கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.
ராஜராஜேஸ்வரி நகர மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம், மஹாதேவ்புரா மற்றும் பொம்மனஹள்ளி ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களாக கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் கணித்துள்ளது.
ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பெங்களூரின் சராசரி மழைப்பொழிவு 98 செ.மீ. ஆகும், ஆனால் தற்போதைய நிலவரப்படி பெங்களூரில் ஏற்கனவே 35 செ.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது.
சுபா அவினாஷ், கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையத்தின் ஹைட்ராலஜி பிரிவு திட்டப்பணி விஞ்ஞானி இது குறித்து தெரிவித்ததாவது, ‘பொம்மனஹள்ளி மற்றும் தென் மண்டலங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரங்களில் நகரத்திற்கு இடையே அதிகமான மழையளவு இருக்கும். நிலைமை அடிப்படையில், ஒரு புதிய எச்சரிக்கை பின்னர் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
மழை பாதிப்புகள்
சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக 25 வயதான தொழிலாளி உயிர் இழந்தார் மற்றும் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐடிஐ லேஅவுட் பகுதியில் மூன்று பேர் காயமடைந்தனர்.
கடந்த மாத இறுதியில் கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அப்போது ஒரு வெள்ள அபாய எச்சரிக்கையை கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் வெளியிட நேர்ந்தது.
கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியதால் கர்நாடகாவின் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளும், கல்லூரிகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன.
மங்கன்லூரின் துறைமுக நகரில் 40 மி.மீ. மழைபொழிவின் காரணமாக , பல இடங்களில் வீதிகள், வீட்டுவசதி குடியேற்றங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் போன்றவை நீரில் மூழ்கின.
உடுப்பி, ஹொன்னவர், அகும்பே, கரார் கரையோரப் பகுதி, பெல்லாகவி , ஹப்பாலி -தர்வாட் மற்றும் கடக் ஆகிய பகுதிகளிலும் பருவ மழை பதிவாகியிருக்கிறது. அதன் காரணமாக மக்கள் ஒரே இடத்தில் முடங்கிப் போயிருப்பது மட்டுமல்லாமல், பயிர்களும் பெருமளவில் சேதமடைந்து இருக்கின்றன.
புரளிகள் ஜாக்கிரதை
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா மற்றும் மகாராஷ்ட்ரா, பெங்களூரு அதன் சுற்றுப்புற பகுதிகள் ஆகியவை சாகர் எனப் பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கும் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. ஆனால் அது ஒரு புரளி என்று பின்னர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
Be the first to comment on "பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை. கடுமையாக மழை பெய்யும் எனக் கணிப்பு."