தயாரிப்பு: பென் ஸ்டுடியோஸ் & ஸ்டோன் பெஞ்ச்
இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: திரு
எடிட்டிங்: விவேக் ஹர்சன்
படம் எப்படி?
மிக மிக எளிமையான கதை, வலுவான திரைக்கதை, பக்காவான பின்னணி இசை, அட்டகாசமான ஒளிப்பதிவு, கரக்ட்டான கட்டிங் போட்ட எடிட்டிங், நடிக்கத் தெரிந்த நடிகர்கள். இவை போதும் கமியான பட்ஜட்டில் ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.
கொடைக்கானல் பகுதியில் ஒரே நாளில் நடக்கும் ஒரு திரில்லர் கதை. அந்தப் பகுதியில் உள்ள கார்ப்பரேட் எர்த் எனும் தொழிற்சாலை உண்டாக்கிய பாதிப்பால் சிலர் பார்வைத் திறன் குறைபாடு, செவித் திறன் குறைபாடு, பேச்சுத் திறன் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குள் நடக்கிற திகில் சம்பவங்கள் தான் மொத்த படம். இந்தக் கதைக்கு வசனம் தேவை இல்லை தானே.
படத்தின் முதல் பாதி பல படங்களின் சாயல்களுடன் இருந்தாலும் சர்ரென்று செல்கிறது. இடை வேளையில் இருந்து தான் பிரபு தேவா வருகிறார். இந்த இடைவேளை வரும் வரை ஒன்றிரண்டு பார்வையாளர்கள் உச்சு கொட்டவும் செய்தார். என்னடா இது பேய் படமா இல்ல பேபே படமா என்று கமெண்டுகள் வரவும் செய்தது. ஆனால் அவர் வந்த பிறகு காட்சிகள் படு வேகமாகவும் படு திகிலாகவும் செல்கிறது. கடைசி இருபது நிமிடங்களில் விவேக் ஹர்சனின் எடிட்டிங் என்ன கதை என்பதை தெளிவாக காட்டுகிறது. திருவின் ஒளிப்பதிவு அழகு. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பக்கா.
இந்தப் படத்திற்கும் தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம். தமிழகத்தில் எண்ணூர் காமராஜர் துறை முகம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஓஎன்ஜிசியின் மீத்தேன் / ஹைட்ரோகார்பன் திட்டம் என்று பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான மக்கள் போராட்டம் பல நாட்களாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பல நோய்கள் வருகிறது என்ற காரணங்கள் முன் வைக்கப் பட்டது. அப்படிபட்ட சூழலில் இருக்கும் தமிழர்களுடன் இந்தப் படம் பெரிய அளவில் கனெக்ட் ஆகும்.
டுவிட்டரில் எதிர்ப்பு?
கடந்த ஏப்ரல் பதிமூன்றாம் தேதியே இந்தப் படம் ரிலீசாக வேண்டியது. ஆனால் தமிழ் சினிமா துறையில் நடந்த ஸ்ட்ரைக்கால் ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை கார்த்திக் சுப்புராஜ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்ய அதைத் தொடர்ந்து மெர்க்குரி படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கிரிக்கெட் வேண்டாம் என்ற சினிமா துறையினர் தற்போது சினிமா படங்களை வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்விகள் எழுப்பி #Nocauverynocinema என்ற ஹாஸ்டாக்கை டிரெண்டிங் ஆக்கினர். ஆனால் இந்தப் படம் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலு சேர்க்கும் விதமாகவும் இதுவரை போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் இனிமேல் கலந்து கொள்ள வைக்கும் விதமாகவும் தான் உள்ளது. ஆதலால் ஒரு முறையேனும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்துவிடுங்கள்.
Be the first to comment on "தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு தகுந்த படம் “மெர்க்குரி”"