“நான் பெத்த மகனே” இந்த திரைப்படம் தான் இன்றைய சீரியல்களுக்கு முன்னோடியா?

Naan Petha Magane movie dircted by V. Sekhar

நான் புடிச்ச மாப்பிள்ளை, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, வீட்டோட மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற  பெண்களுக்கு பிடித்தமான, பெண்களின் உரிமையை பேசிய, பெண்களின் பிரச்சனைகளை பேசிய படங்களை இயக்கியவர் வி. சேகர். மேலே குறிப்பிட்டிருக்கும் படங்கள் எல்லாம் எவ்வளவு சிறப்பான முக்கியமான படங்களோ அதேபோல இவருடைய இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “நான் பெத்த மகனே” என்ற படமும் மிக முக்கியமான படம். 

மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த படங்களில் குடும்ப உறுப்பினர்களுக்குள் இருக்கும் சங்கடங்கள், ஈகோ பிரச்சனைகள், வருமானம் பற்றிய புலம்பல்கள், உடல்நலக் கோளாறு குறித்த கஷ்டங்கள், குழந்தைகளின் வளர்ப்பில் படிக்க வைப்பதில் ஏற்படும் சிரமங்கள், வாடகை பிரச்சினை போன்ற சாமானிய மனிதர்களின்  அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களை மிக அருமையாக பதிவு செய்திருப்பார் இயக்குனர் வி சேகர். இந்த படத்தில் காட்டப்பட்டது போன்ற பிரச்சனைகள் எல்லாம் நிஜ உலகில் தொடர்ந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக நடுத்தர வீடுகளில் இந்த மாதிரியான பிரச்சனைகள் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களுடைய பிள்ளைகள் எவ்வளவு தான் படித்து  முன்னேறினாலும் வறுமை அவர்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து வாட்டிக் கொண்டே இருக்கிறது. இந்த மாதிரியான பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நடுத்தர வீட்டு மக்களை குறிவைத்து எடுக்கப்படுபடை தான் தொலைக்காட்சி சீரியல்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த தொலைகாட்சி தொடர்களுக்கு எல்லாம் இயக்குனர் வி. சேகர் எதோ ஒரு விதத்தில் முன்னோடி. 

அதே இயக்குனர் பொறந்த வீடா? புகுந்த வீடா?, வீட்டுக்கு வீடு என்ற இரண்டு தொடர்களை சன் டிவிக்காக, ராஜ் டிவி டிவிக்காக இயக்கி இருக்கிறார். தொலைக்காட்சிகளில் முதன் முதலில் தொடர்களை இயக்கத் தொடங்கியவர் இந்த இயக்குனர் தானா என்று சரியாக தெரியவில்லை. ஆனால் இவர் இயக்கிய படங்களில் நடுத்தர குடும்பப் பெண்களின் பிரச்சினைகளை பேசும், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும்  கதாபாத்திரங்களில் நடித்த ராதிகா அவர்கள் சித்தி என்கிற ஒரு தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் இந்த தொலைக்காட்சி தொடர்கள் மீது மக்களுக்கு பெரும் ஆர்வம் வந்தது. இன்னும் சொல்லப்போனால் நடிகை ராதிகா “சித்தி” என்ற சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் என்று கூட சொல்லலாம். 

சரவணன் மீனாட்சி, வள்ளி, வாணி ராணி, கல்யாணப்பரிசு, கோலங்கள், மெட்டிஒலி, நாதஸ்வரம், திருமதி செல்வம்,  கஸ்தூரி, தெய்வமகள், அவர்கள், தென்றல், சந்திரலேகா போன்ற தொடர்கள் எல்லாம் நீண்ட காலமாக மக்களிடம் ஆதரவு பெற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்கள். இந்த சீரியல்களில் சரவணன் மீனாட்சி சீரியல்களைத் தவிர மீதி எல்லாமே சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள். இப்படி சீரியல் என்கிற ஒரு விஷயத்தை பெண்களிடம் பெரிய அளவில் கொண்டு சென்ற பங்கு சன் டிவிக்கு தான் இருக்கிறது. அதை பார்த்து இன்று விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் சீரியல் மேல் சீரியல்களாக எடுத்து ஒளிபரப்புகின்றன. அவற்றில் குறிப்பாக செம்பருத்தி, பாரதி கண்ணம்மா, நீ தானே என் பொன் வசந்தம் போன்ற சீரியல்கள் மக்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று மிக பிரபலமாக இருக்கின்றன. இப்படி நீண்ட காலமாக மக்கள் ஆதரவு பெற்ற இந்தத் தொடர்களில் வி சேகர் இயக்கிய படங்களில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் இதே தொடர்களிலும் அப்படியே இருக்கும். அப்படி என்னென்ன பிரச்சினைகள் சீரியல்களில் தொடர்ந்து காட்டப்படுகிறது என்று பார்ப்போம்.  முதல் பிரச்சினையாக வருவது “மாமியார் கொடுமை”. அப்படி மாமியார் கொடுமை பற்றி மிகத் தெளிவாக சொன்ன படம் என்றால் வி. சேகர் இயக்கிய “நான் பெத்த மகனே” என்ற படம் தான். 

முதலில் அந்தப் படத்தின் கதையை சுருக்கமாக பார்ப்போம். அந்த படத்தில் ஆச்சி மனோரமாவுக்கு நிழல்கள் ரவி ஒரே ஒரு மகனாக நடித்திருப்பார். அந்த ஒற்றை மகனை மனோரமா சிறுவயது முதல் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி இருப்பார். இப்படி கஷ்டப்பட்டு வளர்த்த தன்னுடைய மகனை தனக்குப் பிறகு பார்த்துக்கொள்ள ஒரு பெண் அவனுக்கு மனைவியாக வேண்டும். ஆனால் அப்படி மனைவியாக வரக்கூடிய பெண் தன் மகனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும், அதே போல  தனக்குப் பிடித்த மாதிரி ஆகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார் மனோரமா. ஆனால் நிழல்கள் ரவியோ தன்னிடம்  துணிச்சலாக வாதிட்ட வழக்கறிஞர் ராதிகா மீது காதல் கொள்கிறார். ராதிகாவுக்கும் ரவி மீது காதல் வருகிறது. இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.  இந்நிலையில் ரவி தன்னுடைய காதல் பற்றி தன் அம்மாவிடம் சொல்லி ராதிகாவின் வீட்டிற்கு  அம்மா மனோரமாவை அழைத்துச் செல்கிறார். 

இளம் வயது முதலே துணிச்சலான பெண்ணாக வளர்ந்து துணிச்சலான வழக்கறிஞராக இருக்கும் ராதிகா, தன் வீட்டில் வேலை செய்யும் குடிகார வேலைக்காரன் ஒருவனை மனோரமா கண் முன் கை நீட்டி அடித்துவிடுகிறார். இதை பார்க்கும் மனோரமா அதிர்ந்து போய், “ஒரு ஆம்பளைய கைநீட்டி அடிக்கறா, அப்படினா அவ கண்டிப்பா நம்ம மகனுக்கு செட்டாக மாட்டா… நம்மளோட பேச்சை கேட்க மாட்டா…”  என்று முடிவெடுத்து இந்த பொண்ணு உனக்கு வேண்டாம்பா அம்மா சொல்றது உன்னுடைய நல்லதுக்குத்தான் என்று மகனின் மனதை மாற்றுகிறார் மனோரமா. அம்மாவின் அந்த முடிவைக் கேட்டு மனம் கலங்கிய மகன், அம்மாவிற்காக சரி என்று ஒத்துக் கொள்கிறார். அம்மா சிறுவயது முதல் தன்னை கஷ்டப்பட்டு வளத்தியவர், அவருடைய பேச்சை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று ராதிகாவிடம் சொல்கிறார். இது ரவியின் தனிப்பட்ட முடிவு அல்ல, இந்த சமூகம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அவரை அந்த முடிவுக்குத் தள்ளி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு ராதிகா ஒதுங்கிச் செல்கிறார். இப்போது மனோரமா தன் மகனுக்கு ஒரு பெண் பார்க்கிறார். அந்தப் பெண் யார் என்றால் தன்னுடைய தோழியான கிழவி ஒருவளின் தூரத்து சொந்தக்கார அனாதைப் பெண். குமரிப் பெண்ணாக இருக்கும் அந்தப் பெண் யாரிடம் போய் வேலை செய்வது, யாரை நம்புவது என்று தெரியாமல் வாழ்வின் இறுதி கட்ட நிலையாக தன் தூரத்து சொந்தகாரர் ஒருவரிடம் வந்து அடைக்கலம் புகுகிறார். அதை அறிந்த மனோரமா இந்தப் பெண்ணை நம் மகனுக்கு கட்டி வைக்கலாம் என்று நினைக்கிறார். தன் ஆசையை மகனிடமும் அந்தப் பெண்ணிடமும் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார் மனோராமா. இருவரும் மனம் ஒத்து கொண்டு திருமணமும் செய்து கொள்கின்றனர். 

திருமணமான பிறகு மகன் தன் அம்மாவிடம் கேட்கும் நிறைய விஷயங்களை எல்லாம் தன் மனைவியிடம் கேட்க ஆரம்பிக்கிறான். இதனால் மனோரமா திருமணமானதும் மகன் தன்னை புறக்கணிக்கிறானோ என்று நினைத்துக்கொள்ள, மனோரமாவின் பக்கத்து வீட்டு கிழவி தோழிகள் எல்லாம் மேலும் உசுப்பேற்றி விடுகின்றனர். மருமகள் வந்துட்டா இல்ல, இனிமேல் உன் மகனை அவ கைக்குள்ள போட்டுகிட்டு ஒன்னைய வீட்டை விட்டு துரத்தி விடுவா பாரு என்று ஏற்றி விடுகிறார்கள். மகன் ரவியும் தன் அம்மாவிடம் கோபப்பட்டு பேசுவது மனோரமாவுக்கு புதிதாக இருக்கிறது. மருமகள் வந்ததால்தான் மகன் இப்படி மாறிவிட்டான், மருமகளை அடக்கி நம்ம கைக்குள் போட்டு வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மனோரமா மருமகளை எவ்வளவு கொடுமை படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமைப்படுத்துகிறார். தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்ற முறையில் மனோரமாவின் திட்டுக்களை கோபமான வார்த்தைகளை எல்லாம் தாங்கிக் கொள்கிறார் அந்த மருமகள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அந்த மருமகள் மனோரமாவை எதிர்த்து பேச இப்போது மனோரமாவுக்கு மேலும் கோபம் அதிகமாகிறது. இனி இந்த வீட்டில நீயா இல்லை நானா என்று மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறான் மகன். கடைசியில் அம்மாவை விட்டுக்கொடுக்க முடியாமல் அவனும் மனைவி மீது பழி சுமத்தி கோபப்பட, அந்த பெண் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்குள்ளேயே சமையல் அறையை பூட்டிக் கொண்டு மனோரமாவின் கண்முன் தீக்குளிக்கிறாள். 

அந்த அப்பாவி பெண்ணை வாழ்க்கை கொடுக்கிறேன் என்கிற பெயரில் வாழ்க்கை கொடுத்துவிட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி அவருடைய மகனும் மாமியாரும் சாகடித்து விட்டார்கள் என்று கவுண்டமணி வழக்கு தொடுக்க, ராதிகா ரவியின் அம்மாவுக்கு ஆதரவாக வாதிடுவார். அப்போது வரும் அந்த வசனங்களை எல்லாம் நீங்கள் அந்தப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

இந்த படம் வந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இந்த 20 வருடங்களில் பல தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வந்துவிட்டன. எல்லா சீரியல்களிலும் மைய கதையாக இந்த மாமியார் கொடுமை என்கிற ஒரு விஷயம் தான் இருக்கும். அந்த மாமியார் கொடுமை என்கிற பிரச்சினையை அடுத்து சீரியல்களில் பெரும்பாலும் காட்டப்படும் பிரச்சினைகளாக இருப்பவை: 

  1. மருமகள் கருவுறாமல் இருப்பது 
  2. கணவன் குடிகாரனாக இருப்பது
  3. கணவன் சந்தேக புத்தி காரணமாக இருப்பது
  4. நாயகனும் நாயகியும் வறுமையில் வாடுவது
  5. கணவன் வீட்டு பெண்கள்  மருமகளை கொடுமைப்படுத்துவது
  6. கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ முன்னாள் காதலர்கள் இருப்பது

போன்ற பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகள் இருக்கக்கூடிய சீரியல்கள்தான் பெரும்பாலும் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்படி கடந்த 30 வருடங்களாக ஒரே மாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்ப காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் சீரியல்கள் இவை எல்லாம்  இன்றும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடுகின்றன என்றால் என்ன அர்த்தம்? இந்த சமூகத்தில் அந்த மாதிரியான பிரச்சினைகள் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்ட விஷயங்களில் இருந்து முற்றிலும் விலகி கணவன் மனைவிக்குள் இருக்கும் காதல்  மோதல், பள்ளி கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், அமானுஷ்யங்கள், சாமி கதைகள், பேய், பாம்பு, காமெடி போன்ற விஷயங்களை மையப்படுத்தி சில சீரியல்களும் வந்துள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் விட  இந்த மாதிரி குடும்பங்களுக்குள் நடக்கும் உறவுச் சிக்கல்கள், சந்தேகங்கள், கொடுமைகள் போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கும் சீரியல்கள்தான் இன்றுவரை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இனிமேலும் அப்படிப்பட்ட சீரியல்கள் தான் வெற்றிகரமாக ஓடும்.

Related Articles

ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன... சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ் தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆ...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...
“சில்லுக்கருப்பட்டி” படம் தம... நடிகர் சூர்யா தரப்பில் ஹலீதா சமீம் இயக்கி இருக்கும் படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு கதைகள் என்பத...
உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரண... விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். "அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்" என்பது தான் ...

Be the first to comment on "“நான் பெத்த மகனே” இந்த திரைப்படம் தான் இன்றைய சீரியல்களுக்கு முன்னோடியா?"

Leave a comment

Your email address will not be published.


*