ராமேஸ்வரமும் தமிழ் சினிமாவும்! – தமிழ் சினிமாவின் மிக உன்னதமான படைப்பாளிகள் ராமேஸ்வரம் மண்ணை நேசிப்பது ஏன்?

Rameswaram and Tamil Cinema!

ராமேஸ்வரம் மண்ணுக்கு என்று தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றின் தனிச் சிறப்புகள் என்று பட்டியலிட்டால் கிட்டத்தட்ட ஒரு புத்தகமே எழுதலாம். அப்படிப்பட்ட ராமேஸ்வரம் மண்ணில் தான் என்னுடைய முதல் படைப்பு இருக்க வேண்டும் என்று தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளிகள் உறுதியான முடிவுடன் தங்களின் முதல் படத்தை இராமேஸ்வரத்திலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட படைப்பாளிகள் யார் யார் அவர்கள் எந்தெந்த படைப்புகளில் என்னென்ன மாதிரியான வேலைகளை செய்திருக்கிறார்கள் என்பதை பற்றிப் பார்ப்போம். 

 இயக்குநர் ஜீவா சங்கர்: 

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான ஜீவா அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜீவா சங்கர்.  அவர் தன் படத்தை முதலில் ராமேஸ்வரம் மண்ணில் இருந்து தான் தொடங்கினார்.  அவருடைய முதல் படமான நான் படத்தின் கதை ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) தான் நடக்கிறது. ஜெண்டில்மேன், காதலன், ஆசை, இந்தியன், உல்லாசம், வாலி, குஷி,  சினேகிதியே, ரன், சண்டக்கோழி,  சச்சின், உள்ளம் கேட்குமே,  உன்னாலே உன்னாலே, தாம்தூம்  போன்ற புகழ் பெற்ற தமிழ் திரைப் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜீவா. 

ஆர்யா என்னும் அற்புதமான நடிகரை அறிமுகப்படுத்தியவர். 12B, ரன் (ஹிந்தி), உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களை இயக்கினார்.  2001 – 2008 இந்த ஆண்டுகளுக்குள் இவர் எடுத்த படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இப்படிப்பட்ட ஜீவாவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜீவா சங்கர். தன் குருநாதர் மேல் உள்ள பற்று காரணமாக சங்கர் என்னும் தன் பெயருக்கு முன்னால் ஜீவா என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். ஆர்யாவை ஜீவா அறிமுகப்படுத்த ஆர்யாவின் தம்பியை ஜீவாவின் சீடரான ஜீவா சங்கர் அமரகாவியம் படத்தில் அறிமுகப்படுத்தினார்.  ஆர்யாவின் தம்பியை நான் அறிமுகப்படுத்தலாம் என்று இருந்தேன் ஆனால் ஜீவா சங்கர் அறிமுகப் படுத்தி விட்டார் என்று இயக்குனர் பாலாவே கூறியிருக்கிறார்.  அந்த அளவுக்கு மிக முக்கியமான இயக்குனர் ஜீவா சங்கர். இவ்வளவு அனுபவமும் தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படைப்புகளைத் தந்த பெருமையும் கொண்ட ஜீவா சங்கர் தன்னுடைய முதல் படத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்குகிறார் என்றால் அதற்கு என்ன காரணம்? 

இயக்குனர் தினேஷ் செல்வராஜ்: 

எங்கம்மா சபதம், அன்னக்கிளி, கவிக்குயில்,  கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள்,  புதுமைப்பெண், இதய கோவில்,  உதயகீதம், முதல் மரியாதை,  கீதாஞ்சலி, பாடு நிலவே,  கொடி பறக்குது, புதுமனிதன், சின்ன கவுண்டர்,  கேப்டன் மகள்,  சக்கரைதேவன்,  கோயில் காளை, ராசையா, அந்தி மந்தாரை,  அழகர்சாமி, அலைபாயுதே, பொட்டு அம்மன், ஈரநிலம், கடலோர கவிதைகள் போன்ற படங்களின் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆர்.செல்வராஜ். அகல் விளக்கு,  பகவதிபுரம் ரயில்வே கேட், எங்கிருந்தாலும் வாழ்க, சிவப்பு நிறத்தில் சின்னப்பூ  போன்ற படங்களையும் ஆர் செல்வராஜ் இயக்கியுள்ளார். 

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி இவருடைய கதை உருவாக்கத்தில் உருவானது  என்பதும் விஜயகாந்த் முதல் முறையாக ஹீரோவாக நடித்த படம் இவருடைய இயக்கத்தில் வெளியான அகல்விளக்கு என்பதும் இவருடைய கூடுதல் சிறப்பு. 

இப்படிப்பட்ட படைப்பாளியின் மகன்தான் தினேஷ் செல்வராஜ்.  இவர் மணிரத்தினம் அவர்களிடம் டும் டும் டும் அலைபாயுதே கன்னத்தில் முத்தமிட்டாள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  கன்னத்தில் முத்தமிட்டால் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அப்போது ராமேஸ்வரம் முழுக்க சுற்றி வந்த தினேஷ் செல்வராஜ்க்கு ராமேஸ்வரம் ரொம்ப பிடித்து போய் விட்டது.  அந்தக் காலத்திலேயே ராமேஸ்வரத்தை கதைக்களமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி விட்டார். அந்த கதைதான் துப்பாக்கி முனை. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு பாம்பன் பாலம் என்று பெயர் வைத்திருந்தார்.  பிறகு இது கமர்சியல் சினிமா என்பதால் துப்பாக்கி முனை என்று மாற்றியுள்ளார்.  இதற்கு முன்னர் காகித கப்பல், நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல போன்ற சிறு படங்களை இயக்கியிருக்கிறார்.  இருந்தாலும் ராமேஸ்வரத்தை கதைக்களமாக வைத்து இயக்கப்பட்ட படம் தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இப்போது அவரது படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று விட்டது. இவ்வளவு குடும்ப பெருமையும் பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவமும் கொண்ட ஒரு இயக்குனர் தன்னுடைய முதல் படம் ராமேஸ்வரத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று நினைப்பதற்கு என்ன காரணம்? 

இது மட்டுமன்றி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக கருதப்படும் இயக்குனர் பாலா,  ஒரு இயக்குனரின் வெற்றி பயணத்தை தீர்மானிப்பதில் அவருடைய இரண்டாம் படம்தான் என்று இந்த சினிமா உலகம் சொன்ன போது தன்னுடைய இரண்டாவது படத்தில் “நந்தா” ராமேஸ்வரம் மக்கள் பற்றிய பிரச்சினையை எடுத்து பேசினார் இயக்குநர் பாலா. அதுமட்டுமன்றி எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ சினிமாவை விட்டு போய்விடலாம் என்று தோன்றுகிறதோ அல்லது நல்ல கதை எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ? அப்போதெல்லாம் இயக்குனர் பாலா ராமேஸ்வரம் செல்வதாக ஒரு தகவல் வந்தது. ஆனால் அந்த தகவல் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை. இது மட்டுமன்றி தன்னுடைய இந்தப் படைப்பு சீக்கிரம் வெளிவந்து விட்டால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று இயக்குனர் ராம் அடிக்கடி கேட்டுக் கொண்ட படம் தரமணி. அப்படிப்பட்ட தரமணி படத்தில்  படம் தொடங்கியது முதல் சில காட்சிகளில் ராமேஸ்வரம் மக்கள்,  கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் தங்கள் வீட்டு ஆண்களை அந்தப் பக்கம் இருக்கும் இலங்கை நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டுத் தள்ளி விடக் கூடாது என்று மண்டி போட்டு கடவுளை வேண்டிக் கொண்டு இருப்பார்கள். அதேப் போல இயக்குனர் சீனு ராமசாமி  தன்னுடைய கனவு படமான நீர்ப்பறவை என்கிற படத்தை எடுத்திருந்தார். அந்த படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறி நல்ல மீனவன் என்கிற நிலைக்கு வரும் பொழுது நாயகனை இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். அப்போது  அவருடைய மனைவி அந்த நாயகனின் பிணத்தை மண்ணிற்குள் போட்டு புதைத்து வைக்க, அந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரியவர, போலீஸ் விசாரணைக்கு போய் கடைசியில் நீதிமன்றக் கூண்டில் நிற்கிறார். அப்போது ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்க, நான் என்ன தான் இந்த பிரச்சனை குறித்துப் பேசினாலும், போராடினாலும் இது தீர்வுக்கு வந்து விடுமா என்று நீதிபதியைப் பார்த்து கேட்பார். இந்த படம் சென்சார் போர்டில் பிரச்சினைக்கு உள்ளாகி ரிலீசாக தடுமாறியபோது இயக்குனர் சீனு ராமசாமி நடு ரோட்டில் உட்கார்ந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று போராடினார். 

இப்படி மிக ஆழமான படைப்பாளிகள் எல்லாம் ராமேஸ்வரத்தை இவ்வளவு நேசிப்பது ஏன்? இப்படி தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமான படைப்பாளிகள் ராமேஸ்வரத்தில் படம் பிடிப்பதையும் கதை எழுதுவதையும்  குறிக்கோளாக வைத்திருக்க தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான எழுத்தாளர் என்று கருதப்படும் எழுத்தாளர் நரன் ராமேஸ்வரத்தை பற்றி எழுதுவதில் தான் மிக தீவிரமாக இருக்கிறார். அவர் தன்னுடைய ஒட்டுமொத்த உயிரையும் ஒன்று திரட்டி எழுதிக்கொண்டிருக்கும் ஏழு கடல் ஏழு மலை என்ற ஆனந்தவிகடன் தொடரில் முதல் சில அத்தியாயங்கள் ராமேஸ்வரத்தில் தான் பயணிக்கின்றன. இந்தியாவின் கடைசி ஊரான ராமேஸ்வரத்தில் இருக்கும் கடைசி  ஊரிலிருந்து கடைசி வீட்டில் இருந்து கடைசி மகன் இந்தியாவின் தலைமை பகுதிக்கு பயணிப்பது தான் அந்த தொடரின் மைய கதையாக இருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவின், தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான படைப்பாளிகள் எல்லோரும் இந்த ராமேஸ்வரத்தில் படம் எடுக்க வேண்டும் என்றும், ராமேஸ்வரம் மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதிலும் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். 

இதற்கெல்லாம் காரணம் என்ன என்று யோசித்தால் ராமேஸ்வரம் அவ்வளவு வலிகள் நிறைந்த ரத்தம்  பார்த்த மண்ணாக இருக்கிறது. ராமேஸ்வரம் கோயில் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு கோயிலாக இருக்கிறது. இந்த கோயிலுக்கு இந்தியாவிலிருந்து வெளிநாட்டிலிருந்து பலதரப்பட்ட மக்கள் நாள்தோறும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.  இப்படிப்பட்ட இந்தியாவின் மிக முக்கியமான ஊரில் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது மீனவர்களின் மீதான துப்பாக்கி குண்டுகள் பாய்ச்சல் தான். இது குறித்து எத்தனையோ வருடங்கள் எத்தனை பேர் எத்தனை விதமாக பேசிவிட்டார்கள் எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. இப்படி இந்துக்கள் மிகப்பெரிய அளவில் பயணிக்கக்கூடிய ராமேஸ்வரம் இருக்கும் மண்ணில் முஸ்லிம் மதத்தில் மீனவருக்கு மகனாகப் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் கடைக்கோடியில் இருந்து இந்தியாவின் முதல் குடிமகன் என்ற நிலைக்கு உயர்ந்தார். ராமேஸ்வரத்திலிருந்து பிறந்து வளர்ந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்கலாம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க முயற்சி செய்யாதது ஏன்? என்று ஒருபக்கம் அவர் மீது விமர்சனம் இருந்தாலும் அவர் மாதிரி உழைத்து  இந்திய தேசமே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவில் நாமலும் உயர வேண்டும் என்ற ஒரு எண்ணம் பிறக்கிறது. அதேபோல கடலுக்குள் இறங்கி மீன்பிடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் வலிகள் நிறைந்ததாக இருக்கிறது. 

அதுமட்டுமின்றி இப்போது ராமேஸ்வரத்தில் கட்டியிருக்கும் அப்துல் கலாம் நினைவு மண்டபத்திற்கு ஏராளமான மனிதர்கள் வந்து கடவுளை வணங்குவது போல் வணங்கிச் செல்கின்றனர்.  இப்படி ஒரு மனிதனை கடவுளாக வணங்குவதற்கு “மனிதம்” என்று கூட பெயர் சூட்டலாம். இப்படி ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து வெளி நாட்டு மக்களை பார்க்கலாம், இந்தியாவில் உள்ள இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என்று வெவ்வேறு மதங்களை சேர்ந்த பல மொழிகள் பேசும் பல நிறங்களில் உள்ள பல பொருளாதார நிலைகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பார்க்கலாம். இப்படி தீவிர பக்திப் பற்று நிறைந்த மனிதர்கள், தீவிர லட்சிய வெறி கொண்ட குறிக்கோளை நோக்கி வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், சக மனிதனை மனிதனாக நேசிக்கும் மனிதம் நிரம்பிய மனிதர்கள்,  காலங்காலமாக தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சிதைந்து கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த மனிதர்கள் என்று வெவ்வேறு நிலைகளுடன் கூடிய மனிதர்கள் இருக்கும் மண், படைப்பாளிகளுக்கு ஆகச்சிறந்த மண்ணாக இருக்கிறது. அதனால்தான் மிக உன்னதமான படைப்பாளிகள் அனைவரும் அடிக்கடி ராமேஸ்வரம் மண்ணை தொட்டு வருகின்றனர். குறிப்பு: புராண ரீதியான காரணங்களை இங்கு குறிப்பிடவில்லை, அது தேவையும் இல்லை

Related Articles

கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... அவ்வை சண்முகிஇயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்நடிகர்கள்: கமல்(அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர்), மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன்(முதலியார்), (பெரும்பாலான  க...
கணவர்கள் பார்க்க வேண்டிய படம்! – க... நடிகர் நடிகைகள் : பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன், அன் ஷீட்டல்இயக்கம் : ஸ்ரீ செந்தில்இசை : விஷால் சந்திரசேகர்ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா ...
நெடுநல்வாடை தாத்தாவை எல்லோருக்கும் பிடிக... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் வரிசையில் நெடுநல்வாடை என்று விளம்பரங்கள் செய்துகொண்டது நெடுநல்வாடை படக்குழு. தினத்தந்தி உள்பட பல பத்திரிக்க...
எம்.எம். தீன் எழுதிய “யாசகம்”... "தாயிடம் பாசப் பிச்சை தந்தையிடம் அறிவுப் பிச்சை குருவிடம் ஞானப் பிச்சை மனைவியிடம் இச்சைப் பிச்சை... பிள்ளைகளிடம் உறவுப் பிச்சை முதலாளியிடம் வாழ்வுப் ப...

Be the first to comment on "ராமேஸ்வரமும் தமிழ் சினிமாவும்! – தமிழ் சினிமாவின் மிக உன்னதமான படைப்பாளிகள் ராமேஸ்வரம் மண்ணை நேசிப்பது ஏன்?"

Leave a comment

Your email address will not be published.


*