செல்போன்களிடம் இருந்து குழந்தையை பாதுகாப்பது எப்படி?

Nomophobia (No mobile phobia) என்ற புது விதமான மன நோய்,  இப்போது உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்த மாதிரியான மனநோய் குறைபாடு உள்ள குழந்தைகளால் செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது. மது அருந்தவில்லை என்றால் ஒரு சிலரின் கைகால்கள் எல்லாம் எப்படி நடுங்க ஆரம்பித்து விடுகிறதோ அதே போல செல்போனை எடுத்து கேம் விளையாட வில்லை என்றால் இந்த குழந்தைகளின் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. இப்படிப்பட்ட “செல்போன்” குழந்தைகளின் வாழ்விற்குள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நுழைகிறது என்பதைப் பார்ப்போம். 

உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இந்த மூன்று அடிப்படை தேவைகளும் இப்போது செல்போன் வசம் வந்து விட்டது. உணவு சமைப்பது எப்படி, உணவை எந்த ஹோட்டலில் சாப்பிட்டால் நன்றாக இருக்கும், எந்த தளத்தில் உணவை ஆர்டர் செய்வது என்று மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு பற்றி தெரிந்துகொள்ள இன்று செல்போன் அவசியம் தேவைப்படுகிறது. அதே போல உடை தேர்வுக்கும் இன்று செல்போன் அவசியம் தேவைப்படுகிறது. எந்த மாதிரியான உடைகள் புதிது புதிதாக வந்துள்ளன, எந்த கடைகளில் உடை எடுக்கலாம் என்று தெரிந்து கொள்வதற்கும், புதிதாக தொடங்கியிருக்கும் ஜவுளிக்கடை வியாபாரத்திற்கும் இந்த செல்போன் மிக அவசியமாக தேவைப்படுகிறது. 

இந்த மாதிரியான இடத்தில் இந்த மாதிரியான வீடு வேண்டும் அங்கு வாடகை எவ்வளவு இருக்கும் அங்கு பேச்சுலர்களுக்கு என்ன மாதிரியான வசதிகள் இருக்கும் குடும்பங்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் இருக்கும் ஜாதிவெறி ஏதாவது இருக்கிறதா போன்ற பிரச்சனைகள் அத்தனையும் தெரிந்துகொள்ள இன்று செல்போன்களை தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.  இந்த முகவரி எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள கூகுள் மேப்பை பயன்படுத்துகிறோம், நாங்கள் இந்த இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டோம் என்று சொல்வதற்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஃபேஸ்புக் ஸ்டோரீஸ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் போன்ற பல இடங்களில் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க செல்போன் பயன்படுத்துகிறோம். இப்படி உணவு உடை இருப்பிடம் மூன்றுக்கும் செல்போன் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. 

மனிதனின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இன்று செல்போன் இல்லாமல் சரிவர கிடைப்பதில்லை என்ற நிலைக்கு வந்த பிறகு அதை குழந்தைகளிடமிருந்து எப்படி மறைத்து வைக்க முடியும்? குழந்தை கருவில் வளர தொடங்கிய போதே நாம் குழந்தை நன்கு வளர வேண்டும் என்பதற்காக மென்மையான இசைகளை பறவைகளின் கீச்சொலிகளை ஹெட் செட் போட்டு கேட்கின்றோம். பெரிய பெரிய சாதனையாளர்களின் உரைகளை கேட்கின்றோம்.  உயர் தரமான செய்திகளை எளிதில் கிடைக்கப் பெறாத தகவல்களை எல்லாம் தேடி தேடி படிக்கின்றோம், அது ஏதோ ஒரு வகையில் குழந்தைக்கு உதவும் என்று இப்படி கருவில் இருக்கும்போதே பெண்கள் செல்போனில் தேடுதல் வேட்டையைத் தொடங்கி விடுகின்றனர். 

குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை போட்டோ எடுத்து உடனே வாட்ஸ் அப்பிலும்  பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் ஆக வைத்து விடுகின்றோம்.  குழந்தை வளர வளர குழந்தையிடம் சென்று பாப்பா இங்க பாரு குட்டி இங்க பாரு செல்பி எடுக்கலாம் இங்கே பார்த்து சிரி என்று வித விதமாக நாம் அந்த குழந்தைக்கு செல்போனை அறிமுகப்படுத்துகிறோம். 

அப்போது அந்தக் குழந்தைகளுக்கு செல்போன் மீது ஒரு வியப்பும் ஈர்ப்பும் வந்துவிடுகிறது. அதை தொடர்ந்து புதுப்புது துணிகளைப் போடும்போது விதம் விதமான ஹேர் ஸ்டைல்களை வைக்கும்போது அந்த குழந்தையின் தாய்மார்கள் விதவிதமாக போட்டோ எடுக்கிறார்கள். அப்போது இங்க பாரு போன பாரு… சிரி… என்று சொல்ல சொல்ல அவர்களுக்கு அந்த போன் மீது மேலும் மேலும் ஆர்வம் அதிகமாகி கொண்டே போகிறது. 

இதைவிட முக்கிய காரணம் குழந்தைகளை சரியாக கவனிக்காமல், சில பெண்கள்… சில ஆண்கள்… எப்போதும் செல்போன் குள்ளேயே மூழ்கியிருப்பார்கள். அப்போது அந்த குழந்தைகளுக்கு “இவங்க என்ன நம்மள கண்டுக்காம அந்த செங்கலவே நோண்டிகிட்டு இருக்காங்க” என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது. செல்போனை மெல்ல மெல்ல தங்களுடைய கைக்கு கொண்டு வர குழந்தைகள் முயல்கிறார்கள். குழந்தைகள் இப்படி அப்படி என்று அந்த செல்போன்களை திருப்பி திருப்பிப் பார்க்கின்றனர். அந்த செல்போன்களை குழந்தைகளின் கையில் இருந்து பிடுங்கினாள் அவ்வளவுதான் அழுது தீர்த்து விடுகிறார்கள். திரும்பவும் செல்போனை கையில் கொடுக்கும் வரை அவர்கள் அழுகையை நிப்பாட்டுவதே இல்லை. 

செல்போன் இல்லாமல் சோறு சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கத் தொடங்கி விடுகிறார்கள் குழந்தைகள்.  சரி அந்த செல்போனை கொஞ்சம் முறையாக பயன்படுத்துவோம் என்று சூச்சூ டிவி இன்போ பெல்ஸ் போன்ற யூடியூப் சேனல்களில் உள்ள குழந்தைப் பாடல்களை வைத்து சோறு ஊட்ட தொடங்குகிறார்கள் பெண்கள்.  அவ்வளவுதான் இனி குழந்தைகளிடமிருந்து நீங்கள் நினைத்தாலும் செல்போனை பிரிக்கவே முடியாது. 

அம்மா… பாட்டு வைமா… அம்மா போன குடுமா… என்று தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள்.  சாப்பிடும் வேலைக்கு மட்டும் அந்த “குழந்தை பாடல்களை” வைத்து குழந்தையை எப்படியாவது சாப்பிட வைத்து விடலாம் என்று தாய்க்குலங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் குழந்தைகளோ தாய்களைவிட அதி புத்திசாலிகளாக இருக்கிறது. 

இரவு தூக்கம் வரவில்லை என்றால் அம்மாவின் தலையணைக்கு அருகில் இருக்கும் அந்த செல்போனை அந்த குழந்தையே எடுத்துக் கொள்கிறது அதாகவே ஆன் செய்கிறது அதாகவே யூடியூப் போகிறது. இப்படி குழந்தைகள், பெற்றோர்கள் அந்த போனை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து செல்போனில் தனக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனையும் அந்த பிஞ்சு வயதிலேயே தெரிந்து வைத்துக் கொள்கிறது. 

இப்படி இரவுகளில் அந்த குழந்தைகள் போனை ஆன் செய்து குழந்தை பாடல்களைக் கேட்டு ரசிக்க குழந்தையின் தூக்கம் கெட்டுப் போகிறது.  உடன் படுத்திருக்கும் அம்மா அப்பாவின் தூக்கமும் கெட்டுப்போகிறது. பெற்றோர்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் குழந்தைகள் அடம் பிடித்து அந்த செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கின்றன.  இதனால் குழந்தைகளின்  தூங்கும் நேரம் முற்றிலுமாக மாறி விடுகிறது இரவு ஒன்பது அல்லது ஒன்பதரை மணிக்கு தொட்டிலில் போட்டு தூங்க வைத்தால் காலை 6 மணி ஆறரை என்ற அளவில் குழந்தைகள் எழுந்தால் பெற்றோர்கள் நிம்மதியாக தூங்கலாம்.  ஆனால் குழந்தைகளோ 12 மணி வரை செல்போன் உபயோகித்து விட்டு காலை 8 மணிக்கு 9 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்.  காலை உணவு 10 மணிக்கு என்று மாறி விடுகிறது ஒரு பிஞ்சுக் குழந்தையின் காலை உணவு 10 மணிக்கா கொடுப்பார்கள்? எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. 

இதுபோக குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு விடுகிறது.  குழந்தைகள் அடிக்கடி கண்களை கசக்கு கசக்கு என்று கசக்குகின்றனர். அப்படி குழந்தைகள் கண்களை கசக்கும் போது சுற்றி இருக்கும் பெரியவர்களுக்கு பார்க்க மனம் வேதனையாக இருக்கிறது. இந்த செல்போன் குழந்தையின் கண்களை மிகப்பெரிய அளவில் பாதித்துவிட்டது என்ற குற்ற உணர்வும் அதன் உடல் இந்த செல்போனால் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகிறது என்ற  சிந்தனையும் பிறக்கிறது. 

இப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் உடல் இயக்க சுழற்சியை மாற்றி விட்டால் அது சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. ஒரே மாதிரியான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறது. இதனால் குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்மார்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி குழந்தையின் மீது வன்மத்தோடு செயல்பட ஆரம்பிக்கிறார்கள். 

வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டை விட 17 மடங்கு பாக்டீரியாக்கள்  நமது செல்போனில் உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி அதிக கிருமிகள் உள்ள செல்போனை குழந்தைகள் இரவு பகலாக உபயோகிக்கும் போது அதன் உடல் நலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது. 

இது மட்டுமல்லாது செல்போன் குறித்த சில செய்திகள் பேரதிர்ச்சியை தருகின்றன. எந்த செல்போன் எவ்வளவு சூடாகி எப்போது வெடிக்கிறது என்பது  தெரியாத விஷயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த செல்போன்களை குழந்தைகள்  பயன்படுத்தும் போது கொஞ்சம் திக் திக் என்றுதான் இருக்கிறது. 

இப்படிப்பட்ட செல்போன்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்ற சிறந்த வழி என்றால் பெற்றோர்கள் வீட்டிற்குள் செல்போன் பயன்பாட்டை குறைப்பது மட்டுமே. முடிந்தவரை பேசுவதற்கு மட்டுமே அந்த செல்போன்களை பெற்றோர்கள் பயன்படுத்தவேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் செல்பி எடுப்பது, குழந்தைகளை வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் வீடியோ கால் பேசுவது  போன்ற செயல்பாடுகளை பெற்றோர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை முற்றிலுமாக செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. காலம் அப்படி செல்கிறது. தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகி விட்ட பின் செல்போன்களை அறவே புறக்கணிக்க முடியாது. ஆனால் குறைக்க முடியும்.

எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம் படிப்பது விற்பனை செய்வது பொருள் வாங்குவது என்று அத்தனையையும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் பெண்கள், ஆண்கள்… அந்த சிந்தனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர வேண்டும். இந்த ஒட்டுமொத்த உலகமே செல்போனுக்குள் அடங்கியுள்ளது என்று பெருமிதமாக சொல்லாமல் செல்போனை விட பெரிய பெரிய ஆச்சரியங்கள் பெரிய பெரிய அற்புதங்கள் இந்த இயற்கையில் நிரம்பி கிடக்கிறது. வெளி உலகம்  எவ்வளவு அழகானது,  விசித்திரமானது இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு விஷயத்தை புதிது புதிதாக கற்றுத் தருகிறது என்பதை எல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும்படியான எளிய மொழியில் விளக்க வேண்டும். 

உங்கள் சுற்றுவட்டார பகுதியில் எங்காவது  தோல்பாவைக்கூத்து, மரப்பாவைக் கூத்து, தெருக்கூத்து போன்ற அழிந்து வரும் கலைகளில் ஏதாவது நடந்தால் தயவு செய்து உங்கள் சொந்த வேலையை தூக்கி ஓரம் வைத்துவிட்டு உங்கள் குழந்தையை அந்த மாதிரியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அதேபோல சிறுவர்களுக்கு என்று சில  இயற்கை குடில்கள் இயற்கை கதைசொல்லிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை தேடிக் கண்டுபிடியுங்கள். 

உங்கள் பகுதியில் இருக்கும் மன்னர் கால அரண்மனை, மன்னர் கால கோவில்கள் அருவிகள் மலைகள் போன்ற இடங்களுக்கெல்லாம் உங்கள் குழந்தையை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள். உங்களுடைய தோழிகள் நண்பர்கள் போன்றோர்களின் வீடுகளுக்கு உங்கள் குழந்தையை கூட்டி சென்று முடிந்தவரை மனம்விட்டுப் பேசி அரட்டை அடியுங்கள்.  உங்களுக்கு சொந்தமாக வயல் வரப்புகள் போன்றவை இல்லாவிட்டாலும் அக்கம்பக்கத்தில் உள்ள வயல்களில் நீர் பாயும் போது உங்கள் குழந்தையை கூட்டி சென்று அந்த வரப்புகளில் பாயும் நீரில் குழந்தைகளை உல்லாசமாக விளையாட விடுங்கள்.  சேர் அள்ளி பூசிக் கொண்டு விளையாடட்டும் அவர்கள்.  மண் புழுதிக்குள் அவர்கள் ஜாதி மதம் பேதம் ஏற்றத்தாழ்வு இது எதுவும் இல்லாமல் அனைத்து தரப்பு குழந்தைகளுடன் விளையாடட்டும், ஐயோ உடம்புல மண் ஒட்டுதே, ஐயோ சட்டையில் அழுக்கு படுதே என்று சொல்லி குழந்தையை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தால் அவர்கள் செல்போனை தான் நோண்டுவார்கள். அவர்களால் பிறகு வேறு என்ன தான் செய்ய முடியும்? 

செல்போனால் சிட்டுக்குருவிகள் அழிகிறது என்று ஒரு சிலர் சொல்கின்றனர். செல்போனால் சிட்டுக்குருவிகள் அழிவது இல்லை என்று இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர். எது எப்படியோ செல்போனால் சிட்டுக்குருவிகள் மட்டும் பாதிப்பதில்லை சின்னஞ்சிறு குழந்தைகளும் தான் பாதிக்கின்றனர். 

குறிப்பு: இவை அனைத்தும் பள்ளியில் சேராத குழந்தைகளுக்காகவும் பெற்றோர்களுக்காவும் ஆன பகிர்வு. 

 

Related Articles

நன்றேது? தீதேது? புத்தகம் ஒரு பார்வை! &#... முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் அகரமுதல்வன். கடங...
ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ... சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...
திறந்தவெளி கழிவறைகளை ஒழித்த எட்டுவயது மா... பிரதமரின் முப்பத்து எட்டாவது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் வரை துஷார் என்ற எட்டுவயது மாணவனைப் பற்றி நாட்டில் யாருக்கும் தெரியாது. அந்நிகழ்ச்சிக...
தமிழ் சினிமாவின் இரண்டு உன்னதமான “... எம் எஸ் பாஸ்கருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். ஆனால் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்களுடைய வசீகர குரல் தான் அந்த...

Be the first to comment on "செல்போன்களிடம் இருந்து குழந்தையை பாதுகாப்பது எப்படி?"

Leave a comment

Your email address will not be published.


*