திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இடம்பெறுவது சரியா?

Caste Name in the Title Of Movie

முந்தைய காலத்தை விட இந்தக் காலத்தில் தான் சாதி பாகுபாடும் ஆதிக்கமும் வன்முறையும்
அதிகம் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தெருப்பலகைகளில், பள்ளி
கல்லூரி பெயர் பலகைகளில் சாதி பெயர் இடம் பெற்றிருப்பதை பார்த்தும் பார்க்காதது போல்
நாம் அலட்சியமாக கடந்து செல்கிறோம். அந்தப் பலகைகளில் உள்ள சாதிப் பெயரை நீக்க
முயன்று சிலர் கோமாளி ஆனவர்களும் உண்டு.

அவை ஒருபுறமிருக்க திரைப்படங்களில் சாதி பெயர் இடம்பெறுவது தொடர்ந்து நடைபெற்று
வருகிறது. தேவர்மகன், சின்னக்கவுண்டர் என்று இந்த வரிசையில் பட்டியல் நீள்கிறது.

குறிப்பாக பெரியாரின் கருத்துக்களை தீவிரமாக ஆதரிக்கும் கமலஹாசன் தன்னுடைய படத்தின் பெயரில் தேவர் என்று சாதிப் பெயரை குறிப்பிட்டது மிக மோசமான முன் உதாரணம் என்று விமர்சனம் எழுந்தது.

முத்தையாவும் பா. ரஞ்சித்தும் :

அதை அடுத்து இயக்குனர் முத்தையாவின் வருகைக்கு பிறகும் இயக்குனர் பா.ரஞ்சித்தின்
வருகைக்குப் பிறகும் சினிமாவில் அதிதீவிரமாக சாதி நுழைந்து கொண்டு இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருபக்கம் முத்தையா தன்னுடைய எல்லா படங்களிலும் குறிப்பிட்ட அந்த சாதியினரை இவர்கள்
வீரமானவர்கள், கோபம் நிறைந்தவர்கள், வெட்டருவா வேல்கம்பு என்று சுற்றித் திரிபவர்கள்,
நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் தட்டிக்கேட்பவர் எங்கள் சமூகத்தினர் தான் என்பது
போல காட்சிகள் அமைக்கிறார்.

இன்னொரு பக்கம் பா. ரஞ்சித் நாங்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம், எங்களுக்கு
தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்பதை முன் வைத்தே இதுவரைக்கும் படங்கள் இயக்கி
உள்ளார், தயாரித்து உள்ளார்.

இவர்களாவது படத்திற்குள் தான் சாதி அரசியல் பேசுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இன்னும்
இறங்கி படத்தின் தலைப்பிலயே சாதிப் பெயரை வைக்கிறார்கள். திரைப்படம் என்பது சாதி,
மதம், மொழி, இனம் என எல்லாவாற்றுக்கும் பொதுவானது என்ற போது குறிப்பிட்ட

சாதியினரின் பெருமையை தூக்கிப் பிடிக்கும் கருவியாக எப்படி சினிமாவை மாற்றலாம் என்ற
கேள்வி எழுகிறது.

தேவர் மகன், மதயானைக்கூட்டம், படைவீரன் மற்றும் இயக்குனர் முத்தையாவின் படங்கள்
வெட்டருவா வேல்கம்பு தூக்குவதை நிறுத்துங்கள் என்பதை ஓரளவுக்கு சொல்ல முயன்றது. அதை
தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவர் என்ற படம் வெளியாகி பலமான அடி வாங்கி பிறகு படத்தை
தடையே செய்துவிட்டார்கள். இப்போது அந்தப் படத்தில் நடித்த அதே நடிகர் “நவரச இளவரசன்”
என்ற அடைமொழியோடு மீண்டும் தேவராட்டம் என்ற பெயரில் படம் நடித்துள்ளார்.

தேவராட்டம் என்பது சாதியைத் தூக்கிப் பிடிக்கும் பெயர் அல்ல அது ஒரு விளையாட்டின் பெயர்
என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இருந்தாலும் தேவர் என்ற அந்தப் பெயர் பலர் கண்களை
உறுத்துகிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

தேவர்மகன் 2, தேவராட்டம், சபாஷ் நாயுடு என்று படத்தின் தலைப்புகளில் சாதி பெயர் வைப்பது
தவறு என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால்
வரிச் சலுகை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அதே போல படங்களின் தலைப்பில்
சாதி பெயர் வைத்தால் அந்த சலுகை கிடையாது என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.
எது எதற்கோ தடை விதிப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் இடத்திற்கு
பொருளுக்கு குறிப்பிட்ட சாதிப் பெயரை வைக்க கூடாது என்று தடை விதிக்க வேண்டும்
என்கிறார்கள்.

ஆனால் முத்துராமலிங்க தேவர் என்ற பெயரில் தேவர் என்பதற்கு வேறொரு அர்த்தம் உள்ளது
என்று சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது. அந்த செய்தி இதோ:

(சில முட்டாள்களுக்கு தேவர் என்பது சாதி பெயர் இல்லடா. அது அவர் குடும்பப் பெயர்)

1.  தேவர் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர் சமூகம்.
2. தேவர் பிறந்தது மறவர் சமூகம்.
3. தேவரை பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார் சமூகம்.
4. தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்.
5. தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம்.

6. தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாயக்கர்
சமூகம்.
7. தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர், தேவரை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற
வைத்தது செட்டியார் சமூகத்தவர்.
8.  தேவரை பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்.
9.   தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம்.
10. தேவரின் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்.
11. தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள்
கொண்டாடியது பர்மா மக்கள்.
12. இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல் கொலைக்கும் தேவருக்கும் துளியும் சம்பந்தம்
இல்லை என வீடுவீடாக துண்டு பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்.
13. தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கசொன்னவர் வன்னியர்  சமூகத்தவர்.
14. பாராளுமன்றத்தில் தேவர் சிலையை
நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்
15. சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

இத்தனை அர்த்தமும் முத்துராமலிங்கர் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் தேவர் என்ற
வார்த்தைக்கு மட்டுமே மற்ற இடங்களில் உள்ள தேவர் என்ற பெயர் சாதியை தான் தூக்கி
நிறுத்துகிறது. பொதுவான ஒரு இடத்தை பொருளை குறிப்பாக திரைப்படத்தை சாதி ரீதியாக
பிரித்து வைப்பது ஏற்கக் கூடியது அல்ல.

வேதம் புதிது :

சாதிக்கு எதிரான உண்மையான படம் என்றால் அது பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜின்
நடிப்பில் வெளிவந்த வேதம் புதிது படம் மட்டுமே. அதற்குப் பிறகு சாதி அடையாளத்தை தூக்கி
வீசுங்கள் என்று படைவீரன் படத்தில் வசனம் பேசினார். அதை அடுத்து பரியேறும் பெருமாள்
படம் குறிப்பிட்ட சாதியினரை மட்டும் உயர்த்தியும் தாழ்த்தியும் பேசாமல் இருதரப்பு பக்கமும்

இருக்கும் நியாயம் அநியாயத்தை பேச முன்வந்தது. இருந்தாலும் வேதம் புதிது படத்தை
இதுவரையிலும் எந்தப் படமும் நெருங்கவில்லை என்பது தான் உண்மை.

Related Articles

லிஸ்ட் – பேஸ்புக்கின் புதிய அம்சம்... புதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டவும், ஏற்கனவே இருக்கும் பயனாளிகளை தக்கவைத்துக் கொள்ளவும் பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை நிறைய மேம்படுத்தல்களுக்கு ...
பில்லா2 இயக்குனரின் அடுத்த படம் எப்படி இ... கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படம். இவருடைய முந்தைய இரண்டு தமிழ் படங்களும் ஆங்கில படங்களுக்கான ...
2018ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள்!... கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்திற்கு நூறு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அசால்ட்டாக இருநூறு படங்கள் ரிலீஸ் ஆகிறது....
இனி கர்நாடக காடுகளைப் பருந்து பார்வையில்... கெனொபி நடை (Canopy Walk) என்பது கானகத்தின் உயரத்தில் நடை பயணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேடை அமைப்பதாகும். உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள...

Be the first to comment on "திரைப்படங்களின் தலைப்பில் சாதிப் பெயர் இடம்பெறுவது சரியா?"

Leave a comment

Your email address will not be published.


*