இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! – இவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டே இருக்கிறது?

About Director Lokesh Kanagaraj

இளமையும் சினிமாவிற்குள் நுழைந்த கதையும்: 

மார்ச் 11 1984 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கிணத்துக்கடவு என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். ரேணிகுண்டாவில் சில காலம்  பள்ளிப்படிப்பு படித்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து சினிமா துறையில் சாதிக்க விரும்பியதால் விஸ்காம் எடுத்து படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு அவர் எதிர்பார்த்த கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. அதனால் பிஎஸ்ஜி கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து முடித்தார். கணித பாடம் படிக்க விருப்பமில்லை என்பதால் ஃபேஷன் டெக்னாலஜி படித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிறகு அவர் எதிர்பாராத வங்கியில் வேலை கிடைக்க, தன்னுடைய மாத வருமானத்திற்காக அவர் கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் வங்கி ஊழியராக பணிபுரிந்து இருக்கிறார். அந்த சமயத்தில் கலைஞர் டிவியில் நாளை இயக்குனர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால் வேலையை விடுவதா? இல்லை முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் இருந்தார். நான்காம் ஆண்டு முடிவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் குறும்படப் போட்டி அறிவித்து இருந்தார்கள். அந்த குறும்படப் போட்டியில் லோகேஷ் கனகராஜை கலந்து கொள்ள சொல்லி அவருடைய நண்பர்கள் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த காசை கொடுத்து படம் எடுக்கச் சொல்லி லோகேஷ் கனகராஜ்க்கு முழு ஒத்துழைப்பும் சுதந்திரமும் கொடுத்தனர். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நண்பர்களை வைத்து சின்னதாக ஒரு குறும்படம் எடுத்து அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினார். அந்த குறும்பட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கார்த்திக் சுப்புராஜ் அந்த குறும்படத்தை பார்த்து விட்டு பாராட்டி விருது தந்தார். அத்துடன் உங்களுக்கு நல்ல  கதை அறிவு இருக்கிறது, தொடர்ந்து நீங்கள் இந்தப் பாதையில் பயணியுங்கள் என்று சொன்ன பிறகு லோகேஷ் கனகராஜ் இனி சினிமாதான் என்று முடிவெடுத்தார். கார்த்திக் சுப்புராஜின் அந்த வார்த்தையைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் “ஸ்டோன் பென்ச்” என்கிற குறும்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக களம் என்கிற ஒரு குறும்படம் இயக்கி இருந்தார். “களம்” படம் அவியல் என்கிற குறும்பட தொகுப்பு படங்களுக்குள் ஒன்றாகத் தேர்ந்து எடுக்கப்பட்டது.  அந்த படத்தை வைத்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர்களை நோக்கிச் செல்ல பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவருடைய படைப்பையும் அவரைப் பற்றிய தகவல்களையும் நன்கு விசாரித்துவிட்டு, யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத பொழுதும் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் திறமை மீது நம்பிக்கை வைத்து மாநகரம் படத்திற்கு  ஒப்புதல் அளித்தார். 

கமல் வெறியன்: 

சிறுவயதில் டெக்கை வாடகைக்கு எடுத்து படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய சினிமா ஆர்வத்தை பார்த்து அவருடைய மாமா டெக்கை சொந்தமாகவே வாங்கி கொடுத்து விட்டார். பள்ளி விடுமுறை நாட்களில் அந்த டெக்கில் கமல்ஹாசன் நடித்த பட சிடிக்களை போட்டு போட்டு அந்த சிடிக்கள் தேய்ந்து போகும் அளவுக்கு பார்த்து  தீர்த்தார். அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் சத்யா படத்தை வெறித்தனமாக பார்த்துள்ளார். 

அவர் சினிமாவுக்கு வருவதற்கு கமல் சார் தான் காரணம். சிறு வயது முதலே கமல் சார் நடித்த,  அவர் சார்ந்த படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. சினிமாவிற்கு வருவதற்கு முன் கமலிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டு பணியாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அது நடைபெறாமல் போனது. அதன் காரணமாகவே சுயமாக குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படத்தை எடுத்து கமல்ஹாசனிடம் பாராட்டு வாங்கிய “குரங்கு பொம்மை” எனும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் நித்திலனிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ் ஆசைப்பட்டார். ஆனால் அதுவும் நடைபெறாமல் போனது. “மாநகரம்” படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது பிகைன்வுட்ஸ் கோல்ட் மெடல் தந்து சிறப்பித்தது. தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு நம்பிக்கை இயக்குனர் கிடைத்திருக்கிறார்.  அறிமுக இயக்குனர் என நம்பவே முடியாத அளவுக்கு முழுக்க முழுக்க  அசத்தல் விஷுவலாக கதை சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்!  என்று அவரைப் பாராட்டி அவருடைய முதல் படத்திற்கு 50 மதிப்பெண் கொடுத்து சிறப்பித்தது ஆனந்த விகடன்.

“மாநகரம்” எனும் வெற்றி படத்தை தந்த பிறகு அவருடைய நண்பர் ஒருவர், சர்ப்ரைசாக கமல்ஹாசன் 60 அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது கமல்ஹாசனை நேரில் பார்த்த லோகேஷ்க்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. பத்து பதினைந்து நிமிடங்கள் கமல்ஹாசனுடன் இருந்தபோதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் நடுக்கத்துடனே அந்த தருணத்தை அனுபவித்திருக்கிறார். அதே லோகேஷ் கனகராஜ், விருமாண்டி பட சண்டியரை மனதில் வைத்துக் கொண்டு…  கைதி என்ற திரைப்படத்தின் கதையை எழுதினார். அந்த படத்தில் ஹீரோவாக மன்சூர் அலி கானை நடிக்க வைக்க முயற்சி செய்ய,  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் அவர்களின் பரிந்துரையின் பேரில் நடிகர் கார்த்தி இந்த படத்திற்குள் உள்ளே வந்தார். “கைதி” படம் மாபெரும் வெற்றி அடைய அந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ்க்கு பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல், விகடன் விருது, ஜீ தமிழ் விருது போன்ற நிறைய விருதுகள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக ஜீ தமிழ் விருதை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தீவிர முன்னோடியான கமலஹாசனின் கைகளிலிருந்து வாங்கினார். சார் உங்களை ஒரு தடவை கட்டி பிடித்துக்கட்டுமா என்று கமலிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டார் லோகேஷ் கனகராஜ். 

மாஸ்டர் படத்தால் மாற்றம்: 

மாநகரம், கைதி இரண்டு படங்களிலுமே பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரே உடைதான். இந்த இரண்டு படங்களிலும் ஒரு பாடல்கள் கூட இல்லை. இரண்டு படங்களுமே பெரும்பாலான நேரம் இரவுகளில்  எடுக்கப்பட்டிருக்கும். “கைதி” படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்றால், இந்தப் படத்தின் மூலம் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நாடகக் கலைஞரான மரிய ஜார்ஜ் என்கிற நடிகர் இந்த படத்தில் நடித்த கான்ஸ்டபிள் கேரக்டர்க்காக முதன்முறையாக மேடை ஏறி ஜீ தமிழ் விருது, விகடன் விருது போன்ற பெரிய அங்கீகாரங்களைப் பெற்றார். “கைதி” படத்தின் ஷூட்டிங் பாதி நிலையை அடைந்து கொண்டிருக்கும் போதே, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயிடம் மாஸ்டர் படத்தின் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டார். கைதி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மாஸ்டர் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் தயார் நிலையில் இருந்தன. “பிகில்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு ஓரமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அமர்ந்திருந்தார். அப்போதுகூட  விஜயின் அடுத்த பட இயக்குனர் அவர்தான் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு, மற்ற இயக்குனர்களை போல ஸ்கிரிப்ட்டை பேப்பர் வடிவில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு எடுத்துச் செல்லும் பழக்கம் இல்லை. மனதிற்குள்ளேயே ஒரு முழு படத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த பேப்பரும் இல்லாமல் மனதிற்குள் இருப்பதை அப்படியே நடிகர்களுக்கு புரிய வைப்பார்.  ஆனால் லோகேஷ் கனகராஜின் தனித்தன்மைகள் என்று கூறப்படும்… பாடல் இல்லாமல் படம் எடுப்பது, நாயகி இல்லாமல் படம் எடுப்பது, ஸ்கிரிப்ட் புக்கு இல்லாமல் படம் எடுப்பது போன்ற அனைத்து தன்மைகளும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வந்த பொழுது முற்றிலுமாக மாறிவிட்டது. வாத்தி என்று தலைப்பிடப்பட்ட படத்தின் பெயரை, படத்தின் ஆடியோ ரிலீஸ்க்கு சில நாட்கள் முன்பு மாஸ்டர் என மாற்றினார்.  ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் பெரிய ஹிட் அடிக்க உலகமே மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கொரோனா வைரஸ் வந்துவிட மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது. இந்த படம் மற்ற படங்களைப் போல ஓடிடியில் ரிலீசாகுமா சினிமா தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டே வருகின்றன. 

இப்படி மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் கனகராஜை பல ஊடக நிருபர்களும் தொடர்ந்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்க, திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அறிவிப்பு அவரிடம் இருந்து வந்தது. கமல்ஹாசனின் 232 வது படமான எவனென்று நினைத்தாய் என்ற படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ளது என்று தெரிந்ததும் மொத்த தமிழ் சினிமாவும் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் உறைந்து போனது. இந்த லோகேஷ் கனகராஜ்க்கு எங்கேயோ மச்சம் இருக்கு பா என்று அவர்மீது பொறாமை பட்டனர் ரசிகர்கள். “ஆடுகளம்” படத்தில் பேட்டைக்காரன், தனுஷைப் பார்த்து, “இவன் அதிர்ஷ்டக்கார பயபுள்ளடா… தொடர்ந்து அதிர்ஷ்டம் அடிச்சுக்கிட்டே இருக்கு…” என்று சொல்வார். அந்த வசனத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்குப் பொருத்தி இவன் உண்மையிலேயே லக்கி டா என்று ரசிகர்கள் ஒரு பக்கம் சொல்ல, அவருடைய உழைப்பை பற்றி சிலரும் விளக்கமளித்தனர். மாநகரம் படத்தில் நடிகர் ஸ்ரீ திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சென்னை மாநகரத்திற்கு  வேலை விஷயமாக வருவார். அப்போது அவர் சென்னையில் பல சங்கடங்களை அனுபவிப்பார். சென்னையில் எந்த மூலையில் எந்த இடம் இருக்கிறது அவன் உதவி செய்வான், எவன் ஏமாற்றுவான் என்று எதுவுமே அறியாமல்  சென்னைக்கு வந்து ஒரு வங்கிப் பணியில் சேர்ந்து சினிமா தெருக்கள் எப்படி நுழைவது டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனராக போவதா அல்லது யாரிடமாவது உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டு இயக்குனராக மாறுவதால் என்றெல்லாம் குழம்பிப்போய் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி,  வாயைத் திறந்தாலே சினிமா அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது என்கிற நிலைமைக்கு லோகேஷ் கனகராஜ் வந்துவிட, லோகேஷ் கனகராஜின் அந்த பரிதவிப்புகளைப் பார்த்து மனம் பொறுக்க முடியாத நண்பர்கள், அவரை சினிமா துறைக்குள் நுழைதுது விட்டனர். உழைப்பும் அவர் அடைந்த மன உளைச்சலும் தான் அவரை இந்த உயரத்துக்கு தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. உழைப்பு… உழைப்பு… உழைப்பு… இது தான் லோகேஷ் கனகராஜ் வளர்ச்சிக்கு முதல் காரணம். அதிர்ஷ்டம் என்பது இரண்டாவது காரணம் மட்டுமே.

Related Articles

கைதிகளுக்காக வானொலி நிலையம் அமைத்துத் தந... தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்து சிறை வாழ்வை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்த அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் நாடு முழுவதும் பல்வே...
2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற... ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய...
அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல்... அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு ச...
திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மா... பிரதமரின் முப்பத்து எட்டாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் வரை துஷார் என்ற எட்டுவயது மாணவனைப் பற்றி நாட்டில் யாருக்கும் தெரியாது. அந்நிகழ்ச்சிக...

Be the first to comment on "இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! – இவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டே இருக்கிறது?"

Leave a comment

Your email address will not be published.


*