பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாருங்க

cat

வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து, அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நீங்கள் வீடு வந்து சேரும் வரை, உங்களைச் சுற்றி எத்தனை நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு வலம் வருகின்றன என்று யோசித்துப் பாருங்கள். அவை அனைத்தையும் பின்பற்றுபவராக நீங்கள் இருந்தால், பத்து அடிக்கு ஒரு குழி நோண்டி அதில் எந்தத் தொந்தரவும் இருக்காது என்ற நம்பிக்கையில் உங்களை நீங்களே புதைத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு நம்மைச் சுற்றி நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அவை அனைத்தையும் போலி என்று சொல்லி ஒரு மூச்சில் புறம் தள்ளி விடவும் முடியாது.  ஏனென்றால் அப்படி உருவாக்கப்படும் நம்பிக்கைகளுக்குப் பின்பு ஒரு அறிவியல் பின்பலமும் இருக்கிறது.  நம்பிக்கைகளுக்குப் பின்னிருக்கும் அறிவியல் என்ன? அறிவியலை அறிவியலாகவே சொல்லாமல், நம்பிக்கையாகச் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? வாருங்கள் விடைதேடிப் பயணிப்போம்.

ஆன்மிகம், தத்துவம் மற்றும் மதம்

ஆரம்பிச்சிட்டானுங்க டா என்று கிளம்பி விடாதீர்கள். கொஞ்சம் எளிமையாகப் புரிந்து கொள்வோம்.

அசந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து இருக்கிறீர்கள், உங்களுக்கு அருகே ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல்லை கையில் எடுத்துப் பார்க்கிறீர்கள். இரண்டு விதமாக அந்தக் கல்லை நீங்கள் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக அறிவியல் ரீதியில். கல், ஒரு இயற்கைப் பொருள். பல்வேறு கனிமங்கள் சேர்ந்து உருவானது. இப்படி நிறைய அறிவியல் செய்திகளை அந்தக் கல் குறித்து நீங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். அடுத்ததாக ஆன்மீக ரீதியில், இது ஒரு கல். இன்று ஒரு கல்லாக இருக்கும் இது, நாளை மண்ணாக ஆகலாம். அந்த மண்ணிலிருந்து தாவரங்கள் முளைத்து வரலாம். ஆக இந்தக் கல், தன்னுள்ளே மண்ணையும், தாவரத்தையும் கொண்டிருக்கிறது, ஒரு சிறிய விதை ஒரு பெரிய விருட்சத்தைக் கொண்டிருப்பது போல. இப்படி அந்தக் கல் குறித்து அறிவியல் ரீதியாகவோ, ஆன்மீக ரீதியாகவோ புரிந்துகொள்வது உங்கள் விருப்பம்.

ஆன்மிகம்

எந்த ஒரு பொருளின் மீதும் உங்களுக்கிருக்கும் அனைத்துக் கேள்விகளையும் கேட்டு, அதற்குப்  பதில் தேட முயற்சிப்பது ஆன்மிகம் ஆகும்.

தத்துவம்

நீங்கள் கண்டறிந்த பதிலையும், அதற்கு நீங்கள் மேற்கொண்ட அக பயணத்தையும் சொல்வது தத்துவம் ஆகும்.

மதம்

தத்துவங்களை விளக்கப் புனித நூல்கள் இயற்றுவது, வழிபாட்டுத் தளங்கள் கட்டுவது, அதற்குச் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய உருவாவது மதம் ஆகும்.

முதலில் தேடல், தேடலுக்கு கிடைத்த பதில், பதிலை விளக்க ஒரு வழி.

தாங்கள் கண்டறிந்ததை நேரடியாக சொல்லாமல், ஒரு குறியீட்டின் (Symbolic) மூலம் சொல்வதே அனைவரையும் சென்று சேரும் வழி என்று நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஆகவே அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறிவியலை நேரடியாக சொல்லாமல், நம்பிக்கைகள் வாயிலாக சொல்வதே அனைவரையும் சென்றடையும் வழி என்ற நுட்பத்தை அவர்கள் கடைப்பிடித்தனர்.

அப்படி நம்பிக்கைகளை முன் நிறுத்தி அவர்கள் சொல்ல நினைத்தவை என்னென்ன?

மாரி என்றால் மழை

விலங்குகளைச் சமாளிப்பது பண்டைக்கால மனிதனுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. கற்களைக் கொண்டு கூறிய ஆயுதங்களை அவன் சமைத்துக்கொண்டான். அவன் உண்மையில் பயந்தது இயற்கையைப் பார்த்து. தலை மேலிருக்கும் ஏதோவொன்றிலிருந்து பயங்கர சப்தமும், ஒளியும், தண்ணீரும் வந்தால் யாருக்குத்தான் பயமாக இருக்காது? அது இடி, மின்னல் மற்றும் மழை என்று அவன் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. அப்போதிருந்து தன்னை அச்சுறுத்துவதை, இயற்கையை வணங்கும் வழக்கும் நம்மிடையே இருந்து வந்துள்ளது. நல்ல உதாரணம், மாரியம்மன். மழையை வணங்குவது.மழையின் அவசியத்தை சொல்ல அதை தெய்வமாக்குவதை விட வேறு சிறந்த வழி ஏதேனும் இருக்க முடியுமா?

பூனை குறுக்க போனா விளங்காது

இந்த நம்பிக்கை ஒரு வேலைப் பூனைக்கு தெரிய வந்தால், சிரித்து வைக்கும். முன்பு இரவு நேரங்களில் நெடுந்தூரம் பயணிக்க நம்மிடம் இருந்த ஒரே வசதி, மாட்டு வண்டி. மாட்டு வண்டியில் ஒரு லாந்தர் விளக்கைக் கட்டிக்கொண்டு பயணிப்பதையே நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இரவில் அப்படி பயணம் செய்துகொண்டிருக்கும் போது, மாடுகள் பூனையை பார்க்க நேர்ந்தால், அதிகமும் மிரண்டு போகும். காரணம் இரவில், பூனையின் கண்கள் கோலிக்குண்டு அளவில் உள்ள ஒரு பல்பு போல பிரகாசமாக இருக்கும். அதை திடீரென பார்க்கும் வண்டி மாடுகள் மிரண்டு விடக்கூடாதென்று, பூனை குறுக்க போனா ஆகாது என்று சொல்லி வைத்தார்கள்.

பேயாக வந்து பயமுறுத்தினால் கோவில்

நம் பண்பாட்டில் நிறையப் பெண் தெய்வங்களைக் காண முடியும். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள்  ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளுக்கு முன்பு ரத்தமும், சதையுமாக வாழ்ந்தவர்கள் தான் என்று குல தெய்வங்களைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

முன்பு சமுதாயத்தால் வஞ்சிக்கப்பட்டுப் பல பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அகால மரணத்திற்குப் பிறகு, சமுதாயத்தின் குற்ற உணர்வின் காரணமாக அப்பெண்கள் பழிவாங்க பேயாக அலைவதாகவும், அவர்களுக்கு ஒரு கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தால், அவர்களது கோபம் குறையும் என்றும் பரிகாரம் சொல்லப்பட்டது. இவ்வாறு வஞ்சிக்கப்பட்டவர்கள் சிறு தெய்வங்களானார்கள்.

 ஆறு மணி ஆச்சா, பேசாம இருங்க

சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பெண்கள் தலையை விரித்துப் போடக்கூடாது, நகம் வெட்டக்கூடாது, இருளில் சாப்பிடக்கூடாது, வாசற்படியில் உட்காரக்கூடாது என்று இந்தப் பட்டியில் இன்னும் கூட நீண்டுகொண்டே போகும். இவையெல்லாம் எதற்காக? இரண்டு காரணங்களை சொல்ல முடியும்.

ஒன்று) அப்போது வீடுகளில் மின்சாரம் இல்லை. நகமோ அல்லது தலை முடியோ உணவோடு கலந்தால் தெரியாது. நகம் கலந்த உணவு விஷமாகக் கூட இருக்கலாம்.

இரண்டு) விஷ ஜந்துக்கள் வாசற்படியைத் தாண்டி உள்ளே வர வாய்ப்புகள் குறைவு. வாசற்படியில் உட்காரும் பட்சத்தில் அவை நம்மைத் தீண்டும் வாய்ப்புகள் அதிகம் .

சாணி மொழுவுதல்

மாட்டு சாணத்தை கரைத்து வாசற்படிக்குத் தெளிக்கும் வழக்கம் நோய் தடுப்பை உறுதி செய்கிறது.

கண் திருஷ்டி நீங்க எலுமிச்சை பழம்

இன்றும் பெரும்பாலான கடை வாசல்களில், எலுமிச்சை பழமும் ஏழு சிகப்பு மிளகாயும் கண் திருஷ்டி நீங்கத் தொங்க விடப் பட்டிருப்பதை காணலாம். அதைப் பார்ப்பதே கூடத் தவறென்று சொல்லக் கேள்வி பட்டிருப்பீர்கள்.

எலுமிச்சை மற்றும் சிகப்பு மிளகாயை, பருத்தி நூலில் கட்டி தொங்கவிடும் பட்சத்தில், கடைகளுக்கு அழையா விருந்தாளிகளாக வரும் பூச்சிகளை தடுக்கலாம். இந்த முறை பூச்சிக்கொல்லிகள் அறிமுகம் செய்யப்படாத காலங்களில், சிறந்த பூச்சிக்கொல்லியாக  செயல்பட்டு வந்தது.

புனித நதிகளில் சில்லறை காசுகளை விட்டெறிவது

புனித நதிகளில் சில்லறை காசு வீசும் வழக்கம் நம்மிடையே நெடுங்காலமாக இருந்து வருகிறது.

அப்படிச் செய்யும் பட்சத்தில் செல்வத்திற்கான கடவுள் லட்சுமி உங்களைத் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.

முன் காசுகள் செப்பு மூலம் செய்யப்பட்டன. செப்புக்குத் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாவை கொள்ளும் திறன் உண்டு. நதிகளே அன்று தண்ணீருக்கான ஆதாரமாக இருந்து வந்தது. அதன் சுத்தத்தை பேணும் வகையில் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

குளித்தீர்களா இல்லையா?

துக்கத்திற்குச் சென்று வருபவர்கள் கட்டாயம் குளித்த பிறகே வீட்டினுள் அனுமதிக்கப் படுவார்கள். இதன் பின்னிருக்கும் அறிவியல் மிக எளிமையானது. நோய் தடுப்பு மருந்துகள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை, பல உயிர்கள் கொத்து கொத்தாகத் தொற்றுநோய் காரணமாக பலியாகிக் கொண்டிருந்தன. இதன் காரணமாக தொற்றுநம்மிடையேயும் பரவி விடக்கூடாது என்பதற்காக, மரண வீடுகளுக்குச் சென்று வந்ததும் கட்டாயம் குளிக்க வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டது.

கிரகணத்தின் போது வெளியே செல்லாதீர்கள்

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் கட்டாயம் வெளியே செல்லக்கூடாது என்பது நம்பிக்கை. அறிவியல் ரீதியாக அது உண்மையும் கூட. சூரிய கிரகணத்தின் போது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் வெளியாகும். இது கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த முறை.சூரிய கிரகணத்தை வெறும் கண்ணில் பார்த்தால் பார்வை பறிபோகும் அபாயமும் உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வடக்க தலையை வெச்சு படுக்காதீங்க

வடக்கு திசையில் காந்த கதிர்கள் அதிகம். வடக்கில் தலை வைத்துப் படுக்கும் போது, காந்த கதிர்களின் தாக்கத்தை நாம் நேரடியாகப் பெற்று கொள்கிறோம். இதனால் ரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பல சிக்கல்கள் ஏற்படலாம். இந்தக் காரணத்தால் தான் மரணமடைந்தவர்களை வடக்கு நோக்கிப் படுக்க வைக்கும் பழக்கம் வந்தது. வடக்கில் தலை வைத்துப் படுப்பவர்கள், மரணத்தை அழைப்பவர்கள் என்ற நம்பிக்கையும் உருவாக்கப்பட்டது.

ஆடியில சேர விட்டா அவ்வளவுதான்

மிகச் சமீபத்தில் திருமணம் முடித்தவர்கள் என்றாலும், ஆடி மாதம் வந்துவிட்டால் இணையைப் பிரித்து வைப்பார்கள். இதன் பின்னிருப்பது எளிமையான அறிவியல். அப்படிச் செய்யாவிட்டால் குழந்தை கோடை காலத்தில் பிறந்து அவதியுறும்.

பகல்ல புளிய மரத்துக்கிட்ட போனா பேய் புடிச்சிக்கும்

பலருக்கும் தெரிந்த அறிவியல் உண்மை. பகலில் மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும்.

அரிசிமாவு கோலம்

அரிசிமாவு பயன்படுத்தி வாசலில் வரையப்படும் கோலம் அழகுக்கு மட்டுமல்ல எறும்பு உள்ளிட்ட ஜீவ ராசிகளுக்குமான உணவு.

வசம்பு வளையல்

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பு கோர்த்து வளையல் அணிவிப்பார்கள், அடிக்கடி அதை நுகரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கிராமங்களில் அதற்குப் பிள்ளை வளர்த்தி என்று பெயர்.

இப்படி நம்மைச் சுற்றி உலவி வரும் பல நம்பிக்கைகளுக்கு அறிவியல் காரணங்கள் உண்டு. பேய் ஓட்டுவது, பில்லி சூனியம் போன்ற சில மூட நம்பிக்கைகளுக்கு எந்தவொரு அடிப்படை அறிவியல்  காரணங்களும் இல்லை. முழுக்க முழுக்க பெண்களை அடிமையாக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கமும், அச்சுறுத்தி அதன் மூலம் அதிகாரத்தை அடைந்து விட வேண்டும் என்ற கீழான எண்ணத்தைத் தவிர .

உதாரணத்திற்கு சிலது மட்டும்.

ஒன்று) மாத சுழற்சி காலங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது

இரண்டு) உடன் கட்டை ஏறுதல்

மூன்று) கணவனை இழந்த பெண்களை நம்பிக்கை என்ற பெயரில் மறுமணம் செய்ய விடாமல் தடுப்பது. அப்படியே செய்து கொண்டாலும் ஏளனமாகப் பார்ப்பது.

நான்கு) கணவனை இழந்த பெண்களுக்கு சடங்கு என்ற பெயரால் உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்துவது.

என்ன அறிவியல் காரணங்கள் சொன்னாலும், இது போன்ற மூட நம்பிக்கைகளை வளரும், அறிவார்ந்த சமுதாயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.எந்த வித தயவு தாட்சணியமும் இன்றி இது போன்ற மூட நம்பிக்கைகளைப் புறந்தள்ள வளர் இளம் சமுதாயம் முன் வர வேண்டும்.

அடுத்த முறை பூனை குறுக்கே போனால் அதைப் பார்த்து புன்னகையுங்கள்.

Related Articles

பொன்னீலனின் பொட்டல் கதைகள் ஒரு பார்வை!... சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் கதை தொகுப்பு தான் " பொட்டல் கதைகள் " புத்தகம்.ஆதிகாலத்து உரல்,மாற்றம், இஞ்சியும் சுக்...
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை ... இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டி...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...
Copycat Movies Tamil – காப்பி அடிக... கதை திருட்டு விவகாரத்தை சர்கார் படம் தொடங்கி வைக்க அதை தொடர்ந்து 96 படம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் மன உளைச்சல் தாங்காமல் திரைப்பட எ...

Be the first to comment on "பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாருங்க"

Leave a comment

Your email address will not be published.


*