கிராமப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் கட்டும் அரசு

rhouse

வீடு என்பது ஒரு சாமானியனின் வாழ்நாள் கனவு. ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் உழைத்து, தங்கள் அந்திம காலத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடியேறுகின்றனர். ஆனால் அதை அனுபவிப்பதற்கு முன்பாகவே ஆயுள் முடிந்துவிடுகிறது.இதை கவனத்தில் கொண்ட இந்திய அரசு கிராமப்புற ஏழை மக்களுக்காக வீடு கட்டித்தர முன்வந்துள்ளது.

ஒரு கோடி வீடுகள்

டிசம்பர் 2018 வாக்கில் வீடில்லா கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டித்தரும் திட்டத்தைக் கிராமப்புற முன்னேற்ற அமைச்சகம் செயல்படுத்திவருகிறது. தேசிய ஜனநாயக அரசாங்கத்தின் மார்ச் 2019 என்ற இலக்குக்கு மூன்று மாதங்கள் முன்னராகவே ஒரு கோடி வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மார்ச் 2018 வாக்கில் ஐம்பது லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும், கூடுதலாக பத்து லட்சம் வீடுகள் தற்போது கட்டுமான பணிகளில் இருப்பதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைப் பார்க்கும்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட டிசம்பர் 2018 என்ற இலக்குக்குள் அனைத்து வீடுகளையும் கட்டி முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிய அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டும், கிராம சபைகளின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டும் ஐம்பது லட்சத்து அறுபதாயிரம் பயனாளிகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது

பயனாளிகளை அடையாளம் காண்பதில் தொடங்கி, கட்டுமான பணிகளின் பல்வேறு நிலைகளைக் கண்காணித்து வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்படும் வரை உள்ள முழுமையான சுழற்சி அனைத்தும் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் கழிவறை, குடிநீர் வசதி, மின்சார இணைப்பு மற்றும் எரிவாயு இணைப்பு என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் என்றும் கிராமப்புற முன்னேற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கடந்த வருடம் நவம்பர் 20 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிவிக்கும் போதே உறுதிப்பட தெரிவித்துள்ளது.

இலக்கை அடைய மாநில அரசாங்கங்களோடு கூட்டு

மத்திய கிராமப்புற முன்னேற்ற அமைச்சகம் பயன் பெறவிருக்கும் ஒவ்வொரு மாநில அரசுடனும் கைகோர்த்து வீடுகள் கட்டி முடிப்பதற்கான மாதாந்திர இலக்கை நிர்ணயம் செய்கிறது.

31 டிசம்பர் 2017 வாக்கில் பத்து லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளும், 31  ஜனவரி 2018 வாக்கில் இருபது லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளும், 28 பிப்ரவரி 2018 வாக்கில் முப்பது லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளும், 31 மார்ச் 2018 வாக்கில் ஐம்பது லட்சத்துப் பத்தாயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் என்று கிராமப்புற முன்னேற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கங்கள் இந்தத் திட்டத்திற்கு நல்ல விதத்தில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், எனினும் அச்சாம், பிஹார் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் மழையின் காரணமாகவும் புயலின் காரணமாகவும் இந்தத் திட்டம் சற்று தேக்க நிலையில் இருப்பதாகக் கிராமப்புற முன்னேற்ற அமைச்சகத்தின் சார்பில் பேசிய அதிகாரி தெரிவித்தார்.

சட்டிஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளதாக  மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடென்னும் பெருங்கனவை ஆரோக்கியமாக இருக்கும்போதே அனுபவிக்கும் கொடுப்பினையை ஒவ்வொரு சாமானியனும் பெற்றிட வேண்டும்.

Related Articles

11 உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் 100 வது ... தாங்கள் வாழும் நிலப்பகுதியில் தங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும், காற்றை மாசுபடுத்தும் ஒரு ஆலையை மூடச்சொல்லிக் கேட்டார்கள். தூத்துக்குடியில் போராடிய மக...
பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயா? நூறு... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் ரூபாய் பரிசுடன் வருடந் தோறும் வழங்கப் படும் வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங...
கவியரசு கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யமான சில... முத்தையா என்ற இயற்பெயருடைய கண்ணதாசன் பத்திரிக்கைகளிலும் தமிழ்ப்படங்களிலும் எழுதிய இனிய தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல் இருக்கும...
கவிஞர் நரன்! – தமிழ் இலக்கிய உலகிற... "அன்பின் அன்பர்களே"இப்படித்தான் எந்த மேடையிலும் தனது உரையைத் தொடங்குவார் நரன்.  அன்பின் அன்பர்களே என்று உரையைத் தொடங்கும் நபர்கள் வேறு யாராவது இரு...

Be the first to comment on "கிராமப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் கட்டும் அரசு"

Leave a comment

Your email address will not be published.


*