறு என்பது தவறு தான்! என்ற ஒரே கொள்கையை தன் மனதில் உறுதியாக வைத்திருக்கும் அம்பை,  எவ்வளவு பெரிய பிரபலங்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும் சரி அத்தனை பேரையும் அவர்கள் செய்த பிழைகள் பற்றியும் எந்த சமரசமும் இல்லாமல் சுட்டிக்காட்டி இருப்பதால் இந்த புத்தகம் வெளிவர நிறைய பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் யாரும் முன்வரவில்லை. 

பெண்ணியம் எப்போது எந்தத் தறுவாயில் அறிமுகப்படுத்தப்பட்டது? பெண்ணியக் கருத்துகள் நம் பண்பாட்டுக்கு வெளியே இருப்பதாக நோக்கப்படுகின்றனவா? பெண்ணியக் கருத்தியல் எவ்வாறு விமர்சிக்கப்படுகிறது? ஒரு மொழிக்குரிய பண்பாட்டில் பெண்ணியம் எவ்வாறு மறுவிளக்கம் பெறுகிறது? விவாதிக்கப்பட்ட முக்கியமான பெண்ணிய எழுத்துகள் யாவை? அடிப்படைவாதிகள் பெண்ணியத்தை எவ்வாறு நோக்கினார்கள்? பெண்ணியம் என்பது நடுத்தர வர்க்க உயர் மட்டக் கருத்தியலாக நோக்கப்படுகிறதா? பெண்ணியத்துக்கு விளிம்பு நிலையினர் வாழ்க்கையில் இடமில்லை, அதனால் விளிம்பு நிலையிலிருந்து வேறுவகை பெண்ணியம் வெளிப்படும் என்ற கருத்து உள்ளதா? கலை மற்றும் இலக்கியம் பெண்ணியத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றன? கல்விப்புலத்தில் பெண்ணியம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? போராளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் இடையே பெண்ணியம் குறித்த இழுபறி உள்ளதா? ஒரு மொழியின் செவ்விலக்கியத்திலிருந்து பெண்ணியம் குறித்த சொல்லாடலை மீட்க பிரக்ஞைபூர்வமான முயற்சிகள் நடந்துள்ளனவா? போன்ற 12 கேள்விகளுக்கு  தன்னுடைய ஆழமான பதிலளித்திருக்கிறார் எழுத்தாளர் அம்பை. 

“எழுத்து” தோன்றிய காலம் முதல் அந்த எழுத்து மனிதர்களால் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது?  எழுத்திற்குள் இருக்கும் ஜாதி, மதம், இனம், மொழி, பாலின பாகுபாடு போன்றவற்றையும் அவ்வையார் காலம் முதல் குட்டிரேவதி, தமயந்தி காலம் வரை  பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் எப்படி அடுக்கடுக்காக உயர்ந்து கொண்டே வந்துள்ளது என்பதையும், காலகட்டங்கள் மாறிக் கொண்டே வந்தாலும் பெண்களைப் பற்றிய ஒரு சில ஆண்களின் எழுத்துக்கள் எப்படி மாறாமல் அதே நிலையில் தேங்கி நிற்கிறது என்பது பற்றியும் நன்கு விளக்கியுள்ளார்.

பெண் பிறப்பை மட்டமாக வர்ணிக்கும் பழமொழிகளை பெண்களே உபயோகப்படுத்துவது குறித்தும், பெண்களுக்குள் எப்படி பெண்ணடிமையை திணித்தார்கள் என்பது குறித்தும்,  பெண்ணியத்தை எழுதுகிறேன் என்று ஆண்கள் எப்படி முகமூடி அணிந்துகொண்டு திரிகிறார்கள் என்பது குறித்தும் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. திருமணம் என்பது காலம் காலமாக ஆண்களுக்கு கிருஷ்ணனை யசோதா செல்லமாக கட்டிப்போட்ட கால்கட்டு போலவும் பெண்களுக்கு மிக துன்புறுத்தலோடு நடத்தப்படும் மூக்கணாங்கயிறு போலவும்,  திருமணத்திற்கு பிறகு எவ்வளவு படிப்பறிவு பெற்றிருந்தவளாக இருந்தாலும் அவள் தன் மீது செலுத்தப்படும் அதிகாரத்தை பொறுத்துக்கொண்டும் தாங்கிக்கொண்டும், கடைசி வரைக்கும் ஒரு அடிமையாகவே  வாழும் வாழ்க்கையை  பல இடங்களில் பல உதாரணங்களுடன் சுட்டிக் காட்டுகிறார். 

உதாரணம்: 1890ல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு கட்டுரையில், அதிகம் பேசி வாதாடும் பெண்ணுக்கு அவள் தந்தை ஒரு மருந்தைத் தருவார். அவள் கணவன் கோபப்படும்போதெல்லாம் அவள் அதை வாயில் விட்டுக்கொண்டு, வாயை மூடிக்கொள்ள வேண்டும். அவன் கோபம் தீர்ந்தபின்தான் மருந்தை விழுங்கலாம். அதன்பின் அவள் திருமண வாழ்க்கை சரியாகப் போயிற்று. பிறகு அவள் தந்தை கூறுவார், அவர் தந்தது வெறும் தண்ணீர் என்று.

ஆண் எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளில் பெண்களை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள், பெண் எழுத்தாளர்கள் தங்களுடைய படிப்புகளில் பெண்களை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள் என்பதை பற்றி அலசி ஆராய்ந்து தெளிவாக விளக்குகிறார். இந்த வரிகளை எல்லா எழுத்தாளர்களும் வளரும் பெண் எழுத்தாளர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும். 

உதாரணம்: பல ஆண்கள், பெண்களைச் சுவைக்கும் ஒன்றாகவே பார்த்தனர். உதடுகள் கோவைக்கனி, கண்கள் திராட்சைப்பழம், முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டுச் சமாசாரம்தான்! மணியன் ஒரு கதையில் திருமணமாகாத முதிர்கன்னியை ‘ஊசிப்போன பண்டம்’ என்று வர்ணிப்பார்.

பெண்கள் நடத்திய பத்திரிகைகள் பெண்ணியம் குறித்து எந்த மாதிரியான கட்டுரைகளை வெளியிட்டன ஆண்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பெண்ணியம் குறித்த எந்த மாதிரியான கட்டுரைகளை வெளியிட்டன என்பது பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து தெளிவு படுத்துகிறார். பெண் எழுத்தாளர்கள் காலங்காலமாக எப்படி தன்னை சூழ்ந்திருக்கும் ஆண்களால்  வதைக்கப் படுகிறார்கள் என்பதையும் விளக்குகிறார். 

உதாரணம்: இன்றையப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் இன்னும் பல மடங்கு கொடுமையானவையாக இருக்கின்றன. இளம்பிறையின் மணிக்கட்டு அவர் எழுதுவதால் முறிக்கப்பட்டது அவர் கணவனால். தமயந்தியின் விரல்கள் அவ்வாறே முறிக்கப்பட்டன.

பெண் பத்திரிகையாளர்கள்,  சாதிக்கத் துடிக்கும் பெண் எழுத்தாளர்கள்,  பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் என்று அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம் என்றும் அவர்களுக்கான வழிகாட்டி நூல் என்றும் “உடலெனும் வெளி” என்ற புத்தகத்தை சொல்லலாம். 

ஒரு புத்தகத்திற்கு “இது நல்ல புத்தகம்” என்ற ஒரு அங்கீகாரத்தை தருவது அந்த புத்தகம் கொண்டிருக்கும் உள்ளடக்கம் மட்டுமே.  அந்த அளவுக்கு புத்தகத்தில் உள்ள தகவல்கள் அவ்வளவு பயனுள்ளதாகக் இன்னும் நிறைய புத்தகங்களை படிக்க ஆர்வம் தூண்டக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த புத்தகத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பற்றி எழுதியுள்ளார் அம்பை. 

அதில் சில புத்தகங்கள் இங்கே: 

1984ல் The Face Behind the Mask

1903ல் எஸ்.எம்.நடேச சாஸ்திரி, ‘மாமியார் கொலுவிருக்கை’ 

1930ல் இஸ்லாமிய அன்பர் மீரான் அலி சாஹிப் ‘நஸீகத்துனிஸா’

1893-இல் கிருபை சத்தியநாதன் அம்மாள் எழுதிய கமலா நாவல், 1896 இல் ஆங்கில மொழிபெயர்ப்பு, 1894இல் சகுணா என்கிற சுயசரிதம். 

1946 – இல் குமுதினி எழுதிய “திவான் மகள்”

“சாரமதி” நாவல் வை.மு. கோதைநாயகி அம்மாள். 

“ஹேமலதை” தமிழ் மொழிபெயர்ப்பு கி.சாவித்திரி அம்மாள்.

1956 – கி. சாவித்திரி அம்மாள் எழுதிய “கல்பகம்” நாவல்

1956 இல் கி. சாவித்திரி அம்மாளின் தங்கை கி. சரஸ்வதி அம்மாள் எழுதிய “கன்றின் குரல்” நாவல். 

‘மணல் வீடு’, ‘ஜயந்திபுரத் திருவிழா’ (1954), ‘வேப்பமரத்துப் பங்களா’ (1959), ‘அற்ப விஷயம்’ (1955), ‘கௌரி’ (1953), ‘பூமா’ (1968-இரண்டாம் பதிப்பு) போன்ற நாவல்களை எழுதியவர் அநுத்தமா. 

1949இல் கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் & 1968 வீட்டுக்கு வீடு என்கிற நாவல். 

1967-இல் கு.ப. சேது அம்மாள் எழுதிய “குரலும் பதிலும்” நாவல்

ஜூனைதா பேகம் எழுதிய காதலா கடமையா நாவல்!

1894ல் சாகசங்கள் நிறைந்த கதையாக The Prisoner of Zenda என்ற தலைப்பில் ஆந்தனி ஹோப் ஒரு நாவல் எழுதியுள்ளார். 

1955 இல் விந்தியா எழுதிய “சுதந்திரப் போர்” என்ற நாவல். 

1956ல் து. ராமமூர்த்தி என்ற புனைபெயரில் சரோஜா எழுதிய  “இருளும் ஒளியும்” நாவல்.

1947இல் சரோஜா எழுதிய “நவராத்திரி பரிசு” நாவல்

1950இல் ராஜம் கிருஷ்ணன் எழுதிய “ஊசியும் உணர்வும்” என்கிற நாவல். 

1948 இல் “சுதந்திர ஜோதி” என்கிற நாவல். 

1953இல் பெண்குரல் என்கிற நாவல். 

பிடித்த வரிகள்: 

  1. அற்புதங்கள் சாத்தியமில்லாதபோது சாவு தேர்வாகிறது.
  2. பெண்களை வீட்டினுள்ளேயே வைப்பதற்குக் காரணம் இந்தியாவின் வெயில் தகிக்கும் பருவநிலைதான், வெளியே அதிகம் போனால் அவர்கள் துன்புறுவார்கள் என்பதால்தான்அவர்களை வீட்டோடு வைத்திருப்பது என்ற விளக்கமும் தரப்படுகிறது. சமையலறையின் விறகடுப்பின் தீ வெம்மை தாங்கக்கூடியது போலும்!
  3. ‘ஒரு பெண் சுதந்திரமான வாழ்வையும், அறிவு வளர்ச்சியையும் தவிர்த்துவிட்டு திருமண வாழ்வையும் நல்ல உடைகளையும் நகைகளையும் அதைவிடச் சிறந்தவை என்று கருதித் தேர்ந்தெடுப்பது என்னை வருத்தத்துக்குள்ளாக்குகிறது’ – கிருபை சத்தியநாதன் அம்மாள். 
  4. கற்பு அழித்தல் என்ற சொல் பெண் தன் மானத்தை இழக்கிறாள் என்பதையே பிரதானப் படுத்துகிறது. அந்தச் செயலில் உள்ள வன்முறை நோக்கப்படாமல் பெண் ஒரு பலிகடாவாக, சமூகத்தின் கண்களில் அவமானப்பட்டவளாகக் காட்டும் இந்தச் சொல் பொது நீரோட்ட மொழியில் எப்போதுமே இருந்த சொல். அறுபதுகளில் ஜெயகாந்தன் ‘அக்னிப் பிரவேசம்’ கதையில் இளம் பெண் ஒருத்தி முன்பின் அறியாத ஒரு நபரால் உடலுறவுக்குத் தள்ளப்படும்போது, அவள் தாய் அவள் தலையில் நீரூற்றி அது கங்கையாய் அவளைப் புனிதப்படுத்தும் என்று கூறுவதுபோல் எழுதியதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்தன. அவளுக்குப் பெரும் தண்டனைகள் அளித்து எழுதிய கதைகள் வெளிவந்தன. அவற்றில் இருந்த வன்முறை அதிர்ச்சி அளித்தது. ‘கற்பு அழித்தல்’ என்ற செயலுக்கு ஆளாகும் பெண்ணுக்கு வாழ உரிமையில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இச்சொல் பிறகு பலாத்காரமாக மாறி தற்போது வன்புணர்ச்சி என்ற சொல்லே பெரிதும் பயன்பட்டு வருகிறது. மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் பெண்கள்தாம்.
  5. பூசாரிகள், அவர்கள் உடைகள், தொழும் முறைகள், கோயிலில் நுழைந்துவிட்ட இயந்திரங்கள் என எல்லாம் மாறினாலும் ஒன்று மட்டும் மாறவில்லை என்று கடைசி வரிகளில் கூறுகிறார்: எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாத விலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை. – கனிமொழி எழுதிய அகத்திணை 2003. 
  6. ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை எடுத்து உண்ட எத்தியோப்பியக் குழந்தைகளின் பட்டினியைத் தொலைக்காட்சியில் பார்த்த பின்பும், கலவி இன்பம் துய்த்த அந்த இரவிற்குப் பின்தான் முற்றிலும் கடைந்தெடுத்த நகரவாசியானேன் நான். – தமிழச்சி தங்கபாண்டியனின் 2009ல் வெளிவந்த ‘மஞ்சணத்தி’ தொகுப்பில் உள்ள ‘கலவி’ என்ற கவிதை. 

கிழக்கு பதிப்பகத்தில் 170 ரூபாய்க்கு இந்தப் புத்தகம் கிடைக்கிறது. இவ்வளவு குறைவான விலையுள்ள ஒரு புத்தகத்தில் இவ்வளவு குறைவான பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தில் இவ்வளவு தகவல்கள் அடக்க முடியும் என்பது  ஆச்சர்யத்திற்கு உரிய விஷயம்.  உண்மையிலேயே எழுத்தை மிகவும் மனமார நேசிக்கிறேன் என்பவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படித்துவிட வேண்டும். ஆரம்ப கட்ட நிலை வாசகர்களுக்கு இந்த புத்தகம் எதுவும் புரியாதது போல் இருக்கும். இதை நீங்கள் உங்களுடைய ஓய்வு நேரங்களில் திரும்பத்திரும்ப பொறுமையாக வாசித்தால் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மனதில் நன்கு பதியும். குறிப்பாக ஆண் படைப்பாளிகள் ஒவ்வொரு முறையும் தங்கள் படைப்பை எழுதத் தொடங்குவதற்கு முன் இந்த புத்தகத்தை ஒரு முறை மேலோட்டமாகவாவது வாசித்துவிட்டு எழுதினால் அவர்களுடைய படைப்பு இன்னும் கூடுதல் தரமாக இருக்கும்.

Related Articles

ஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்... இன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...
ஸ்டெர்லைட் உருக்காலை தொடர்ந்து செயல்பட த... பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் உருக்காலை தொட...
“உணவின் வரலாறு” புத்தக விமர்... குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது முழு புத்தகமாக வடிவம் கொண்டிருக்கும் புத்தகம்தான் "உணவின் வரலாறு".ம...
ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜி...

Be the first to comment on "உடலெனும் வெளி! – உருவ கேலி செய்யும் பழக்கம் நமக்கு எங்கிருந்து வந்தது?"

Leave a comment

Your email address will not be published.


*