நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய வார்த்தை? – நம்பிக்கை கண்ணன்கள் பற்றி ஒரு பார்வை!

“நம்பிக்கை” அது ஏனோ வாழ்வின் இறுதிநிலைக்கு சென்று திரும்பிய பிறகு தான் இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் புரிகிறது. நம் மீது மற்றவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? மற்றவர்கள் மீது நாம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதெல்லாம் வாழ்வின் இறுதிநிலைக்கு சென்று வந்த பிறகே நம்பிக்கை என்ற வார்த்தையின் ஆழம் புரிகிறது. 

நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையை உணர்ச்சி நிலைகளை வைத்து பல வகையாக பிரிக்கலாம். அதில் பெரும்பான்மையாக இருப்பது,

  1. இலட்சியத்தின் மீது நம்பிக்கை வைப்பது 
  2. மனிதர்களின் மீது நம்பிக்கை வைப்பது

இதில் மனிதர்களின் மீதான நம்பிக்கையைப் பற்றி பார்ப்போம். 

கும்கி படத்தில் “நம்பிக்கை” என்ற விஷயத்தைப் பற்றி மிக அருமையாக கூறி இருப்பார்கள். கொம்பன் யானையை விரட்ட வந்திருக்கும் யானை என்று விக்ரம் பிரபுவின் (பொம்மன்) கும்கி யானையை மலைவாழ் மக்கள் நினைத்துக் கொள்வார்கள். பொம்மனுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் ஹீரோயின் அல்லியை பார்த்ததும் பொம்மனுக்கு அந்த ஊரை விட்டு விலக மனம் வரவில்லை. அல்லி மீது காதல் கொள்கிறான். எப்படியாவது அவளை கவர நினைக்கிறான். அந்த ஊர் மக்களோ நாங்கள் எங்கள் குல பெண்களை எங்கள் குல ஆண்களுக்குத் தான் கட்டிக் கொடுப்போம் என்று சொல்கின்றனர். அதனால் தன் காதலை மனதிற்குள்ளயே வைத்திருக்கிறான் பொம்மன். கும்கியுடன் அல்லி பழக ஆரம்பிக்கிறாள். கும்கியை அதிகம் நேசிக்கிறாள். அப்படியே அவள் பொம்மன் மீதும் காதல் கொள்கிறாள். இருவரும் காதலிக்க தொடங்கி சில நாட்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். 

இந்த சூழலில் கொம்பனை விரட்ட தன்னுடைய அப்பாவி கும்கியை பயிற்சி என்கிற பெயரில் படாதபாடு படுத்துகிறான் பொம்மன். அதேபோல தன்னுடன் வசிக்கும் மாமனையும் நண்பனையும் தொந்தரவு செய்கிறான். அப்பாவி மலைவாழ் மக்களோ அவர்களை மிக பெரியதாய் நம்புகிறார்கள். பொம்மன் குழுவினருக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறார்கள். “உங்கள தான் கடவுளா நம்பி இருக்குறோம்” என்று அந்த மலைவாழ் மக்களின் தலைவன் அல்லியின் அப்பா பொம்மனிடம் சொல்ல பொம்மன் ஒரு மாதிரி ஆகிறான். 

ஒருகட்டத்தில் பொம்மனுக்கு குற்ற உணர்வு அதிகமாகிறது. ஊரைவிட்டு கிளம்பிவிடலாம் என்று முடிவு எடுக்கிறான். கூட இருப்பவர்களோ எங்க போற என்று கேட்க, “அவரு என்னைய அவ்வளவு நம்புறாரு… எவ்வளவு  பெரிய மனுசன் என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சுக்ருக்காரு… அவர போயி எப்படி ஏமாத்துறது” என்று கண்ணீர் வடிக்கிறான் பொம்மன். 

கூட இருப்பவர்களோ, “நீ ஏன் அத யோசிக்குற… நீ போயிட்டா உன்ன உசுருக்கு உசுரா காதலிக்குற அந்தப் பொண்ணோட மனசு என்ன ஆகும்? ரெண்டு பேரும் தான காதல் பண்றிங்க… என்னமோ நீ மட்டும் தப்பு செஞ்சு மாதிரி இப்படி புலம்புற… எதா இருந்தாலும் பாத்துக்கலாம்யா…” என்று உசுப்பிவிட அவன் குழப்பமான மனநிலையுடன் மலைவாழ் மக்களை ஏமாற்றியபடியே வாழ்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் கொம்பன் களம் இறங்க கும்கி படாதபாடு பட்டு கொம்பனை வீழ்த்துகிறான். இறுதியில் கும்கி என்கிற மாணிக்கமும் குத்துப்பட்டு இறந்து போகிறான். 

மாணிக்கத்தைப் பார்த்து பொம்மன் அழ, தன் மாமாவையும் நண்பனையும் தேடுகிறான். இருவரும் நெருப்பில் சிக்கி கரிக்கட்டையாக வீழ்ந்து கிடக்கின்றனர். இப்போது, “ஐயோ என்னோட சுயநலத்துக்காக உங்க எல்லோரையும் நான் ஏமாத்திட்டனே” என்று அழுகிறான். ஊர்த்தலைவர் அவனை ஏமாற்றத்துடன் பார்க்கிறார். 

இதுபோல தான் நாம். பலரின் நம்பிக்கையை பெற்றுவிட்டு அந்த நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். அப்பாவியாய் இருந்து ஏமாந்து போகிறோம், அப்பாவிகளை ஏமாற்ற பார்க்கிறோம். இப்படித்தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கமலிடம் ஒரு வார்த்தை சொல்வார். “உன்ன நாங்க எங்க வீட்டுப் பிள்ளையா தான்மா நினைச்சோம்… ஆனா நீ” என்று ஜூலி தன் தவறை தன் மீது மற்றவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை கமலிடம் சொல்வார். அதுபோல தான் நாம். அதாவது நாமளும் ஜூலி மாதிரி தான். 

நித்திலனின் குரங்குபொம்மை படத்தில், கதிர் தன் அப்பாவின் போட்டோவைக் காட்டி “இவர பாத்துருக்கியா, ஒரு சிலைய கைமாத்தறதுக்காக இங்க வந்தாரு” என்று சொல்ல, “திருட்டுப் பயலா ஒங்கொப்பன்… இவ்வளவு நேரம் எதோ காந்தி மாதிரி பேசிட்டு இருந்த…” என்பான் சிந்தனை. 

நாம் எவ்வளவு டெடிகேட்டடான மனிதராக எவ்வளவு ஒழுக்கமானவராக இருக்கிறோம் இருந்தோம் என்பது அவர்கள்  கண்களில் விழாது. நாம் செய்த அந்த சிலதுளிகள் தவறுகள்தான் நமக்கான ஒட்டுமொத்த இமேஜாக மாறி விடுகிறது. “யாரு இவனா?” இவன் சரியான “பிராடு”, “சீட்டிங்”, “பித்தலாட்டக்காரன்”, “திருட்டுநாய்” என்று கொந்தளிப்பார்கள். இவற்றையெல்லாம் விட அதிக வீரியமான ஒரு வார்த்தை இருக்கிறது. அந்த வார்த்தையின் பெயர் “கோழை”. 

கோழைங்க தான் தன் மீது நம்பிக்கை இல்லாம அடுத்தவன ஏமாத்தி பொழைப்பான் என்ற உண்மை நமக்குத் தெரியாமல் இல்லை. ஏமாற்றும்போது இருக்கின்ற சுகம் ஏமாறும்போது வலியாக மாறீ விடுகிறது. ஏன் இவ்வளவு ஏமாற்று வேலைகள் என்று யோசித்தால் அதற்குப் பின்னர் பணம் என்றொரு விஷயம் வந்து செல்கிறது. 

“உண்மைய ஒத்துக்கறதாலயே கோழ வீரனாகிடுறான்” என்ற மகாமுனி என்ற வசனத்திற்கேற்ப உண்மையை ஒத்துக்கொண்டு தொடர்ந்து அந்த வேலையை செய்யாமல் ஒதுங்கிவிடுவது மேல். ஆனால் திருட்டுப்பயலே படத்தைப் போல உண்மையை ஒத்துக்கிட்டு ஒதுங்கிப் போகும்போது தான் நம் எல்லோரும் மீதும் ஈட்டிகள் பாய்கிறது. 

இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது நாம் எல்லாருமே நான் சலீமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “நான்” பட இயக்குனர் ஜீவா சங்கரிடம் “நான் படத்திற்கான கதை எப்படி கிடைச்சது” என்று ஆனந்த விகடன் நிரூபர் கேட்க, இயக்குனர் ஜீவா சங்கர் “எங்க குருநாதர் ஆபிஸ்ல ஆபிஸ்பாயா ஒரு பையன் இருந்தான்… பாக்குறதுக்கு அப்பாவியா இருப்பான்… அவன்கிட்ட பணம் கொடுத்து பேங்க்ல கட்டிட்டு வர சொல்வேன்… சரியா செய்வான்… என் பர்ஸ்ஸ அவங்கிட்ட கொடுத்து காச எடுத்துட்டுப் போயி எதாவது வாங்கிட்டு வாடான்னு சொன்னா ஒரு பைசா அதிகம் எடுக்க மாட்டான்… அவ்வளவு நம்பிக்கையான பையன்… திடீர்னு ஒருநாள் அவன் இல்லாதப்ப அவன தேடி நாலு பேரு வந்தாங்க, என்னான்னு விசாரிச்சப்ப அவன் என் குருநாதர் ஜீவாகிட்ட உதவி இயக்குனரா வேலை பாக்குறதாவும் நடிக்க வாய்ப்பு வாங்கித் தரேனும் சொல்லி காசு வாங்கிருக்கான்… ஆபிஸ்லயும் நெறையா பொருள் திருடிருக்கான்… அப்பாவி பையன், நம்பிக்கையான பையன்னு நினைச்சா இவனுக்குள்ள இப்படி ஒருத்தன் இருந்திருக்கானே என்ற வியப்பு தான் நான் படமா மாறுச்சு” என்று பதிலளிருந்தார். 

அந்தப் பையன் மட்டுமில்ல நாம் எல்லோருமே கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறோம். பணம் புழங்கும் தொழில் என்றால் “நம்பிக்கையான ஆள்” தேவை. எந்த தொழிலில் போய் சேர்ந்தாலும் வேலை கொடுப்பவர்கள் முதலில் சொல்வது, “ஒழுங்கா இருக்கனும், ஏனா இதுக்கு முன்னாடி இருந்த ஒருத்தன் இப்படித்தான் நம்ப வச்சு ஏமாத்திட்டு போயிட்டான்” என்ற வார்த்தைகளாக தான் இருக்கும். நிறைய சிறுகதைகளில் கூட இந்த மாதிரி வேலை செய்த இடத்தில் கையாடல் செய்த மனிதர்களை காட்டி இருக்கிறார்கள். 

ராம் தங்கத்தின் “வெளிச்சம்” சிறுகதையில் அந்தச் சிறுவன் தான் வேலை செய்யும் பேக்கரியில் திருடிவிட பாட்டி “ஒருமுறை திருட்டுப்பட்டம் வாங்கிட்டா அது வாழ்நாள் பூரா நம்மள விட்டு போகாது” என்று அவனை திருத்தி நல்வழிப்படுத்துவாள். 

வெண்ணிலா கபடி குழு, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் “நம்பிக்கை” என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரண காட்சிகளை வைத்திருப்பார் இயக்குனர் சுசூந்திரன். 

#வெண்ணிலா கபடி குழு

கிஷோர் அப்போதுதான் அந்த கிராமத்திற்கு வருவார். அவரையும் கபடி விளையாட்டுக்கு சேர்த்துக்க சொல்லி சூரியிடம் ஒருவர் சொல்வார். அதற்கு சூரியோ, “அந்தப் பக்கம் சின்ன பசங்க விளையாடறாங்க… போய் அவங்க கூட விளையாடுங்க…” என்று சொல்லி கிஷோரை அசிங்கப்படுத்துவார் சூரி. அடுத்த காட்சியில் தான் கிஷோர் ஒரு கபடி பயிற்சியாளர் என்று சூரிக்குத் தெரிய வருகிறது. உடனே சூரி அந்த இடத்தில் மனம் வருந்தி கிஷோரிடம் மன்னிப்பு கேட்பார். கிஷோர் உடனே அவரை மன்னித்து புன்னகைத்து கைகுலுக்குவார் – மன்னித்தலும் நம்பி வாழ்தலும் தான் இயல்பான வாழ்க்கை என்று அழகாக காட்டி இருப்பார் இயக்குனர் சுசூந்திரன். 

#மாவீரன் கிட்டு

இந்தப் படத்தில் காமெடியனாக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. “கிட்டு எந்த ஊர்ல ஒழிஞ்சிருக்கான்”னு தெரிந்துகொள்ள சாதிவெறியர்கள் இரவு நேரத்தில் சூரிக்குப் பணம் கொடுத்து கேட்பார்கள். சூரி அந்த இடத்தில் குடும்ப சூழலை உணர்ந்து பணத்தை வாங்க கைநீட்டுவார். பிறகு பணம் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். 

பணம் வேண்டாம் என்று சொல்லிய அடுத்த கணத்தில் சின்ராசு (பார்த்திபன்) வீட்டுக்குச் செல்வார் சூரி. பணம் கொடுத்து கிட்டுவைப் பற்றி விசாரித்ததை சின்ராசுவிடம் சொல்லி “இனி நான் உங்ககூட சேர மாட்டேன்” என்பார். உடனே சின்ராசு அதிர்ந்து “டேய் சொல்லிட்டியா…” என்று கேட்பார். “இல்லண்ணெ…” என்ற சூரியிடம், “அப்புறம் ஏன்டா எங்கள விட்டு விலகுற…” என்று சின்ராசு கேட்க, “ஒரு நிமிஷம் பணத்துக்கு ஆசப்பட்டுடனே… இனி உங்க கூட சேர எனக்குத் தகுதி இல்லை…” என்பார் சூரி. எவ்வளவு நேர்மையான கதாபாத்திரம் இது. இதற்குப் பெயர் தான் நம்பிக்கை. 

உங்கள நம்பித்தான் இருக்கிறோம் என்று உங்களிடம் யாராவது சொல்லிவிட்டால் அவர்களுடைய நம்பிக்கைக்கு தகுந்த மாதிரி கடைசி வரை நடந்து கொள்ளுங்கள். அப்படி நடந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவர்களிடம் இருந்து பட்டென விலகிவிடுங்கள். கத்தி படத்தில் போலி ஜீவா தங்களை ஏமாற்றி விட்டான் என்றதும் அந்த விவசாயிகள் கதறுவார்கள். நாங்கள் ஏற்கனவே,  அரசாங்கத்தையும் மழையையும் நம்பி நம்பி காலங்காலமாக ஏமார்ந்து கொண்டே இருப்பவர்கள். எங்களை போய் மறுபடியும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறாயே? நீ எல்லாம் மனுசனா என்று அந்த வயதானவர்கள் கேள்வி கேட்பார்கள். குறிப்பாக பல லட்சம் அப்பாவி மக்களின் நம்பிக்கையாக விளங்கும் அதிகாரிகளே அரசியல்வாதிகளே,  வருங்காலத்தில் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறப் போகிறார்களே…  தயவு செய்து இந்த நம்பிக்கை என்கிற வார்த்தையின் அர்த்தத்தை மனதார புரிந்து கொள்ளுங்கள். சூது கவ்வும் படத்தில் “நம்பிக்கை கண்ணன்” என்கிற ஒரு கதாபாத்திரம் வந்து எல்லோரையும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டு செல்வாரே, அந்த மாதிரி நம்பிக்கை என்ற வார்த்தையை வைத்து பலருடைய வாழ்க்கையில் விளையாடி விடாதீர்கள். 

Related Articles

பல நன்மைகளை தரும் பனம் பழம்!... விதைக்க வேண்டியதுமில்லை. வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ...
Wings App வழியாக இந்தியாவின் முதல் இணைய ... இந்தியாவிலயே முதன் முறையாக இணைய தொலைபேசி வசதியை வழங்குகிறது பிஎஸ்என்எல்.பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் விங்க்ஸ் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு இந்...
“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு ச... இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில் அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்...
மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளப... (ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார...

Be the first to comment on "நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய வார்த்தை? – நம்பிக்கை கண்ணன்கள் பற்றி ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*