தமிழ் சினிமாக்களில் நாம் அடிக்கடி காணும் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. தலைவலி என்று சென்ற நோயாளிக்குத் தவறுதலாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். கிட்டத்தட்ட அதற்கு நிகரான ஒரு சம்பவம் டெல்லியில் நடந்தேறி இருக்கிறது.
தலைக்குப் பதிலாக காலில் அறுவை சிகிச்சை
தலையில் ஏற்படும் காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் டெல்லி அரசு மருத்துவமனையில் மூத்த மருத்துவர் ஒருவர் தலையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்குக் காலில் துளையிட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுஷ்ருதா ட்ராமா செண்டர் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மூத்த மருத்துவர் ஒருவர் இந்த அலட்சியமான காரியத்தில் ஈடுபட்டுள்ளார். காலில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி என நினைத்து தலையில் அடிபட்டு வந்த நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க முயற்சி நடைபெற்று இருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒரு விபத்தின் காரணமாக தலையில் அடிபட்டு வந்த நோயாளிக்கு வலது காலில் துளையிட்டுத் தவறுதலாக சிகிச்சை அளித்திருக்கிறார் மருத்துவர்.
‘மயக்க மருந்து தரப்பட்டிருந்த காரணத்தால் நோயாளிக்குக் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடைபெற்ற முயற்சி பற்றி எதுவும் தெரியாமல் போய்விட்டது’ என்று மருத்துவ கண்காணிப்பாளர் அஜய் பாஹ் தெரிவித்துள்ளார். மருத்துவரின் அலட்சியம் தெரிய வந்த உடனேயே, நோயாளிக்கான சரியான சிகிச்சை நடைபெற்று முடிந்துவிட்டது.
‘போதுமான கண்காணிப்பு இல்லாமல் தவறு செய்த அந்த மருத்துவர் இனி எந்த அறுவை சிகிச்சையும் செய்ய மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்து இருக்கிறது’ என்று அஜய் பாஹ் தெரிவித்து இருக்கிறார்.
மிகச் சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவர், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த முப்பது வயது பெண்ணுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கிய சம்பவம் சர்ச்சைக்கு உள்ளானது.
இனி மருத்துவமனைக்குச் செல்லும் போது, என்ன நோய்க்காகச் சிகிச்சை பெற வந்திருக்கிறோம் என்பதை நெற்றியில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.
Be the first to comment on "தலையில் காயம்பட்டு வந்தவருக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்த டெல்லி மருத்துவர்"