போலீஸ் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே மனிதநேயமற்றவர்களா? விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் என்ன சொல்கிறார்கள்? 

 

சிவகார்த்திகேயனும் அப்பா சென்டிமென்டும்: 

சிவகார்த்திகேயன் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்றால் யுவன் நா முத்துக்குமார் கூட்டணியில் உருவான தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்ற பாடல் அவருக்கு அமைந்த விதத்தில் தான். 

விஜய் டிவி விருது மேடையில் இந்த தருணத்தில் நீங்கள் யாரை மிஸ் பண்றீங்க என்று நீயா நானா கோபிநாத் கேட்க அதற்கு துளியும் யோசிக்காமல் அப்பாவை மிஸ் பண்றேன் என்பார் சிவகார்த்திகேயன். அந்த அளவுக்கு அப்பாவை நேசித்தவர். அப்பாவை நேசித்ததால் அப்பா செய்த போலீஸ் பணியும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான்  காக்கி சட்டை படத்தில் போலீஸ் உடை அணிந்து நடித்த போது தன் அப்பாவே தன் உடன் இருந்தது போல இருந்தது என்று உணர்வுபூர்வமாக பல முறை கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். 

அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் சிம்ப்ளி குஷ்பு என்ற நிகழ்ச்சியில் போலீஸ் பணியில் இருந்த என்னுடைய அப்பா வேலைப்பழு காரணமாக தான் இறந்தார் என்று தெரிவித்திருக்கிறார்.  போலீசை அப்பாவாக கொண்ட சிவகார்த்திகேயன் இப்படி கூறியிருக்க அவருடைய சமகாலத்து நடிகரான விஜய் சேதுபதி போலீஸ் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம். 

விகடன் மாணவப் பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பல்வேறு விஷயங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு மாணவர் “போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்வது இன்றைய சூழலுக்கு சரியா சார்?” என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

விஜய் சேதுபதி: 

அதற்கு விஜய் சேதுபதி என்னை பொறுத்தவரை போலீஸ் எப்போதுமே நம்மளுடைய நண்பன் தான். அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சில காரணங்களும் இருக்கிறது. காரணம் மன அழுத்தம் தான். அவர்கள் நம்மைப் போல ஒரு ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கடமை அது மட்டுமே.  அவர்களிடம் சென்று விஜய் சேதுபதி ஆகிய நான் நின்றால் அவர்கள் என்னை ஏற இறங்க யார் என்று பார்ப்பார்கள், அவர்களுக்கு என்னை யாரென்று தெரியாது. கூட இருக்கும் இளைஞர்கள் இவர் ஒரு நடிகர், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன பிறகுதான் அவர்கள் ஓ அப்படியா என்று தெரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு மனஅழுத்தம் நிரம்பிய உலகமாக இருக்கிறது காவலாளிகளின் உலகம் என்று தெரிவித்திருக்கிறார்.   

வெற்றிமாறன் – போலீஸ் “அதிகாரி”யின் அதிகாரம்: 

விசாரணை படம் ரிலீஸானபோது தினத்தந்தி விவாத மேடைக்கு வெற்றிமாறன் அழைக்கப்பட்டிருந்தார். அதில் பத்திரிகையாளர், நெறியாளர் போலீஸ் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறனுக்கு தொடர்ந்து சரமாரியான கேள்விகள் வந்து கொண்டே இருந்தன. போலீஸ் துறையை மிகைப்படுத்திக் காட்டி இருக்கும்  இந்த படத்திற்கு அரசு அதிகாரியான சகாயம் எப்படி விளம்பரத் தூதுவராக மாறலாம் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி குரலை உயர்த்தி உயர்த்தி வெற்றிமாறனை மிரட்டும் தொணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். 

நாங்கள் சகாயம் அவர்களிடம் முறையான அனுமதி பெற்ற பிறகுதான் விசாரணை படம் குறித்து அவர் சொன்ன வார்த்தைகளை நாங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தினோம் என்று வெற்றிமாறன் கூறினார். அப்போதும் அந்த அதிகாரி வெற்றிமாறனை விடுவதாயில்லை தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்.   ஒரு கட்டத்தில் பேச முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட வெற்றிமாறன் எனக்கு மைக்கு சரியா கேக்கல என்று சொல்லி சமாளிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டார்.

சினிமாவும் அதிரடி போலீஸ்காரர்களும்: 

சாத்தான்குளம் விவகாரம் ஒட்டுமொத்த போலீஸ் துறையை மிக கேவலமான துறையாக காட்டியது. இந்த மாதிரி போலீஸ்கள் தங்களுடைய அதிகாரங்களை வரம்புமீறி பயன்படுத்துவதற்கு சினிமா காட்சிகளும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது என்று பலரும் எழுதினர். அதிலும் பெரிதாகப்பேசப்பட்டது இயக்குனர் ஹரியின் போலீஸ் படங்களும் கௌதம் மேனனின் தோட்டாக்கள் தெறிக்கும் போலீஸ் படங்களும் தான். இவர்களுடைய படங்களில் போலீஸ்கள்  மிக உயர்ந்தவர்களாக சித்தரிக்க பட்டிருப்பார்கள். அதனால் மற்ற கதாபாத்திரங்களை பெரிய குற்றவாளிகள் அளவுக்கு சித்தரித்து, அவர்களை சுட்டுத்தள்ளினாளும் பிரச்சனை இல்லை என்பது போல் கதை அமைத்து இருப்பார்கள். அதனால் அவர்களுடைய படங்களில் தோட்டாக்கள் இஷ்டத்துக்கு தெறித்துக் கொண்டே இருக்கும்.  

அப்படிப்பட்ட போலீஸ் அராஜக ஹீரோயிச படங்களைப் பார்த்துவிட்டு நிறைய இளைஞர்கள் நான் இந்தப் படங்களைப் பார்த்துதான் போலீஸ் துறைக்கே வந்தேன் என்று உண்மையை கூறியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள போலீஸ் வழியில் அதிகாரம் எப்படி நேர்மையாக செயல்படும்? என்று பலரும் அந்த சமயத்தில் கேள்வி எழுப்பினர். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் போலீசாக நடித்த தர்பார் படத்தில் மனித உரிமை ஆணையரை துப்பாக்கி முனையில் நிறுத்தி உயிர் பயம் காட்டி மிரட்டுவது போல் ஒரு காட்சி அமைத்திருப்பார் ஏ ஆர் முருகதாஸ். அந்த காட்சியின் மீதும் அதிக விமர்சனங்கள் எழுந்தது. 

சினிமாவும் அழுத்ததிற்கு உள்ளாகும் போலீஸ்காரர்களும்: 

இப்படிப்பட்ட படங்களை தந்த தமிழ் சினிமா, போலீஸ் அதிகாரிகளின் உண்மையான நிலை என்ன என்பதை சில நல்ல படங்களின் மூலமாகவும் காட்டியிருக்கிறது. முதலில் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் திரைப்படத்தை பார்ப்போம். இந்த படத்தில் ஒரு பெண் கான்ஸ்டபிள் தன் உயர் அதிகாரியிடம் எப்படி சிக்கி தவிக்கிறார் என்பதுதான் கதை. தன்னுடைய காம இச்சைக்கு உடன்படாத அந்த பெண் கான்ஸ்டபிளை உயர் அதிகாரி சிறுநீர் கழிப்பதற்கு கூட வழியில்லாமல் மொட்டை வெயிலில் வெட்டவெளியில் நிற்க வைத்து அந்தப் பெண்ணின் பரிதவிப்புகளை அவர் ரசிப்பார். பெரும்பாலான பெண் காவலாளிகளுக்கு இந்த மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தை பார்ப்போம். இந்த படத்தில் நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகனாக நடித்திருப்பார் தினேஷ். அப்பா சக காவலாளிகளின் சூழ்ச்சியால் மரணிக்கப்பட்ட பிறகு அவருடைய வேலை தினேஷுக்கு வருகிறது. அப்பா மீது உள்ள காழ்ப் புணர்ச்சியால் உயரதிகாரி புதிதாக வேலைக்கு சேர்ந்த  தினேசை மொட்டை வெயிலில் நிற்க வைத்து வீட்டு சாமான்கள் எல்லாம் வாங்க வைத்து மிகக் கொடுமை படுத்துகிறார். 

இதேபோல இயக்குனர் ஸ்ரீ கணேஷின் 8 தோட்டாக்கள் படமும் போலீஸ் அராஜகத்தை பற்றி கூறியிருக்கிறது.  இதில் நாயகன் அப்பாவி என்பதால் அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள மற்ற காவல் அதிகாரிகள் எல்லோருமே அவரை கார்னர் செய்து மிகவும் கொடுமை செய்வார்கள். இளம் நாயகனைப் போலவே வயதான எம்எஸ் பாஸ்கரும் தன் மேல் அதிகாரியால் தன் வாழ்க்கையை தொலைத்த கதையை சொல்லி அழுகிறார். 

போலீஸ்துறைக்குள் அதிகாரம் சுற்றி வருதல்: 

நடிகர் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் மனித உரிமை ஆணையரின் உண்மையான பவர் என்ன என்பதை மிகத் தெளிவாக காட்டியிருப்பார்கள். தன்னுடைய மேலதிகாரிகளும் சக காவலாளிகளும் ரவுடிகளும் கூட்டு சேர்ந்துகொண்டு ஒரு நேர்மையான அதிகாரியை எப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை தெளிவாக சேதுபதி படத்தில் காட்டியிருப்பார்கள். அந்த படத்தில் விஜய் சேதுபதியை  கோமாளி ஆக்கும் முயற்சியில் ரவுடிக் கூட்டம் செயல்படும். அவர் அடங்காபிடாரி அரசியல் கட்சி உறுப்பினர்களை   திருந்தவே திருந்தாத ரவுடிகளை துரத்தி துரத்தி அடித்து வெளுத்து வாங்கும் காட்சிகளை இன்னொரு கூட்டம் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைக்கும். நிஜத்தில் இந்த மாதிரி சில நல்ல போலீஸ்களை அராஜக மனிதர்களாக காட்டும் சில வீடியோக்களும் ஃபேஸ்புக்கில் உலாவி வருகின்றன. 

அடங்கமறு படத்தில்  அறம் என்ற விஷயத்தை மறந்து போயி பணம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நேர்மையற்று வாழும் அதிகாரிகளை தோலுரித்துக் காட்டி இருப்பார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகள் நேர்மையாக இருக்கும் கீழ்நிலையில் உள்ள காவலாளிகளை ஒரு நாயைப் போல நடத்துவார்கள். “நான் என்ன சொன்னேன் அதை மட்டும் செய்” என்று அதிகாரம் செய்வார்கள். இப்படி அதிகாரம் அந்த கீழ்நிலையில் உள்ள காவலாளிகள் மீது பாயும் போது அவர்கள் வேறு வழியில்லாமல் மனிதநேயம் என்பதை மறந்து போய் மரத்துப்போன இதயம் கொண்டவர்களாக மாறி போய் விடுகிறார்கள். 

ஹீரோயிச போலீஸ்களை காட்டிய அதே கௌதம் மேனன் படத்தில் போலீஸ்கள் குற்றவாளிகளை எப்படி தங்களின் தவறான அணுகுமுறையால்  உருவாக்குகிறார்கள் என்பதை விளக்கும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். மிக நெருங்கிய நண்பர்களான அமுதன் இளமாறன் இருவரும் காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறார்கள். அப்போது டியூட்டியில் இருக்கும் போலீஸ் ஒருவர்  பாலியல் தொழிலாளி ஒருவரை அமுதன் இளமாறன் இருக்கும் அறைக்குள் விட்டு அவர்களை வன்புணர்வு செய்ய வைப்பார். அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அமுதன் இளமாறன் மிக கொடியவர்களாக மாறிவிடுகிறார்கள். 

விசாரணை படத்தில் ஆந்திர காவல் நிலையம் தமிழக காவல் நிலையம் இன்று இரண்டு காவல் நிலையங்களை காட்டியிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். இரண்டு காவல் நிலையங்களிலும்  அதிகாரம் அதன் எல்லையை மீறி எளியவர்கள் மீது பாயும். அந்த இரண்டு காவல் நிலையங்களிலும் ஒரு நல்ல போலீஸ் இருப்பார்கள். ஆந்திர காவல் நிலையத்தில் ஒரு பெண் போலீஸ் செல்போன் கொடுத்து உதவுவார். தமிழ் காவல் நிலையத்தில் முத்துவேல் என்கிற ஒரு காவல் அதிகாரி அவர்களுக்கு உதவுவார். இப்படி குற்றமற்ற எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட அந்த போலீஸ் அதிகாரியை மற்ற போலீஸ்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் நாயை விட கேவலமாக பார்க்கிறார்கள் என்ற விடை தான் கிடைக்கும். எளியவர்களை முத்துவேல் காப்பாற்ற நினைக்க, கூட இருக்கும் அதிகாரிகள் “ரிசர்வேஷன்ல வந்துட்டு சிஸ்டம் தெரியாம பேசிட்டு இருக்கான்” என்று அவரை விமர்சிப்பார்கள். கடைசியில் அந்த எளியவர்களுக்கும் சரி எளியவர்களை காப்பாற்ற நினைத்த எளிய காவலாளிகளுக்கும் சரி மரணமே பரிசாக கிடைக்கிறது. 

ஒரு சில போலீஸ்காரர்கள்  அத்து மீறுகிறார்கள் என்பதால் ஒட்டுமொத்த போலீஸ் துறையே மனித நேயமற்ற ஒரு துறை என்று சொல்வது முற்றிலும் முட்டாள்தனமானது. போலீஸ் துறையில் இருப்பவர்களும் மனிதர்களே. போலீஸ் துறையில் இருப்பவர்களில் நிறையபேர் சாமானிய மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஈவு இரக்கம் எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஈவு இரக்கம் கொண்ட “எளிய போலீஸ்கள்” மீது “மனிதநேயமற்ற சில போலீஸ் அதிகாரிகள்” தீவிர அதிகாரத்தை செலுத்துகின்றனர். இப்போது அந்த எளிய போலீஸ்கள் தங்களைவிட எவன் எளியவனாக இருக்கிறானோ அவன் மீது அதிகாரத்தை செலுத்தத் தொடங்குகிறார்கள். 

போலீஸ் பொதுமக்கள் இப்படி வேறுபாடு இல்லாமல் “அதிகாரம் எப்போதுமே எளியவர்கள் மீது தான் பாய்ந்து கொண்டிருக்கிறது” என்பதே உண்மை.  

 

Related Articles

2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...
37 ஆண்டுகளாகத் தினம் ஒரு மரம் நட்டுவரும்... காட்டை அழிப்பது இன்று லாபம் ஈட்டும் தொழில். கட்சி வித்தியாசம் இல்லாமல் பாரபட்சம் இன்றி  காடுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. ஆனால் முப்பத்து ஏழு ஆண்டுகளா...
நமக்கொரு பீடி தாத்தா கிடைத்தால் நம் வாழ்... சார்பட்டா படத்தில் இடம்பெற்றிருந்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் "நச்" என நிற்கின்றன. அதில் மிக முக்கியமான கதாபாத்திரம் பீடி ராயப்பன் கதாபாத்திரம...
உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வ... இணையதள சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளக் கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நுகர்வோர் சாதனங்களுடன் கூகுள...

Be the first to comment on "போலீஸ் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே மனிதநேயமற்றவர்களா? விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் என்ன சொல்கிறார்கள்? "

Leave a comment

Your email address will not be published.


*